Archive for the ‘இதழ் 4’ Category

தெரிவேதுமற்ற ஒரு தேர்தலில் மக்கள் முன்னுள்ள சரியான தெரிவு

Tuesday, January 26th, 2010

கடந்த 31 வருடங்களாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையில் நாடும் மக்களும் பல பொருளாதார நெருக்கடிகட்கும் அரசியல் அடக்குமுறைகட்கும் அநீதிகட்கும் அழிவுகட்கும் முகங் கொடுத்துள்ளனர். மூன்று தசாப்த காலப் பேரினவாத முதலாளித்துவ யுத்தத்திற்கும் தமிழ் மக்கள் நடுவே எழுந்த ஆயுத எழுச்சி;கட்கும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே மூல காரணமாகும். முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யுத்தத்தைத் தொடக்கி வைத்தார். யுத்தத்தை முடித்துத் தமிழ் மக்களின் இரத்த வெள்ளத்தில் வெற்றி விழாக் கொண்டடும் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் யுத்தத்தைக் கொடூரமாக நடத்தி முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இன்று ஜனாதிபதி தேர்தலில் எதிரெதிராக நிற்கிறார்கள். இருவருமே நாட்டின் உழைக்கும் மக்களினதும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களினதும் அபிலாட்சைகளை நிறைவேற்;ற மாட்டாதவர்கள். மக்களின் பொது எதிரிகளான இரு பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதும் தனித்துச் சென்று யாரும் தன்னையே வேட்பாளராக அறிவிப்பதும் அரசியல் வறுமையினதும் சுயநல அரசியலினதும் அடையாளமே.
ஒரு பொது வேட்பாளர் பற்றி உடன்படுமாறு தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் கட்சிகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் வேண்டிக் கொண்ட புதிய-ஜனநாயகக் கட்சி, அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், குறிப்பாகச் சிறுபான்மைத் தேசிய இனத்தவர், தமது வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கவேண்டுமென்று கேட்டுள்ளது. அதற்கான விளக்கம்; அடுத்தடுத்து வந்த இரண்டு கட்சி அறிக்கைகளில் தெளிவாக உள்ளது.
8.12.2009 அன்று வெளியான அறிக்கையில் “தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தெளிவான கோரிக்கைகளாக முன்வைத்துப் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்ட பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே இன்றைய சூழலில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ள சரியான தெரிவாக இருக்க முடியும்”  எனப் புதிய-ஜனநாயகக் கட்சி வற்புறுத்தியது. நவெம்பர் பிற்பகுதியில் சூரிச் நகரிற் கூடி மாநாடு நடாத்திய தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகளால் ஏன் ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முடியவில்லை எனவும் அவ் அறிக்கையி;ல் கட்சி கேட்டிருந்தது.

அதன் மூலம் எப் பிரதான வேட்பாளருக்கும் 50% வாக்குகள் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தி அதனால் ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு ஒரு இக்கட்டான நிலையையும் தோற்றுவிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியது.  அதன் அடிப்படையில் சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகளதும் இடதுசாரிக் கட்சிகளதும் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்குப் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவுக்கு வர இன்னும் காலம் கடந்துவிடவில்லை எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை. எனவே “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்காது வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்க வேண்டும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதி முறையை நிராகரித்து ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முன்னெடுக்க வேண்டும்” எனவும் “அவ்வாறு செய்வதன் மூலம் முப்பத்தியொரு வருடமாக இருந்து வரும் தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்குத் தமது எதிர்ப்பை அனைத்து மக்களும், குறிப்பாகக் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள், வெளிப்படுத்த வேண்டும்”  எனப் புதிய-ஜனநாயகக் கட்சி மத்திய குழு முடிவுசெய்ததைக் கட்சியின் 18.12.2009 திகதி அறிக்கை கூறியது.

தனியொரு வேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி முறைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்திக்கவும்; மக்களிடையே அரசியல் விழிப்பையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்பியிருக்கவும் முடிந்திருக்கும் என்ற கருத்தைப் புறக்கணித்துப் பிரதான வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கும் சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகள் தமது சுயநல அரசியலுக்காக மக்களுக்குப் பெரும் துரோகம்; செய்கிறார்கள்.

ஒரு பேரினவாதியைத் திரிபுவாதிகளும் பழைய ட்ரொட்ஸ்கியவாதக் கட்சியும ஆதரிக்கின்றன. போலி இடதுசாரி ஜே.வி.பி. மற்றப் பேரினவாதியை ஆதரிக்கிறது. ‘புரட்சி’  பேசும் ட்ரொட்ஸ்கியவாதிகள்  மூவர் தங்களுக்குப் பழக்கப்பட்ட தன்முனைப்புடன் பொது வேட்பாளரை நிறுத்தம் முயற்சிக்கு ஆப்புவைத்துள்ளன.

எனவே மக்கள் முன்னுள்ள ஒரே தெரிவு, இத் தேர்தலில் எல்லாக் கயமைகளையும் நிராகரித்துச் சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முன்னெடுப்பதாகிறது.

1966ம் ஆண்டு ஓக்ரோபர் எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம்

Tuesday, January 26th, 2010

 சி.கா. செந்திவேல்

வரலாற்று நிகழ்வுகள் அவ்வப்போது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகி;கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமே வரலாற்று முக்கியத்துவம் பெறுவதுடன் வரலாற்றுத் திருப்பு முனைகளையும் தோற்றுவிக்கின்றன. தனியே வெற்றிகரமானவை மட்டுமன்றித் தோல்வியைத் தழுவியவை கூட வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகின்றன. அவற்றின் அனுபவங்களும் பட்டறிவுகளும் வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிற்குப் பங்களிக்கின்றன. அவற்றினூடே வரலாற்று வளர்ச்சிப் போக்கானது தனக்குச் சாதகமானவற்றை உள்வாங்கியும் பாதகமானவற்றை நிராகரித்துங் கொள்கிறது. வரலாற்றுணர்வோடு அணுகும் எவரும் எந்தவொரு நிகழ்விலும் இதனைக் கண்டு கொள்ள முடியும்.

அவ்வகையில், இலங்கைத் தமிழரின் வரலாற்றில் முக்கியத்துவம் கொண்டதும் மிகப் பெரியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வாக 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி அமைந்தது. இரண்டாயிரம் ஆண்டுக் காலப் பழைமையானதும் மனித சமத்துவத்தை மறுத்த அமைப்பாகவும் கொடுமையானதாகவும் நீடித்து வந்ததான சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான பெருந் தாக்குதலை அவ் எழுச்சி தொகுத்து நின்றது. முக்கிய வரலாற்று நிகழ்வாகவும் தமிழர்களின் சமூக வாழ்வில் இடம்பெற்ற பெரும் திருப்பு முனையாகவும் அது வரலாற்றுப் பரப்பில் இன்றுவரை காணப்படுகிறது. தமிழ்த் தேசியவாத வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் எந்த ஒருவரும ஒக்ரோபர் 21 எழுச்சியின் தாக்கம் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ எடுத்துரைப்பதில்லை. ஏனெனில் மேட்டுக்குடி உயர் வர்க்க, உயர் சாதி அறிஞர்களும் ஆய்வாளர்களும் எனப் பட்டவர்களே இப்போதும் ஆதிக்க கருத்துப் பரப்புரையாளர்களாக இருந்தும் வருகிறார்கள். இப் போக்கு, இன்று மட்டுமன்றி வரலாறு முழுவதிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளையும் போராட்டங்களையும் மறைத்தும் திரித்தும் வந்த போக்கின் தொடர்ச்சியே ஆகும். அதனாலே தான் 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மீண்டும் மீண்டும் பேசவேண்டியுள்ளது. அதன் மூலம், தமிழ் மக்கள் மத்தியில், புதிய தலைமுறையினருக்கு அந் நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் கடமையும் நமக்குண்டு.

“சீனச் சார்பு” எனப் பத்திரிகையாளராற் சுட்டப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியே 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சிக்குத் திட்டமிட்டு நாள் குறித்துக் கொண்டது. அன்றைய பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மாக்சிச லெனினிசப் புரட்சிகரக் கட்சியாகப் பிளவடைந்து 1964இல் தோற்றம் பெற்றதே மேற்படி கட்சியாகும். தோழர் நா. சண்முகதாசனதும் சிங்களத் தோழர்களதும் தலைமையில், புரட்சிகர வேகத்துடன், வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அக் கட்சி அரசியல், தொழிற்சங்க வேளைகளில் ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாக அக் கட்சியில் உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பெருந்தொகையில் அணிதிரள ஆரம்பித்தனர். குறிப்பாக, இளைஞர் யுவதிகள் புரட்சிகரமானவர்களாகினர்.

அத்தகைய இளைஞர்களில் ஒருவனாகவே நான் 1964இல் இப் புரட்சிக் கட்சியில் இணைந்துகொண்டேன் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும். அன்றைய யாழ் குடாநாட்டுச் சமூக நிலையில் சாதிய முரண்பாடு கூர்மையடைந்து வந்ததுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதியத் தீண்டாமை ஒடுக்குமுறை அதிகரித்தும் வந்தது. அச் சூழலிலேயே, சாதியத் தீண்டாமைக்கு மக்கள் போராட்டத்திற்கான அறைகூவல் விடுப்பதற்கு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து, அதன் பொறுப்பைக் கட்சியின் வட பிரதேசக் கட்சிக் குழுவிடம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையிலேயே கட்சியானது 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21ந் திகதியைக் குறித்து சுன்னாகம் சந்தை மைதானத்திலிருந்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்நகர் நோக்கி நடாத்தி யாழ் முற்றவெளியில் பகிரங்கக் கூட்டத்தை நடாத்தவும் தீர்மானித்தது. கட்சியும் அதன் கீழான வாலிப இயக்கம், தொழிற்சங்கங்கள், விவசாயச் சங்கங்கள் ஆகியன அதற்கான தயாரிப்பில் இறங்கின. பொதுச் செயலாளராக இருந்த தோழர் சண்முகதாசனும் சிங்களத் தோழர்களும் கொழும்பிலிருந்து வந்திருந்தனர். யாழ் முற்றவெளிக் கூட்டத்திற்கு ஒளிபெருக்கி அனுமதி கொடுத்த பொலிசார், சுன்னாகத்திலிருந்து ஊர்வலம் செல்வதற்கு அனுமதி மறுத்திருந்தனர்.

