பு.ஜ.மா.லெ. கட்சி 5ம் மாநாட்டு ஆவணம் – 2: சர்வதேச நிலைமை

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிக் கட்சியின்
5வது அனைத்து இலங்கை மாநாட்டு ஆவணங்கள் – 2

சர்வதேச நிலைமை

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைவதற்கு முன்பே, 1941ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும், பிரித்தானிய பிரதமர் சேர்ச்சிலும் கையெழுத்திட்ட அட்லாண்டிக் பட்டயத்தின்படி ஏகாதிபத்திய நாடுகள் நேரடியாகக் கொலனிகளை வைத்திருக்காமல் கொலனிகளைச் சுரண்டிக் கொள்வதற்கான ஏகாதிபத்திய சமத்துவ நிலையை ஏற்படுத்தும் புதிய உலக ஒழுங்கு ஏற்பட்டது. 1944ஆம் ஆண்டு 44 நாடுகளின் நிதித் துறைப் பிரதிநிதிகள் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரிலுள்ள பிரெட்டன் வூட்ஸ் நகரில் சந்தித்துச் சர்வதேச நாணய நிதியத்தை அமைப்பதற்கான வரைவை நிறைவு செய்தனர். இங்கு நிதி மூலதனச் சந்தையை பாதுகாக்கவும் நாடுகளுக்கு கடன் வழங்கவும் உதவிகளை வழங்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவற்றின் படி நாடுகள் மீது நிபந்தனைகளை விதிக்கவும், நாடுகளிலிருந்து வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்ளவும் பலம்பொருந்திய அமைப்பாகச் சர்வதேச நாணய நிதியம் மாறியது. அதனது பிடி ஏகாதிபத்திய நாடுகளிடமே இருந்தது. அதுவே வளர்முக நாடுகளை மறைமுகக் கொலனிகளாக்கும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல் முன்னெடுக்கும் நவகொலனித்துவ உலக ஒழுங்கு நிறுவனமாகியது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட உலக வங்கி உட்பட ஐ.நா. சபை, ஐ.நா. முகவர் நிறுவனங்கள் அனைத்தும் ஏறக்குறைய நவகொலனித்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கலாயின. சோவியத்யூனியனதும் பின்னர் சீனா போன்ற சோஷலிஸ நாடுகள் உள்ளடங்கிய சோஷலிஸ முகாமினதும் இருப்பும் வளர்ச்சியும், ஐ.நா. பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தை சர்வ தேச ஒழுங்காக ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் நவகொலனித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டங்கள் பலமாக இருந்தன.

சோஷலிஸ மூன்றாம் அகிலத்திற்குப் பிறகு வலிமையுடன் எழுந்த சோஷலிஸ முகாமில் ஏற்பட்ட முரண்பாடுகள் நவகொலனித்துவ நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினாலும் 1960களில் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் நடந்த தேசிய விடுதலைப் போராட்டங்களினாலும் தேசிய அரசுகளின் தேசியப் பொருளாதார முன்னெடுப்புக்களினாலும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல் சவால்களை எதிர்நோக்கியது. இந்நிலையி லேயே ஏகாதிபத்தியப் பூகோளமயமாதல் அறிமுகமாகிறது.

அந்த நிகழ்ச்சி நிரலை அதிகாரபூர்வமாக முன்னெடுக்க 1995இல் உலக வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்டது. அதற்கமையச் சர்வதேச நிறுவனங்களும், ஏகாதிபத்திய நாடுகளும் முன்னெடுத்த நவகொலனித்துவ நிகழ்ச்சிநிரலைப் பெருமளவில் பல்தேசியக் கம்பனிகள் முன்னெ டுக்கலாயின. 2000ஆம் ஆண்டு ஐ.நா.வின் புதிய மிலேனிய அறிக்கையில் பூகோளமயமாதல் புதிய உலக ஒழுங்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மூலதனம் பூகோளமயமாக்கப்பட்டுள்ளது. அதன் விரிவாக்கமாக ஏகாதிபத்தியத் தகவல் வலைப் பின்னல், பாதுகாப்பு வலைப்பின்னல் போன்றன நிலைநிறுத்தப்பட்டுள்ளன. எனினும், தற்போது நிதி மூலதனச் சந்தைக்குப் பலவித பின்னிடைவுகளும் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் ஏனைய முதலாளித்துவ நாடுகளிலும் பல நிதிக் கம்பனிகள் கவிழ்ந்துள்ளன. ஏகாதிபத்திய நாடு களில் தொழிலாளர் வர்க்கத்தின் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் முன்பொருபோதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன.

