பு.ஜ.மா.லெ. கட்சி 5ம் மாநாட்டு ஆவணம் – 1: சமகால உலக அடிப்படையை விளங்கிக் கொள்ளல்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிக் கட்சியின்
5வது அனைத்து இலங்கை மாநாட்டு ஆவணங்கள் – 1

சமகால உலக அடிப்படையை விளங்கிக் கொள்ளல்

உயர் தொழில்நுட்பத் துணையுடனான ஏகாதிபத்தியப் பூகோளமயமாதலினால் சிக்கலான உழைப்புப் பிரிவினை அல்லது தொழிற் பிரிப்புகள் ஏற்படுத்தப்பட்டு உழைப்பவர்களிடையே தொழிற் பிரிப்பின் அடிப்படையில் முரண்பாடுகளை அதிகமாக்கியுள்ளன. இதனால் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேசரீதியான ஐக்கியம் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. அதே வேளை கொலனித்துவத்தினால் நாடுகளுக்குள் ஏற்படுத்தப்பட்ட இன, மத, சமூக முரண்பாடுகள் அரைக் கொலனித்துவ – நிலப்பிரபுத்துவ காலத்தில் மேலும் கூர்மையடைந்த தால், கொலனித்துவத்தின் நேரடியான அரசியற் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளுக்குள் தொழிலாளர் – விவசாயிகளின் ஐக்கி யம் வலுப்படுத்தப்பட்டு சோஷலிஸப் புரட்சிகட்கு வழி ஏற்படாத நிலைமை கொடுமையானது.

சோஷலிஸத்திற்கு எதிரான ‘நலன்புரி அரசுகள்’ என்பனவும் தொழிலாளர்களின் சமூக மாற்றம் நோக்கிய பயணத்திற்குப் பல தடைகளை ஏற்படுத்தின. நாடுகள் முற்றாக நவ கொலனித்துவப் பிடிக்குள் இறுகி;, சோஷலிஸ நாடுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், முதலாளித்துவத்தின் சிக்கல்களிலிருந்து நிலைமைகளைத் திசைதிருப்ப, நாடுகளுக்குள் இன, மத, முரண்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு, ஒரே நாட்டிற்குள் ஒரே தொழிலில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களிடையே இன, மத, தொழிற் துறை ரீதியான தொழிற் பிரிப்புகள் ஏற்பட்டு தொழிலாளர் வர்க்க ஐக்கியம் சிதறடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாட்டிற்குள் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியமும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது.

சோஷலிஸ நாடுகளின் வீழ்ச்சியும், தொழிலாளர்களிடையே ஐக்கி யத்தின் சிதறடிப்பும் காரணமாக இன, மத, பால் முரண்பாடுகள் ஆளும் வர்க்கத்தினாலும் திட்டமிட்ட ஏகாதிபத்தியச் செயற்பாடுகளினாலும் பகை முரண்பாடுகளாக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலானதும் முதலாளித்துவம்/ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிஸத்திற்கும் இடையிலானதுமான முரண்பாடு இன்னும் அடிப்படை முரண்பாடா, உலகை உழைப்போரின் உலகாக மாற்றிச் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக உழைப்போரின் புரட்சிகர தத்துவமான மாக்சிசமும் அதன் நடைமுறை அனுபவங்களும் ஏற்புடையனவா, செல்லுபடியானவையா என்பன போன்ற கேள்விகள் திரும்பத் திரும்ப முதலாளித்துவ புத்திஜீவிகளாலும், ஏகாதிபத்தியத் தகவல் தொடர்புச் சாதனங்களாலும் என்.ஜீ.ஓக்களா லும் ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்ட பின்நவீனத்துவத்தினாலும் ஏகாதிபத்தியத்தினால் போதிக்கப்படுகின்ற நவகொலனித்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ள தேசியவாதிகளாலும் எழுப்பப்படுகின்றன.

