புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிக் கட்சியின்
5வது அனைத்து இலங்கை மாநாட்டு ஆவணங்கள் – 3
தேசிய நிலைமை
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி தொடங்கப்பட்ட எமது கட்சி, தனது முதலாவது மாநாட்டை 1984இல் நடத்தியது. இரண்டாவது மாநாட்டை 1991இல் நடத்திப் புதிய-ஜனநாயகக் கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்டது. 1997இல் மூன்றாவது மாநாட்டையும் 2002இல் நான்காவது மாநாட்டையும் நடத்தியது. 2010ஆம் ஆண்டில் ஐந்தாவது மாநாட்டை நடத்துகிறது.
4வது மாநாடு நடைபெற்றபோது, தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஆயுத நடவடிக்கைகளில் இறுதியாக ஆயுத எதிர்ப்பு நடவடிக்கயைத் தனியாக முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை பாராளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதன் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தைக் கலைத்து நடத்திய பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றது. சமாதான முன்னெடுப் புக்கள் இழுத்தடிக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு முடிவில், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான பிறகான சூழ்நிலையில், சமாதான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுப் போர் தொடங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக எடுக்கப்படுவதாக தமிழ்ப் பிரதேசங் களில் அரசாங்கம் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட அவ்வியக்கத்தின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதுடன் முடிவிற்கு வந்தது. இந்த இறுதி நடவடிக்கைகளினால் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதுடன் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் திறந்தவெளி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். அவர்களில் அரைவாசிப் பேருக்கு மேல் படுகாயமடைந்தவர்களாவர். 15 ஆயிரம் பேர்வரை காணாமற் போனதாகக் கூறப்படுகிறது. அவ்வேளை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிற் பலர் பல மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் பெரும் பகுதியினர் தடுத்துவைக்கப் பட்டுள்ளனர். மீள் குடியேற்றம் செய்யப்படுவதாகக் காட்டப்பட்ட போதும் இன்னும் பெரும் எண்ணிக்கையானோர் முகாம்களில் இருக்கின்றனர். குடியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ளோர் அகதிகள் போன்றே இருக்கின்றனர். ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்கள் இருந்தவற்றையும் இழந்தவர்களாகவே இருக்கின்றனர். அரசின் இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்திருந்தாலும் எமது கட்சி கூறுவது போன்று தேசிய இனப் பிரச்சினை இலங்கையின் பிரதான பிரச்சினையாக இருந்து வருகிறது. அதற்குப் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
சமாதான காலம் என்று சொல்லப்பட்ட காலத்திலும், யுத்த காலத் திலும், யுத்தம் முடிவடைந்த பிறகும் இலங்கை மீதான அந்நியச் சக்தி களின் பிடி இறுகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்பவற்றினதும் இந்தியாவினதும் மிரட்டல்கள் அதிகரித்து வந்துள்ளன. அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளில் அரசிற்குப் பல விதங்களில் உதவியுள்ளன.
ஒப்பீட்டளவில் 1970களில் இந்தியாவை விடப் பொருளாதாரரீதியாகப் பலமாகவும், தங்கியிருக்கும் தன்மை குறைவாகவும் கொண்டிருந்த இலங்கையில் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சியை ஏற்படுத்த, இந்தியா தமிழ் குழுக்களுக்குப் பயிற்றுவித்து, இலங்கையில் தாக்கு தல்களை மேற்கொள்ளும் திட்டங்களை அவற்றுக்கு வழங்கியும் வந்தது. 1987ஆம் ஆண்டு இலங்கை, இந்திய சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு மேற்கு, அமெரிக்க ஏகாதிபத்திய சார்பாக இருந்த இலங்கையை இந்தியா தன் காலடிகளுக்குக் கொண்டு சென்றது. தமிழ் ஆயுத அமைப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் தந்திரோபாயங்களுக்கு அடிபணியாது தொடர்ந்தும் தன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது. 1990களில் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் ஐரோப்பிய நாடுகளினதும் தலையீடு அதிகரித்தது. அதன் விளைவாக 2000ஆம் ஆண்டில் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அரசாங்கமும் அதிற் பங்கெடுத்தாலும் அவை உள் நோக்கங்களுடன் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுடனும் செயற்பட்டன. அமைதி முயற்சிகளைக் குழப்புவதற்கு ஆரம்பமுதலே இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அமைதி முயற்சிகளுக்கு எதிராக இருந்த நிலப்பிரபுத்துவ, சிங்கள பழமைவாத அடிப்படைகளைக் கொண்ட மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியான பிறகு இந்தியாவுக்கு மேலும் வாய்ப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்து, 1987இல் இலங்கை இந்திய உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்டதும் இலங்கைத் தமிழ் மக்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபி லாட்சைகளைக் குறைந்த பட்சமாயினும் உறுதி செய்யாததுமான மாகாண சபைகளைத் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக நடைமுறைப்படுத்த இந்தியா எண்ணம் கொண்டிருந்தது. மாகாண சபையை முற்றாக அமுல்படுத்தும் விருப்பம் கொண்டிராத ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்ததுடன், இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவிகளை வழங்கி வந்த நாடுகளில் சீனா, பாகிஸ்தான், வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் மேலும் நெருக்கமானார். இதனால் இந்தியா ராஜபக்ஷவின் இராணுவ நட வடிக்கைகளில் பங்காளியாக மாறியது. இராணுவ நடவடிக்கைகளின் முடிவில் ‘இந்தியாவின் யுத்தத்தையே’ தான் செய்துமுடித்ததாக ராஜ பக்ஷ கூறியதிலிருந்து இந்தியாவின் பங்கை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்தப் பங்களிப்புகளுடன் இந்தியா இலங்கையுடன் பாதுகாப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது. FTA என்ற வர்த்தக ஒப்பந் தத்தைக் கொண்டு இலங்கையின் இறக்குமதி வர்த்தகத்தில் அதிகமான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதனால் இலங்கைக்கு ஏற்றுமதிகளைச் செய்யும் உலக நாடுகளில் இந்தியா முதலிடத்திற்கு வந்துள் ளது. அதற்கேற்ற அளவு பயனை இலங்கை அடையவில்லை. இந்தியாவுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இலங்கைக்கு இன்னும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஏற்கெனவே 1987 உடன்பாட்டை அடுத்துத் திருகோணமலைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் சேகரிப்புக் குதங்களைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தது மட்டுமன்றி இலங்கை எரிபொருள் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியன் ஒயில் கம்பனியினூடாக அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. பரவலான சேவைகளை வழங்கும் CEPA என்ற உடன் படிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையை நிர்ப்பந்தித்து வருகிறது. இதன் மூலம் இந்திய சேவைத்துறை இலங்கையை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். நோர்வேயிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த, மன்னார் தீவில் எண்ணெய் அகழ்வதற்கான பொறுப்பை இந்தியா தட்டிக் கொண்டது. இதனூடாக மன்னார் கடற்பரப்பு அதன் கட்டுப் பாட்டிற்குள் வந்துள்ளது. காங்கேசன்துறைத் துறைமுகம், சீமெந்துத் தொழிற்சாலை, வடக்கில் புகையிரதப் பாதையையும் பெருந்தெருக்களையும் அமைத்தல் போன்றவற்றை இந்தியா பெற்றுக் கொண்டது. கிழக்கு மாகாணத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத் திட்டத்தை அமைப்பதற்கான பொறுப்பு இந்தியாவிடம் இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டை, திருக்கோவில் ஆகிய இடங்களிலுள்ள இல்மனைட் கனியத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறது. கிழக்கில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் இந்தியக் கம்பனிகள் பயிர்ச்செய்கைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளன. இந்தியக் கம்பனிகளின் தொழிற்சாலைகள் இங்கு தனியாகவும், கூட்டு முயற்சியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் தேயிலை வர்த்தகத்தினை இந்தியா கட்டுப்படுத்துகிறது. தேயிலைப் பெருந்தோட்டக் கம்பனிகளில் இந்தியர்களின் பங்குகள் அதிகரித்துள்ளன.
அதே போன்று, சீனாவும் இலங்கை அரசுடன் நெருக்கமான உறவு களை ஏற்படுத்தி அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மாணம், கடுகதி நெடுஞ்சாலைகளை அமைத்தல், நுரைச்சோலை அனல் மின் திட்டம் போன்றவற்றினூடாக இலங்கை மீதான தன் செல்வாக்கை நிலை நாட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவை விடப் பலமடங்கு அதிகளவில் நிதியுதவிகளைச் சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது. சீனாவின் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியும் அதன் சந்தை விஸ்தரிப்பும் இலங்கை மீது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நிலைமைக்கு இட்டுச் செல்லலாம்.
தொழில் நுட்பப் பரிமாற்றல், வாகன வர்த்தகம், மேல் கொத்மலைத் திட்டம் போன்றவற்றினூடாக ஜப்பான் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டுள்ளது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றினூடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் பாரிய கட்டுப்பாட்டை இலங்கை மீது செலுத்தி வருகிறது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்காவே முதலாவது நாடாக இருக்கிறது. இவற்றைத் தவிர அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து கொண்டும் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்துக் கொண்டும் இலங்கை அரசை ராஜதந்திரரீதியாக மிரட்டி வருகின்றன.
ஐ.நா. சபையும் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருவதுடன், இலங்கை நிலைமை களை ஆராய ஐ.நா. விசாரணைக் குழுவொன்றை நியமிக்க இருப்ப தாகவும் தெரிவித்து வருகிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் மேட்டுக்குடியினர் ‘நாடுகடந்த தமிழீழ அரசை’ அமைப்பதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இசைவாக நடந்து கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மீது நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றன. இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வந்த GSP+ வரிச் சலுகை இடைநிறுத்தப்படவுள்ளது. யுத்தம் உக்கிர மாக நடந்து கொண்டிருக்கும் போது பெருந்தொகைப் பணத்தை இலங்கைக்குக் கடனாக வழங்கிய சர்வதேச நாணய நிதியம் பல கடுமையான நிபந்தனைகளை இலங்கை மீது விதித்துள்ளது. வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை அரைவாசியாகக் குறைக்கவும் (இதனால் பொருட்களின் விலைகளையும் வரிகளையும் அதிகரிப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழி இருக்க முடியாது) இலவசக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு ஒதுக்கும் நிதியைக் குறைக்கும்படியும் ஓய்வூதியத்ததைக் குறைக்கும்படி அல்லது நீக்கும்படியும் நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கையை முற்றுமுழுதான சுற்றுலா நாடாக ஆக்கும்படியான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அரச கட்டுப்பாட்டிலிருந்த தொழிற் துறைகள் அனைத்தும் பல் தேசியக் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. உணவு, விவசாயத் துறை யிலும் அமெரிக்க பல்தேசிய கம்பனிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. 1950களிலும் 60களிலும் 70களிலும் கட்டப்பட்ட தேசியப் பொருளா தாரம் முற்றாகச் சீரழிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியில் இருந்த தேசிய முதலாளி வர்க்க ஆதிக்கமும் நிகழ்ச்சிநிரலும் (1950களில், 1960களில், 1970களில் இருந்த நிலைமை) ராஜபக்ஷவின் தலைமையிலான நிகழ்ச்சிநிரல்களினூடாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இலங்கை அரச கட்டமைப்பில் தேசிய முதலாளித்துவ அபிலாட்சைகள் முற்றாகப் புறந்தள்ளப்பட்டுள்ளன. மகிந்த சிந்தனை என்ற ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்தங்கிய கிராமங்களின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், சிறிய சிறிய திட்டங்களுக்கும் அந்நிய நாட்டு உதவிகளும், முதலீடுகளும் வரவழைக்கப்படுகின்றன.
அடிப்படை முரண்பாடு
அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடயங்களில் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களைக் காண முடிவதுடன், பெருமுதலாளித்துவ / தரகு முதலாளித்துவ, அதிகார முதலாளித்துவ வர்க்கங்கள் இலங்கையின் ஆளும் வர்க்கங்களாக இருக்கின்றன. இந்த வர்க்கங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நவகொலனித்துவ அரசாக இலங்கை அரசு இருக் கிறது. இலங்கை அரசு பௌத்த சிங்கள பழைமைவாத, பெருமுத லாளித்துவ / தரகு முதலாளித்துவ நவகொலனித்துவ அரசாகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள், மத்தியதர வர்க்கத் தினர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மைத் தேசிய இனங்கள் போன்ற பிரிவினர் அதனால் ஆளப்படுபவர்களாக இருக்கின்றனர்.
ஏகாதிபத்தியம், நவகொலனித்துவம், பெரும்/தரகு முதலாளித்துவம் அதிகாரத்துவ முதலாளித்துவம் என்பவற்றுக்கும் சோஷலிஸத்திற்கும் இடையில் அல்லது ஏகாதிபத்திய, நவகொலனித்துவ, பெரும்ஃதரகு முதலாளி, அதிகாரத்துவ முதலாளி வர்க்கங்கட்கும்; தொழிலாளர், விவசாயி வர்க்கங்கட்குமிடையிலான முரண்பாடு இலங்கையில் இருக் கும் அடிப்படை முரண்பாடாகும். பேரினவாதத்திற்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குமிடையான முரண்பாடுகளும்; பெண்களுக்கு எதி ரான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை போன்ற முரண்பாடுகளும் துணை முரண்பாடுகளாக இருக்கின்றன. இலங்கை அரசு, பேரினவாத, சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கும் அரசாக நிறுவனப்படுத் தப் பட்டுள்ளதால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் பேரினவாத அரசிற்கும் சிறுபான்மைத் தேசிய இன மக்களுக்குமிடையிலான முரண் பாடு பிரதான முரண்பாடாக மேலெழும்பியுள்ளது. இந்த முரண்பாடு தீர்க்கப்படவோ தணிக்கப்படவோ வேண்டும்.