இருப்பினும் குறித்த நாளன்று, பிற்பகல் 4.00 மணியளவில் சுன்னாகம் சந்தை மைதானத்தில் கட்சி வாலிபர் இயக்க மற்றும் உறுப்பினர் ஆதரவாளர்கள் சாதியத்தை விரும்பாத நல்லெண்ணம் கொண்டோர் என மக்கள் திரண்டனர். இறுதி நேரத்தில் பொலிஸ் அதிகாரியடன் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. 1000 மேற்பட்ட மக்கள் பொலிஸ் தடையை மீறி ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தனர். அதற்கு தலைமை தாங்கக் கட்சியின் தலைவர்கள் புரட்சிகரத் தலைமைத்துவ உணர்வுடன் முன்வந்தனர். 5.00 மணியளவில் சுன்னாகம் கந்தரோடை வீதியின் சந்தை மைதானப் பகுதியிலிருந்து விண்ணதிரும் முழக்கங்களுடன் புரட்சிகர ஊர்வலம் யாழ்நகர் நோக்கிப் புறப்பட்டது. “சாதி அமைப்புத் தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட்டும்!” என எழுதப்பட்ட செம்பதாகையை உயர்த்தி முன்னே எடுத்துச் செல்லப்பட்டது. அதன் கீழ்க், கட்சியின் தலைவர்கள் கம்பீரமாகத் தலைமை தாங்கி முழக்கமிட்டு முன் சென்றனர். ஊர்வலத்தினர் சாதியத்திறகு எதிராகவும் தீண்டாமையை எதிர்த்தும் வௌ;வேறான புரட்சிகர முழக்கங்களை முழங்கி உணர்வும் உத்வேகத்துடன் முன்சென்றனர். அன்றைய ஊர்வலத்தின் முன்னே தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம், வீ.ஏ. கந்தசாமி, டாக்டர் சு.வே. சீனிவாசகம், கே. டானியல், இ.க. சூடாமணி, டி.டி. பெரேரா, மு. முத்தையா, எஸ்.ரி.என். நாகரத்தினம் ஆகியோர் சென்றனர். அதற்கு அடுத்ததாக வாலிப இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் சங்கத் தோழர்களும் இளைஞர்களும் அணியாக முழக்கம் இட்டுச் சென்றனர். அன்று சாதியத்திற்கு எதிராகச் சுன்னாகத்தில் எழுந்த புரட்சிகர முழக்கங்கள் வட பிரதேசத்தில் கட்டிறுக்கத்துடன் இருந்து வந்த சாதியக் கோட்டை மீது எதிரொலித்தன என்று கூறுவது மிகையாகாது. அது மட்டுமன்றி, எதிர்வரப் போகும் புரட்சிகரப் போராட்;டப் புயலுக்கான முன்னறிவிப்பாகவும் அவ்வூர்வலம் அமைந்திருந்தது. அத்தகைய உணர்வும் உத்வேகமும் கொண்ட ஊர்வலம் சுன்னாகம் பிரதான வீதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்தை அண்மித்த போது, ஏற்கனவே அணிவகுத்து வீதிக்கு குறுக்கே நின்ற பொலிஸ் படை ஊர்வலத்தின் மீது பாய்ந்தது. காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் உயரதிகாரி தலைமையிலான பொலிசார் மிக மோசமான குண்டத்தடிப் பிரயோகத்தையும் துப்பாக்கிப் பிடிகளிலான தாக்குதல்களையும் நடத்தினர். அவர்கள் மத்தியில் சாதி வெறியுடைய தமிழ்ப் பொலிஸ் அதிகாரிகளும் பொலிசாரும் அதிகமாக இருந்தனர். அவ்வாறு அடிகள் வீழ்வதை உற்சாகப்படுத்துவது போலச் சில சாதிவெறியர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். முன் தயாரிப்போடும் உள்நோக்கத்தோடும் அவ்வூர்வலத்தின் மீதான பொலிஸ் தாக்குதல் அமைந்திருந்தது என்பதை பின்பான தகவல்கள் மூலம் அறிய முடிந்தது. ஆளும் வர்க்கமும் அதன் பாதுகாவலான அரச இயந்திரத்தின் ஒரு பகுதியான பொலிசும் அடக்கப்படும் மக்களை எவ்வாறு நடாத்தும் என்பதைக் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களும் தெர்pந்தே வைத்திருந்தனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் முன்பாகச் சாதியை தீண்டாமையை எதிர்த்த ஊர்வலத்தின் கட்சித் தலைவர்களினதும் தோழர்களின் தலையில் இருந்து இரத்தம் வழிந்தோடியது. தோழர்கள் கே.ஏ. சுப்பிரமணியம், வி.ஏ. கந்தசாமி, இ.க. சூடாமணி ஆகியோர் இரத்தம் சொட்டச்சொட்ட மேல் சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் செல்லபட்டனர். அடிகாயங்கள் பட்ட நிலையில் கட்சி வாலிப இயக்கத் தோழர்கள் சிதறிப் பின்வாங்கி ஓடவில்லை. நானும் என்னைப் போன்ற இளந் தோழர்களும் கம்யூனிஸ்ட் ஆகியபின் முதன்முதலில் வாங்கிய பொலிஸ் அடியும் காயமும் அதுவாகவே இருந்தது. அப்போது எனக்கு வயது 23. அவ் வேளை நான் கட்சியின் முழுநேர ஊழியனாகி வாலிபர் இயக்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த அடியும் வலியும் எமக்குப் புரட்சிகர உணர்வையும் மனவுறுதியையும் தந்தன. நாங்கள் தொடர்ந்து ஊர்வலமாக யாழ்நகர் நோக்கிச் செல்வதை வற்புறுத்தினோம். பொலிஸ் அதிகாரிகள் கலைந்து செல்லும்படி கூறினர். அதனை மறுத்த கட்சி வாலிபர் இயக்கத் தோழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பொலிசார் தயாராகினர். ஆனால் ஊர்வலம் செல்வதில் காட்டப்பட்ட மனவுறுதிக்கு முன்னால் பொலிசார் இறங்கிவர வேண்டியதாகவே இருந்தது. முழக்கங்கள் இடாது யாழ்நகர் நோக்கிச் செல்ல அனுமதித்ததுடன் அதனைக் கண்காணிக்கவெனப் பெருமளவு பொலிஸ் படையையும் முன்னுக்கும் பின்னுக்கும் பொலிஸ் வாகனங்களில் அனுப்பி வைத்தனர். ஆனால், குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஊர்வலத்தின் எண்ணிக்கை இரட்டை மடங்காகியது. யாழ்நகரை அண்மித்ததும் ஊர்வலத்தில் வந்த மக்கள் முழக்கங்களை இடத்தொடங்கினர். பொலிசாரால் அதனைத் தடுக்க முடியவில்லை. யாழ் முற்றவெளியில் கொட்டும் மழையிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டு கொண்டிருக்க பொதுக் கூட்டம் தோழர் டாக்டர் சு.வே. சீனிவாசகம் தலைமையில் நடைபெற்றது. தோழர் சண்முகதாசன், கே. டானியல், கா. செந்திவேல் ஆகியோர் உரையாற்றினர். தடுத்து வைக்கப்பட்ட மூன்று தோழர்களிடம் வாக்கு மூலம் பெற்று வழக்குத் தொடர ஏற்பாடு செய்த சுன்னாகம் பொலிஸார் இரவு பத்து மணிக்குப் பின் அவர்களை விடுவித்தனர். அன்றைய கூட்டத்தில், தோழர் சண் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகப் போராடத் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்வரவேண்டும் என்ற அறைகூவலைக் கட்சியின் சார்பாக விடுத்தார். இதுவரை காலமும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் கொடுக்கும் அடிமைத்தன நிலையை கைவிட்டு அடித்தவனுக்கு திருப்பி அடிக்கும் புரட்சிகர நிலைப்பாட்டை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுக்க வேண்டும் எனவும், அதற்கு எமது கட்சி தலைமையையும் வழிகாட்டலையும் வழங்கும் எனவும் கூறினர்.

அன்றைய ஒக்டோபர் 21 எழுச்சியானது வெறுமனே வாக்குச் சேகரிக்கும் பாராளுமன்ற நோக்குடையதாக அமைந்திருப்பின் அது வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றிருக்க முடியாது போயிருக்கும். ஆனால் தமிழ் மக்களிடையே எப்போதும் மூன்றில் ஒரு பங்கினராக வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வந்த சாதியத் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான புரட்சிகர எழுச்சியாக அமைந்தமையானது வரலாற்று திருப்பு முனையாகியது. அவ் வெழுச்சியைத் தொடர்ந்து குடாநாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கூட்டங்கள் இடம்பெற்றன. அவற்றில் எல்லாம் கட்சியும் வாலிப இயக்கமும் தெளிவான கொள்கைகளை மக்களுக்கு எடுத்து விளக்கி வந்தன. கம்யூனிஸ்ட் கட்சியானது சாதியத் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தையும் போராட்டத்தையும் வர்க்கப் போராட்ட கண்ணோட்டத்தில் அணுகியதே ஓழியக், குறுகிய சாதியவாதக் கண்ணோட்டத்தில் நோக்கவில்லை. சில காலத்திற்கு முன்பு தமிழ் நாட்டின் தலித்தியவாதிகள் முன்வைத்த “தலித்துகள் மட்டுமே” என்ற வாதத்தை அன்றைய சூழலில் குறுகிய சாதிவாதமாகவே கட்சி கண்டது. தமிழ் நாட்டு தலித்தியவாதிகள் தமக்குத் துணையாக தோழர் டானியலின் எழுத்துக்களை தமதாக்கவும் தமது முன்னோடி டானியலே என்றும் உர்pமை கொண்டாடிக் கொண்டதையும் நினைவிற் கொள்ள வேண்டும். உண்மை என்னவெனில், தோழர் டானியல் அன்று தன்னையொரு குறுகிய சாதிவாதியாக அன்றி வர்க்கப் போராட்டப் பாதையில் சாதியத்தை எதிர்த்தும் போராடும் போராளியாக நிலைப்படுத்தி வந்தார். அவர் ஒரு போதும் பின்னர் வந்த தலித்திய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்பவராக இருக்கவில்லை என்ற உண்மை மறைக்கப்படுவது தமிழ் நாட்டு தலித்தியவாதிகளின் திட்டமிட்ட பரப்புரையாகும். டானியல் மீதான பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்ட போதிலும் அவர் இறுதிவரை தன்னையொரு பொதுவுடமை வாதியாகவே வெளிப்படுத்தி வந்தார். அவர் 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி ஊர்வலத்தில் பங்குகொண்ட போது புரட்சிகரக் கட்சியின் வட பிரதேசக் குழு உறுப்பினராக இருந்தார் என்பதே உண்மை நிலையாகும். அத்தகைய தோழர் டானியலை தலித்தியவாதிகள் எனக் கூறப்படுவோர் தமது குறுகிய சிமிழுக்குள் அடைக்க முற்படுவது நேர்மையீனமாகும்.