இதற்கான சிறிய விளக்கமளிக்கும் வகையில் சில பகிர்வுகளைச் செய்துகொள்ள எமது கட்சியின் 5வது மாநாடு தீர்மானித்துள்ளது.

அதன்படி, மாக்சிச அடிப்படையில் இன்றைய உலகின் அடிப்படைகளை விளங்கிக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.

முதலாளித்துவத்தின் உயர்ந்த வடிவமான ஏகாதிபத்தியத்தின் தோற்றமே முதலாளித்துவத்தின் நெருக்கடி தான். அதே போன்று, ஏகாதிபத்திய பூகோளமயமாதல் நிகழ்ச்சி நிரலும் ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி தான். முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு முந்திய/பிந்திய காலகட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட நாடுகளைப் பிடித்து நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொலனித்துவ–ஏகாதிபத்திய முறை, 1950களுடன் பெரும்பாலும் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு நாடுகளுக்கு அரசியல் சுதந்திரம் கொடுப்பது என்ற அடிப்படையில் நாடுகள் மீதான நேரடிக் கட்டுப்பாடு கைவிடப்பட்டது. தொடர்ந்தும் பல வகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் கட்டுப்பாட்டைச் செலுத்தும் தனியொரு ஏகாதிபத்திய நாட்டினுடைய மையம் என்ற நிலைமைக்கு மாறாக நவகொலனித்துவ ஏகாதிபத்தியமாக மாற்றமடைந்தது. இந்த மாற்றத்துடன் 1970களில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளிலிருந்து ஏகாதிபத்தியம் மெல்ல மெல்லத் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டது. அதனுடைய திறந்த, நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கை 1990களில் பூகோளமயமாதல் எனும் நிகழ்ச்சிநிரலுடனும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற தந்திரோ பாயத்துடனும் தன்னை மீள நிலை நிறுத்திக் கொண்டது.

1960இற்குப் பிறகு முன்னாள் சோவியத் யூனியனில் ஏற்பட்ட திரிபுவாத நகர்வுகளின் தொடர்ச்சியாக மீள முதலாளித்துவமாக்கப்பட்ட சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பும் 1992இல் முற்றாகவே சிதைக்கப்பட்டதும் கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ மாற்றங்களும் சீனா முதலாளித்துவப் பாதையில் பயணிப்பதும், ஏகாதிபத்தியப் பூகோளமயமாதலுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தந்திரோபாயத்திற்கும் இடைஞ்சலற்ற சூழலை ஏற்படுத்த உதவின எனலாம்.
ஏகாதிபத்தியப் பூகோளமயமாதல் பற்றிக் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கார்ல் மாக்ஸ் குறிப்பிட்டுள்ளதை அவதானிப்பது அவசியம்.

“உற்பத்திச் சாதனங்களையும் உறவுகளையும் அவற்றுடன் சமூகத்தின் முழு உறவுகளைத் தொடர்ச்சியான மாற்றத்திற்குள்ளாக்காமல் பூர்ஷவாக்களால் நிலைத்திருக்க முடியாது. உற்பத்தி முறைகளை அப்படியே மாற்றாது பாதுகாத்து வைப்பதிலேயே ஆரம்பகாலக் கைத்தொழில் முதலாளி வர்க்கத்தின் இருப்புத் தங்கியிருந்தது. உற்பத்தியில் தொடர்ச்சியான மாற்றம், அனைத்துச் சமூக நிலைமைகளினதும் இடையறாத கலவரமானதன்மை, முடிவுறாத நிச்சயமற்ற தன்மை, எதிர்ப்புகள் என்பன பூர்ஷவா காலத்தை ஏனைய காலங்களிலிருந்தும்  வேறுபடுத்துகிறது.