1505ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயரினதும், பின்பு 1658ஆம் ஆண்டிலிருந்து டச்சுக்காரரினதும், பின்பு 1796ஆம் ஆண்டிலிருந்து 1948ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரினதும் கொலனியாக இலங்கை இருந்தது. இலங்கை முழுவதையும் 1815ஆம் ஆண்டு ஒரே ஆட்சியின் கீழ் ஆங்கிலேயர் கொண்டு வந்தனர். 1948ஆம் ஆண்டு இலங்கை யின் ஆட்சியை இலங்கையின் பெருமுதலாளித்துவ வர்க்கத்தினரின் கைகளுக்கு மாற்றினர். மாற்றும் போது, வெஸ்ற்மின்ஸ்டர் பாராளு மன்ற முறையில் சோல்பரி பிரபுவினால் வடிவமைக்கப்பட்ட அரசியல் யாப்பின் அடிப்படையிலான ஆட்சி முறையைத் திணித்து விட்டுச் சென்றனர். அதில் சிறுபான்மையினருக்குச் சமவுரிமையை உறுதிசெய் யாது சலுகை வழங்கப்பட்டிருந்தது. 1972ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட யாப்பு பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் விதத் தில் அமைந்தது. அந்த யாப்பின் மூலம் இலங்கை பௌத்தத்துக்குச் சிறப்பிடம் வழங்கும் குடியரசானது.
1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யாப்பு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகம் செய்ததுடன் இலங்கையை அந்நிய சக்திகளுக்குத் தாரைவார்ப்பதற்கு வசதிகளை யும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் தனியாள் சர்வாதிகார மும், நிர்வாக பாசிசமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சி முறையாக்கப் பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியினால் தொடக்கி வைக்கப்பட்ட இவ்வாட்சி முறை 1994இற்குப் பிறகு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் சந்திரிகா குமாரதுங்கவினாலும் 2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ஷவினாலும் மேலும் மேலும் பாசிசத் தன்மையுடன் நிலைநாட்டப்பட்டுள்ளது எனலாம். ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட் இராணுவ நடவடிக்கைகளினாலும், பாதுகாப்புக் கெடுபிடிகளினாலும், அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கடுமையான நடைமுறைகளாலும், செய்யப்பட்ட படுகொலைகள், காணாமற் போதல்கள், சாதாரண கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் போன்றன மூலம் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பாசிச ஆட்சி முறை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம், இராணுவ நடவடிக்கைகளை அடுத்து இவ் வருடம் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியானார். அதனையடுத்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சட்டத்தை மீறிச் செயற்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளாகத் தமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய இராணுவ நடவடிக்கைகளில் கூட்டாகச் செயற்பட்ட இராணுவ நடவடிக்கைகள் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு ஓரிரு மாதங்களில் மகிந்த ராஜபக்ஷவிற்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையிலான முரண்பாடுகள் வலுத்தன. இதனால், மகிந்த ராஜபக்ஷ, இராணுவச் சதி ஏற்படக் கூடும் என்ற சந்தேகத்தில், இந்தியாவின் ஆலோசனைப் படி, தன் பதவிக்காலம் முடிவடைய ஒரு வருடம் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். அவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. என்பவற்றின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிட்டதற்குப் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத் தியம் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏறக் குறையப் பனிப் போரே நடந்தது. இந்திய ஆசீர்வாதம் பெற்ற மகிந்த ராஜபக்ஷ வென்றார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஆறு ஆசனங்கள் குறைவான நிலையில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இத் தேர்த லுடன் சிறுபான்மையின் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பலமும் திட்டமிட்ட வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவைப் பொறுப்புக்களில் பெரும் பகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்னொரு சகோதரரான கோத்தாபய ராஜபக்ஷவும் எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் ஒரு குடும்ப ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.
தேசிய இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காண்பதை அடியோடு மறுத்துவரும் மகிந்த ராஜபக்ஷ, அரசியல் யாப்பில் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருப்பதைத் தடுக்கும் உறுப்புரையை திருத்தி ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதியாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல குறைபாடுகள் இருந்த போதும் சிறிய கட்சிகளுக்கும், சிறுபான்மையினக் கட்சிகளுக் கும் வாய்ப்பைத் தருகின்ற விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இவை யாவும் தனியாள் சர்வாதிகார பாசிச ஆட்சி முறையை நிலைநிறுத்தும் செயற்பாடுகளாகும்.
இதனால் பாராளுமன்றத்தில் தரகு முதலாளி வர்க்கம், அதிகாரத்துவ முதலாளி வர்க்கம் என்பவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியுமே மீண்டும் பாராளுமன்றத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் 60இற்கு மேற்பட்ட கட்சி கள் இருக்கின்றன. அவையாவும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்துள்ளன. வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பழைமைவாத தமிழ்த் தேசியவாதத்தை முன்னெடுக்கும் இந்தியாவின் முகவராகச் செயற் படுகிறது. முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்கள் ஏறக்குறைய எல்லாமும் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. முஸ்லிம் மக்களிடையே செயற்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி யுடனும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்தவர்கள் யாவ ரும் அரசாங்கத்துடனும் இணைந்துள்ளனர். அதே போன்று மலையகத் தமிழ் மக்களிடையே செயற்படும் எல்லாக் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசி யக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றது. சிறு முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டு 1971, 1988ஆம் ஆண்டுகளில் ஆயுதக் கிளர்ச்சியைச் செய்த ஜே.வி.பி. மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சிங்களத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தற்போது முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற பெயரில் இயங்குகிறது. அது தன்னை இடதுசாரிக் கட்சியென்று அழைத்துக் கொண்டாலும் அது பேரினவாதக் கட்சியேயாகும்.
மகிந்த ராஜபக்ஷவுடன் திரிபுவாத ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி யும், லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய ட்ரொட்ஸ்கியக் கட்சிகளும் இணைந்து அரசாங்கத்துடன் இருக்கின்றன. இதைத் தவிர, சில ட்ரொட்ஸ்கியக் கட்சிகள் பாராளுமன்றத்திற்கு வெளியில் இயங்குகின்றன.
இந்தச் சூழ்நிலைகள் புரட்சிகர பாட்டாளிவர்க்க மாக்சிச லெனினிசக் கட்சியொன்றின் பணியையும், வளர்ச்சியையும் வேண்டி நிற்கின் றன. அதற்குரிய புரட்சிகர தத்துவார்த்தை கொண்ட மாக்சிச லெனினிசக் கட்சியாகப் புதிய-ஜனநாயக கட்சியே இருக்கிறது. எமது கட்சி தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசின் அடக்கு முறைகள் வேகமாக வளர்ந்து வந்துள்ளன. திரிபுவாதிகள், ட்ரொட்ஸ்கிவாதிகள், தமிழ், சிங்கள குறுந்தேசியவாதிகள் போன்றோரின் சவால்களுக்கு முகம் கொடுத்துத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதன் இயங்கு தளத்தை நாடளாவியரீதியில் அனைத்துத் தேசிய இனங்களுக்கிடையேயும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
இலங்கை மக்களுக்கான தேசிய ஜனநாயகம் கூட இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.
இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் தேசிய ஜனநாயகத்தை நிலை நாட்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது. நிறுவனமாகியுள்ள பாராளுமன்ற-ஜனாதிபதி ஆட்சிமுறை மூலம் தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியவில்லை. மாறாக ஆளும் வர்க்கங்கள் பௌத்த சிங்கள ஆதிக்கத்தை நிறுவனமாக்கியுள்ளதுடன் ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையாளர்களாகி நவகொலனித்துவத்தைப் பூரணமாகத் தழுவிக் கொண்டுள்ளன.
நிலப்பிரபுத்துவமும், நவகொலனித்துவ அரசும், ஏகாதிபத்திய வாடிக்கையாளர்களும் மறுக்கும் தேசிய ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டியது அனைத்து இலங்கை மக்களினதும் எதிர்பார்ப்பும் கடமையுமாகிறது. இந்த தந்திரோபாய தேசிய ஜனநாயக வேலைத் திட்டம், அடக்கப்படும் தேசிய இனங்களின் அரசியல் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள், ஜனநாயகக் கட்சிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளையும் கொண்ட பரந்துபட்ட ஐக்கிய முன்னணியொன்றால் முன்னெடுக்கப்பட வேண்டியதாகும். இவ் வேலைத்திட்டத்தில் அரசியல் பொருளாதார தீர்மானங்களை எடுப்பதில் மக்கள் முடிவெடுப்பவர்களாக மாறும் நிலையில் மக்களின் கைகளுக்கு அதிகாரத்தைக் கொண்டு செல்லவும் இலங்கையின் சுதந்திரம், இறைமை, ஐக்கியத்தை உறுதி செய்யும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் தேசிய இனங்களுக்குச் சமத்துவம், சுயாட்சி, சுய நிர்ணய உரிமையை உறுதிசெய்யவும் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய பண்பாட்டையும் கட்டியெழுப்பவும் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
இவ் வேலைத்திட்டத்தை வென்றெடுக்கப் பாராளுமன்ற அரசியல் பாதைகளுக்கப்பால் வெகுஜனப் போராட்ட அரசியல் மார்க்கம் முன் னெடுக்கப்படவேண்டும்.
மேற் குறித்த கட்டம் எமது கட்சி முன்வைக்கும் புதிய-ஜனநாயக புரட்சியின் முன்தேவையாகிறது. இலங்கை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடாக இல்லாதபடியால் புதிய-ஜனநாயகப் புரட்சி முதற் கட்டத் தேவையாகிறது. புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களினூடாகத் தொழிலாளர், விவசாயிகள் ஐக்கிய முன்னணியில் அனைத்துத் தேசிய இனங்களும், சுரண்டப்படும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய எதிர்ப்புத் தேசபக்த சக்திகள், தேசிய முதலாளித்துவ, சிறு முதலாளித்துவ வர்க்கங்களை அணிதிரட்டி ஏகாதிபத்தியத்தையும், பெரும்/தரகு முதலாளித்துவத்தை தோற்கடித்து, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அந்தந்த இனங்களின் சுய விருப்பின்படி உறுதி செய்து, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களையும் அகற்றி சோஷலிஸக் கட்டு மானங்களை முன்னெடுக்க வாய்ப்பான முன்தேவையை தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மாக்சிச லெனினிசக் கட்சியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் முன்னெடுக்கப்படும் புரட்சியே புதிய-ஜனநாயக புரட்சி. இது புரட்சியின் முதற் கட்டமாகும். இரண்டாம் கட்டம் சோஷ லிஸப் புரட்சி ஆகும். இதுவே அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்கும் வழிவகை ஆகும். சோஷலிஸக் கட்டுமானத்தினூடாக நாம் வர்க்க மற்ற உலகத்தைத் தரிசிக்க, வர்க்கக் கருவியான அரசு உதிரும் கம்யூனிஸ்ட் யுகத்தை அடைய முடியும்.
பிரதான முரண்பாடாகத் தேசிய இனப்பிரச்சினை
1948ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையை பெரும்/தரகு முதலா ளித்துவ வர்க்கத்திடம் ஒப்படைத்துச் சென்றபோது சோல்பரி பிரபுவினால் வெஸ்ற்மின்ஸ்டர் பாராளுமன்ற முறையில் அமைக்கப்படட அரசியல் யாப்பையும் அதன் அடிப்படையிலான பிரித்தாளும் ஆட்சி முறையையும் இலங்கை மக்கள் மீது திணித்து விட்டுச் சென்றனர். அந்த யாப்பில் தேசிய இனங்களுக்கிடையே சமத்துவத்தை நிலை நாட்டுவதற்குப் பதிலாக சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சலுகையே இருந்தது. அதாவது சிறுபான்மை இனங்களைப் பாதிக்கும் வகையில் பாராளுமன்றம் சட்டமியற்ற முடியாது என்ற ஏற்பாடு உறுப் புரை 29இல் இருந்தது. எனினும் “சுதந்திரப் பாராளுமன்றம்” 1948ஆம் ஆண்டு இயற்றிய பிரஜா உரிமைச் சட்டத்தினால் மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. 1956ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழியெனப் பாராளுமன்றம் சட்டமியற்றியது. இவை யாவும் சட்டபூர்வமானவை என்று நீதிமன்றங்களும் தீர்ப்பளித்தன. அதாவது இறைமையுள்ள பாராளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் ஆக்கலாம் என்ற அடிப்படையில் அச் சட்டங்கள் நியாயப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் மீதும் மலையகத் தமிழ் மக்கள் மீதுமான இன வன்முறைகள் 1958, 1977, 1983, 1986ஆம் ஆண்டுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகள் அவ்வப்போதும் கட்டவிழ்த்து விடப்பட்டன. கல்வி, வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். திறமையின் அடிப் படையிலன்றி இன விகிதாசாரப்படியே கல்வி, வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இது பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு வாய்ப்பானது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட சிங்களப் பேரினவாதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இராணுவ முகாங்களும் நிறுவப்பட்டன. இதனால் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையே பாதுகாப்பற்றதானது. இதே போன்று முஸ்லிம் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் இன ஒடுக்குமுறைக்குள்ளாகினர்.
இந் நிலைமையில் தமிழ் அரசியல் தலைமைகளிடமிருந்து காலத் திற்குக் காலம் பல கோரிக்கைகள் எழுந்தன.
1. ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் 50க்கு 50 என்ற சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்தார். அதனைப் பெரும்பான்மை இனத் தலைவர் கள் நிராகரித்தனர்.
2. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு-கிழக்கில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தும் படி கோரியது. அதற்காகப் பல அமைதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் வளர்ச்சிப் போக்கில் 1956இல் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் அதிகாரப் பகிர்விற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவ் ஒப்பந்தத்திற்குப் பௌத்த பிக்குகள் உட்படப் பேரினவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து பண்டாரநாயக்க அதனைக் கிழித்தெறிந்தார். 1965 இல் டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் பேரினவாதிகளினதும் திரிபு வாதிகளினதும் ட்ரொட்ஸ்கிவாதிகளினதும் எதிர்ப்பினாலும் பிற்காலத்தில் ஜே.வி.பியை அமைத்த தலைவர்களின் எதிர்ப்பினாலும் கைவிடப்பட்டது.