மத்திய கிழக்குப் பிரச்சினைகள் மேலும் உக்கிரமடைந்து வருகின்றன. கிழக்கு ஐரோப்பியாவில் நாடுகள் அமெரிக்கா, மேற்கு ஏகாதிபத் தியச் சக்திகளினால் துண்டாடப்பட்டுள்ளன. பல நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியப் படைத்தளங்கள் இருக்கின்றன. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்த ஆக்கிரமிப்பை மேற் கொண்டு அங்கு பொம்மை அரசாங்கங்களை அமைத்துள்ளது. அங்கு உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்திய சக்திகளின் பொம்மைகளாக்கப்பட்டுள்ளன. இவை நவகொலனித்துவ தாக்குதல்களின் விளைவுகளாகும். அதைவிட மேலும் பல நவகொலனித்துவ விளைவுகளையும் அவதானிக்க முடியும். அங்கு மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருக்கின்றனர்.

பல சவால்களுக்கு மத்தியிலும் சோஷலிஸ கட்டுமானங்களை முன்னெடுத்துவரும் வட கொரியாவும், கியூபாவும் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் ஏகாதிபத்திய பூகோளமயமாதலுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுத்து வருகின்றன. இது அவற்றின் தேசியரீதியான இருப்பை மையமாகக் கொண்டாலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிஸக் கட்டுமானங்களை அடிப்படையாகக் கொண்டதாக முன்னெடுக்கப்படுகிறது. அவற்றில் நவகொலனித்துவப் பாதிப்புக் குறைவெனினும் அந் நாடுகளும் பல்தேசிய சர்வதேச நாணய நிதியமும், உலகவங்கி, உலக வர்த்தக நிறுவனம் போன்ற நவகொலனித்துவ நிறுவனங்களுடனும், ஏகாதிபத்திய சக்திகளுடனும் சமரசம் செய்தும் வருகின்றன. அந் நாடுகளினுள்ளும் பல்தேசிய கம்பனிகள் இயங்குவதற்கு அனுமதியளிக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளில் சோஷலிஸக் கட்டுமானம் கியூபா, வட கொரியா போன்று இல்லாவிட்டாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குத் தேசியம் முன்னெடுக்கப்படுவதால் நவகொலனித்துவப் பிடிக்குள் அவை முற்றாக மூழ்காமல் இருக்கின்றன.

சீனா ஏகாதிபத்திய பூகோளமயமாதலின் பங்காளியாக இருப்பதுடன் அது முதலாளித்துவமயமாகி விட்டதாலும் ஏகாதிபத்திய நாடுகளுடனும் அதன் இணை நாடுகளுடனான போட்டியை முன்னெடுப்பதாலும் ― ஏகாதிபத்திய அணியைச் சார்ந்திருக்காவிட்டாலும் ― தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது. இதன் வளர்ச்சிப் போக்கு, இருக்கின்ற ஏகாதிபத்தியத்தின் வகைமாதிரிகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், அதனை ஏகாதிபத்தியத்தின் நிலைக்கு இட்டுச் செல்லலாம். வியட்நாம் சீனாவின் நிகழ்ச்சிநிர லுக்கு ஏற்ப அதன் அணியாகச் செயற்பட்டு வருகின்றது.

இந்தியா மீது நவகொலனித்துவத் தாக்குதல்கள் உள்ளபோதும், பெருமுதலாளி வர்க்கமும் அதிகாரத்துவ முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆளும் வர்க்கங்களாக இருப்பதால் அது ஏகாதிபத்தியப் பூகோளமயமாதலின் பங்காளியாகவும் ஏகாதிபத்தியத்தின் நம்பிக்கைக்குரிய பங்காளியாகவும் இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் தங்கியிருக்கும் அதே வேளை, நேபாளம், இலங்கை, பங்ளாதேஷ், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகள் மீது இந்தியா அதன் ஏகாதிபத்திய அக்கறைகளை நேரடியாகவும், ஆபிரிக்க நாடுகள் மீது மறைமுகமாகவும் நிலைநாட்டி வருகிறது. பிறேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளும் ஏகாதிபத்திய பூகோளமயமாதலின் பங்காளிகளாக இருந்து வருகின்றன. ஏகாதிபத்தியத்தின் பங்காளியாகவும் யுத்த பூகோளமய மாதலின் பங்காளியாகவும் மத்திய கிழக்கில் இஸ்ரேல் இருக்கிறது.