“உற்பத்திகளுக்குத் தொடர்ச்சியாக சந்தைகளை விரிவாக்குவதற்கான தேவை, பூகோளத்தின் மேற்பரப்பெங்கும் பூர்ஷவாக்களைத் துரத்தும். அதனால் அவர்கள் எல்லா இடங்களிலும் சௌகரியமாக இருப்பதுடன் எல்லா இடங்களிலும் குடியேறுவர். எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிலைநிறுத்துவர்”. (கார்ல் மாக்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கை). இதன் மூலம் கார்ல் மாக்ஸ் முதலாளித்துவம் உலகமயமாவதன் பொதுவான தன்மையை பற்றியே கூறியுள்ளார்.
லெனின் வகைப்படுத்திய முதலாளித்துவத்தின் உயர்ந்த வடிவமான ஏகாதிபத்தியத்தின் தோற்றத்திற்கு முன்பு, சந்தைகளைத் தேடுவதற்கும் வர்த்தகத்தை மேற்கொள்வதற்குமாகவே முதலாளித்துவத்தின் பூகோளமயமாதல் இருந்தது. போர்த்துக்கேய, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக்  கம்பனி போன்றவை அவற்றின் வியாபார மூலதனத்துடன் (Merchant Captial) உலகெங்கும் செயற்பட்டன.

இவ்வாறான வணிக மூலதனம் (Commercial Captial) கொலனித்துவத்திற்கு அடிப்படையானது. இதனால் புகையிரதப் பாதை, மின்சாரம், தந்தி, தொலைத்தொடர்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரிய தொழிற்துறைகள் ஏற்படுத்தப்பட்டன. அத் தொழிற் துறைகட்கான மூலப் பொருட்களைத் தேடிக் கொள்ளும் விதமாகப் பல நாடு கள் மீது பலமிக்க முதலாளித்துவ நாடுகள் நேரடி ஆதிக்கம் செலுத்துவதாக அதன் செயற்பாடு அமைந்தது. அதற்காக ஏற்படுத்தப்பட்ட பன்னாட்டுக் கம்பனிகளின் சுரங்கங்கள், பெருந்தோட்டங்கள், வீதிகளையும் புகையிரதப் பாதைகளையும் அமைத்தல், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் தொழிலாளர்கள் பெருமளவில் உள்வாங்கப்பட்டுக் கொலனித்துவத்திற்கு எதிரான சிந்தனைகள் மழுங் கடிக்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பலமிக்க முதலாளித்துவ நாடுகள் பலமற்றவற்றை விழுங்கிக் கொண்டன. பாரிய தொழிற்துறை, நிதி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு அவை தேசிய, சர்வதேச சந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்தின. அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளைக் கார்ல் மாக்சும், ஏங்கல்சும் ஆராய்ந்து அடிப்படைப் பொருளாதார விதிகளையும், முதலாளித்துவ சமூகத்தில் வர்க்க முரண்பாட்டையும் அவற்றை மாற்றுவதற்கான விஞ்ஞானபூர்வமான சோஷலிஸத்தின் தேவையையும் முன்வைத்தனர். அவை இன்றும் ஏற்புடையன.

20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட முதலாளித்துவப் போட்டி ஏகபோக முதலாளித்துவமாக வளர்ச்சியடைந்து பொருளாதார அரசியல் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. அவை சோஷலிஸத்தை அமைப்பதற்கான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் பின்னிடைவுகளை ஏற்படுத்தின.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத் திலும் போட்டி மிகுந்த முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறியது. இந்த வளர்ச்சியை, அதாவது பூகோளரீதியான ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சியை, லெனின் ‘ஏகாதிபத்தியம், முதலாளித் துவத்தின் உச்சக் கட்டம்’ என்ற அவரது ஆய்வில் சரியாக மதிப் பிட்டுத் தொழிலாளர் வர்க்கப் புரட்சி புதிய சூழ்நிலைக்கேற்ப முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நிரூபித்தார்.