3. 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பை ஆக்கும் போது தமிழ்த் தலைமைகளின் சமஷ்டிக் கோரிக்கை கவனிக்கப்படவில்லை. ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்விற்கான ஏற்பாடுகள் கூடச் செய்யப்படவில்லை. வடக்கு-கிழக்கில் தமிழ் மொழி ஆட்சி மொழி யென ஏற்பாடு செய்த தமிழ் மொழி விசேட அமுலாக்கல் சட்ட ஏற்பாடுகள் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டன. அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சித் தலைமைகள் தரகு முதலாளித்துவ வர்க்கத் தலைமைகளாதலால், அவர்களிடம் சாதாரண சிங்கள தொழிலாளிகள், விவசாயிகளின் ஆதரவைத் திரட்டும் எண்ணம் இருக்கவில்லை. பழைமைவாதச் சிங்களப் பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகப் பழைமைவாதத் தமிழத் தேசியவாதத்தையே தமிழ்த் தலைமைகள் உயர்த்திப் பிடித்தன.
4. இதன் வளர்ச்சியாக 1976ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்க ளுக்குத் தமிழீழம் என்ற தனியரசு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைப் பெற்றுப் பிரதான எதிர்க்கட்சியானது.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையில் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பினூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட்டது. இந்த அரசியல் யாப்பிலும் தமிழ் மக்களின் தேசிய அபிலாட்சைகளை உறுதி செய்யும் அதிகாரப் பகிர் வோ அரசியல் தீர்வோ உள்ளடக்கப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைக்காகத் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட எழுச்சி அரச பயங்கரவாதத்தினால் ஒடுக்கப்பட்டதுடன் பேரினவாத ஒடுக்குமுறை யுத்தமாகவும் மாறியது. தமிழ் இளைஞர்கள் தனி நாட்டைக் கோரி ஆயுத நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டனர். இச் சூழ்நிலையை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. 30இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததுடன் அவற்றின் நடவடிக்கைகளையும் இந்தியா திட்டமிட்டுக் கொடுத்தது.
இந் நடவடிக்கைகளினூடாக ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவை இந்தியாவின் இணக்கப்பாட்டிற்குக் கொண்டு வந்து 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையை இலங்கை மீது திணித்ததோடு மாகாண சபை முறையை இலங்கை மக்கள் மீது தமிழ் மக்களுக்குத் தீர்வாகத் திணித்தது. 1987ஆம் ஆண்டு உடன்படிக்கையுடன் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம், அதற்கு உடன்படாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1990ஆம் ஆண்டு திருப்பி அழைக்கப்படும் வரை இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் பாரிய அழிவுகளை மேற்கொண்டது.
இக் காலகட்டத்திற்குப் பிறகு தனியொரு சக்தியாக மாறிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1991இல் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அவர் 1993ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டார். 1994இற்குப் பிறகு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதிலும் உடன்பாடு எய்தப்படவில்லை. சந்திரிகா தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்தாமலே மாகாண சபை முறைமையை விட அதிகாரங்கள் கூடிய (ஆனால் கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரித்ததுடன் கிழக்கு மாகா ணத்தை மேலும் மூன்றாகப் பிரித்து) பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதை அறிமுகம் செய்ய முற்பட்டாலும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்ததால் அது கைவிடப்பட்டது. சந்திரிகாவைத் தமிழீழ விடுதலைப் லிகள் கொல்ல எடுத்த முயற்சியிலிருந்து அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
பின்னர் 2000ஆம் ஆண்டில் பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். அவரின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றிற் போதிய முன்னேற்றமின்மையால் விடுதலைப் புலிகள் 2003ஆம் ஆண்டு நடுவில் பேச்சுக்களினின்று விலகிக்கொண்டனர். 2004ஆம் ஆண்டு டிசம்பரில் வடக்கு கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்விற்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பங்களிப்புடனான சுனாமி கட்டமைப்பை உயர் நீதிமன்றம் 2005ஆம் ஆண்டில் செல்லுபடியற்ற தாக்கியது. ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற பேரினவாத அமைப்புக்கள் முறையிட்டதை அடுத்தே உயர் நீதிமன்றம் அத் தீர்ப்பை வழங்கிது. 1987ஆம் ஆண்டு உடன்படிக்கையின் படி, வட மாகாணமும், கீழ் மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. அதனையும் உயர் நீதிமன்றம் பிரித்தது.
அத்துடன் மாகாண சபை முறையில் மாகாண சபைகளுக்கென உறுதி செய்யப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது என்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில் எந்தவொரு அதிகாரப் பகிர்வும் தமிழ் மக்களுக்கு இல்லை என்பதே இலங்கை அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. இந் நிலையில் பிரதான முரண்பாடாக இருந்த தேசிய இனப் பிரச்சினை இன்னும் அப்படியே இருக்கிறது.
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தேசியம் முற்போக்கானதாக இல்லாதபடியால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்ட பிறகு பழைமைவாதத் தமிழ்த் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் உண்மையான முகவராகச் செயற்படுகிறது.
இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றுவாய் 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தனித் தமிழ் ஈழமே தீர்வெனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியே ஆகும். அதனுடைய தவறான போக்கே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்திற்கும் அடித்தளமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2002ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் ஏகத் தலைமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே என்று ஏற்று அங்கீகரித்தது. 22 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து வந்தது. பேரினவாதத் தேசியத்திற்குப் பதிலாகத் தமிழ்த் தேசியவாதத்தைத் தமிழ்த் தேசியத் தலைமைகள் முன்னெடுத்த விதம் போல அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மேலாதிக்கத்திற்கும் தமிழ்த் தேசிய இனத்தை விசுவாசிகளாக்கும் தமிழ்க் குறுந் தேசியவாதத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏற்றுச் செயற்பட்டது. பேரினவாதமும் குறுந் தேசியவாதமும் ஒன்றை யொன்று போஷித்து தேசிய இன முரண்பாட்டைப் பிரதான முரண்பாடாக்கி நாட்டிற்கும் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தின. இதனால் கடந்த 30 வருடங்களாக, 2009 மே மாதம் வரை தமிழ் மக்களுக்கும். சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் ஏற்பட்ட அழிவுகள் சொல்லிலடங்கா. தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக அதற்கான கோரிக்கையும், போராட்டமும் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளின் தலையீடுகளை அதிகரிக்கச் செய்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பேரழிவை ஏற்படுத்தி இலங்கையின் சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை போன்றவற்றைப் பாதிக்கும் என்பதனை எமது கட்சி சுட்டிக் காட்டத் தவறவில்லை. இந்த ஆபத்துக்களைத் தவிர்க்க வேண்டுமானால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சியையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தும் அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்று வலியுறுத்தி வெகுஜனப் போராட்டங்களை எமது கட்சி முன்னெடுத்து வந்தது. அதனால் பிரிவினைவாதப் போராட்டத்தின் துரோகிகளெனத் தமிழ்த் தேசியவாதிகளாலும் பிரிவினைக்கு ஆதரவானவர்கள் எனப் பேரினவாதிகளாலும் எமக்கு முத்திரை குத்தப்பட்டது. ஆனால் இன்றும் சிங்களப் பேரினவாதமும் தமிழ்க் குறுந்தேசியவாதமும் தம் பழைய பாதையிலேயே செயற்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சிறு முதலாளித்துவ வர்க்கமாக இருந்தது. ஆனால் அதனிடத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்போ மேலாதிக்க எதிர்ப்போ இருக்கவில்லை. அதுவும் பழைமைவாதத் தமிழ்த் தலைமைகளின் தொடர்ச்சியாகவே இருந்தது. உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்களின் சார்பில் இருந்ததால் அதனையும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசையும் சமதளத்தில் வைத்துப் பார்க்க முடியாது. ஆனாலும் அதனுடைய தவறுகளை எமது கட்சி விமர்சிக்கத் தவறவில்லை.
கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவரீதியாக ஒடுக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் மேட்டுக்குடியினர் “தமிழீழப் பிரிவினைக்” கோரிக்கையை “நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற பெயரில் வெளிநாடு களில் முன்னெடுக்க முயல்கின்றனர். இதற்கு அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டதாகக் கூறு கின்றனர். அதாவது இலங்கையில் தனித் தமிழீழத்தை ஏற்படுத்தும் நோக்கில் “நாடுகடந்த தமிழீழ அரசை” அமைத்துப் போராடுவதாகத் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமான இந்தியாவே அதனை ஒடுக்கியுள்ளது என்பது மீண்டும், மீண்டும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். 1998ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமென உலக நாடுகளில் முதலாவதாக அமெரிக்காவே தடை விதித்தது என்பதும், அதனை இராணுவரீதியாக ஒடுக்கப் பெரும் பங்காற்றியதும் அமெரிக்காவே என்பதுவும் உறைக்க வேண்டும். கடந்த வருடம் முல்லைத்தீவில் இடம் பெற்ற இறுதி இராணுவ நடவடிக்கைகளின் போது விமானத்தை அனுப்பித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களைக் காப்பாற்றப் போவ தாகக் கூறிக் கழுத்தறுத்ததும் அமெரிக்காவே.
அமெரிக்காவின் தலையீட்டினால் துண்டாடப்பட்ட பால்கன் நாடுகளின் தற்போதைய நிலைமையையும் அவை எந்தளவிற்குச் சுதந்திரமாக இருக்கின்றன என்பதையும் விளங்கிப் பட்டறிவாகக் கொண்டால் அதன் உதவியால் இலங்கை துண்டாடப் பட்டாலும் அது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையாக இராது என அறிவோம். (அவ்வாறு துண்டாடப்படாது என்று நம்புகிறோம். ஏனெனில் அமெரிக்கா வுக்குத் தற்போது முழு இலங்கையுமே தேவைப்படுகிறது). எனவே “நாடுகடந்த தமிழீழ அரசு” என்பது குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் மேட்டுக்குடியினர் பால்கன் பாணியில் அமெரிக்காவைக் கொண்டு இலங்கையைப் பிரிக்கலாம் என்று இலங்கை தமிழ் மக்களை மேலும் மேலும் ஏகாதிபத்தியத்தின் பக்கம் தள்ளாமல் இருப்பது நல்லது.
புலம்பெயர்ந்த சாதாரண தமிழ் மக்கள் தமிழ் மேட்டுக்குடியினரின் போலியான, ஏகாதிபத்தியத்துடன் இணைந்து போகும், “நாடுகடந்த தமிழீழ அரசு” என்ற கோஷத்திற்குப் பின் அணிதிரண்டு தொடர்ந்து மாயைக்குள் மூழ்காமல் யதார்த்தத்தைப் புரி;ந்து கொண்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
அதாவது, புலம்பெயர்ந்த சாதாரண தமிழ் மக்கள் இலங்கையின் சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்கெடுக்கவோ ஆதரவளிக்கவோ விரும்பினால் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான நிர்ப் பந்தத்தையும் அழுத்தத்தையும் கொடுக்கும் போராட்டங்களை அவர்களின் புலம்பெயர்ந்த நாட்டுச் சூழ்நிலைக்கேற்ப முன்னெடுப்பதே சிறந்த தெரிவாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் தனி நாடல்லாத அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது சுயநிர்ணய உரிமை இல்லையென்று அர்த்தம் கற்பிப்பவர்கள் உண்மையாகவே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவானவர்களல்லர். இது பேரினவாதத்துடன் சமரசம் செய்யும் போக்கல்ல. ஏனெனில் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடாமல் எந்தவொரு அரசியல் தீர்வையும் பெற முடியாது.
இலங்கையில் தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டி தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக் கண்டு, புதிய ஜனநாயக புரட்சி வெற்றி பெறும் சூழ்நிலையில் தமிழ் மக்களின் சுயவிருப்பில் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடியும்.
இலங்கையில் இரண்டு கோடியே அறுபது லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 73.9% சிங்களவர்களையும், 12.7% தமிழர்களையும் 7% முஸ்லிம்களையும், 5.5% மலையகத் தமிழர்களையும் கொண்ட பல்லின நாடு. இங்கு பறங்கியர், மலாயர், வேடர்கள் போன்ற சமூகத்தினரும் வாழ்கின்றனர். இங்கு பௌத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களை ஏற்று ஒழுகுபவர்கள் இருப்பதால் இலங்கை பல மதங்களைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. எமது கட்சியின் நிலைப்பாடானது இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிமர் ஆகிய நான்கு தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதாகும். அவற்றின் உரிமைகளும் சமத்துவமும் சுயாட்சியும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய இலங் கைக்குள் உறுதி செய்யப்படும் விதத்தில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
அந்தத் தீர்வை வென்றெடுப்பதற்கு அடக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழத் தேசிய இனங்களினது கோரிக்கைகளை முன் வைத்துத், தேசிய இனங்களின் அபிலாட்சைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் ஏகாதிபத்தியம், மேலாதிக்கம் பெரும்ஃதரகு முதலா ளித்துவம், நிலப்பிரபுத்துவம் என்பவற்றை நிராகரிப்பதாகப் பெரும்பான்மைச் சிங்களப் பாட்டாளிகள், விவசாயிகளின் ஆதரவைக் கொண்ட தான புதிய வடிவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தேசிய இனப் பிரச்சினையும் அதனோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய இயக்கங்களும் முதலாளித்துவப் பண்புகளைக் கொண்டனவாக இருப்பதை மாக்சிசம் கற்பிக்கிறது. இந்த அமைப்புகள் பொதுவாக ஏகாதிபத்தியத்தின் பெரும்/தரகு முதலாளி வர்க்கத்தின் பக்கம் சரியக் கூடிய தடுமாற்றம் கொண்டதாகவே இருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியம் பால்கன் நாடுகளைத் துண்டாடிப் பிரதான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு எடுத்த நடவடிக்கைகளையும் அது போன்ற நடவடிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு அவ்வாறான நடவடிக்கைகளை ஏற்கும் இயக்கங் களின் வாலாக மாக்சிச லெனினிசக் கட்சிகள் செயற்பட முடியாது. ஆனால் தேசிய இனங்களின் அபிலாட்சைகளைக் கருத்திற் கொண்டு அவற்றின் போராட்டங்களை ஐக்கியமும் போராட்டமும் என்ற ஐக்கிய முன்னணித் தந்திரோபாயத்துடன் அணுகுவதும் மதிப்பதும் அடக்கப் படும் தேசிய இனங்களின் பக்கம் இருக்க வேண்டியதும் கம்யூனிஸ்ட்டுக்களின் தவற முடியாத கடமை ஆகும்.