ஒக்டோபர் 21 எழுச்சியின் தொடர்ச்சியான பிரசார இயக்கங்கள் ஆங்காங்கே நடைமுறைப் போராட்டங்களாக வெடிக்க ஆரம்பித்தன. தேநீரக்கடைப் பிரவேசமாகவும் சமத்துவமான வழிபாட்டிற்கான ஆலயப் பிரவேசமாகவும் அவை முன்சென்றன. இப் போராட்டங்களில், அந்தந்த ஊர்களின் தாழ்த்தப்பட்ட மக்களே முன்னின்றனர். வெளியிலிருந்து வந்து போராட்டங்களிற் பங்குகொள்வது ஆதரவான நிலைப்பாடாக கருதப்பட்டதேயன்றி பிரதானமாக்கப் படவில்லை. சில இடங்களில் மக்களதும் இளைஞர்களதும் உணர்வையும் பலத்தையும் கண்டு சாதி வெறியர்கள் பின்வாங்கினர். ஆனாற் சங்கானையிற் தேனீர்க் கடைப் பிரவேசத்தின் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சாதி வெறியர்களும் பொலிசாரும் சேர்ந்து நிச்சாமம் கிராமத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். அதிலிருந்து, போராட்டம் வீறுபெற்றதுடன் வடபுலம் முழுவதும் அப் போராட்டத்தின் பொறிகள் வீழ்ந்து காட்டுத் தீ போற் பரவத் தொடங்கியது. அப்போது மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி என்ற உண்மையைக் காண முடிந்தது.

இக் கட்டத்திலேயே புரட்சிகர கட்சியானது சாதியத் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை உறுதியாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுப்பதற்கு உர்pய கொள்கையையும் தந்திரோபாயங்களையும் மேலும் வகுத்து முன்னெடுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் மத்தியிலான கம்யூனிஸ்ட்களும் வாலிபர்களும் அடிப்படைப் போராட்டச் சக்திகளாக அமைப்பு வாயிலாக அணிதிரட்டப்பட்டனர். அடுத்து அதற்கு ஆதரவாக அணிதிரளக் கூடிய மனிதநேய நல்லெண்ணம் கொண்ட அனைவரும் ஜனநாயக சக்திகளாக அடையாளங் காணப்பட்டனர். அவர்களில் உயர் சாதியினர் என்றழைக்கப்பட்டோரும் முஸ்லிம் முற்போக்கு சக்திகளும் சிங்கள இடதுசாரிகளும் இருந்தனர். எனவே, ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியும் அதற்கான அமைப்பும் தேவைப்பட்டன. காலத்தின் கட்டாயமாக அமைந்த இவ்வமைப்பாகவே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு 1967ம் ஆண்டு யாழ் மாநகரசபை மண்டபத்தில் போராட்டத் தியாகியாகிய சின்னர் கார்த்திகேசு அரங்கில் இடம்பெற்றது. அம் மாநாட்டிலேயே தோழர் எஸ்.ரி.என். நாகரட்ணம் தலைவராகவும் தோழர் கே. டானியல் அமைப்பாளராகவும் எம். சின்னையா, சி. கணேசன் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் தெர்pவு செய்யப்பட்டனர். தோழர்களான ந. முத்தையா, டாக்டர் சு.வே. சீனிவாசகம், கே.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் உபதலைவர்களாகத் தெர்pவாகினர். இவ்வாறு தோன்றிய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுக்களும் அல்லாதோரும் உயர் சாதியினரில் உள்ள ஜனநாயக சக்திகளும் அணிதிரண்டு இருந்தனர். இத்தகைய நிலை முன்பிருந்து வந்த சாதிய அடையாளச் சங்க முறைமைகளுக்கு அப்பாலான காலத்தின் வளர்ச்சிக்கும் தேவைக்குமுர்pயதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமானது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலை ஏற்றுச் செயற்பட்ட ஒரு போராட்ட ஐக்கிய முன்னணி அமைப்பேயாகும். அதன் தலைவராகப் பொறுப்பேற்ற தோழர் எஸ்.ரி.என். நாகரட்ணம் கட்சி உறுப்பினராக இருக்கவில்லை. ஆனாற் கட்சி வழிகாட்டலை ஏற்று உறுதியுடனும் விட்டுக் கொடுக்காமலும் போராட்டக் களத்தில் நேர்மையாகத் தலைமை தாங்கிய தோழர் ஆவார். அவரது தலைமைப் பாத்திரம் அன்றைய போராட்டச் சூழலில் மிகப் பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருந்தது. அவ்வாறே, கட்சியல்லாத ஏனைய வெகுஜன இயக்க தலைமை தோழர்களும் இருந்து வந்தனர். சங்கானை சாவகச்சேர்p கொடிகாமம் அச்சுவேலி உரும்பிராய் மற்றும் சிறுநகரங்களின் தேனீர்க்கடைகளிலும் உணவகங்களிலும் சமத்துவத்திற்கான போராட்டங்கள் இடம் பெற்றன. இவற்றிற், சங்கானை–நிச்சாமத்தில் மூன்று பேரும் கரவெட்டி–கன்பொல்லையில் ஒரே நேரத்தில் மூன்று பேரும் கரவெட்டி கிழக்கில் ஒருவரும் சண்டிலிப்பாயில் ஒருவரும் அச்சுவேலியில் ஒருவரும் போராட்டத்தில் நேரடித் தியாகிகளாகினர். ஆவர்கட்கும் அப்பால் ஐந்து பேர் வரை ஆங்காங்கே சாதிவெறியர்களின் தாக்குதலுக்குப் பலியாகினர். அவ்வாறே, பிரசித்தி பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆகிய இரு பெரும் ஆலயங்களில் மூன்று வருடத் திருவிழாக்களின் போது ஆலயப் பிரவேசப் போராட்டங்களைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுத்தது. சாத்வீகமும் பலாத்காரமும் போராடி இறுதியில் ஆலயக் கதவுகள் திறக்கப்பட்டன. அதன் எதிரொலியாக செல்வச் சந்நிதி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில் உட்பட ஆங்காங்கே பல கோவில்களின் கதவுகள் கடும் போராட்ட அழுத்தங்களாற் திறக்க வைக்கப்பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை வெகுஜன இயக்கமும் 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்த போராட்டங்கள் தேநீர்க் கடைகளிலும் உணவகங்களிலும் ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமத்துவத்தையும் ஜனநாயக மனித உர்pமையையும் வென்று கொடுத்தன. இவை 1966 முதல் 1971 காலப்பகுதியில் இடம்பெற்றவையாகும். ஆனால் அதற்கு முன்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டங்களோ உர்pமைக் கோரிக்கைகளோ இடம்பெறவில்லை என்று கூறுவது வரலாற்றை மறுப்பதும் இடம்பெற்ற உண்மைகளை மறைப்பதும் ஆகும். 1920களில் ஆரம்பித்து 30கள் வரை இயங்கி வந்த யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் (பின்பு வாலிபர் காங்கிரஸ்) காலத்தில் சாதியத் தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுச் சமத்துவத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு முன்பும் சிற்சிறு அமைப்புகள் தனிநபர்கள் சாதியத்திற்கு எதிராகத் துணிவுடன் எதிர்த்துச் செயலாற்றி வந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் தனிநபர்களகவும் ஒன்றிணைந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளை; எடுத்து வந்தனர். அதன் பின்பு 40களில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை கடும் முயற்சிகளையும் இயக்கங்களையும் தாழ்;த்தப்பட்ட மக்கள் சார்பாக முன்னெடுத்து வந்தது. யாழ்நகரத் தேனீர்க் கடைகளிலும் நல்லூர்க் கந்தசாமி கோவில், வண்ணை சிவன் கோவில் போன்றவற்றில் சமத்துவம் பெறப்பட்டமை மகாசபை காலத்திலேயாகும். அவ் வேளையிலும் மகாசபைக்குப் பின்புலமாகப் பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வந்தது. மகாசபையின் தலைவராக இருந்து கடுமையாகப் பணிபுர்pந்த எம்.சி. சுப்பிரமணியம் தோழர் மு. கார்த்திகேசனுடன் இணைந்து வடபுலத்திற் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பிய முன்னோடிகளில் ஒருவராக இருந்தவர். ஆனால் 1964ம் ஆண்டின் பின், பழைய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றப் பாதைவழி நடக்க ஆரம்பித்ததுடன் எம்.சியும் அதன் வழியிற் செயற்பட்டு தனது முன்னைய பங்களிப்பைக் களங்கப்படுத்திக் கொண்டார். இருப்பினும் அவரது முன்னைய சமூகப் பங்களிப்பை பின்னைய செயற்பாட்டிற்காக எவரும் மறுக்கவியலாது. அதே போன்று பின்னைய செயற்பாட்டை நியாயப்படுத்தவும் முடியாது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பான சாதிய தீண்டாமைக்கு எதிரான முன்னைய இயக்கங்களும் போராட்டங்களும் சாதித்தவைகளை விட 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி தோற்றுவித்த சுமார் 5 வருடகாலப் போராட்டம் சாதித்தவை வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. அவை தாழ்த்தப்பட்ட மக்களின் ஆண்டாண்டு கால அடிமைத்தன வாழ்வில் ஒட்டுமொத்தமான பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையாக அமைந்த காரணிகள்; போராட்டத்திற்கான தெளிவுள்ள கொள்கையையும் போராட்டத் தந்திரோபாயங்களும் ஆகும். வெகுஜன எழுச்சிகளையும் மக்களின் பங்குபற்றுதலையும் முதன்மைப்படுத்தியமை முக்கியமானதொரு நிலைப்பாடாகும். யாருக்குச் சமத்துவமும் ஜனநாயகமும் மனித உரிமையும் வேண்டுமோ, அத் தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிரட்டப் பட்டனர். அவர்கள் ஐக்கியப் படுத்தப்பட்டுப் போராட்டத்தின் நடுநாயகம் ஆக்கப்பட்டனர். அதனால் அது பரந்துபட்ட போராட்டமாகியது. அதில் இளைஞர்களின் பாத்திரம் முக்கியமானதாக இருந்த போதிலும், அவர்கள் கட்சி, வெகுஜன இயக்கம், வாலிபர் இயக்கம் என்பனவற்றின் கொள்கை வழிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தனர். ஆயுதங்கள் தேவையின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அவை கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டே இருந்தன. எந்தவொரு கொள்கையும் போராட்டமும் மேலிருந்தோ அன்றி வெளியிலிருந்தோ திணிக்கப்படக் கூடியவையல்ல என்பதையும் அப்படி திணிக்கப்பட்டால் அவை வெற்றிபெற முடியாதவையாகி விடும் என்பதையும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னெடுத்த அன்றைய போராட்டங்கள் எடுத்துக் காட்டின. சில கருத்தியல் வாதிகள் கூற முற்படுவது போன்று அன்று போராட்டங்கள் குறுகிய சாதிவாதப் போராட்டமாக இருக்கவில்லை. அதன் பரப்பும் பங்குபற்றியவர்களின் பங்களிப்பும் மிகப் பரந்ததொன்றாகும். ஜனநாயக நல்லெண்ணம் கொண்ட உயர்சாதியினர் எனப்பட்டவர்களும் முஸ்லிம் மக்களும் இளைஞர்களும் சிங்கள மக்களும் அவர்களுக்கிடையிலான புத்தி ஜீவிகளும் ஆதரவளித்துப் பங்கெடுத்தனர்.