இவற்றைப் போன்ற நாடுகளைத் தவிர ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெருமுதலாளி வர்க்கமும், அதிகாரத்துவ முதலாளித்துவ வர்க்கமும் ஆதிக்கம் செலுத்துவனவாகவே இருப்பினும் அவை ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்தவனவாகவும் அவற்றின் வாடிக்கை அரசுகளாகவும் இருப்பதுடன் புதுவகைத் தரகு முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதாரணமாக இருப்பதுடன் நவகொலனிகளாகவும் இருக்கின்றன.

நிதி மூலதன ஆதிக்கத்தையும் இராணுவ வல்லமையையும் கொண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய முறைமை பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய மேலாதிக்க சக்திகளையும் ரஷ்யாவையும் ஜப்பானையும் கொண்டியங்குகிறது. இவை நவதாராளவாத பொருளாதார முறைமையைக் கொண்ட நவகொலனித்துவத்தைப் பூகோளமயமாதல் நிகழ்ச்சிநிரலினூடாக முன்னெடுத்து வருகின்றன. தமக்குத் தேவை யான போது மத அடிப்படைவாதம், தேசியவாதம், இனவாதம் போன்ற வற்றைத் தூண்டிப் பாதுகாத்துச் செயற்படுகிறது.

முன்பு இருந்தது போன்று முதலாளித்துவ முகாம், சோஷலிஸ முகாம், அணிசேராமை என்பன இன்று இல்லை. தற்போது நாடுகளின் அணிசேர்க்கை தெளிவற்றதாகத் தோன்றினாலும் சமகால உலகத்தில்:

1.    ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் அணியின் பங்காளி நாடுகளும் ஏகபோக முதலாளித்துவ குழுக்களும் (பல்தேசியக் கம்பனிகள்),

2.    அடக்கப்படும் நாடுகளும் தேசங்களும் மக்களும்,

3.    சோஷலிஸக் கட்டுமானத்தில் இருக்கும் நாடுகளும் சோஷலிஸச் சக்திகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளும் சக்திகளும்,

4.    சிறிய/வலிமைகுறைந்த நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளும் மக்களும்
என வகைப்படுத்தலாம்.

சர்வதேசரீதியான முரண்பாடுகளை
1.    ஏகாதிபத்தியச் சக்திகளுக்கிடையேயான, ஏகபோக முதலாளித்துவ சக்திகளுக்கிடையிலான, ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஏகபோக முதலாளித்துவ சக்திகளுக்குமிடையேயான முரண்பாடுகள்,

2.    ஏகாதிபத்தியத்திற்கும் அடக்கப்படும் தேசங்களுக்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாடுகள்,

3.    சோஷலிஸக் கட்டுமானத்தில் இருக்கும் நாடுகள், சோஷலிஸச் சக்திகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள், அவற்றின் மக்கள் ஆகி யோருக்கும் ஏகாதிபத்திய நாடுகள், சக்திகள், ஏகபோக முதலாளித்துவ சக்திகள், நவகொலனித்துவ நிறுவனங்கள் ஆகியவற் றுக்கும் இடையிலான முரண்பாடுகள்,

4.    சோஷலிஸக் கட்டுமானத்தில் இருக்கும் நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகள்,

5.    பெரிய (வலிமையான) நாடுகளுக்கும் சிறிய (வலிமை குறைந்த) நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள,

6.    உழைப்புக்கும் மூலதனத்துக்குமிடையிலான முரண்பாடுகள்
என வகைப்படுத்தலாம்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகாதிபத்தியப் பூகோளமயமாதல் எதிர்ப்பு என்பதில் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக, ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்களாக இருக்கும் இன, மத, பிராந்திய மேலாதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவ சக்திகளும் அவற்றின் இருப்பிற்காக அணிதிரண்டுள்ளன என்பதை அவதானிக்க முடியும். பிராந்திய அணிச்சேர்க்கைகளான ஆசியான், சார்க், ஜி-15 போன்றவற்றில் ஏகாதிபத்தியச் சார்புச் சக்திகளும் இருக்கின்றன. அவற்றுக்கும் ஜி-7 நாடுகளுக்குமிடையே முரண்பாடுகள் இருந்தாலும், அவை நடைமுறைச் சாத்தியமான அணிசேர்க்கைகளல்ல.