தொழிற் துறை மூலதனம், வங்கி மூலதனம் என்பவற்றின் இணைப் பான நிதி மூலதனத்தின் கட்டுப்பாடும் அபிவிருத்தியுமே ஏகபோக முதலாளித்துவத்தின் சாரம் என்பதை லெனின் நிரூபித்தார். ஏகாதிபத்திய சக்திகள் முழுப் பூகோளத்தையும் தமது செல்வாக்கிற்குள் கொலனிகளாகக் கொண்டு வந்து தமது சுரண்டலுக்கேதுவாக நாடு களின் எல்லைகளை மாற்றியமைத்தன.

மூலதனத்தின் ஏற்றுமதியினை லெனின் ஏகாதிபத்தியத்தின் பிரதான அம்சம் என்பதை எடுத்துக் காட்டினார். அபிவிருத்தியடையாத நாடு களுக்குள் கம்பனிகளினூடாக வெளிநாட்டு மூலதனம் சென்றடைந் ததை எடுத்துக் காட்டினார். அபிவிருத்தியடையாத நாடுகளின் தொழிலாளர்களுக்குக் குறைவான கூலியைக் கொடுப்பதன் மூலம் மீயுயர் லாபத்தையும் (super profit) கம்பனிகள் பெற்றுக் கொண்டன. ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டம், சுரங்கம், உட்கட்டமைப்பு மூலப் பொருட்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டது. அப்போதைய வளர்ச்சியடைந்த தொழில்நுட்பமானது தந்தி-தொலைத்தொடர்பு, ரயில், நீராவிக் கப்பல், கால்வாய், கனரக கைத்தொழில் என்பனவாக இருந்தது. அதன்மூலம் உற்பத்தியும், நிர்வாகமும், வர்த்தகமும் ஏகாதிபத்திய நாடுகளை மையப்படுத்தி இருந்தன. அதனால் ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களுக்குச் சில சலுகைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் கொலனிகளிலும் அரைக் கொலனிகளிலும் தொழிலாளர்களும் விவசாயிகளும் கடுமையாகச் சுரண்டப்பட்டனர், அடக்கப்பட்ட னர். உலகத் தொழிலாளர்கள் இவ்வாறு ஏகாதிபத்திய நாட்டுத் தொழிலாளர்களாகவும் கொலனித்துவத் தொழிலாளர்களாகவும் வேறுபடுத் தப்பட்ட இயங்குமுறையில் உலக முதலாளித்துவ முறைமை செயற்பட்டது. ஒரு கொலனி நாட்டிலிருந்து இன்னொரு கொலனிக்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்க்கப்பட்டனர். வல்லமையான நாட்டுப் புலமைசார் தொழிலாளர்கள் கொலனிகளில் சில சலுகைகளுடன் தொழில் செய்யும் நிலையும் ஏற்பட்டது. அத்துடன் இனத்துவ, பிரதேச அடிப்படையிலும் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டனர்.

இன்றைய பூகோளமயமாதலில் விஞ்ஞான-தொழில்நுட்ப புரட்சியின் மூலம் உலகப் பொருளாதாரப் பண்புகளில் புதிய பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை.

ஏகாதிபத்தியமானது முதலாளித்துவ முறைமையை விரிவுபடுத்தியதுடன் கூலி அடிமை முறையையும் விஸ்தரித்தது. உலகெங்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பங்கெடுப்புடனான உற்பத்தி முறைமையை உலகெங்கும் விஸ்தரித்தது. இதன் ஒரே நோக்கம் முதலாளித்துவச் சுரண்டலை அதிகரித்து லாபத்தை குவித்து முதலா ளித்துவ உற்பத்தி முறையைப் பாதுகாத்து முன்னெடுப்பதாகும். அதனாலே சமத்துவமின்மையும் வறுமையும் தலைவிரித்தாடுகின்றன.