அன்றைய ஒக்டோபர் 21 எழுச்சியும் அதன் பாதையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சாதிய அடக்குமுறைமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் பெருமளவிற்கு உடைத்தெறிந்து விட்டன. அதற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளும் போராட்டத் தந்திரோபாயங்களும் தமிழர்களின் சமூகச் சூழலின் யதார்;த்தங்களில் இருந்தே உருவாக்கப்பட்டன. இந்தியச் சூழல்களிலிருந்தோ அல்லது அந்நிய ஆதரவு வேண்டியோ அன்றைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும். வெறும் சொல்லாடல்களையேர் வீரதீர வசனங்களையோ யதார்த்த நிலைமைகளுக்கு அப்பாலான நடைமுறைகளையோ கைக்கொண்டு அன்றைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்திற்கு உர்pயதாகும். அதனாலேயே, தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் நிராகரிக்கப்பட்ட சமூக நீதியினையும் வென்றெடுக்க முடிந்தது. அதனால் அவர்களது ஒட்டுமொத்தச் சமூக அந்தஸ்த்து உரிய சமத்துவத் தானத்தையும் அடைய நேரிட்டது. அதே பாதையில், புதிய சமூக வளர்ச்சிக்கேற்பத், தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய, எஞ்சி நிற்கும் பிரச்சினைகட்கான இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழ்;த் தேசியவாதம் முன்னெடுத்த போராட்டங்களால் சாதியத்தை மறைக்க முடிந்ததே தவிர அதன் அடிவேர்களைக் காணவோ அறுக்கவோ முடியவில்லை. இப்போது இந்தியச் சூழலிற் காணப்படும் தலித்தியம் என்பதனை இலங்கையில் திணிக்கச் சிலர் முற்படுகின்றனர். ஒரு கொள்கையாகவும் கோட்பாடாகவும் வளர முடியாத தலித்தியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், வாக்குகள் பெறும் பாராளுமன்ற அரசியலுக்கும் பதவிகள் பெறுவதற்கும் அதற்கும் அப்பால் பணம் சேகரிப்பதற்கும் பயன்பட்ட அளவிற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயன்படவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. எனவே, தலித் என்ற சொல்லாடலையும் தலித்தியம் என்ற சீரழிந்த நடைமுறைகளையும் இலங்கையில் திணிப்பதற்கு எத்தனிக்கப் படுகிறது. இந்தியச் சூழலுக்கு பொருந்தக் கூடியததை இலங்கை மீது திணிப்பது தவறானதாகும். இது பிரதிபண்ணும் போக்கேயன்றி வேறுபட்ட சூழலின் யதார்த்தங்களைப் புரிந்து செயற்படுவதல்ல.

எனவே 1966 ஒக்டோபர் எழுச்சியும் அதன் பாதையிலான புரட்சிகரப் போராட்டங்களும் செழுமைமிக்க வரலாற்று அனுபவங்களை கொண்டவை. தோல்வியைத் தழுவியுள்ள தமிழ்த் தேசியவாதப் போராட்டத்தை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருமே அவற்றிலிருந்து படிப்பதற்கு நிறைய உண்டு. ஆனால் இத்தனை அழிவுகளுக்குப் பின்பும் அப் பக்கத்தைப் பார்ப்பதற்கு எந்தவொரு தமிழ்த் தேசியவாதத் தலைமையும் தயாராக இல்லை. அதற்கு தெளிவான இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று ஒக்டோபர் 21 எழுச்சியானது இடதுசாரி நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்பட்டமை. மற்றது தமிழர்கள் மத்தியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்தக் கால்களில் நின்று தமது சொந்தத் தலைவிதியை தாமே தீர்மானிக்க முன்வந்தமை. இவ்விரண்டு கொள்கை நிலைப்பாடுகளும் பழமைவாதத்தின் சகல கூறுகளையும் உள்வாங்கிய தமிழ்த் தேசியவாதச் சக்திகளுக்கு தீண்டத் தகாதவையாகும். அரசியலில் அவர்கள் கடைப்பிடித்து வரும் இத் தீண்டாமையைக் கடக்காத வரை இலங்கையிலோ அல்லது புலம்பெயர்ந்த நாடுகளிலோ தமிழ்த் தேசியவாதத்தை முன்னெடுக்கும் எத்தகைய தலைமைகளாலும் சர்pயான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அவர்களுக்கு அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைப்பதை விட வேறு வழியில்லை.

இந் நிலையில் தான், 1966ம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியத்துவம் துலக்கம் பெறுகின்றது. சாதியாலும் வர்க்கத்தாலும் தமிழர் ஆண்ட பரம்பரையினரால் அடிமைத்தன வாழ்விற்கு அமுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த வாழ்விலிருந்து விடுபடும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையை அவ்வெழுச்சி காட்டி நின்றது. அதன் 43ஆவது ஆண்டு நினைவின் ஊடே செழுமையான அனுபவங்களை தமிழ் மக்கள் அனைவருமே காண்பது அவசியமாகும்.