ஏகாதிபத்திய நவகொலனித்துவத்தின் தாக்குதலுக்குத் தொடர்ச்சியாக இலக்காகி  வந்தாலும், நவகொலனித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கத்தினர், உள்நாட்டு மக்களை அடக்கி ஆளவும் ஜனநாயக, சுயநிர்ணய உரிமை, தொழிலாளர்கள், சமூக மாற்றப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களை அரவணைத்துக் கொள்வதுண்டு. உதாரணமாகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கை, பல்தேசிய கம்பனிகளை அனுமதிப்பது, சர்வதேச நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வது, சர்வதேச, தேசியத் தொண்டு நிறுவனங்களை இயங்க அனுமதிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தச் சூழ்நிலையில், நவகொலனித்துவ நாடுகளிலுள்ள ஆளும் வர்க்கத்தினர், நாடுகளின் சுதந்திரம் இறைமை, ஒருமைப்பாடு, சுயாதி பத்தியம், முற்போக்கு தேசியம் பற்றியெல்லாம் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்களாவர்;. அதே போன்று, அடக்கப்படும் தேசங்களின் தேசிய இனங்களின் ஆதிக்கச் சக்திகள், நவகொலனித்துவத்தையும் ஏகாதிபத்திய பூகோளமயமாதலையும் ஏற்றுக் கொண்ட நிலையில், முற்போக்குத் தேசியத்தை முன்னெடுக்கத் தகுதியற்றவையாகின்றன.

மூன்றாம் அகிலத்திற்குப் பிறகு, 1960களில் எழுந்த திரிபுவாதத் திற்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக சோஷலிஸ சீனாவின் பக்கம் பெரும் எண்ணிக்கையான கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்ந்து நின்ற போதும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய கம்யூனிஸ்ட் சர்வ தேசியத்தைக் கட்டத் தவறியது. ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகள் சில புதிய சர்வதேசியத்தைக் கட்டுவதில் கவனஞ் செலுத்திய போதும், பொது உடன்பாடு எட்டப்படவில்லை. (ட்ரொட்ஸ்கியக் கட்சிகள் 4வது அகிலம் பற்றிப் பேசினாலும் 4வது அகிலம் என்று அவை பல குழுக் களாக இயங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது).

திரிபுவாதத்தை ― அதாவது அமைதியான முறையில் சமூகமாற்றம்/புரட்சி என்பதை ― ஏற்றுக் கொண்டவர்களுக்கு சர்வதேசியத்தில் அக்கறை இல்லை ஆட்சி செய்த பிரபலமான கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அவர்கள் தொடர்புகளை வளர்த்துக் கொண்டாலும் அவற்றுக்குப் புரட்சிகர சர்வதேசியம் பற்றி அக்கறை இல்லை.

மாஓவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளில் ஒரு சில கட்சிகளைத் தவிர அனேகமானவை மாஓவாதிகள் என்பதை அறிவித்துக் கொண்டால் மட்டுமே ஏனைய கட்சிகளுடன் தொடர்பை வைத்துக்கொள்ளும்/உறவை வளர்த்துக் கொள்ளும் குறுகிய பார்வையைக் கொண்டு சில சர்வதேச, பிராந்திய அமைப்புகளைக் கட்டியுள்ளன. ஆனால் பலமான சர்வதேசியத்தைக் கட்ட முடியவில்லை.