அதன் விளைவாக ஏகாதிபத்தியம் தொழிலாளர்களிடையே சலுகைகளை வழங்கி ஒரு மேல் தட்டினரை ஏற்படுத்தியது. சலுகையற்றவர்கள் கீழ்த் தட்டினராகினர். இதனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும், தொழிலாளர் வர்க்கப் போராட்டமும் மழுங்கடிக்கப்பட வாய்ப்பானது. ஏகாதிபத்திய நாடுகளினுள்ளும் வெளியிலும் தொழிலாளர்களிடையே மேல்தட்டு, கீழ்த்தட்டு என்ற தொழிற் பிரிப்பை ஏற்படுத்தி ஏகாதிபத்திய நாடுகளிலும் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கத் திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏகாதிபத்தியப் பூகோளமயமாதல் நிகழ்ச்சி நிரலின் இந் நிலைமையில் வித்தியாசமான வளர்ச்சிகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ளதைக் காண முடியும்.
சோவியத் யூனியனையும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ நாடுகளையும் ஏகாதிபத்தியம் வெற்றி கண்டதையடுத்துக் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்கள் பெருமளவில் நேரடி, மீயுயர் சுரண்டலுக்கு இலக்காக்கப்படுவது வேகமாக அதிகரித்துள்ளது. பாரிய அபிவிருத்திக்காகச் சந்தைப் பொறிமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்தவர்களை முதலாளித்துவப் பாதையை நோக்கிச் செல்வோரெனத் தோழர் மாஓ சேதுங் ஒதுக்கி வைத்ததார். ஆனால் தற்போது அந்தச் சந்தைப் பொறிமுறையே சீனாவை இலகுவாகக் கவ்விக் கொண்டுள்ளது. இதுவும் முதலாளித்துவ இருப்பிற்கு உறு துணையானது.

நிகழ்ந்துள்ள விஞ்ஞான, கணணி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி கள், பொருளுற்பத்தியிலும், சேவைத் துறையிலும் புதிய உழைப்பு முறைமைகளை ஏற்படுத்தின. அதாவது தானாகச்செயற்படும் இயந்திர இயங்குமுறை, றோபோ, கணணிமயமாக்கல் போன்றன திறனுழைப்பு என்பதையும் கட்டுப்படுத்தின. இதனால் திறன்கொண்ட உழைப்பாளர்களும் உற்பத்தி முறையிலிருந்து விலக்கப்படலாயினர்.

விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சிகளினால் ஏற்பட்ட போக்குவரத்து, தொடர்பாடல், இணையத் தொழில்நுட்பம், மென்பொருள் அபிவிருத்தி போன்றவற்றினால் புதுவகையான உழைப்புப் பிரிப்பு உலகளாவிய ரீதி யில் ஏற்பட்டுள்ளது. இது கார்ல் மாக்ஸ் கூறிய வேலைத் தளத்திலிருக்கும் உழைப்புப் பிரிப்பை விட வித்தியாசமானதாக, சமூகரீதியான உழைப்பின் சமூகப் பிரிப்பாக அமைகிறது. புதிய தொழில் நுட்பம் உலகளாவிய ரீதியில் பழைய-புதிய முறைகளைக் கொண்டு உற்பத்தி முறைமையை மீள ஒழுங்கமைக்கவும் தகவமைக்கவும் புதிய வழியை ஏற்படுத்தியது. இந்த முறையைக் கொண்டு பன்னாட்டுக் கம்பனிகள் அபிவிருத்தி குறைந்த நாடுகளில் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களை உலகளாவிய ரீதியில் தேடிக் கொள்ளவும், ஏகாதிபத்திய நாடுகளுக்குள்ளும் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்களைத் தேடிக் கொள்ளவும் அவர்களை நவீன உற்பத்தி முறைமைகளுக்குள் உள்வாங்கவும் இயலுமாக்கியது. இதனால் ஏகாதிபத்திய மீயுயர் சுரண்டல் எல்லைகளற்றதாக உலகளாவிய ரீதியில் விரிவாக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்களும் உலகளாவிய ரீதியில் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றுடன் இன்னுமொரு முக்கிய அம்சமாக மக்கள் சொந்த நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் பெருமளவில் புலம் பெயர்ந்து போவதும் இன்னுமொரு சிக்கலான உழைப்பு பிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் உள் நாட்டு அரசியல் அடக்குமுறைகளினாலும் உள்நாட்டு யுத்தங்களினாலும் புலம்பெயர்ந்தவர்கள், அபிவிருத்தியடைந்த நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பில் தலையிடுபவர்களாகவும் தாம் முன்னர் வாழ்ந்த நாட்டுத் தொழிலாளர்களைவிடச் சலுகை கொண்டவர்களாகவும் மாறுகின்றனர். இதனால் வளர்ச்சியடைந்த அல்லது ஏகாதிபத்திய நாடுகளில் சலுகை பெற்ற தொழிலாளர்களுக்கும் வளர்ச்சியடையாத நாடுகளின் தொழிலாளர்களுக்குமிடையே காணப்பட்ட உழைப்புப் பிரிப்பு, புலம்பெயர்ந்தவர்களைக் கொண்ட உழைப்புப் பிரிப்பொன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இது பூகோளமயமாதலின் விளைவாக, உலகத் தொழிலாளர் வர்க்கத்தினரின் ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதும் இன்னொரு சிக்கலான விடயமாகும். இவ்வாறான சூழ்நிலை ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் ஏற்பட்டுள்ளதை அவ தானிக்க முடியும். கொலனியாதிக்கக் காலத்திலிருந்து ஏற்பட்ட உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளினால் ஆளும் வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தேசிய இன ஒடுக்குமுறை உட்பட்ட சகல ஒடுக்கு முறைகளும், தற்போதைய பூகோளமயமாதலின் கீழ் அந்த ஒடுக்கு முறைகளின் புதிய வடிவத்திலான தொடர்ச்சிகளும் தொழிலாளர் வர்க் கத்தின் ஐக்கியத்தைப்; பல சவால்களுக்குட்பட்டதாக்கி இருக்கிறது.