இஸ்ரேலும் தமிமீழச் சிந்தனைக்குழப்பமும்

Tuesday, January 26th, 2010

1. வரலாற்று உடன்பாடின்மை

இலங்கைத் தமிழரின் நிலையை இஸ்ரேலியருடன் ஒப்பிடுகிற ஒரு வழக்கம் 1960களில், 1961இல் சத்தியாக்கிரகம் தோல்வியில் முடிந்த பிறகு, தீவிரமடைந்து சிலகாலம் ஓய்வு பெற்று இருந்தது.
தமிழர் எல்லா நாடுகளிலும் உளர், தமிழருக்கு ஒரு நாடு இல்லை என்பது முன்பு யூதச் சமூகம் பற்றிய ஒரு கூற்றுக்கு ஒப்பானது. எனினும் அது பொருந்தாத உவமை. பெருவாரியான தமிழர் தமது சொந்த மண்ணிலேயே தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழரில் ஒரு பகுதியினர் கொலனி ஆட்சிக் காலத்திற் தமிழகத்திலிருந்த இடம் பெயர்க்கப்பட்டு இலங்கை, மலாயா, ஃபிஜி, மடகஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகட்கும் பிற இந்தியத் துணைக்கண்டச் சமூகத்தினருடன் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகட்கும் பிற பிரித்தானியக் கொலனிகட்கும் அனுப்பப் பட்டனர். அந் நாடுகளிற் சிலவற்றில் அவர்கள் தம் இன, மொழி அடையாளங்களுடன் வாழுகின்றனர். சில நாடுகளில் இன அடையாளம் பேணுகின்றனர். பிறவற்றிற் தம்மைப் பிற சமூகங்களுடன் சங்கமாக்கியுள்ளனர். எனினும் தமிழருக்குரிய பிரதான நிலப்பரப்புத் தமிழகமே. தமிழினம் என்பது இன அடையாளமன்றி மொழி அடையாளமாகவே பெர்pதும் அறியப் படுகிறது. இன்றைய தமிழரிற் கணிசமானோர் பிற இந்தியச் சமூகங்களிலிருந்து வந்தவர்களின் பரம்பரையினர். அவ்வாறே தமிழரும் பிற சமூகங்களுடன் ஒன்றியுள்ளனர்.
யூதர்கள் இன அடையாளத்தை வலியுறுத்துவது போக, யூத மதமும் அந்த அடையாளத்துக்கு நெருக்கமாக உள்ளது. மிக அர்pதாகவே எவரும் யூத மதத்தைத் தழுவ இயலும். யூத மதம் பல பிரிவுகளைக் கொண்டது. எப் பிரிவிலும் இல்லாத யூதர்களும் உள்ளனர். பெரும்பாலான யூதர்கள் தமது மண்ணை விட்டுப் பதினைந்து நூற்றாண்டுகட்கு முன்னரே சிதறிச் சென்றுவிட்டனர். மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அவர்கள் பிற சமூகத்தினருடன் பகைமை இல்லாது வாழ்ந்தனர் எனலாம். ஐரோப்பாவில் முதலாளியத்தின் எழுச்சியுடன் யூத சமூகத்தினின்று வணிகம், கடன் வழங்கல் என்பனவற்றின் வழியாகச் செல்வந்தர்கள் தோன்றினர். அதைவிட, வழமையான நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படாத யூதர்கள் தமக்கான சேரிகளில் வாழ்ந்தனர். அவ் வழக்கம் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் இறுக்கமடைந்தது. கலைகளிலும் பொழுதுபோக்கு, கணித, அறிவியற் துறைகளிலும் யூதரிடையே ஈடுபாடுடையோர் தோன்றுவதற்கு அவர்கள் நிலவுடைமைச் சமுதாயத்திற்குப் புறம்பானவர்களாக இருந்தமை ஒரு காரணியாயிற்று.
அப்போது உலகளாவிய யூத உணர்வு என்று ஒன்று இருந்ததாகக் கூற இயலாது. தீவிர மதப் பற்றாளர்pடையே தமது சொந்த நாட்டுக்கு (பல நூறு ஆண்டுகள் முன்பு விட்டுச் சென்ற இஸ்ரேலுக்கு) மீளுவோம் என்ற மதவழியான நம்பிக்கை இருந்தது. முதலாம் உலகப் போரை ஒட்டிய காலத்திலேயே யூதர்கட்கான தாயகம் என்ற கருத்து பிரித்தானிய கொலனிய ஆட்சியாளர்களது துணையுடன் உருவாக்கப் பட்டது. அதற்கு நியாயங்கள் இருந்தன. அக் காலத்தில் யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ச்சியான கொடுமையை அனுபவித்தனர். ரஷ்யப் பேரரசு உட்பட்ட பல நாடுகளிலும் அவர்கட்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் ஜேர்மன் ஃபாசிசவாதிகளின் கீழ் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்து யூதர்கள் அனுபவித்த கொடுமைகளே யூதர்கட்கு ஒரு தாயகம் தேவை என்ற கருத்துக்கு வலிமை சேர்ந்தன. அப்போது யூதர்களிடம் வங்கி மூலதன வலிமை இருந்தது. அந்தப் பொருள் வலிமையும் அவர்களது செல்வாக்கிற்கு உதவியது.
எனினும் யூதர்கட்கான தாயகத்தை அவர்கள் எப்போதோ விட்டுச் சென்ற மண்ணிலே நிறுவதற்காக, ஸியோனிஸவாதிகள் எனப்படும் யூத இனவாதிகள் பயங்கரவாத அமைப்புக்களைக் கொண்டு அராபியர்களை வன்முறை மூலம் விரட்டத் தொடங்கினர். முடிவில், ஐ.நா சபையின் ஆசிகளுடன் 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டது. அதன் பின்பும் அராபியரை விரட்டுவதும் பலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் மேற்கொள்வதும் தொடர்ந்தது.
இஸ்ரேல் உருவானதிலிருந்து இஸ்ரேலிய அரசு இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்தது. ஒன்று யூத இனவெறியை வளர்த்துப் பலஸ்தீன மண்ணின் வளமான பகுதிகள் அனைத்தையும் அராபியர்pடமிருந்து பறிக்கிற ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட வன்முறையும். மற்றது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காவலரணாக இஸ்ரேல் கடந்த அரை நூற்றாண்டுகளாக இயங்கி வந்துள்ளது.
இஸ்ரேல் கடந்த அறுபதாண்டுகளாகப் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைத்து வந்துள்ள கொடுமைகள் விரிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பலஸ்தீன மக்களுடைய எழுச்சியின் விளைவாக அவர்களது விடுதலை இயக்கமான பலஸ்தீன விடுதலை இயக்கம் 1974இல் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் பலஸ்தீன மக்களால் இன்னமும் பறிக்கப்பட்ட தமது மண்ணுக்கு மீள இயலாதுள்ளது. அதற்கான காரணம் இஸ்ரேலின் அரச இயந்திரத்தின் வலிமையும் பலஸ்தீன மக்களின் ஒற்றுமையின்மையும் அரபு நாடுகட்கு இடையிலான பகைமையும் என்று சிலர் விளக்க முற்படுகின்றனர். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா என்கிற பெருவல்லரசு இஸ்ரேலுக்கு வழங்கி வந்துள்ள நிபந்தனையற்ற ஆதரவேயாகும். அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ உதவியின்றி இஸ்ரேலால் நிலைக்க முடியாது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலை உலக நாடுகள் புறக்கணிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது.
இந்த உண்மைகளை மனதிற் கொள்ளும் எவருக்கும் இஸ்ரேல் என்கிற நாட்டுடனும் யூத இனத்துடனும் இலங்கைத் தமிழர்pன் நிலையைப் பொருத்திப் பார்ப்பது எத்துணை அபத்தமானது என்று விளங்கும்.

2. இஸ்ரேலுடனான ஒப்பீட்டின் நோக்கம்

இஸ்ரேலுடனான ஒப்பிடுதலின் உட்கிடையை விளங்கிக் கொள்வதனால் 1971இல் பங்ளாதேஷ் உருவான பின்னணியிற், தமிழரசுக் கட்சிக்குள் அமிர்தலிங்கம் தன்னை மீள நிலை நிறுத்தத் தனித் தமிழீழம் என்கிற கருத்தை முன்னெடுத்த காலப் பகுதியை நோக்க வேண்டும். 1974இல் தமிழர் ஐக்கிய முன்னணி அமைந்த சூழலில் அமிர்தலிங்கத்தை ~ஈழத்து முஜிபுர்;| என்று அழைக்கிற ஒரு போக்கு நிலவியது. முஜிபுர் ரஹ்மான் இந்திய மேலாதிக்கத்தின் எடுபிடியாகப் செயற்பட்டார் என்பது போக, அவரது ஆட்சியின் அடக்குமுறைத் திமிர்த்தனமும் மக்களிடையே அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. மக்கள் முஜிபுரை ஆட்சியிலிருந்து விரட்டு முன்பே ஒரு ராணுவச் சதி அவரைக் கொன்று ஆட்சியைப் பிடித்துவிட்டது. அதற்கான விலையை இன்றுவரை பங்காளதேஷ் செலுத்தி வந்துள்ளது. அமிர்தலிங்கத்தை ஈழத்து முஜிபுர் என்று அழைப்பது அத்துடன் ஓய்ந்தாலும், அடிப்படையான எதிர்பார்ப்பு மாறவில்லை. எவ்வாறு இந்தியா ஒரு வங்காள தேசத்தை உருவாக்க உதவியதோ அவ்வாறே ஒரு தமிழீழத்தை உருவாக்கவும் உதவும் என்பதே அந்த எதிர்பார்ப்பு.
1974இல் பலஸ்தீன விடுதலை இயக்கம் உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் ஆதரவுடன் ஐ.நா. அங்கீகாரத்தைப் பெற்ற வேளையிற், பலஸ்தீன விடுதலை பற்றிய எதிர்பார்ப்புக்கள் வலுவாக இருந்தன. எனவே அமிர்தலிங்கம் ‘ஈழத்து அரஃபாத்;| என அடையாளங் காட்டப்பட்டார். ஆனாலுந் தமிழ் இளைஞர் இயக்கங்கள் 1977இல் அமிர்தலிங்கத்தில் நம்பிக்கை இழந்துபோன போது அந்த அடையாளமும் விடுபட்டுப் போய்விட்டது. எனினும் இந்தியா மூலமும் பிற வழிகளிலும் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட உறவுகள் இஸ்ரேலியக் கனவுகளிலிருந்து தமிழ்த் தேசியம் சிறிது விடுபட்டதன் அறிகுறி எனலாம். ஆனாலுஞ் சில விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலில் ஆயுதப் பயிற்சி பெற்றன. இஸ்ரேலிய கெரில்லாப் பயிற்சிப் பிரிவு தமிழ்ப் போராளிகட்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் சமகாலத்திற் பயிற்சி அளித்ததைப் பற்றி நாம் அறிவோம்.
எனவே இஸ்ரேல் என்பது வெறுமனே ஒரு தேசிய முன்மாதிரி என்றோ போராட்டத்திற்கான முன்மாதிரி என்றோ இஸ்ரேலை முதன்மைப் படுத்துதலை வரையறுத்துவிட இயலாது. அதில், வேறு எதிர்பார்ப்புக்களும் இருந்தன.
இஸ்ரேலைத் தமிழர் விடுதலைக்கான முன்மாதிரியாகத் தமிழரசுக் கட்சி காட்ட முற்பட்ட 1961க்குப் பிந்திய காலச் சூழலிற் தமிழரசுத் தலைவர்கள் சிலர், முக்கியமாக அமிர்தலிங்கம், அமெரிக்கத் தூதரகத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணத் தொடங்கினா ரெனவும் அமெரிக்க வெளி அலுவற் துறையினருடன் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டதாகவுங் கூறப்பட்டது. இத் தகவல்கள் உறுதிப்படுத்தப் படவில்லையென்றாலும், தமிழரசுக் கட்சி அமெரிக்கச் சார்பாகப் பேசிய காலமும் அதுவே என்பதை நாம் மறக்கலாகாது.
இஸ்ரேலை வெளிவெளியாக விதந்துரைக்கும் போக்கு, தமிழ் இளைஞர் இயக்கங்கள் ஏறத்தாழ அனைத்துமே இந்திய மேலாதிக்கக் குடையின் கீழ் வரமுன்பே நின்றுவிட்டது. அதற்கு முன்பிருந்தே இஸ்ரேலிய மோகத்துக்கு எதிராக வேறு காரணிகளுஞ் செயற்பட்;டன. வியற்நாம் போரின் இறுதி ஆண்டுகள் அமெரிக்காவின் அசைக்க வல்லமையைக் கேள்விக்கு உள்ளாக்கி விட்டன. பலஸ்தீன விடுதலைப் போராட்ட இலக்கியத்தின் அறிமுகம் அதை முன்மாதிரியாகக் கொண்ட சில இளைஞர் குழுக்களின் உருவாக்கத்திற்கு ஒரு பங்களித்திருந்;தது. சாதியத்திற்கு எதிராக 1967 முதல் 1971 வரை நடந்த மக்கள் எழுச்சியும் பழைய தமிழ்த் தலைமைகளின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தி யிருந்தது. எனவே இஸ்ரேலை முதன்மைப் படுத்திப் பேசுகிற போக்கு சில பழமைவாதிகட்குள் முடங்கிக் கிடந்தது.
ஜே.ஆர். ஜயவர்தன 1978முதல் இந்தியாவைப் பகைத்துக் கொண்ட சூழ்நிலையிற் தமிழ்த் தேசியவாதிகளிடையே இந்தியாவைப் பற்றிய சில எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்தன. எனவே சில போராளிகளது இஸ்ரேலுடனான உறவு ஏகாதிபத்தியத் தூண்டுதல் மூலமே இயலுமானது என நம்பலாம். 1983இன் பேரினவாத ஒடுக்கலின் பின் இஸ்ரேல் இலங்கை அரசாங்கத்தை ஆதர்pத்த நிலையிற் தமிழர்pடையே இஸ்ரேலிய ஆதரவாகவும் இஸ்ரேலை முன்மாதிரியாகக் கொண்டும் பேசுகிற போக்கு முடங்கிப் போயிற்று.
இந்தியக் குறுக்கீடு தமிழ் மக்களுக்கு அழிவைக் கொண்டு வந்த நிலையில், இந்திய நிழலிற் தங்கியிருந்த தமிழ்த் தேசியவாத அரசியற் தலைவர்களும் போராளிக் குழுக்களின் தலைவர்களும் நம்பகத்தன்மை இழந்தனர். 1994இல் யூ.என்.பி. ஆட்சி போனாலும் இலங்கையின் அயலுறவுக் கொள்கையும் உலகமயமாதலுக்கு உடன்பாடான பொருளாதாரக் கொள்கையும் மாறாதிருந்தன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி மேற்குலகினதும் இந்தியாவினதும் அணுகுமுறை பகைமையானதாகவே இருந்து வந்தது. எனினும் விடுதலைப் புலிகள் மத்தியில் மேற்குலகை அனுசரித்துப்போகிற ஒரு போக்கு வலுப்பெற்று வந்தது. அதற்கான முழுமையான காரணங்களை நாம் இப்போதைக்கு அறிய இயலாது. எனினும் மேற்குலகு தமிழீழத்திற்கு ஆதரவு தராவிடினும் தமிழ்ப் பிரதேசங்களிற் தனக்குப் பகைமையான ஒரு சக்தி ஆதிக்கஞ் செலுத்துவதை விரும்பாது என்பதை விடுதலைப் புலிகள் அறிந்ததன் விளைவாக அவர்கள் ஏகாதிபத்தியத்திடம் பணிந்து போக முற்பட்டிருக்கலாம்.
அதைவிடத், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபின் பழமைவாத இடதுசாரி விரோதச் சிந்தனைகள் அதினின்று கிளைத்த சகல அமைப்புக்களையும் ஊடுருவியிருந்தன. அதனோடு ஒட்டிய ஏகாதிபத்தியச் சார்பான அணுகுமுறையும் போராளி இயக்கங்களைத் தொற்றியிருந்தது. குறிப்பாக, விடுதலைப் புலிகளின் உயர் மட்டங்களிலும் அவர்களது புலம்பெயர்ந்த மேட்டுக்குடி ஆதரவாளர்களிடையிலும் மேற்குறிப்பிட்ட தன்மைகள் முனைப்பாக இருந்தன.
இஸ்ரேலை முன்மாதிரியாகக் காட்டுகிற போக்குக் கடந்த சில ஆண்டுகளாக, முக்கியமாக ராஜபக்ச அரசாங்கம் போரைத் தொடங்கிய போதிலிருந்தும் அதிலும் முக்கியமாக விடுதலைப் புலிகள் வீழ்ச்சியை எதிர்நோக்கத் தொடங்கிய காலந்தொட்டும், மிகவும் தீவிரமாகியுள்ளதுடன் மேற்குலக யூத நிறுவனங்களது ஆதரவை நாடுகிற ஒரு போக்கும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி யுள்ளது.
தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏகாதிபத்தியச் சார்பு அரசியற் கிடுக்கிப் பிடிக்குள் வைத்திருக்க எடுக்கப்படுகிற முயற்சிகளின் ஒரு பகுதியாகவே நாம் இதைக் கவனிக்க வேண்டியுள்ளது.