எந்தவொரு கட்சியும் எமது கட்சியுடன் தொடர்பை வைத்துக் கொள்ளவோ உறவை வளர்த்துக் கொள்ளவோ விரும்பினால், அது தன்னை “மாஓவாதி” என்று அழைத்துக் கொள்வதற்காக, அதை ஏற்க நாம் பின்நிற்கவில்லை. நாம் மாக்சிசத்தின் வளர்ச்சியை மாக்சிசம்-லெனினிசம்-மாஓ சேதுங் சிந்தனையும், பிற வளர்ச்சிகளும் என்று குறிப்பிடுவதுடன் எமது வழிகாட்டியாக அவற்றைக் கொள்கிறோம். ஐரோப்பிய மையவாதத்தைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் மாஓ வின் பங்களிப்பை நிராகரிப்பதை நாம் ஏற்கவில்லை. மாஓவின் பங்களிப்புகளிற் சில சீனாவின் குறிப்பிட்ட நிலைமைகளும் சில பொதுவாகப் பின்தங்கிய நாடுகளுக்கும் ஏற்றன. திரிபுவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு, முரண்பாடுகள் பற்றி, புதிய-ஜனநாயகப் புரட்சி, மக்கள் யுத்தம் போன்றவை சர்வ வியாபகமான ஏற்புடமையுடன் இருக்கலாம். ஆனால் இது ஏகாதிபத்திய யுகமும் அதற்குப் பதிலான லெனினிச யுகமும் என்பதாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பரந்த ஐக்கியம் அவசியம் என்பதாலும் நாம் மாஓவாதம் என்றழைப்பதைத் தவிர்த்து மாஓ சிந்தனை என்றே அழைக்கிறோம். மூன்றுலகக் கோட்பாட்டை எமது கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் இயங்கியபோது ஏற்றுக் கொண்டுள்ளது. தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான கட்சியிலிருந்து எமது கட்சியை அமைக்கத் தலைமைத் தோழர்களாக வந்தவர்கள் ஒதுக்கப்பட்டமைக்கும் எமது கட்சியை அமைப்பதற்கும் இருந்த பல காரணங்களில் மூன்றுலகக் கோட்பாடு பற்றிய முரண்பாடும் ஒரு காரணமாகும். அக் கோட்பாட்டினை விமர்சன ரீதியாக நாம் தற்போது பார்க்கிறோம். மாஓவின் இறப்பிற்குப் பின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிஸத்திற்கும் இடையிலான முரண்பாட்டைப் பிரதான முரண்பாடுகளிலிருந்து நீக்கியமை பற்றியும் நாம் முரண்பட்டோம். பின்னர் டெங் ஷியாஓபிங்கின் சீர்திருத்தங்கள் உட்படச் சீனாவை முதலாளித்துவத்திற்கு மாற்றும் பல திட்டங்களுடன் முரண்பட்டோம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அதன் குறிப்பான உள்நாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் கொள்கைகளையும் திட்டங் களையும் வகுத்துக் கொள்ளலாம் என்ற சுதந்திரம் திரிபுவாதத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடமளிப்பதாகாது.

சோவியத் யூனியனின் குருஷ்சேவ்வின் தலைமையில் திரிபுவாதத் திற்கு மாறிவிட்டதை குருஷ்சேவின் காலத்திலேயே கண்டித்ததுடன் சீனாவில் மாஓ உயிருடன் இருந்தபோதே லின் பியாஓ குழுவினரால் இழைக்கப்பட்ட தவறுகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

நாம் தற்போது ஏகாதிபத்திய பூகோளமயமாதல் எதிர்ப்பு /ஏகாதி பத்திய எதிர்ப்பு என்ற விரிந்த பரந்த தளத்தில் உலக நாடுகளிலுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடனும் ஜனநாயக, இடதுசாரி, முற் போக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம். பலமான தனியொரு சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமெதுவும் இல்லாது பல முன்னெடுப்புகள் இருக்கும் நிலையில், நாம் எமது நிலைப்பாட்டிற்கு நேர்மையெனக் கருதும் ஒன்றிற்கு மேற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கும் விருப்பம் கொண்டுள்ளோம். நாம் தற்போது உத்தியோகபூர்வமாகச் சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளின் கூட்டுக் குழு எனும் அமைப்பில் அங்கம் வகிப்பதுடன் அதன் செயலகத்திலும் அங்கம் வகிக்கிறோம். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். உள்நாட்டில் கியூப தேசிய தினமான ஜனவரி முதலாம் திகதியை வருடாந்தம் ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பதாகையின் கீழ் பிற்போக்குத் தேசியவாத நிலப்பிரபுத்துவ, மதவெறி கொண்ட பல்வேறு சக்திகளுடனான உறவோ தொடர்போ பொது உடன்பாடோ நீடிக்க முடியாது.