அதைவிடப், பாட்டாளி வர்க்கத் தலைமையில் தேசிய ஜனநாய கத்திற்கான போராட்டத்துடனும், புதிய ஜனநாயகப் புரட்சியுடனும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கூட்டிணைத்துக் கம்யூனிஸ்ட்டுக்கள் முன்னெடுக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் மாக்சிச லெனினிசக் கட்சியின் நிகழ்ச்சிநிரலில் தேசிய இனப் பிரச்சினை நேரடியாகச் சேர்க்கப்படுகிறது. சுயநிர்ணய உரிமை என்ற பேரில் ஏகாதிபத்திய ஆதரவுடன் உடைக்கப்பட்டுப் பிரிக்கப்பட்ட நாடுகளில் தேசிய இனங்களின் வாழ்வில் தரரீதியாக எவ்வித மாற்றமும் ஏற்ப டாத போதும் தனி நாடுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
மக்களைப் பிரித்தாளும் ஏகாதிபத்திய பெரும்/தரகு முதலாளித்துவ முறைக்கு எதிராக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்துவதற்காகக் கம்யூனிஸ்ட்டுகள் போராட வேண்டும். சிறு முதலாளித்துவ, தேசிய முதலாளி வர்க்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் காணியற்றோருக்கு காணி வேண்டும் போன்ற சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் நடவடிக்கைகளில் அச் சக்திகள் ஈடுபடுவதில்லை. அதனால் அவ்வாறான போராட்டங்களை ஒருங்கிணைப்பது கம்யூனிஸ்ட்டுகளின் கடமை ஆகும்.
இவ்வாறான போராட்டங்களில் ஐக்கியமும் போராட்டமும் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையுடன் ஐக்கியப்படும் அதே வேளை எல்லா பேரினவாத நிலைப்பாடுகளுக்கும், ஏகாதிபத்திய, அரசு சார்பான நிலைப்பாடுகளுக்கும் எதிராகப் போராடுவது கம்யூனிஸ்ட்டுகளின் கடமை ஆகும். அந்த நிலைப்பாட்டையே எமது கட்சி இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் கடைப்பிடித்து வருகிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாடு தேசிய இன ஒடுக்கு முறைக்குத் துணைபோக முடியாது. தேசிய இன விடுதலைக்கு ஆதர வான நிலைப்பாடு ஏகாதிபத்தியத்திற்கும், பெரும்/தரகு முதலாளித்துவத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் ஆதரவாக இருக்க முடியாது.
அதாவது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக் காமல் பெரும்பான்மை சிங்கள மக்களினது ஏகாதிபத்திய, எதிர்ப்பு, பூகோளமயமாதல் எதிர்ப்பு, நவகொலனித்துவ எதிர்ப்பு, பெரும்/தரகு முதலாளித்துவ, அதிகாரத்துவ முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ எதிர்ப் புப் போராட்டங்களுக்குத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவோ அவர்களை இணைத்துக் கொள்ளவோ முடியாது. அதே போன்று, சிங்கள மக்களது மேற்படி போராட்டங்களுக்கு ஆதரவளிக்காமலோ அவற்றுடன் இணையாமலோ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்குச் சிங்கள மக்களின் ஆதரவையோ பெற்றுக் கொள்ளவோ அவர்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவோ முடியாது. எனவே அடிப்படை முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான வலிமையான போராட்டத்திற்குத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் கிடைத்த சூழ்நிலை உரம் சேர்க்கக் கூடும்.
தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்மயப்படுத்தி அடிப்படை முரண்பாட்டை வர்க்கப் புரட்சியின் மூலம் தீர்த்தல்
உற்பத்தித் துறையில் அபிவிருத்தியடைந்த, முன்னேறிய தளங்களில் ஈடுபட்டுள்ள முன்னேறிய வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் புரட் சிகரக் கொள்கை மாக்சிசம். உழைப்பிற்கும் மூலதனத்திற்குமிடையிலான, முதலாளித்துவத்திற்கும் சோஷலிஸத்திற்குமிடையிலான அடிப் படை முரண்பாடுகளைத் தொழிலாளர் வர்க்கப் புரட்சியினாலும் சோஷ லிஸக் கட்டுமானத்தினூடாகவுமே தீர்க்க முடியும். அவ் வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி அதனை அணிதிரட்டி அரசி யல் மயப்படுத்திச் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அதன் தலைமையில் புதிய-ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து சோஷ லிஸத்தை நோக்கி முன்னேற வழிகாட்ட வேண்டும். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெரும்/தரகு முதலாளித்துவ அதிகாரத்துவ முதலாளித்துவ எதிர்ப்புச் சக்திகளை அணிதிரட்டி முதலாளித்துவத்திற்கு முந்திய நிலப்பிரபுத்துவ மிச்சசொச்ச உறவுகளை அழித்து தேசிய ஜனநாய கத்தையும், தேசிய விடுதலையையும் நிறைவேற்றி சோஷலிஸத்தை நோக்கி மக்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு பாட்டாளி வர்க்கத்தினதும், கம்யூனிஸ்ட் கட்சியினதும் பொறுப்பாகும்.
இலங்கையில் 10,578,000 பேர் உழைப்பாளர்கள். அவர்களில் அரச துறையில் உள்ளோர் 15.5%, தனியார் துறையினர் 42.1%, சுயதொழி லில் ஈடுபடுவோர் 29%, கொடுப்பனவு இல்லாத குடும்ப வேலைகள் செய்வோர் 11%.
வேளாண்மைத் துறையில் 2,476,000 பேர் உழைப்பில் ஈடுபட்டுள் ளனர். அதில் 460,000 பேர் தேயிலை, றப்பர் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களாவர்.
வெளிநாடுகளில் வேலை செய்வோர் தொகை 1,800,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெண்கள் 1,000,000க்கும் சற்று அதிகமானோராவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் 90% அளவில் மத்திய கிழக்கில் உள்ளதுடன் பெண்களில் ஏகப்பெரும்பாலோர் வீட்டு வேலைக்கமர்த்தப்படட பெண்களாவர்.
2009ஆம் ஆண்டு அரசாங்கக் கணிப்பின்படி வேலையின்மை 5.8% ஆகும். ஆண்களின் வேலையின்மை 4.5% எனவும் பெண்களின் வேலையின்மை 8.6% எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
தாராளமயம், தனியார்மயம் என்பன நிலைநிறுத்தப்பட்ட பிறகு ஸ்தாபனப்படுத்தப்படாத தொழிற் துறைகளின் எண்ணிக்கை அதிக ரித்துள்ளது. தொழிற்சங்கரீதியாக ஸ்தாபனப்படுத்தப்பட்ட துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை நினைத்த நேரம் வேலையிலிருந்து விலக்குவது போன்று கைத்தொழிற் பிணக்குச் சட்டத்திற்கு மாறான வேலை நிபந்தனைகளைக் கொண்ட நடைமுறைகளால் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தொழிற்சங்க இயக்கம் பலவீனமாக்கப்பட்டுள்ளது.
தனியார் கம்பனிகளின் தொழிலாளர்களை எந்நேரமாயினும் வேலை யிலிருந்து நீக்கும் முறை சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒப்பந்தக் காலத்திற்கு மட்டும் வேலை கொடுக்கும் வாய்ப்பும் கம்பனிகளின் சுயவிருப்பின் பேரில் ஓய்வு கொடுக்கும் முறையும் பரவலாகக் காணப்படுகின்றன.
அரசாங்கத்துறைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட் டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் குறித்த வேலை நிறுத்தத்தினால் தங்களது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட் டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்து வேலை நிறுத்தங்களைச் செயலிழக்கச் செய்யும் நடைமுறைகள் சில ஆண்டு களாக இலங்கையில் வழக்கத்தில் இருந்து வருகின்றன. பல நாடு களில் இவ்வாறான நிலைமை இருக்கிறது. இது சர்வதேச தொழிலா ளர் சாசனத்தினால் உறுதி செய்யப்பட்ட மூன்று உரிமைகளுக்குப் பாதகமான போக்காகும்.
தனியார் துறைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடும் போது அவற்றைத் தடுத்து நிறுத்தும் வகையில் சிவில் நீதிமன்றங்களில் தடையுத்தரவு கோரி வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
தொழிற் திணைக்களம், தொழில் நியாயசபைகள் அல்லது தொழில் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் 1990களின் கடைசிப் பகுதிக்குப் பிறகு, தாராள பொருளாதாரச் சூழலில், ஒப்பீட்டுரீதியில் பெரும்பாலும் மூலதனத்தின் பக்கமே அதிகமாக அக்கறை செலுத்தும் ஒரு புதிய போக்கு மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடியும்.
இவை யாவும் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளில் தலையிடுவனவாக அமைந்துள்ளன. நவதாராளவாதப் பொருளாதார நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்திய பூகோளமயமாதலின் கீழ், நவ கொலனித்துவ சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன என்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.
அதே வேளை, நாட்டில் நிலவும் தேசிய இன முரண்பாட்டினால் உழைக்கும் மக்களிடையே இனரீதியான பிளவுகள் அதிகரித்துள்ளன. பேரினவாதத்தின் இன ஒடுக்கலில் காரணமாக சிறுபான்மைத் தேசிய இன உழைக்கும் மக்கள் வர்க்கரீதியான ஒடுக்குமுறைக்கும் இன ரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
கொலனித்துவ காலத்திலும் அதற்குப் பின்பும் ஸ்தாபனப்படுத்தப் பட்டிருந்த தொழிலாளர் வர்க்கமும் இன்று ஸ்தாபனப்பலம் குறைக்கப் பட்ட, ஐக்கியம் குலைந்த நிலையில் இருக்கிறது.
பெருந்தோட்டங்கள் யாவும் நீண்டகால குத்தகையின் அடிப்படை யில் 23 கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூடிய பங்குகளை இந்தியக் கம்பனிகள் வாங்கியுள்ளன. தேயிலை வர்த்தகத்தில் தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் இலங்கையின் பெயர் தற்போது இந்திய கம்பனிகளால் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைத் தேயிலை சர்வதே ரீதியாக இந்தியத் தேயிலையின் அடையாளத்துடனேயே விற்கப்படுகிறது. அந்நிய ஏற்றுமதி வருமானத்தில் இன்னும் 60%ஐப் பெற்றுக் கொடுப்பதாகத் தேயிலை, றப்பர் என்பன இருந்தபோதும், அத் துறையிலுள்ள தொழிலாளர்கள் மிகவும் குறைந்த சம்பளத்தையே பெறுகின்றனர். அவர்க ளுக்கு ஏனைய தனியார் துறைத் தொழிலாளர்கள் போன்று வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்பவோ, வருடாந்தமோ சம்பள உயர்வுகள் வழங்கப்படுவதில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிக்கப்படலாம் என்று தோட்டத் தொழிற்சங்கங் களில் சிலவற் றுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் முறையான நியாயமான சம்பளத் திட்டமோ சம்பளவுயர்வு பற்றிய திட்டமோ உள்ளடக்கப்படவில்லை. இந்தக் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளும் தொழிலாளர்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை. அதனால் தொழிலாளர்கள் இரண்டு வருடங்கட்கு ஒரு முறை போராடியே சம்பள உயர்வைப் பெறவேண்டி யிருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (ஐக்கிய தேசியக் கட்சியினுடைய சங்கம்) பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டுக் கமிட்டி (இடதுசாரிச் சங்கங்கள் என்றழைக்கப்படுபவை) ஆகியனவே தொடர்ந்து ஒப்பமிட்டு வருகின்றன. அவை தொடர்ந்து சம்பள உயர்விற்கான போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தே வருகின்றன.
தனியார் தொழிற் துறையிலும் அரசாங்கத் துறையிலும் ட்ரொட்ஸ்கிய நிலைப்பாட்டைக் கொண்ட சங்கங்கள் (ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிச் சங்கங்களைத் தவிர) ஓரளவு செல்வாக்கைச் செலுத்தக் கூடியனவாக இருக்கின்றன. அவற்றின் ஐக்கியத்திற்குக் குந்தகமான குழுவாதப் போக்கு பாதகமானதே. அவற்றில் பல அரசியலிலிருந்து பிரிந்த தொழிற்சங்கவாதத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றன.
நாட்டில் நிலவும் இனவாதச் சூழ்நிலையாலும் இடதுசாரிக் கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் சந்தர்ப்பவாதத் தவறுகளினாலும் தமிழ்த் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேயிலை, றப்பர் பெருந்தோட்டங்களில் பிற்போக்குத் தொழிற் சங்கங்களே தொடர்ந்து ஆதிக்கஞ் செலுத்தி வருகின்றன. அவற்றில் ஏறக்குறைய எல்லாத் தொழிற்சங்கங்களும் ஆட்சி செய்யும் அரசாங்கத்துடன் இணங்கிப் போகிற தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நிலைப் பாட்டையே கொண்டுள்ளன.