3. ஸியோனிசவாதிகளுடனான புது உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைமையின் சனநாயகமின்மையும் மக்கள் சாராத அரசியலும் சுத்தமான ராணுவ அணுகுமுறையும் போரில் அதன் தோல்விக்கு முந்திய சில மாதங்களில் பாரிய பல தவறுகட்குக் காரணமாயிருந்தன. ஒரு விடுதலைப் போராட்டம் வரன்முறையான போரிற் தோல்வியை எதிர்நோக்குகிற போது, அது மாற்று வழிகளைத் தேடுகிறது. போராட்ட முறைகளை மாற்றித் தன்னைத் தற்காக்கவும் அதிலும் முக்கியமாக மக்களுக்குப் பாதுகாப்பைப் பெற்றுத் தரவும் முயல்கிறது.
விடுதலைப் புலிகளின் விடயத்தில் முன்னர் இவ்வாறு நடந்துள்ளது. இம்முறை ஏன் நடக்கவில்லை? இறுதி இரண்டு மூன்று மாதங்களில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்ற குற்றச் சாட்டை நியாயப்படுத்துகிற விதமாகவே அவர்களது நடத்தை அமைந்திருந்தது. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் தலைமையை மேற்குலகக் குறுக்கீட்டின் மூலம் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை பல்வேறு வடிவங்களில் ஊட்டப்பட்டு வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகவே புலம் பெயர்ந்த விடுதலைப் புலி ஆதரவுப் பிரமுகர்களதோ விடுதலைப் புலிகளினதோ நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள இணையத் தளங்களும் விடுதலைப் புலிகட்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டுப் பழகிய ஊடகங்களும் நடந்து கொண்டுள்ளன.
இவற்றைத் தற்செயலானவை என்றோ ஒரு சிலரது தவறுகள் என்றோ தட்டிக் கழிக்க இயலாது. இவற்றுக்குப் பின்னாற் செயற்படுகிற சிந்தனைகள் உள்ளன. அதிகார வலைப் பின்னல்கள் உள்ளன. அவை தம்மை இடையிடையே வெளிக் காட்டிக் கொள்கின்றன.
ஓபாமாவுக்கு ஆதரவான தமிழர்கள் என்றொரு குழுவினர் சனாதிபதித் தேர்தலில் அவரை ஆதர்pத்தும் அவருக்காக நிதிதிரட்டி வழங்கியும் தமிழரை ஆதர்pக்குமாறு அவரை வற்புறுத்தலாம் என்று நம்பினர். இன்னமும் ஒபாமாவை நம்புகின்றனர். ஒபாமாவும் திருமதி கிளின்ற்றனும் தமிழருக்கு அனுதாபமாகவும் மனித உர்pமை மீறல்கள் பற்றிக் கரிசனை தெர்pவித்து நாலு சொற்கள் பேசியதற்கும் மேலாக எதுவுமே வெல்லப்படவில்லை என நாம் அறிவோம்.
இன்னொரு புறம் அமெரிக்க அரசியல், ஊடக நிறுவனங்களிற் செல்வாக்கு மிகுந்த யூத அமைப்புக்கள் மூலம் தமிழீழ விடுதலைக்கோ தமிழருக்குச் சாதகமான ஒரு தீர்வுக்கோ வழி தேடலாம் என்ற பாதையிற் போகிற போக்கு உருவாகியுள்ளது. எலி வீஸெல் என்கிற நொபெல் பரிசாளரான யூதப் பிரமுகர் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்ததற்கு விடுதலைப் புலி ஆதரவு இணையத் தளங்கள் முக்கியத்துவம் அளித்திருந்தன. இந்த மனிதாபிமானி இதுவரை இஸ்ரேலின் மனித உர்pமை மீறல் எதையுமே கண்டித்திராதவர். கால் நூற்றாண்டுக் காலமாக இலங்கையின் இன ஒழிப்புப் போருக்கு இஸ்ரேல் ஆயுதங்களும் பல்வேறு ராணுவத் தளவாடங்களும் வழங்கி வந்ததைப் பற்றியோ இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளித்து வந்ததைப் பற்றியோ அவர் விமர்சித்துப் பேசவில்லை.
எலி வீஸெலின் கண்கள் எப்போது இலங்கையின் பக்கம் திரும்பின என்றோ எவர் அவரது கவனத்தை அத் திசையிற் திரும்பினாரென்றோ எவ்வாறு அவரது கவனம் ஈர்க்கப்பட்டது என்றோ என்னாற் கூற இயலாது. ஆனாலும், இலங்கை அரசாங்கம் ஈரானுடன் ஏற்படுத்தியுள்ள நட்புக்கு அதில் ஒரு சிறு பங்கிருக்கலாம். எனினுஞ், சில மாதங்கட்கு முன்னர் இலங்கையின் மனித உர்pமை மீறல்கள் தொடர்பான பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைச் சபையில் மேலை நாடுகள் முன் வைப்பதற்கு முன்னமே இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடித்ததை மெச்சி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேலும் அதை ஆதரித்து வாக்களித்ததை இங்கு நினைவு கூர்தல் தகும்.
இஸ்ரேல் உலகநாடுகளின் உள் அலுவல்களின் பல வழிகளிற் குறுக்கிட்டுள்ளது. அமெரிக்காவாற் செய்ய இயலாத சில கீழ்த்தரமான வேலைகளை அது செய்துள்ளது துருக்கியின் குர்திய விடுதலை இயக்கமான குர்தியத் தொழிலாளர் கட்சித் தலைவரான அப்துல்லா ஒச்சலானை வெளிநாடொன்றிற் சிறைப்பிடித்துத் துருக்கிய அடக்குமுறை ஆட்சியிடம் இஸ்ரேல் ஒப்படைத்தது என்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராளிகள் மறக்கக் கூடாத உண்மை.
இப்படிப்பட்ட இஸ்ரேலின் ஆதரவாளர்களான வட அமெரிக்க ஸியோனியவாதிகளுக்குத் தமிழருடனான ஈடுபாடு எப்படி வந்தது? உறவுகள் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டன? எவருடைய நலன்கள் அதன் பின்னால் இருந்து இயங்குகின்றன? இவை பற்றி நாம் தீர விசாரிக்க வேண்டும்.
வட அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் செல்வந்தர்கட்கு யூத வணிகப் பிரமுகர்கள் மூலமான தொடர்புகள் இருக்கலாம். ஓபாமாவின் ஆதரவாளர்கள் எனப்பட்டோர் ஒபாமாவின் ஆதரவாளர்களிடையே உள்ள ஸியோனிஸவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி யிருக்கலாம். இவற்றுக்கும் மேலாகத் தனிப்பட்ட நட்புக்களும் தொழில் உறவுகட்கும் இடமுண்டு: நாடுகள் பரந்த ஈழ அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆலோசகராக உள்ள ஒரு பிரமுகர் செல்வாக்கு மிக்கவரும் உயர் பதவி வசிப்பவருமான ஓரு யூதப் பெண்ணை மணமுடித்துள்ளார் எனவும் அறியக் கிடைத்துள்ளது.
இவ்வாறான தனிப்பட்ட செல்வாக்குக்களைப் பாவித்து ஈழத் தமிழர் ஸியோனிஸ்ற்றுக்களாற் பயன்பெறுகிறார்களா, அல்லது ஈழத் தமிழர் ஸியோனிஸ்றுக்களாற் பயன்படுத்தப்படுகிறார்களா? இதுவே நம்முடைய கவனத்துக்குரிய விடயம்.
நாளை இலங்கையில் ஆட்சிக்கு வரக்கூடிய ஒரு பேரினவாத அடக்குமுறை ஆட்சி, அமெரிக்காவுக்குப் பூரண விசுவாசமாகவும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் இந்தியாவைப்; பகைக்காமலும் இந்தியாவுடனும் தனது உறவை வலுப்படுத்தி வருகிற இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்ளுமாயின், அமெரிக்க ஸியோனிச நண்பர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இஸ்ரேலுக்கும் ஸியோனிஸத்திற்கும் நெருக்கமாகச் செல்லுகிற போக்குத் தமிழரை அவர்களது இயல்பான நேச சக்திகளிடமிருந்து தனிமைப் படுத்தும் என்பதை நாம் மறக்கலாகாது. இலங்கைவாழ் முஸ்லிம்களுடன் தமிழ் மக்களை நெருக்கமாகக் கொண்டு வரக்கூடிய ஒரு சர்வதேசப் பிரச்சனை பலஸ்தீனப் பிரச்சனை. அவ் விடயத்திற், தமிழ் மக்கள் நீதியின் பக்கம் நிற்பதால் முஸ்லிம்கள் நடுவே முற்போக்கான நேச சக்திகளை ஊக்குவித்து ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்ப இயலும்.
புலம் பெயர்ந்த தமிழ்ச் சந்தர்ப்பவாதப் பிரமுகர்கள் தமிழ் மக்கள் உலகின் பெருந் தொகையான மக்களிடமிருந்து அந்நியப்பட்டு ஏகாதிபத்தியவாதிகளை நம்பி ஏமாறுவதற்கே மீண்டுமொரு முறை திட்டந் தீட்டுகின்றனர். அனைத்துத் தமிழ் மக்களும் அதைப்பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