தற்போது, பல சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்புகள் இயங்குகின்ற இன்றைய சூழ்நிலையில், நாம் ஒன்றிற்கு மேற்பட்ட சர்வதேச அமைப்புக்களுடன் இயங்க வேண்டுமெனினோ முடியுமாயினோ அவ்வாறு இயங்கும் தெரிவையும் உரிமையையும் சுதந்திரத்தையும் கொண்டுள்ளோம். ஒரு நாட்டிலுள்ள ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகளுடன் தொடர்பை வைத்திருப்பதும் தவிர்க்க முடியாது. தற்போது நாம் எந்தச் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் அங்கம் வகிக்க வில்லை. ஆனாற் பல சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்புக்களுடன் தொடர்பைக் கொண்டுள்ளோம்.

இந்தியா, பங்ளாதேஷ், நேபாளம், அமெரிக்கா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பையும், உறவையும் கொண்டுள்ளோம். அதைத் தவிர, ஏனைய உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் தொடர்பைக் கொண்டுள்ளோம். இந்த உறவுகளை மேலும் வளர்க்க முயல்கின்றோம். எம்மைப் பொறுத்தவரை, முரண்பாடுகள் குறைவாகவும் உடன்பாடுகள் கூடுதலாகவும் உள்ளனவான உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பையும் உறவையும் வளர்க்க விரும்புகிறோம். அந்த வகையில் எமக்குப் பல கட்சிகளுடன் தொடர்பு இருக்கிறது. அதனை உறவாக வளர்க்க முயல்கின்றோம். முரண்பாடுகளைச், சினேகபூர்வமாக, “ஐக்கியமும் போராட்டமும்” என்ற அடிப்படையில் கருத்துப் பரிமாறலின் மூலம் தீர்க்க முடியும் என நம்புகிறோம். உலக நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொடர்பையும் உறவையும் வலுப்படுத்தும் நோக்கில் “சகோதரக் கட்சிகளுடனான முரண்பாடுகள் பற்றி” என்ற தலைப்பில் எமது நியூ டெமோக்ரசி (New Democracy) பெப்ரவரி 2010, 36ஆம் இதழில் சில குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றை அடிப்படை யாகக் கொண்டு உலக நாடுகளின் கட்சிகளுடன் கலந்துரையாடித் தீர்வு காண விரும்புகிறோம்.

விஞ்ஞானரீதியாக இதுவரை முடிவு காணப்படாததும் இன்றைய சூழ்நிலையில் மாறக் கூடியதுமான உண்மைகள் பற்றிப் பல அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் கேட்டுக் கலந்துரையாடி விவா தித்து முடிவு செய்ய நாம் திறந்த மனத்துடன் செயற்படுகிறோம். குறித்த சூழ்நிலையில் குறித்த முடிவை எடுப்பது மாக்சிசத்தின் அடிப்படை என்பதை நாம் மறக்கவில்லை. அதற்கான வாய்ப்பைப் பேணிக் கொண்டு நாம் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இருதரப்பு உறவை வளர்க்கவும், அதனைப் பலதரப்பு உறவாக விரித்து, பிராந்தியம், கண்டம், சர்வதேசம் என விரிவடையும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக் கத்தைக் கட்டவும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியத்தை வளர்க்கவும், கம்யூனிஸ்ட்டுகள் என்ற ரீதியில் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

மாக்சிச லெனினிசவாதிகள் முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத் தையும் எதிர்ப்பதுடன், திரிபுவாதம், சந்தர்ப்பவாதம், அராஜகம், திகில்வாதம் போன்றவற்றுடன் சமரசம் செய்வதுமில்லை. தென்னாசியப் பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமடைவதனூடும் ஐக்கியப் படுவதனூடும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்ட வழி ஏற்படும் என நாம் நம்புகிறோம்.

ஏகாதிபத்தியம் சர்வதேச ரீதியாகவும், பிராந்தியரீதியாகவும் உள்நாட்டிலும் என்.ஜீ.ஓக்கள் போன்ற பல அமைப்புகளையும் அமைத்துச் செயற்படும் போது ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காக அதைவிடப் பலமான அமைப்புகள் அவசியம். அதே போன்று கம்யூனிஸ்ட் அமைப்புகளும் அவசியம். அதற்கான குறிப்பானதும் பொதுவானதுமான கடமைகளை யும், பொறுப்புக்களையும் ஏற்றுச் செயற்பட எமது கட்சி திடசங்கற்பம் கொண்டுள்ளது.