எமது கட்சி, தனியாகவும் ஏனைய முற்போக்குச் சக்திகளுடன் இணைந்தும், புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தை எல்லாத் தொழிற் துறைகளிலும், எல்லாப் பிரதேசங்களிலும் கட்டி வளர்க்க வேண்டும். 1960களில் புரட்சிகர தொழிற்சங்க இயக்கம் பலமாக இருந்தது. அதன் பட்டறிவுகளுடன் நவகொலனித்துவ சூழலுக்கேற்ற தொழிற்சங்க இயக்கம் கட்டப்பட வேண்டும். ஒன்றிணைக்கப்படக் கூடிய இடத்தில் எல்லா இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தியும் சமூகரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள தொழிற் துறைகளைப் பொறுத்த வரையில் தொழிலாளர் வர்க்க ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டும் தொழிற்சங்க வேலைமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், இருக்கின்ற தொழிற்சங்கங்களினூடாகத் தனித்தனிக் கோரிக்கைகளின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட வேலைகளை முன் னெடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுடைய நாளாந்தப் பிரச்சினைகளிலும், தேவைகளிலும் புரட்சிகர தொழிற்சங்க இயக்கம் பங்கெடுப்பதுடன் தொழிலாளர்களைப் புரட்சிகர அரசியலின் கீழ் அணிதிரட்ட வேண்டிய பாரிய பொறுப்பையும் கொண்டே செயற்பட வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திய பூகோளமயமாதலுக்கு எதிராகவும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், பல்தேசியக் கம்பனிகள் போன்றவற்றுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்தின் போலியான அபிவிருத்திக் கொள்கைகளுக்கு எதிராகவும் பல முனைகளிற் செயற்படுவதாகவும் எல்லோருக்கும் உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையிலும் மாற்று அபிவிருத்திக் கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் வலியுறுத்தியும், பல முனைகளிலும் தொழிற்சங்க இயக்கத்தினூடாகவும் அரசியல் ரீதியாகவும் பணிகள் முன்னெடுக்கப் பட வேண்டும்.
எமது நாட்டில் பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் பல துறை களிலும் நடைபெற்றுள்ளன. 1953 ஆகஸ்ட் 15ஆம் திகதி வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் முக்கியமாக இருந்தன. அந்த ஹர்த்தால் போராட்டத்தினால் அன்றைய அரசாங்க அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்ட கப்பலிலேயே நடைபெற்றது. அது முழுமையான அரசியல் மயப்படுத்தப்படாதபடியால் அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகரவில்லை. புரட்சிகர மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியொன்றின் வேலைத் திட்டமும் வழிகாட்டலும் இல்லாதபடியால், அது தொழிலாளர் வர்க்கப் புரட்சிக்கு அடிகோலவில்லை.
அதே போன்று, பெருந்தோட்டத் துறையிலும் அரச துறையிலும் பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 1980ம் ஆண்டு ஜூலை மாதம் அரசதுறை, தனியார்துறைத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கியது. பொலிஸ், இராணுவ, சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை வேலையிலிருந்து நீக்கியது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அதனால் அத் தொழிலாளர்களும் தொழிற்சங்க இயக்கமும் பலவீனப்பட நேர்ந்தது. வேலையிழந்த தொழிலாளர்களிற் பலர் இருப்பிற்கு வழியின்றித் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் (1988 காலகட்டத்தில் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது) வேலையிழந்தவர்களிற் சிறுதொகையினர் மீள வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இப் போராட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இறங்கவும் இல்லை, ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. அதற்கு, 1980ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ட்ரொட்ஸ்கிய தொழிற்சங்கத் தலைமைகளின் தவறுகள் ஒருபுறமும், மறுபுறத்தில் பெருந்தோட்டத் துறையில் பெரிய தொழிற்சங்கங்களாக இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருந்தமையும் காரணமாகும்.
தொழிற்சங்கப் போராட்டங்கள் யாவும் பொருளாதாரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைகளுக்கும் சீர்திருத்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களுக்குச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்பவாதத்திற்கும் வரையறுக்கப் பட்டனவாகவே இருந்தன. தொழிற்சங்கங்கள் பாராளுமன்ற அதிகாரத்தை நோக்காகக் கொண்ட கட்சிகளின் விரிவாக்கமாகவோ புரட்சிகர அரசியலிலிருந்து பிரிக்கப்பட்ட தொழிற் சங்கவாதத்தை அடிப்படையாகக் கொண்டனவாகவோ தான் இருக்கின்றன.
அதற்கு மாறாகப் புரட்சிகர அரசியலை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கில் பாட்டாளிவர்க்க புதிய ஜனநாயக சங்கம் தனியார் துறைத் தொழிலாளர்கள் மத்தியிற் செயற் பட்டாலும் அதன் செயற்பாடு போதியளவு விரிவடையவில்லை. அதே போன்று ஆசிரியர் சங்கத்தையும் வேறு அரச தொழிலாளர்களுக் கான சங்கங்களையும் அமைக்கும் முயற்சிகளும் ஆரம்ப நிலையி லேயே இருக்கின்றன.
தேசிய இனப் பிரச்சினை கூர்மையடைந்த கடந்த 30 வருடங்களிற்கு மேலாக, அரசு முன்னெடுத்த இன அடக்குமுறைகளாலும் இராணுவ நடவடிக்கைகளாலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளா லும் தமிழர் தரப்பு அரசியல்-இராணுவ நடவடிக்கைகளாலும் சிங்கள-தமிழ் தொழிலாளர்களிடையே இனரீதியான பிளவுகள் அதிகரித்தன. யுத்தத்திற்கு எதிராகச் சிங்கள மக்கள் மத்தியில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பயங்கரவாதத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளாகப் பேரினவாதச் சக்திகளால் முத்திரை குத்தப் பட்டதால் அவை தனிமைப்படுத்தப்பட்டன. யுத்தத்தை எதிர்த்துத், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுத்த சிங்கள இடதுசாரித் தொழிற்சங்கத் தலைவர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கடடவிழ்த்து விடப்பட்டன. பலர் பல ஆண்டுகளாக அவசரகால, பயங்கரவாதத் தடைச் சட்டங் களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எமது கட்சியின் அங்கத்தவர்களான தோழர்கள் வெ. மகேந்திரன், இரா. ஜெயசீலன், ச. மோகன், ச. சுகேசனன், சி. கிருஷ்ணப்பிரியன் ஆகியோர் 2006ஆம் ஆண்டு பெப்ரவரியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் வெ. மகேந்திரன், சி. கிருஷ்ணப்பிரியன், ச. மோகன் ஆகியோர் 2009 பெப்ரவரியிலும், இரா. ஜெயசீலன் 2010 ஜனவரியிலும் எதுவித குற்றச்சாட்டுமின்றி விடுவிக்கப்பட்டனர். தோழர் சுகேசனன் தொடர்ந்து எவ்வித நீதி விசாரணையுமின்றி இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் தோழர் பிரதீபன் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கட்சியின் வட பிராந்தியச் செயலாளர் தோழர் செல்வம் கதிர்காமநாதன் அடிக்கடி இராணுவ விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். இன்னமும் இராணுவ முகாமிற்குச் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அதைவிடக் கட்சியின் தலைமைத் தோழர்களில் சிலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எமது கட்சித் தோழர்கள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பாலமாகச் செயற்பட்டதுடன் சிங்கள மக்கள் மத்தியிலும் பல வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்தும் வந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியலை முன்னெடுக்கும் நோக்கிலும் புரட்சிகரக் கட்சியைக் கட்டும் நோக்கிலும் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான ஐக்கியத்திற்கு எதிராக இருக்கும் அரசும் பேரினவாதச் சக்திகளும் பல விதத்திலும் எமது கட்சித் தோழர்களுக்குத் தடையாக இருந்து வருகின்றனர். எமது மேற்படி தோழர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமைக்குக் முக்கிய காரணம் எமது தோழர் கள் சிங்கள-தமிழ் மக்களின் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றமையே ஆகும்.
எமது தோழர்கள் ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் நிதியுதவியுடன் மேற் கொள்ளப்பட்டுவரும் மேல் கொத்மலைத் திட்டத்தை எதிர்த்து இயக்கத்தை முன்னெடுத்தபோது பெரும்பான்மை இனக் காடையர்களி னால் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டனர். அத் திட்டத்திற்கு எதி ரான போராட்டம் இனவாதரீதியாக அணுகப்பட்டு முறியடிக்கப்பட்டது.
இந்தியா மேற்கொள்ளும் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து எம்மால் நடத்தப்பட்ட போராட்டம் ‘தமிழ்ப் பயங்கரவாதத்திற்கு| ஆதர வான போராட்டமாகக் காட்டப்பட்டது.
இவ்வாறு யுத்தத்தைக் காட்டித் தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களை அரசு நசுக்கி அவர்களின் நியாயமாக கோரிக்கை களையும் மறுத்தே வந்தது. அதற்கெதிராகத் தொழிலாளர் வர்க்க ஐக்கியம் கட்டப்படுவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை.
பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் இயங்கும் இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ட்ரொட்ஸ்கிய அடிப்படைகளைக் கொண்டதாக இருப்பதுடன், என்.ஜீ.ஓ. நடவடிக்கைகளினாலும் பின் நவீனத்துவச் சிந்தனைகளாலும் உள்வாங்கப்பட்டனவாக இருக்கின்றன. இதனாற் புரட்சிகர அரசியல் பின்னிடைவுகளைக் கண்டுள்ளது. அத்துடன் அவர்களிடம் பரவலாகக் காணப்படும் பேரின மேலாதிக்கக் கருத்தியலும் தொழிலாளர்களாக இருப்பவர்களிடம் எஞ்சியிருக்கும் நிலப்பிரபுத்துவப் பண்பாடு போன்றவையும் பின்னிடைவுகளுக்குக் காரணங்களாம்.
தேசிய இனப் பிரச்சினையில் சந்தர்ப்பவாத இடதுசாரிகள் விட்ட தவறுகள் காரணமாகவும், தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டுத் தமிழப் பழைமைவாதிகளால் பரப்பப்பட்ட குறுந்தேசியவாதக் கருத்துக் கள், இடதுசாரி விரோதக் கருத்துக்கள் (சீனாவிற்கு எதிரான கருத்துக்களும் சீனா சோஷலிஸ நாடாக இருந்த போது முன்னெடுக்கப் பட்ட சீன விரோத இந்திய ஆதரவு நிலைப்பாடுளும் இன்றும் தேசிய இனப் பிரச்சினையில் இலங்கை அரசின் பக்கம் சீனா இருப்பதாகப் பரப் பப்படும் கருத்துக்களும் தொழிலாளர் வர்க்க அரசியலுக்கு எதிரான கருத்துக்களும்) சாதியம் போன்றனவும் தமிழ் மக்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க அரசியல் வளராமைக்குப் பிரதான காரணங்களாகும்.
முஸ்லிம் மக்களிடையே வளர்க்கப்பட்டுள்ள குறுகிய தேசியவாதத் தையும் அவர்களிடம் செல்வாக்குச் செலுத்தும் இஸ்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதச் செயற்பாடுகளையும் புரட்சிகர அரசியலுக்கு மாறானவையாக அடையாளங் காண முடியும்.
அனைத்து இனத் தொழிலாளர்களை வர்க்கரீதியாக ஐக்கியப் படுத்தும் புரட்சிகரத் தொழிற்சங்க இயக்கம் கட்டி வளர்க்கப்பட வேண்டும். சமூகரீதியாக தொழிற் பிரிப்பினாலும் இனவாதத்தினாலும் பிரிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடையே தொழிலாளர் வர்க்க ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஐக்கியத்தைக் கட்ட வேண்டும்.
தொழிலாளர்களின் உடனடிக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற் கான போராட்டங்களினூடாக அரசியல்ரீதியாகத் தொழிலாளர்களுக்கு விழிப்பூட்டி ஸ்தாபன ரீதியாக அணிதிரட்டி அவர்களைத் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் தலைமைச் சக்திகளாக வளர்க்கக் கட்சி உரிய செயற்திட்டங்களுடன் செயற்பட வேண்டும். உழைக்கும் மக்கள் அனைவரையும் தொழிலாளர்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வருவதுடன் அவர்கள் அனைத்துப் போராட்டங்களிடையேயும் ஒத்து ழைப்பை உறுதி செய்து தொழிலாளர் வர்க்கப் புரட்சியை நோக்கி முன்னேற வேண்டும்.
புரட்சிக்காகத் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும்
சமூக மாற்றத்திற்கான புரட்சியில் தலைமைச் சக்தியாகத் தொழிலாளர் வர்க்கமும் பிரதான சக்தியாக விவசாயத் தொழிலாளர்களும் காணியில்லாத கூலி விவசாயிகளும் ஒரே தரப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
விவசாயத் தொழிலாளர்களும் காணியில்லாத கூலி விவசாயிகளும் ஏழை விவசாயிகளும் எண்ணிக்கையிற் பெரும்பான்மையினராவர். அவர்கள் இலங்கையில் தற்போது நிலவும் உற்பத்தி உறவில் மிகவும் சுரண்டப்படுபவர்களாவர். அவர்கள் பெரிய நிலவுடைமையாளர்களா லும் பெரும் வர்த்தகர்களாலும் பல்தேசியக் கம்பனிகளாலும் சுரண்டப் படுகின்றனர்.