(இக் கட்டுரை புதிய பூமி 2009 செப்டம்பர், ஓக்டோபர், நவெம்பர் இதழ்களில் தொடராக வந்ததாகும்).

*****

9/11 முதல் 5/19 வரை

Tuesday, January 26th, 2010

அஸ்வத்தாமா

9/11க்குப் பின்னரான உலக ஒழுங்கு அரசியல் என்ற சதுரங்கத்தில் நாம் பகடைக்காய்களாக உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. 9/11க்குப் பின், உலகம் புதிய பல வழிகளை கண்டுபிடித்துள்ளது. புதிய போக்குகளைச் சென்றடைந் துள்ளது. நடந்துமுடிந்த போர், அவற்றைப் பற்றிய புரிதலை முள்ளந் தண்டைச் சில்லிடவைக்கும் வகையில் எமக்கு உணர்த்தியிருக்கிறது.  

9/11உம் அதையடுத்து ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் எனும் போது, 9/11ஐ விளங்கிக் கொள்ளல் என்பது மிக முக்கியமானதாகிறது. ஒரு வகையில், 9/11 என்பது வெறும் குறியீடு மட்டுமே ஆயினும்; அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள விடயங்கள் முக்கியமானவை. “9/11” என்ற சம்பவம் ஏன் நடந்தது? அது அவ்வாறு நடக்க என்ன காரணம்;, என்ன நிர்ப்பந்தம் என்பன போன்ற விடயங்கள் அதைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன. 

சிந்தனையாளர் பியே போர்த்தியோ (Pierre Bourdieu) அழகாகச் சொல்லுவார், “விளையாட்டுச் சீட்டுகள் எல்லாவற்றையும் தன்னிடமே வைத்துக்கொண்டு விளையாட நினைக்கும் ஒருவனிடம், மறுதரப்பானது விதிகளை மாற்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. அந்த விதிகளை மாற்றி விளையாட வேண்டிய கட்டாயத்திலும் கூட நியாயமான விதிகளை மாற்றி விளையாட முடியாத நிலவரத்தில் நியாயமில்லாத விதிகளைப் பின்பற்றவேண்டிய நிலைக்கு மாற்றுத்தரப்பு தள்ளப்படுகிறது”. 9/11ஐ அவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பது அவரது கருத்து. 

அந்த அடிப்படையில் பார்ததால், 9/11 என்பது, கெடுபிடிப் போரின் (பனிப்போர்) முடிவின் பின்னரான ஒற்றைப் பர்pமாண உலக ஒழுங்கை முற்றுமுழுதாக உலுக்க முனைந்த ஒரு சம்பவம். எனவே, அந்த ஒற்றைப் பர்pமாண உலக ஒழுங்கின் ஒரு விளைவாகவே 9/11ஐப் பார்க்க முடியும். ஒருவகையில் 1990களின் பின்பு தீவிரமடைந்து துரிதப்படுத்தப்பட்ட உலகமயமாக்கலின் எதிர்வினையாகவும் 9/11ஐ விளங்கிக் கொள்ளலாம். 

முக்கியமாக, 9/11ஐ அடுத்து முதலாவதாக உருவாக்கப்பட்ட செய்நிரல் ‘இஸ்லாம் மீதான வெறுப்பைக் கட்டமைத்தல்’ அவர்;கட்குத் தேவையானதாக இருந்தது. அதே நேரம் 9/11 சம்பவத்துக்குக் காரணமான அல் கைதா என்கிற அமைப்பின் சித்தாந்தம், பலியாவதன் மூலம் உலகத்தைத் தீவிரப்படுத்துவது என்ற கோட்பாட்டின் அடிப்படையிலானது. அவ்வமைப்பினர் அதற்கமைய இயங்குகின்றனர். அதன் கோட்பாட்டு அடிப்படைக்கும் இஸ்லாத்திற்கும் இடையில் பரந்த வேறுபாடுகள் உள்ள போதும், இரண்டையும் ஒன்றாகச் சுருக்கி ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது. இஸ்லாம் பொது எதிரியாக முன்னிறுத்தப்பட்டது. இஸ்லாத்தைப் பொது எதிரியாக முன்னிறுத்தும் தேவை ஏன் ஏற்பட்டது? அவ்வாறு, குறித்த ஒரு இனம் குறித்த மத அடையாளங்களை மையப்படுத்தியதாக இஸ்லாத்தை முன்நிறுத்த வேண்டிய தேவை என்ன என்பது போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. 1970களின் இறுதிப் பகுதியில் சமுவெல் ஹண்டிங்ட்டன் (Samual Huntigton எழுதிய “நாகரிகங்கட்கிடையிலான மோதல்” (Clash of Civilizations) என்ற நூலை நினைவுகூர்வது நல்லது. அமெரிக்கா அல்லது மேற்குலம் உலகமயமாக்கற் செய்நிரலை முன்னெடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி ஹண்டிங்ட்டன் வழங்கும் விளக்கம் “மேற்குலகம் நாகரிகமானது. மற்றவர்கள் நாகரிகமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே நாகரிகமற்றவர்;களை நாகரிகமானவர்களாக மாற்றத் தேவை உள்ளது” என்பதாகும். 

9/11இன் பின் இஸ்லாத்தைப் பொது எதிரியாக நிறுத்துகிறபோது, உலகமயமாக்கல் செய்நிரலை முன்னெடுத்தற்கும் அதனூடு மேலாதிக்கத்தை (hegemony) நிறுவுவதற்கும் எவ்வகையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஹண்டிங்ட்டன் தனது “நாகரிகங்கட்கிடையிலான மோதல்” என்ற நூலில் எழுதினாரோ, அதை இலகுவாக நடைமுறைப்படுத்த இஸ்லாத்தைப் பொது எதிரியாக நிறுத்துவது வசதியானதாகியது. அதனடிப்படையில் இஸ்லாம் ஒரு பொது எதிரியாக முன்னிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் நடாத்தப்பட்டது. 

ஆஃப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் மூன்று விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
1. அமெரிக்காவினுடைய தன்னிச்சையான தலையீடு
2. அமெரிக்காவின் “தற்பாதுகாப்புக்கான தாக்குதல்” (self defence) என்ற வாதம்
3. மனிதாபிமான நடவடிக்கை (humanitarion mission) என்று அதற்கு ஜக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்கியமை
9/11இன் பின்பான உலக ஒழுங்கில் முக்கியமாகப் பயன்;பட்ட ஒரு சொற்றொடர்; இந்த “மனிதாபிமான நடவடிக்கை” (humanitation mission) ஆகும். ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில் போதே இந்த நடவடிக்கை முதன்முதலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அமெரிக்காவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது உலக ஒழுங்கில் மிகவும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு விடயம். 