ஒரு நாட்டிற்குள் நடக்கும் போராட்டமோ புரட்சியோ, சொற்களிலன்றி உண்மையாகவே, சர்வதேசப் புரட்சியின் பகுதியாக இருக்க வும் சர்வதேசப் போராட்டங்களும் தேசியப் புரட்சிகள், தேசியப் போராட்டங்கள் புரட்சிகள் என்பனவும் நோக்கிலும் போக்கிலும் பொதுவானவையாக இருக்கவும், உண்மையான சர்வதேச உடன்பாட்டை எட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கலந்துரையாடல்கள் தொடக்கப் பட வேண்டியதுடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் முடிவுகளும் தீர்மானங்களும் எட்டப்பட வேண்டும்.

1.    புதிய நிலைமைகளுக்கு ஏற்ப, மாக்சிசத்தை அரசியல் தத்துவ மாகவோ, பொருளாதாரத் தத்துவமாகவோ மட்டுமன்றி, அடையா ளந் தெடர்பான அரசியல்-சமூக-பண்பாட்டு விடயங்களினதும் சூழல் தொடர்பானதும் மனித வாழ்வினதும் பௌதிக விஞ்ஞா னத்தினதும் சமூக விஞ்ஞானத்தினதும் பண்பாட்டினதும் பன்முகப் பட்ட தத்துவமாகவும் நடை முறையாகவும் ஆழமாக்கி விரிவாக்கிப் பலப்படுத்த வேண்டும். அதற்கான ஆய்வுகள் சர்வதேச மையத்தினூடாகச் செய்யப்பட வேண்டும். குறிப்பாகச் சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகள் மீள முதலாளிமயமாக்கப் பட்டதற்குச் சரியான காரணங்களைக் கண்டறிந்து தொகுப்பது அவசியம். சோஷலிஸ ஆட்சியின் கீழும் பிற்போக்கு வர்க்கத்தினர் சோஷலிஸத்திற்கு எதிராகப் பல விதத்திலும் செயற்படுவர் என்பதை லெனின் எச்சரித்திருந்தார். சோஷலிஸத்திற்குக் கீழும் வர்க்கப் போராட்டம் தொடர வேண்டும் என மாஓ கூறியதும் நினைவிற் கொள்ளத் தக்கது.

2.    பல்வேறு நாடுகளினுடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் பிராந்திய, சர்வதேச ரீதியாக விமர்சனம்–சுயவிமர்சனம், கலந்துரையாடல்கள், விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள் போன்றவற்றினூடாகப் பொது உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

3.    கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டங்கட்கும் புரட்சிகட்கும் சர்வதேச ஒத்துழைப்பை நிலைநாட்ட ஒரு சர்வதேச மையம் ஏற்படுத் தப்பட வேண்டும். அதனூடாகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட் டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்படுத்தப்படலாம்.

4.    ஏகாதிபத்தியத்துக்கும் ஏகாதிபத்திய பூகோளமயமாதலுக்கும் எதி ராகவும் நாடுகளுக்குள்ளே இருக்கும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவுமான போராட்டங்களை, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தினூடாகவும் அதன் பன்முகப்பட்ட வலைப் பின்னல்களுக்கு ஊடாகவும் வலுப்படுத்தி, வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதற்கான சர்வதேச மையம் உருவாக்கப்பட வேண்டும்.

5.    ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டு அரசுகளுக்கிடையேயான உறவை விட மக்களுக்கிடையேயானதும் கட்சிகளுக்கிடையேயானதுமான உறவை முக்கியப்படுத்தி வலுப்படுத்த வேண்டும்.

6.    சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க பிரசார தகவல் தொடர்பு வலைப் பின்னல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

7.    ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், இன, மத அடிப்படைவாதம் உட்பட சகல மனிதகுல விரோத முறைமைகளுக்கும் எதிரான போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

8.    மேற்கூறப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கியதான புதிய கம்யூனிஸ்ட் சர்வதேசியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

மாக்சிசம், லெனினிசம் மாஓ சேதுங் சிந்தனை வாழ்க!

பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் சர்வதேசியம் வளர்க!

உலகத் தொழிலாளர்களினதும், உழைக்கும் மக்களினதும் போராட்டங்கள் வெல்க!

அடக்கப்பட்ட நாடுகள், தேசங்கள், மக்களின் போராட்டங்கள் வெல்க!

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இருபக்க, பலபக்க, சர்வதேச உறவுகள் வலுப்பெறுக!

ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மேலாதிக்கம் ஒழிக!

Leave a Reply