ஆக, ஏகாதிபத்திய யுகம் இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதனை முடிவிற்குக் கொண்டு வர உலகத் தொழிலாளர் வர்க்கம் இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய சோஷலிஸ நாடுகளிலும் வியட்நாமிலும் சீனத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் அதிகா ரத்தை நிலைநாட்டிக் கொண்டு எடுத்த முயற்சிகள் ஏகாதிபத்தியத் தினால் முறியடிக்கப்பட்ட பிறகும், ஏகாதிபத்திய யுகம் பூகோளமயமாதல் எனும் நிகழ்ச்சிநிரலுடன் தொடர்கிறது. ஆனால் பூகோள மயமாதல் நிகழ்ச்சிநிரலும் பலவிதமான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ஏனைய முதலாளித்துவ நாடுகளினதும் நிதி நெருக்கடியும் பொருளாதார வீழ்ச்சியும் அதற்குச் சான்றாகும்.

எனவே, ஏகாதிபத்திய யுகத்திற்குரிய பதில் லெனினிசத்தில் இருக்கிறது. அதனைத் தற்கால மாற்றங்களுக்கு ஏற்பப் பொதுவாகவும் குறிப்பாகவும் செழுமைப்படுத்திய ஆயுதமாகத் தொழிலாளர் வர்க்கமும் ஏனைய சுரண்டப்படும் வர்க்கங்களும், அடக்கவும் ஒடுக்கவும்படும் மக்களும் கையிலெடுக்க வேண்டியதன் அவசியம் இன்னும் செல்லுபடியற்றதாகி விடவில்லை.
பூகோளமயமாதலின் தகவல் தொடர்பாடல், றோபோ, கணணி. அதி தொழில்நுட்பம் போன்றன உழைப்பின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டதாகக் குழப்பமான வியாக்கியானங்கள் கொடுக்கப்படுவதுண்டு. தகவல், அறிவு பற்றிய உரிமை சாதாரண மக்களுக்குமானது என்பது சோஷலிஸத்தின் விளைவாகும். அந்த வகையிலேயே தொடர்பாடல், தகவல், அதிதொழில்நுட்பங்களையும் சாதாரண மக்களைக் கொண்டே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
உற்பத்தியில் முக்கிய இயங்கு விதியாக இருக்கும் மேலதிகப் பெறுமானத்தைக் கணணிகளோ, றோபோக்களோ உருவாக்குவ தில்லை. உழைப்பை வழங்கும் தொழிலாளர்களே உருவாக்குகிறார் கள். றோபோவோ யந்திரமோ லாபத்தைச் சம்பாதிப்பதில்லை. ஊதியத்தைப் பெறாத மனித உழைப்பே லாபத்தை வழங்குகிறது என்ற உண்மையை முதலாளித்துவ ஊடகங்களும், புத்திஜீவிகளும் மறைக்கின்றனர்.