இலங்கையின் உற்பத்தி அளவில் ஏறக்குறைய 70 சதவீதமானவர்கள் விவசாயத்திலேயே (உணவு, உப உணவு, கால்நடை வளர்ப்பு போன்றனவற்றில்) தங்கி வாழ்கின்றனர். இலங்கையின் தென் பகுதியில் விளையும் உணவு வகைகளும் பழ வகைகளும் முழு ஆசியாவிற்கும் போதுமானவை என்று 1818ஆம் ஆண்டு ஊவா வெல்லச விவசாயிகளின் கிளர்ச்சியின் பின்னர் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அன்றைய ஆங்கிலேய ஆளுநருக்கு எழுதிய அறிக்கையிற் குறிப்பிட்டிருந்தார். அது எந்தளவிற்குச் சரி என்பதைவிட உணவுத் தேவையில் அன்றைய இலங்கை தன்னிறைவாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவ்வறிக்கையைச் சான்றாக்கிக் கொள்ள முடியும்.
பிரித்தானிய கொலனித்துவ காலத்தில் இலங்கையின் உணவுப் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படவில்லை. இலங்கை விவசாயிகளின் காணிகளைப் பெருமளவில் பிரித்தானியர் சுவீகரித்துக் கொண்டனர்.
மத்திய மலைநாட்டில் தேயிலை, றப்பர் பெருந்தோட்டங்களைச் செய்வதற்காகவும், பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களா லேயே தமது காணிகள் பறிபோனதென்ற தவறான கருத்து பெரும்பாலான சிங்கள விவசாயிகள் மத்தியில் இன்றும் இருந்து வருகிறது. மத்திய மலைநாட்டில் உயரமான பகுதியிலுள்ள காட்டு நிலங்கள் அழிக்கப்பட்டே பெருந்தோட்டங்கள் செய்யப்பட்டன. சிங்கள விவசாயிகளின் நெல், சேனைக் காணிகள் அதில் உள்ளடங்கவில்லை. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின்றிப் பிரித்தானிய கொலனித்துவவாதிகளே சிங்கள விவசாயிகளின் காணிகளைப் பறித்தனர். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிங்களக் கிராமவாசிகளுடன் தொடர்பற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பெருந்தோட்ட வேலைகளுக்குச் சிங்களவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவும் இல்லை. சிங்களவர்கள் சேர்ந்துகொள்ள ஆர்வம் காட்டவுமில்லை. சிங்களவர்கள் மத்தியில் பிரித்தானிய கொலனித்துவவாதிகளைவிட, தோட்டத் தொழிலாளர் களுக்கு (மலையகத் தமிழர்கள்) எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட வகையில் சிங்கள இனவாதிகளால் பரப்பப்பட்டன. இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சிங்கள கிராமவாசிகளுக்கும் வரலாற்று ரீதியாகப் பகைமை வளரலாயிற்று. பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறியதும் அக் காணிகளின் பெரும் பகுதி சிங்கள நிலப் பிரபுக்களின் கைகளுக்கு மாறியது எனலாம்.
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு அரசினால் தோட்டக் காணிகளில் திட்டமிட்ட பேரினக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுக் குடியேற்றங்களுக்குக் கிராம உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டன. இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களினால் பெருந்தோட்ட உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன், நடுத்தெருவில் விடப்பட்டனர். அத்துடன் திட்டமிட்ட குடியேற்றங்களில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கும் பெருந்தோட்டத் (தமிழ்த்) தொழிலாளர்களுக்கும் இனரீதியான முரண்பாடுகள் அதிகரித் தன. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, பதுளை மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் இனரீதியாக அடிக்கடி தாக்குதல்கட்குள்ளாவதுண்டு. பேரினவாத அரசியல்வாதிகளின் அனுசரணையும் இவற்றுக்கு உண்டு. தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயின் அறைகளிலும், சிறிய இரட்டை வீடுகளிலும் சில இடங்களில் அண்மை யில் கட்டப்பட்ட தொடர் மாடிவீடுகளிலும் வாழ்ந்தாலும் அவர்களின் குடியிருப்புகள் இன்னும் கிராமக் கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. உள்ளுராட்சி சபைகளினதோ, மாகாண சபைகளினதோ நிர்வாகத்திற்குள் அடக்கப்படாமலே தோட்டக் குடியிருப்புக்கள் இருக் கின்றன. 1948ஆம் ஆண்டு பிரஜா உரிமைச் சட்டமும் 1956 சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டமும் கொண்டு வரப்பட்டபோது அவற்றை இடதுசாரித் தலைவர்கள் எதிர்த்ததுடன் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரித் தொழிற் சங்கங்கள் பலமாக இருந்தன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் 1960, 1970களில் ட்ரொட்ஸ்கிவாதிகளும் திரிபுவாதிகளும் இணைந்துகொண்டதை அடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன ஒடுக்கல்களுக்குச் சிலவேளைகளில் சப்பைக்கட்டுக் கட்டினர். சிலவேளைகளில் மௌனமாக இருந்து ஆதரவளித்தனர். அத்துடன் இடதுசாரிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்ட ஜே.வி.பி. தனது 1971ஆம் ஆண்டு கிளர்ச்சிக்கு அடிப்படையான வகுப்புகளில் 5வது வகுப்பில் தோட்டத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கரங்களாகக் காட்டியதுடன் அவர்க ளுக்கு எதிரான உணர்வையும் வளர்த்தது. இதனால் அரைவாசி தொழிற்சாலைத் தொழிலாளர்களாகவும் அரைவாசி விவசாயத் தொழி லாளர்களாகவும் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சிங்கள விவசாயிகள், தொழிலாளர்களுக்குமிடையே இடைவெளி அதிகரித்தது.
அதே போன்று, 1930களில் துறைமுகம், புகையிரதச் சேவை போன்ற துறைகளில் அதிகமாக வேலை செய்த இந்தியவம்சாவழித் தொழிலாளர்களுக்கு எதிராகச் சிங்களத் தொழிலாளர்கள் மத்தியில் பகைமை வளர்க்கப்பட்டது. இப் பகைமை (ஒரு காலத்தில் இடதுசாரி என்றழைக்கப்பட்ட) ஏ.ஈ. குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவரின் தலைமையில் “இந்தியத் தொழிலாளர்களே வெளியேறுக” என்ற கோஷத்துடன் இயக்கமாக்கப்பட்டது.
1940களுக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தில் (கல்லோயா, கந்த ளாய் போன்ற பகுதிகளில்) ஏற்படுத்தப்பட்ட விவசாயக் குடியேற்றங் களில் சிங்கள விவசாயிகள் மட்டுமே குடியேற்றப்பட்டனர். அதே போன்று வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட மீனவக் குடியேற்றங் களிலும் சிங்களவர்களே குடியேற்றப்பட்டனர். இதனால் அப் பிரதேசத் தமிழ் விவசாயிகளும், மீனவர்களும் புறக்கணிக்கப்பட்டு இனரீதியான ஒடுக்கல்களுக்குள்ளாகினர். அக் குடியேற்றங்கள் தமிழ்ப் பிரதேசம் என்றொன்று இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் முன்னெடுக்கப் பட்ட பேரினவாதக் குடியேற்றங்களாகும்.
இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் தமிழ் விவசாயிகளுக்கும் சிங்கள விவசாயிகளுக்குமான இடைவெளி அதிகரித்து வந்துள்ளது. சிங்களத் தொழிலாளர்களுக்கும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு மிடையிலுமான இடைவெளியும் அதிகரித்துள்ளது. தேசிய இனப் பிரச்சினை யுத்தமாக வளர்ச்சியடைந்த பின்னணியிலும் உழைக்கும் மக்களின் ஐக்கியம் குலைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உணவு உற்பத்தி, மீன்பிடி போன்றவை நவதாராளவாதப் பொருளாதாரத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக நிறுவனம் போன்றவற்றின் நிகழ்ச்சிநிரலின்படி விவசாயத்திற்கு அரசாங்கம் வழங்கி வந்த மானியங்களும் சலுகைகளும் குறைக்கப்பட்டன. உணவுப் பயிர்ச் செய்கையை விட ஏற்றுமதி செய்யக்கூடிய பழவகைகள், காய்கறிகள் பயிரிடப்பட்டன. கிராமங்களிலுள்ளோருக்கு நகரங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் திட்டங்களை வகுக்கும்படி இலங்கை அரசாங்கங்கள் தொடர்ந்து உலக வங்கி போன்றவற்றினால் வற்புறுத்தப்பட்டு வந்துள்ளன. அதன்படி 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு, விவசாயச் செய்கை வீழ்ச்சியடைந்தது. பல்தேசியக் கம்பனிகள் விவசாயத் துறையில் ஆதிக்கம் செலுத்தலாயிற்று.
காணியற்றவர்களுக்குக் காணி, வீடற்றவர்களுக்கு வீடு போன்ற சுலோகங்களின் அடிப்படையில் எவ்வித வெகுஜனப் போராட்டங்களும் இலங்கை வரலாற்றில் இடம்பெறவில்லை. குறிப்பிடத்தக்கவாறு விவசாய எழுச்சிகளும் இடம்பெறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த 1956 முதல் 60 வரையும், 1960 முதல் 1965 வரையும், 1970 முதல் 1977 வரையுமான காலங்களில் அதிலிருந்த தேசிய முதலா ளித்துவ வர்க்கத்தினரும் அவர்களோடு இணைந்திருந்த இடதுசாரி களும் (திரிபுவாதிகள், ட்ரொட்ஸ்கிவாதிகள்) தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாகவும் (தொழிற் சட்டப் பாதுகாப்புகள்) விவசாயிகளின் உரிமைகள் தொடர்பாகவும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிற் குறிப்பிடத்தக்கது காணிச் சீர்திருத்தம். அதனூடாகக் காணியற்ற அனைவருக்கும் காணி கிடைத்தது என்று கூற முடியாது. ஆனால் ஒருவர் 50 ஏக்கருக்கு மேல் காணி வைத்திருக்க முடியாதெனக் காணி உச்சவரம்பு கொண்டுவரப்பட்டது. அந்த அடிப் படையில் 50 ஏக்கருக்கு மேல் ஒருவரிடம் இருந்த காணிகள் அரச உடைமையாக்கப்பட்டன. (1991இல் பெருந்தோட்டங்கள் நீண்டகாலக் குத்தகை உடன்படிக்கையின்படி தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப் பட்டன). இவ்வாறு அரச உடைமையாக்கப்பட்ட காணிகளில் சிறுபகுதி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒருவருக்கு அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. சில இடங் களில் விவசாயச் செய்கைக்கு 5 ஏக்கர் வரை காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
காணி உச்சவரம்பு கொண்டு வரப்பட்ட போதும், குடும்ப அங்கத் தவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 ஏக்கர் உடைமை கோர முடியும் என்பதால் மீண்டும் பெரியளவில் காணிகளை ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் கம்பனிகள் உச்சவரம்பின்றிக் காணிகளை வைத்திருக்க முடியும் என்பதால் கம்ப னிகளின் பெயரிலும் ஒரு சில காணிகளைத் தொடர்ந்து வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பழைய நிலவுடைமையாளர்கள் வேறு விதத்தில் தொடர்ந்தும் நிலவுடைமையாளர்களாக இருக்கும் நிலை ஏற்பட்டது.
குடியிருப்பிற்காகவும் விவசாய செய்கைக்காகவும் காணிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே காணிகள் இருக்கவில்லை என்றும் கூறமுடியாது. ஏற்கெனவே காணிகளை வைத் திருந்தவர்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டன. அவ்வாறு காணி களைப் பெற்றுக் கொண்டவர்களினூடாக விவசாய எழுச்சி ஏற்படுவ தற்கு மாறாக அவர்கள் சிறு காணி உடைமையாளர்களாக மாறி, நிலவி வந்த நிலவுடைமை முறைமையைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்படலாயினர்.
காணியற்றவர்களுக்குக் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையானது, புதுவகைச் சிறுகாணி உடைமை யாளர்களை உருவாக்குவதல்ல. மாறாக, நிலப்பிரபுத்துவத்தைச் சிதைத்து, விவசாயத் துறையை ஜனநாயகப்படுத்தி விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் புரட்சிகரச் சக்திகளாக்கிச், சமூக மாற்றத்திற்கான வர்க்கப் புரட்சியின் பிரதான சக்தியாக்குவதே அடிப் படையாகும்.
1960களில் அறிமுகம் செய்யப்பட்ட உலகளாவிய ரீதியிலான ‘பசு மைப் புரட்சி’ என்ற பெயரிலான நடைமுறைகள் (இரசாயனப் பசளை, கிருமிநாசினி. இயந்திரங்கள் பாவிப்பு) இலங்கையின் விவசாயத் துறையை வெகுவாகப் பாதித்தன. இதனால் நவகொலனித்துவப் பிடிகள் இறுகின.
1990களில் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பேரில் விவசாயத் துறையில் பல்தேசியக் கம்பனிகளின் செல்வாக்கு அதிகரித்தது. இலங்கை நெல்லுற்பத்தியில் 1970களின் பிற்பகுதியில் தன்னிறைவைக் கண்டிருந்தது. ஆனால் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப் படுகிறது. நெல்லுற்பத்தியிலும் அரிசியாக்கலிலும் நவீன இயங்திரங்கள் அறிமுகமாகி இருந்த போதும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையே தொடர்கிறது. நெல்/அரிசி சந்தைப்படுத்தலைத் தனிப்பட்ட இருவரே கட்டுப்படுத்துகின்றனர். அதில் மத்தியப்படுத்தப்பட்ட சந்தையோ விநி யோக முறையோ ஏற்படுத்தப்படவில்லை.
எனவே விவசாயம் செய்வதற்கெனக் காணியற்றவர்களுக்கு 5 தொடக்கம் 10 ஏக்கர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டுக் கூட்டுப் பண்ணை முறையில் உற்பத்தி, விநியோகம் போன்றன மேற்கொள்ளப்பட வேண் டும். நிலப் பிரபுத்துவத்தினதும் பல்தேசியக் கம்பனிகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் பிடியிலிருந்து விவசாயத் துறை முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். அதனூடாக வறுமை, உணவுப் பற்றாக்குறை, பஞ்சம், போஷாக்கின்மை, சுகாதாரம் போன்ற பிரச்சினை களுக்குத் தீர்வு காண முடியும்.