அதி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதன் நோக்கம், குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு, குறுகிய நேரத் தில் கூடிய உற்பத்தியை மேற்கொள்வதாகும். ஆனால் அதி தொழில் நுட்பப் பிரயோகம் உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்வதுடன் லாபத்தைக் குறைக்கிறது. அதனால் உற்பத்தியை மிகவும் அதிகரிக்க வேண்டி வருகுகிது. ஆனால் அந்த உற்பத்தியை உலக முதலாளித் துவச் சந்தையில் விற்க முடிவதில்லை. இது முதலாளித்துவத்தின் மிகை உற்பத்தியாவதுடன் மேலும் பொருளாதார நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்து தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தைத் தூண்டுகிறது.
மனித சமூகம் இருக்கும் வரையும், பொருளுற்பத்தியும், சேவையும் இன்றியமையாதவையாக இருக்கும். அங்கே உழைப்பே மேன்மையான தும், மேலாதிக்கம் செலுத்த வேண்டியதுமாகும். மக்களின் தேவைக்கேற்பப் பொருளுற்பத்தியும், சேவை வழங்கலும் இருக்கும் போது லாப நோக்கம் கொண்ட மிகை உற்பத்தியை நாட வேண்டிய முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு அவசியமில்லை. தேவையை அடிப்படையாகக் கொண்ட பொருளுற்பத்தியையும் சேவை வழங்கலையும் சோஷலிஸ முறையாலேயே உறுதி செய்ய முடியும். அங்கு உற்பத்திச் சாதனங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.

சோஷலிஸமே முதலாளித்துவ ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. ஆனால் அதன் இயங்குமுறை பட்டறிவுகளுடன் புதிய பரிமாணங்களை எடுக்க வேண்டியது அவசியம்.

ஏகாதிபத்திய யுகத்தில் தொழிலாளர் வர்க்கமே பெரும்பான்மையான தும் முன்னேறியதுமாகும் என்பதால் தொழிலாளர் வர்க்க மேலாதிக்கத்தினூடாக மீண்டும் சோஷலிஸம் உலகெங்கும் புதிய சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்குமேற்ப கட்டப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத் தலைமையிலான ஆளுகையும் புரட்சிகளுமே பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாவதுடன் மனிதனை மனிதன் சுரண்டாத சமூகத்தைப் படைக்க முடியும்.

எனவே அதி தொழில்நுட்ப வளர்ச்சியும் அதனோடிணைந்த ஏகாதி பத்தியப் பூகோளமயமாதலும் தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் மற்றும் அனைத்துச் சுரண்டப்படும் உழைக்கும் மக்களிடையேயும் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை ஆழ்ந்து கவனிக்கும் போதும் உழைப்பிற்கும் மூலதனத்திற்குமிடையிலான அடிப்படை முரண்பாடு, முதலாளித்துவத்திற்கும் சோஷலிஸத்திற்குமிடையிலான அடிப்படை முரண்பாடு இன்னும் இருப்பதும் அதனைத் தீர்க்க வல்ல வலிதான ஆயுதமாக மாக்சிசமே இருப்பதும் தெளிவாகும்.

மாக்சிசத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கப் புரட்சியை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இன்னும் வரலாற்றுக் கடமை இருக்கவே செய்கிறது.

Leave a Reply