விவசாயப் புரட்சியை ஏற்படுத்த, வலுவான விவசாயிகள் சங்கம் கட்டப்பட வேண்டும். விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக விவசாயிகளின் குறிப்பான போராட்டங்களுக்காகப் பரந்துபட்ட ஒத்துழைப்பு இயக்கங் களை முன்னெடுத்து விவசாயத் தொழிலாளர்களதும் விவசாயிகளினதும் பரந்துபட்ட ஐக்கியம் கட்டப்பட வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தற்போது என்.ஜி.ஓக்களே கையாள்கின்றன. (இலங்கையில் மக்கள் இயக்கங்கள், நலன்புரி அமைப்புகள் போன்றன என்.ஜி.ஓக்களாகவே பதிவு செய்யப்படுகின்றன. இதிற் சில அமைப்புக்களும் என்.ஜி.ஓக்களில் வேலை செய்யும் சில தனிநபர்களும் சமூக சிரத்தையுடன் செயற்படுவதை மறுப்பதற்கில்லை). பொதுவாக என்.ஜி.ஓக்கள் ‘பேண்தகு உற்பத்தி’, அபிவிருத்தி, மாற்று உற்பத்தி போன்ற கோட்பாடுகளுடன் நவ கொலனித்துவப் பிடிக்கு எதிராகவன்றி அதற்குச் சார்பாகச் செயற்படுகின்றன. பல வெளிநாட்டு, உள்நாட்டு என்.ஜி.ஓக்கள் ஏகாதிபத்தியத்தின் நேரடி அல்லது மறைமுக முகவர்களாகவே செயற்படுகின்றன. அவற்றின் பிடியிலிருந்தும் விவசாயிகள் விடுவிக்கப்பட்டுப் புரட்சிகர வெகுஜனப் பாதையில் அணிதிரட்டப்பட வேண்டும்.
மீனவர்களதும் கடற்றொழிலாளர்களதும் பிரச்சினைகளும் பிரத்தி யேகமாக ஆராயப்பட்டுப் பெரிய சம்மாட்டிமார்களினதும் பல்தேசியக் கம்பனிகளினதும் பிடியிலிருந்தும் மீன்பிடித்துறை விடுவிக்கப்படக் கடற்றொழிலாளர்களும் புரட்சியின் பங்குதாரர்களாக்கப்படத் திட்டமிட்ட வேலைகள் அவசியமாகின்றன.
சாதியத்திற்கு எதிரான போராட்டம்
இலங்கையின் புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் சாதியத்திற்கு எதிராக வட மாகாணத்தில் (தமிழ் மக்கள் மத்தியில்) 1960களில் முன்னெடுத்த தீண்டாமைக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியமானதாகும். வெகுஜனப் போராட்டங்களுடன் ஆயுத நடவடிக்கைகளும் அப் போராட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் வடக்கில் பொது இடங் களில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது. தீண்டாமைக்கு எதிரான வெகுஜன இயக்க நடவடிக்கைகளுக்கும் சாதியத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டங்களுக்கும் (சண்முகதாசன் தலைமையிலான) இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி வழிகாட்டியது எனலாம். அப் போராட்டம் சாதிய அடையாளத்தை வலியுறுத்தித் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குச் சலுகை அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளைக் கோராது, சாதியத்தைத் தகர்த்துச் சமத்துவத்தை வலியுறுத்தியது. இந்தியாவில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிற் போன்று தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விசேட சலுகைகளைக் கேட்டுச் சாதிய அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையிலான போராட்டங்களை முன்னெ டுக்கும் தேவை இலங்கையில் இருக்கவில்லை.
தீண்டாமை அடங்கி இருந்தாலும் சாதிய ஆதிக்கம் எல்லாத் தேசிய இனங்கள் மத்தியிலும் இருக்கின்றது. உற்பத்தி உறவுகளில் பெரிதாகத் தற்போது இல்லாவிட்டாலும் பண்பாட்டு ரீதியிலும் அரசியலிலும் சாதியம் நிலைகொண்டுள்ளது. சில குறுகிய சாதியவாதிகளும், பின்நவீனத்துவவாதிகளும் சாதியத்தைத் தனியாகப் பிரித்து, அதனுடைய அரசியல்-பொருளாதார-சமூக-பண்பாட்டுத் தளத்தை வெறும் சாதி அடையாள அடிப்படையிலானதென்ற கருத்து முதல்வாத நிலைப்பாட்டில் அதனை அணுகுகின்றனர்.
சாதிய ஆதிக்கத்திற்கும் குறுகிய சாதிவாதத்திற்கும் எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சாதியம் மக்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் நிலப்பிரபுத்துவக் கருத்தியலாகும்.
வர்க்கப் புரட்சி சாதியத்தை இல்லாமற் செய்துவிடும் என்ற யாந்திரிக நிலைப்பாட்டை எடுக்காது வர்க்கப் போராட்டத்திற்கும் சாதியத்திற்கு எதிரான போராட்டத்திற்குமிடையில் நெருங்கிய ஒத்துழைப்பைப் பேண வேண்டும். பொருளாதாரத்திலான போராட்டமும் மேல் கட்டுமானத்திலான போராட்டமும் ஒருங்கிணைப்புடன் சமாந்தரமாக முன் னெடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வோமாயின் எல்லா அடக்குமுறைகட்கும் ஒடுக்குதல்கட்கும் எதிரான போராட்டங்களினூ டாகப் புரட்சிகரமான சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெ டுக்க முடியும். இதுவே போராட்டங்களுக்கு இடையிலான இயக்கங் களின் உறவுநிலை ஆகும்.
தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சாதியத்திற்கு எதிரான போராட்டம், பெண்ணொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் போன்றன, வர்க்கப் போராட்டத்தின் பகுதி என்று சொல்லுவதன் அர்த்தம் அப் போராட்டங்களின் அவசியத்தை மறுப்பதல்ல. அதே போன்று, அப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தை மறுக்க இயலாது.
சாதியத்திற்கு எதிராகவும் தீண்டாமையின் மிச்சசொச்சங்கட்கு எதிராகவும் திட்டவட்டமான வேலைத்திட்டங்கள் பலமுனைகளிலும் எடுக்கப் பட வேண்டும்.
பெண் விடுதலை
குடும்பங்களில் பெண்கள் ஆண்களின் தனிச் சொத்தாகக் கொள்ளப் பட்டு ஆணாதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. பெண்களே வரலாற்றில் முதலாவது தனிச் சொத்தாகக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனூடாகத் தனிச்சொத்துடமை வளர்ந்த வரலாற்றையும் நாம் காணமுடியும். இதன் விருத்தியாகவே தனிச் சொத்தைப் பாதுகாக்கும் அரசு தோன்றியுள்ளது. எனவே தனிச் சொத்துடமைக்கு எதிரான போராட்டம் பெண் விடுதலைக்கான போராட்டமாகவும் இருப்பதுடன் பெண்ணொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தனிச் சொத்துடமைக்கு எதிரான போராட்டமாகவும் இருக்கும். பெண்ணொடுக்குமுறையின் இந்த அடிப்படையை மாக்சிசமே விளக்கியது. அது தவிர்ந்த எல்லா விளக்கங்களும் கற்பனாவாத விளக்கங்களாகும்.
ஆணாதிக்கத்திற்கு எதிர் பெண்ணாதிக்கம் என்றன்றிப், பெண் விடுதலை என்பதே பொருத்தமானதாகும். கருத்தியல்ரீதியாகப் பெண் விடுதலைச் சிந்தனை நிலைநிறுத்தப்பட வேண்டும்.
பெண் விடுதலைப் போராட்டத்தை வெறும் அடையாளப் பிரச்சினையாகவன்றி வர்க்கப் போராடடத்தின் பகுதியாகவும், அதே வேளை குறிப்பாகவும் இரண்டு தளங்களிலும் சமாந்தரமாக முன்னெடுக்க வேண்டும். சனத்தொகையில் 50% ஆக இருக்கும் பெண்களின் சுதந்திரம் வேண்டிய போராட்டங்கள் பல முனைகளிலும் முன்னெடுக்கப் படுவதுடன் பெண்கள் அமைப்புகள் பிரத்தியேகமாகக் கட்டப்படுவதும், கட்சியின் கீழ்ப் பெண்கள் அணி திரட்டப்படுவதும் அவசியம்.
மாணவர்களும் இளவயதினரும்
மாணவர் அமைப்பும், இளைஞர் அமைப்பும் வலுவாகக் கட்டியமைக் கப்பட வேண்டும். ஏனெனில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புப் போன்ற அடிப்படைத் தேவைகளை மிகவும் விரிவாக்க வேண்டிநிற்கும் சமூகத்தின் பெரிய பகுதியினர் மாணவர்களும், இளம் வயதினருமாவர். அவர்களின் கோரிக்கைகள் பலவகைகளில் முதலாளித்துவ அமைப்பை கேள்விக்குட்படுத்துவனவாகும். அவர்களின் தேவைகளை மறுக்கும் வகையிலேயே நவகொலனித்துவ செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏகாதிபத்தியப் பூகோளமயமாதல் மாணவர்களினதும் இளவயதினரதும் ஆளுமையைச் சிதைப்பதாக இருக்கிறது.
இவற்றால் மாணவர்களும் இளவயதினரும் பெரிதும் பாதிக்கப்படுகின் றனர். எனவே பரந்துபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத்திலும் சமூக மாற்றத்திற்கான வர்க்கப் புரட்சியிலும் மாணவர்களினதும் இளவயதினர்களினதும் பங்களிப்பு மிக இன்றியமையாதது.
அவர்களைக் கட்சிக்குள்ளும் வெளியிலும் அரசியல்ரீதியாக அணிதிரட்டும் பொறுப்பைக் கட்சி எடுக்க வேண்டும்.
கல்வியும் சமூக நலன்களும்
பூகோளமயமாக்கலுக்கு ஏற்ற வகையில் எமது கல்வி முறை மாற்றியமைக்கப்பட்டு மாணவர்களும் மக்களும் சுயாதீனமாகச் சிந்திக்க இயலாது போகுமாறு நெறிப்படுத்தப்படுகின்றனர். இதற்கு மாறாக, எல்லாருக்குமான கல்வி, எமக்கேற்ற கல்வி என்பதன் அடிப்படையில் இலவசக் கல்வியும் தாய்மொழிக் கல்வியும் உறுதிசெய்யப்படல் வேண்டும். அதற்கு மாணவர்களின் விழிப்புணர்வு மிக முக்கியம்.
சுகாதாரம் வியாபாரமயமாக்கப்பட்டுத், திட்டமிட்ட வகையில் ஆபத் தான நோய்களும் பரப்பப்பட்டு வருகின்றன. மக்களின் உணவு உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தகவல்-தொடர்பாடல் போன்றவற்றுக்கு அரசே பொறுப்பாகும். அவற்றிற் செலவுக் குறைப் பிற்கு இடமிருக்க முடியாது. கடனுதவி வழங்குபவர்கள் எங்கள் தலை விதியைத் தீர்மானிக்க இடமளிக்கலாகாது.
ஐக்கிய முன்னணியும் ஒத்துழைப்பு இயக்கமும்
தனியொரு கட்சி பலமாக இருந்தாலும் புரட்சியிலும் புரட்சிக்கு முன்னைய அனைத்துப் போராட்டங்களிலும் பிற அமைப்புகளுடனும் ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. பொருளாதார அடித்தளம் தொடர்பான போராட்டங்களிலும் மேற்கட்டுமானம் தொடர்பான போராட்டங்களிலும் அனைத்துத் தளங்களிலும் ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டியது அவசியம். முரண்பாடுடைய ஏனைய அமைப்புக்களுடனும் சில விட்டுக்கொடுப்புகளுடனும் ஒவ்வொரு தனித் தனிக் கோரிக்கைகளிலும் ஐக்கியப்பட்டுச் செயற்படலாம். அத்துடன் ஒரு குறைந்தபட்சப் பொதுவேலைத் திட்டத்தின் கீழ் சில அமைப் புக்களுடன் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாகச் செயற்படலாம். இந்த அடிப்படையில் எமது கட்சி 1990களின் இறுதிப் பகுதிகளில் தேசிய ஜனநாயக இயக்கத்தில் ஜனநாயக, இடதுசாரி அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டது. அத்துடன் புதிய இடதுசாரி முன்னணியிலும் செயற்பட்டது. (அவை சந்தர்ப்பவாதச் சக்திகளினால் குலைக்கப் பட்டன). அதற்குப் பின்னரும் கட்சி ஐக்கிய முன்னணிகளை அமைக்கத் தொடர்ந்து முயன்று வருகிறது. தனித்தனிக் கோரிக்கைகளுக்காகவும் வெகுஜனப் போராட்டங்களிலும் கட்சி ஐக்கியப்பட்ட நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சில போராட்டங்களுக்கும் சர்வ தேசப் பிரச்சினைகளிலும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவ துடன் ஒத்துழைப்பு இயக்கங்களையும் நடத்தி வருகிறது.
தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி அமைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்திய முரண்பாடுகளில் மூன்றுலகக் கோட்பாடும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பானவையும் போன்று, ஐக்கிய முன்னணி நடவடிக்கைகள் பற்றிய முரண்பாடும் முக்கியம் பெற்றது. மேற்குறிப்பிட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும், பாராளுமன்றவாதம், தொழிற்சங்கவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் புரட்சிகர நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதும் மூன்றுலகக் கோட்பாட்டை எதிர்த்தது. அப்போது நாம் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்று இயங்கிய போது, அக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டோம். தற்போது அது குறித்த சுயவிமர்சனத்தை முன்வைக்கிறோம். தனிநாட்டுக் கோரிக்கையை எதிர்த்த அதேவேளை தேசிய இனப் பிரச்சினையில் தமிழ் மக்கள் தனியான தேசிய இனமல்ல அதனால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என்ற நிலைப்பாட்டைத் தோழர் சண்முகதாசன் தலைமை யிலான கட்சி கொண்டிருந்தது. எமது கட்சி தனிநாட்டுக் கோரிக்கை யை எதிர்த்த போதும் சிங்களவர்களையும் தமிழர்களையும முஸ்லிம் களையும் மலையகத் தமிழ் மக்களையும் தேசிய இனங்கள் என்றும் அவர்களது சுயநிர்ணய உரிமை ஐக்கிய இலங்கைக்குள் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. ஐக்கிய முன்னணி நடவடிக்கைகளில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டவில்லை. எமது கட்சி ஆர்வம் காட்டியது மட்டுமல்லாமல் ஐக்கியப் பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் ஐக்கிய முன்னணிகளை அமைத்தும் செயற்பட்டு வந்திருக்கிறது.
பண்பாட்டு ரீதியான போராட்டங்கள்
ஏகாதிபத்திய பூகோளமய சூழலில் பண்பாட்டு அம்சங்கள் யாவும் புத்திஜீவிய சொத்துக்களாக்கப்பட்டு, நுகர்வுக்குரிய வர்த்தகப் பண்டங்களாக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஏகாதிபத்திய முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ, சாதிய, பெண்ணடிமை மற்றும் பிற்போக்கு ஆதிக்கவாத பண்பாட்டு அம்சங்கள் பாதுகாக்கப்பட்டுப் புதிய வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
பிற்போக்குப் பண்பாடுகளுக்கு மாறான புதிய முற்போக்கான சமூக விழுமியங்களும் சமூக மாற்றத்திற்கான வர்க்கப் புரட்சிக்கான சூழலும் திடீரென ஏற்படமாட்டா. அவை நீண்ட தொடர்ச்சியான புரட்சிகரப் பண்பாட்டு வேலைகளினூடாக ஏற்படுத்தப்பட வேண்டும். புரட்சிக்கு முன்னரும், பின்னரும் பண்பாட்டு வேலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இவை கட்சியினாலும் ஏனைய வெகுஜன அமைப்புக்களினூடாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனடிப்படையில் சோஷ லிச சீனாவில் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சியை ஏற்று அங்கீகரிக்கிறோம்.
விஞ்ஞானபூர்வமாக முடிந்த முடிவாகக் கண்டறியப்பட்ட விடயங் களைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் நாம் பல கருத்துக்களுக்கும் அவற்றுக்கிடையிலான போராட்டங்களுக்கும் இடமளிக்கும் பன்மைத் தவ நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். சமூக மாற்றத்திற் கான வர்க்கப் புரட்சியை வெறும் பொருளாதார அடிப்படைகளுக்கு மட்டும் வரையறுக்கும் யாத்திரிகமான நோக்குடன் பண்பாடு போன்ற மேற்கட்டுமானங்களை அணுகக் கூடாது. இச் சமூக அமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் மனிதாபிமானப் பண்பாடு, எதிர்ப்புப் பண்பாடு போன்றவற்றுடன் ஐக்கியப்பட்டுச் செயற்படுவதுடன் சமூக அமைப்பை மாற்றும் பண்பாட்டை உயர்த்திப் பிடித்துப் பண்பாட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதே வேளை, இனவாத, மதவாத, சாதிய, ஆணாதிக்க, பாலியல் வாதக் கருத்தியல்கள், ஏகாதிபத்தியக் கோளாறுகளான என்.ஜி.ஓ. பண்பாடும் கருத்தியலும் பின்நவீனத்துவமும், தேசிய இனம், பெண்ணியம், தலித்தியம் போன்ற பெயர்களினால் வெறும் அடையாளத்தை மட்டுமே நிலைநிறுத்தும் போக்கு, சமூக உணர்வற்ற தனிநபர்வாதம், சுயநலம், அதீத மதுபாவனை, போதைப் பொருள் பாவனை, வன்முறை, பாலியல் வக்கிரம், நுகர்வுப் பண்பாடு, போட்டி பொறாமைகளைத் தூண்டி வளர்க்கும் பண்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியான புரட்சிகரப் பண்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மாக்சிச லெனினிச அடிப்படையில் சோஷலிஸப் புரட்சியை நோக்கிய தத்துவங்கள் எண்ணக்கருக்கள் போன்றவற்றைப் புரட்சிகரப் பண்பாட்டு அம்சங்களுடன் பிரசாரப்படுத்துவதும், அதனை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு வேலைகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே எமது பண்பாட்டு வேலைகள் தொடர்பான நிலைப்பாடாகும்.
புரட்சிகர அரசியல் வேலைகளும் பண்பாட்டு வேலைகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். புரட்சிகரத் தொழிலாளி வர்க்கப் பண்பாடு தொடர்பான ஆய்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
எமது கட்சித் தோழர்கள் கட்சியினுடைய நேரடிப் பண்பாட்டு நடவ டிக்கைகளிலும் தேசிய கலை இலக்கியப் பேரவை, புதிய மலையகம், செம்மலர்கள் வீதி நாடகக் குழு போன்ற அமைப்புக்களினூடாகவும் ஏனைய வெகுஜன அமைப்புக்களினூடாகவும் பண்பாட்டு வேலைகளை முன்னெடுக்கின்றனர்.
கட்சியின் வெளியீடுகளாகப் புதிய பூமி, நியூ டெமொகிரஸி சஞ்சிகைகளினூடாகவும் செம்பதாகை இணையத்தள சஞ்சிகையினூடாகவும் புதிய பூமி வெளியீட்டாக நூல்களினூடாகவும் கட்சியின் இணையத் தளங்களினூடாகவும் கருத்தியல்ரீதியாகப் பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இதிற் கவலைக்கிடமான விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை அடிப் படையாகக் கொண்ட பண்பாட்டு வேலைகள் இயக்கரீதியாக முன்னெடுக்கப்படவில்லை என்பதாகும். சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியிலான மனிதாபிமான, முற்போக்கு விழுமியங்களை நிலைநிறுத்தும் பண்பாட்டு நடவடிக்கைகள் இருக்கின்ற போதும் பின்நவீனத்துவமும் பிற சீரழிவுப் பண்பாட்டு நடவடிக்கைகளும் அதிகமாக இருப்பதைக் காணலாம்.
வெகுஜனப் போராட்டங்களின் பகுதியாகத் தேர்தல்களில் பங்கெடுப்பது
1978ஆம் ஆண்டு நமது கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் 1993ஆம் ஆண்டு வரை எல்லாத் தேர்தல்களையும் பகிஷ்கரிப்பது என்பது எமது கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பிறகு தேர்தல்களில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்ட போதும் எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட சூழ்நிலைக்கேற்ப, போட்டியிடுவதா இல்லையா என்று முடிவெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானித்ததன் நோக்கம் பாராளுமன்றப் பாதையில் சமூக மாற்றத்தையோ புரட்சியையோ ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையினாலல்ல. மாறாக நன்கு ஸ்தாபிதமாகியுள்ள பாராளுமன்ற, ஜனாதிபதி ஏனைய தேர்தல் அரசியல் பாதையினால் சாதாரண தொழிலாளர், விவசாயிகள் ஏன் தேசிய இனங்களின் உரி மைகளையும் உறுதி செய்ய முடியாது என்பதையும் அவை சாதாரண மக்களின் கைகளுக்கு அதிகாரத்தை வழங்காது என்பதையும் மக்கள் உணர்ந்து ஏற்கும் வரை, அந்த அமைப்பை அம்பலப்படுத்துவதற்காகப் போட்டியிடுவதெனத் தீர்மானித்தோம். ஏனைய பூர்ஷ{வா கட்சிகளுக்கு எதிராக வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வழிமுறையாகவே தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.
தேர்தல்களில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையோ ஒன்றுக்கு மேற் பட்ட ஆசனங்களையோ பெற்றால் அவற்றைப் பயன்படுத்திச் சாதாரண உழைக்கும் மக்களின் குரலாக அந்தந்தச் சபைகளில் ஒலிப்பதுடன் போராடுவதுமே நமது நோக்கமாகும்.
கம்யூனிஸ்டுகள் ரஷ்யப் பாரளுமன்றமான டூமாவுக்குச் செல்வது டூமாவை இல்லாமலாக்குவதற்கே என்று லெனின் கூறியிருந்ததைச் சந்தர்ப்பவாத பாராளுமன்றத் தேர்தல் அரசியலை முன்னெடுப்பதற்கான சமாதானமாகக் கொள்ளாமல், உண்மையான அர்த்தத்தில் முதலாளித்துவத்தினைத் தோற்கடித்து சோஷலிஸத்தை நிலைநாட்டு வதற்குரிய ஒருவிதமான போராட்டமாகத் தேர்தலில் பங்கெடுப்பதைக் கொள்வோம். இதில் திரிபுவாதிகளிடமிருந்தும் ட்ரொட்ஸ்கிவாதிகளிட மிருந்தும் நாம் வேறுபடுகிறோம்.
தேர்தலும், தேர்தல் முடிவுகளும் அனைத்து மக்களினதும் அபிலாட்சைகளை வெளிப்படுத்தா. ஆனால் நன்கு ஸ்தாபிதமாகியுள்ள தேர்தல் அரசியலை வெறும் வாய்ச்சவடாலால் தோற்கடிக்க முடியாது. அதற்குப் பலமுனைளிலும் போராட வேண்டும். தேர்தலைப் பகிஷ்கரிப்பதும் பங்கெடுப்பதும், பங்குபற்றி வெற்றி பெற்றால், சாதாரண மக்களுக்காகக் குரல் எழுப்புவதும் வெகுஜனப் போராட்டத்தின் பகுதியாகக் கொள்ளப்பட வேண்டும்.
தேர்தலில் பங்கெடுப்பதன் நோக்கம் முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதற்கோ, சீர்திருத்தி முகாமைப்படுத்துவதற்கோ அல்ல என்பதைப் புரிந்து கொள்வோம். மக்களைப் பிளவுபடுத்திச் சீரழிப்பதற் கல்லாது, முதலாளித்துவ அமைப்பைக் கேள்விக்குட்படுத்தி, அதன் வரையறையை அம்பலப்படுத்தி அதனைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழியாகவன்றிப், பல போராட்டங்களில் ஒன்றாகத் தேர்தல் அரசிய லைக் கொள்வோம்.
புரட்சிக்கான மார்க்கம் என்ன?
நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களுடன் நவகொலனித்துவ-ஏகாதிபத்திய பூகோள மயமாதல் சூழ்நிலையில் இலங்கையை ஆளுகின்ற பேரின வாத முதலாளித்துவ, அதிகார முதலாளித்துவ வர்க்கங்களால் இலங்கை மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பிரச்சி னைகளுக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு மாற்று விஞ்ஞான பூர்வமான சோஷலிஸமே ஆகும். அதற்கான புரட்சி அமைதியான முறையில் இடம்பெறவோ புரட்சி நிலைநிறுத்தப்படவோ ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்திய, பிராந்திய சக்திகளும் இடமளிக்கப் போவ தில்லை. அந்தப் புரட்சியை முன்னெடுப்பதற்கான முன்தேவையாகத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் பிரதான போராட்டச் சக்திகளான விவசாயிகளும் பிற சுரண்டப்படும் வர்க்கங்களும் அடக்கப்படும் வர்க்கங்களும் ஐக்கியப்பட்டுப் புதிய-ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடு.
இதனை முன்னெடுப்பதற்கான மார்க்கம் என்ன? பாராளுமன்றப் பாதையல்ல என்பது தெரிந்ததே. வெகுஜனப் போராட்ட மார்க்கமே புரட்சிக்கான எமது மார்க்கமாகும். அது பல முனைகளிலான பல போராட்டங்களையும் குறிக்கும்.
அந்தந்தத் தளங்களில் நடைபெறும் போராட்டங்களை ஊக்குவித்து வழிநடத்திக் கூட்டிணைத்து முன்னெடுப்பதுடன் அவற்றுக்கான மத்திய நிலையமொன்றை அமைத்து அவற்றை அடிப்படைச் சமூக மாற்றத்திற்கான வர்க்கப் போராட்டமாக மாற்றுவதும் வெற்றியடையச் செய்வதும் எமது மார்க்கமாகிறது. வெகுஜனப் போராட்டத்தின் அவசியம் அதனுடைய ஆழ அகலங்கள் பற்றி 2007 மார்ச் மாத நியூ டெமொக்ரஸி (24)இல் Discussion Paper என்ற தலைப்பில் கட்டுரையொன்று வெளியாகி இருந்தது. அது புதியபூமியிலும் வெளியாகி இருந்தது.
நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், சரி யான வெகுஜனப் போராட்டங்களை ஆளும் வர்க்கம் ஒடுக்க முடியாது என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளோம்.
வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது மக்களுக்கு விரோதமான ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமை ஆகும். அதற்கூடாக மக்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். அதற்கூடாகச் சமூக மாற்றத்திற்கான வர்க்கப் புரட்சிக்குத் தயார் செய்யப்படுகிறார்கள். அதற்குத் தலைமை தாங்குவதும் வழிகாட்டுவதும் அதனை நெறிப்படுத்துவதும் மாக்சிச லெனினிசக் கட்சியின் பொறுப்பும் கடமையாகும்.
தோழர்களே எமது கொள்கைகளைச் சரியாக வகுத்துக் கொள்வ தற்காக இந்த அறிக்கைகள் இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாம் ஜன நாயகபூர்வமாகத் திறந்த மனத்துடன் கலந்துரையாடிப் பொது உடன்பாட்டிற்கு வருவோம். அந்த அடிப்படையில் எதிர்கால வேலைகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்போம்.
வாழ்க புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி!
வாழ்க மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங் சிந்தனை!
வெல்க புரட்சி!