அடுத்த அம்சம், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வரையறுக்கும் போது, ஜோர்ஜ் புஷ் மிகவும் இலகுவான வரையறை ஒன்றைக் கொடுத்தார்: “நீங்கள் ஒன்றில் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள். எங்களோடு முரண்படுவது பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்கு ஒப்பானது.” பயங்கர வாதிகளாகவும் இல்லாமல், தங்களோடும் இல்லாமல் நடுநிலையாக இருத்தல் என்ற வாய்ப்பையே இல்லாமல் செய்யுமாறான ஒரு கருத்தியல் அங்கே கட்டமைக்கப்பட்டது. அதனடிப்படையில் எவ்விதமான எதிர்க் கருத்தும் எவ்விதமான மாற்றக் கருத்தும் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்தாகவே முன்மொழியப் படுகிறது. அதன் விளக்கமும் அதேதான். அதன் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்த மாற்றுக் கருத்தையும் பயங்கரவாதத்துக்கு ஆதரவானது என்ற வரையறைக்குள் கொண்டுவரக் கூடியதான தன்மைகளின் அடிப்படையிலேயே 9/11க்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட அமெரிக்க மக்கள் பாதுகாப்புச் சட்டம் (Citizen Law) உட்பட்ட சட்டங்கள் உருவாக்கப்பட்டன. “பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தத்தை” அமெரிக்கா முன்னெடுத்தபோது உருவாக்கி வைததுள்ள சில முக்கியமான அடிப்படை விடயங்கள் இவை. காலப்போக்கில், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று உலகின் பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட யுத்தங்களில் அதே முறைகள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டன. 

அடுத்தது, ஈராக் மீதான தாக்குதலுக்குத் தவிர்ப்பு நடவடிக்கை (preemptive action)  என்று கொடுக்கப்பட்ட விளக்கம். அதாவது எதிரி தாக்குவதற்கு முன்னால் நாமே தாக்குவது என்று கொடுக்கப்பட்ட விளக்கம். எதிரி தாக்காத போதே, ஏதாவதொரு முன்முடிவின் அடிப்படையில், தாக்குதல் தொடுப்பதை நியாயப்படுத்துவதான ஒரு வழிமுறை இதுவாகும். 

அடுத்து இப் பயங்கரவாத ஒழிப்பு யுத்தத்திலே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு மிகவும் முக்கியமான விடயம்; “மொழி” ஆகும். அதாவது இப் போரிலே “மொழி” என்பது, குறிப்பாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், எவ் வகையிற் பயன்படுத்தப்பட்டது என்பதாகும். தொடர்ச்சியாக இவ்வாறு உலகெங்கிலும் பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகின்ற நாடுகளில் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதும் கவனிப்புக்குள்ளாக வேண்டியதே. அதிலே முதலாவது ஆட்சி மாற்றம் (regime change)  ஈராக் மீதான தாக்குதலுக்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது ஆட்சி மாற்றம். ஏன்னென்றால் அங்கே ஜனநாயக ஆட்சியில்லை ஆகவே ஜனநாயக ஆட்சி தோன்றுவதற்கான ஆட்சிமாற்றமொன்றைச் செயற்படுத்துவதற்கான நியாயமும், தேவையும் உள்ளன.
இன்னொன்று, ஈராக் மீது தொடுக்கப்பட்டது போரல்ல, அது ஈராக்கை விடுவிப்பதற்கான நடவடிக்கை (Operation Iraq Freedom) என்ற கூற்று. மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை என்ற பெயர்pலே நியாயம் கற்பிக்கும் வழிமுறை இது. இப் போரியற் கலைச் சொற்களில், 90களின் கடைசிப் பகுதியிற் பயன்படுத்தப்பட்ட சொற்களுக்கும், 9/11க்குப் பின்பு, குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் உருவாக்கப்பட்ட பின்பு பயன்படுத்தப்படுகின்ற சொற்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. முன்னர் போர்க்களம் (battlefield) என்று சொல்லப்பட்டது இன்று செயல் அரங்கு (theatre of action) என்று சொல்லப்படுகிறது. அந்தச் சொலலே இலங்கையிலும் பயன்படுத்தப் பட்டது. ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதும் போது battlefield (போர்க்களம்) என்று எழுதுவது குறைந்து அதனிடத்தில் theatre of action (செயல் அரங்கு) எனும் பதம்; பயன்படுத்தப்படுகிற காரணம், பார்வையாளர்கள் திரையரங்கிலிருந்து திகிலூட்டும் திரைப்படமொன்றைப் பார்ப்பது போல அதைப் பார்க்க வேண்டும் என்பதாகும். அது ஒரு மனோநிலையைக் கட்டமைத்தல் போன்ற செயற்பாடு. அவ்வாறே, தாக்குதல் (attack)இடம் பெறுவதில்லை. மாறாக, நடுநிலைப்படுத்தல் (neutralisation) இடம் பெறுகிறது. இவ்வாறான புதிய சொற்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போது அமெரிக்காவால் முற்றுமுழுதாகப் பயன்படுத்தப் பட்டன. எனவே, யாரும் தாக்குவதில்லை. மாறாகச், சமநிலைப்படுத்துகின்றனர். ஏனெனிற் சமநிலைப்படுத்தல் எனும் போது அங்கே மனித உர்pமைகள் தொடர்பாகவோ மனித உர்pமை மீறல்கள் தொடர்பாகவோ கொலைகள் தொடர்பாகவோ எவ்விதமான கேள்வியையும் கேட்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு. விடயம் என்னவென்றால், சமநிலைப்படுத்தும் தேவையால், சமநிலைப்படுத்தல் நடக்கிறதே ஒழியத் தாக்குதல் அல்ல. 

  அவ்வாறே, யுத்தமும் இல்லை. மனிதாபிமான நடவடிக்கை (humanitarian operation) தான் இடம் பெறுகிறது. ஈராக் மீதான நடவடிக்கையாயினும்;, இலங்கை உட்பட அதற்குப் பின்பான நடவடிக்கை எதுவாயினும், இடம் பெறுவது, மனிதாபிமான நடவடிக்கை தான், யுத்தமல்ல. எனவே இவ்வாறு மாறியமையும் போரின் மொழியானது 9/11இன் பின்பான முக்கியமான ஒரு விளைவாகக் கருதப்பட்டது. 

“பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்” முன்னெடுக்கப்படும் போது, நாட்டு மக்களின் மனநிலையை எவ்வாறு சரிவரப் பேணுவது என்பது எந்த ஒரு ஆட்சி பீடத்துக்கும் மிகவும் முக்கியமானது. ஆட்சிபீடத்தின் முக்கியமான அங்கங்களைப் பார்க்கும்போது, அதன் முக்கிய பங்காளிகளாக ஊடகங்கள் இருக்கின்றன. அவ் வகையில், ஊடகங்கள் எம் மாதிரியான செயற்பாடுகளைப் பயங்கர வாதத்துக்கு எதிரான இந்த யுத்தத்திலே கையாண்டன என்பது முக்கியமானது. 

குறிப்பாக ஈராக் மீதான தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்பாக 250,000 அமெரிக்க டொலர் செலவில் பிரபலமான ஹொலிவுட் திரைப்படக் கலை இயக்குனர் ஓருவரைக் கொண்டு பிரமாண்டமான அரங்கொன்று (set) டோஹாவில் உருவாக்கப்பட்டு அங்கிருந்தே ஊடகங்களுக்குத் தகவல்களும் காட்சிகளும் வழங்கப்பட்டன. யுத்தம் எவ்வாறு நடைபெறுகிறது, யுத்தத்தை எம்மாதிரிச் செய்து கொண்டு போகிறார்கள் என்பன போன்ற செய்திகள் வழங்கப்பட்டன. போரியற் செய்திகளை மக்களுக்கு வழங்குவதிற் கூட, எவ்வாறு வழங்க வேண்டும் அதன் நன்மை, அதிலொரு பிரமாண்டம், ஒரு விதமான சினிமாத்தனம். மக்கள் இரசிக்கக்கூடிய விதமாக அதை வழங்குதல் என்பன கவனம் பெற்றன. உண்மையாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் பின்னர்தான் அவை கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் விருத்தி பெற்றன. போரை மக்கள் இரசிப்பிற்கு ஏற்றதாக மாற்றியது 9/11க்குப் பின்பான காலப்பகுதியே. 

போரை இரசிப்பதற்கும் வெற்றியைக் கொண்டாடுவதற்குமான மனநிலை 9/11இன் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் பின்பே உருவாக்கப்பட்டது. கருத்துக் கணிப்புக்களினூடு நோக்குகிற போது, அப்பொழுது உலகளாவிய முறையில், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், உயிரிழப்புக்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடப் போர் நடத்தப்படும் விதம், பயன்படும் ஆயுதங்கள், போரியல் தந்திரங்கள், போர் வீரம், தேசப்பற்று ஆகியவற்றிலேயே கூடிய அக்கறை காட்டினார்கள் என்று அறிய முடிகிறது. இவ்விடத்திலே தான் ஊடகங்களது பணி, குறிப்பாகப் பொதுப்புத்தி மனநிலையைக் கட்டமைப்பதன் தொடர்பில், ஆற்றப் படுகிறது. 

9/11 தாக்குதலின் பின்பு, அமெரிக்க ஊடகங்கள் ஒரு கிழமை முழுவதும் தொடர்ந்து செய்திகளை மட்டுமே வழங்கிவந்ததன் காரணமாக, அமெரிக்கத் தனியார் ஊடகங்கள் ஒவ்வொன்றிற்கும் சராசர்pயாக 320,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டது. அதை எவ்வாறு ஈடுகட்டுவது? அதே நேரம் தமது நாட்டின் மீதான அபிமானத்தையும் ஒவ்வொரு ஊடகமும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இச் சிக்கலை அமெரிக்கப் பெருவணிகத் துறை (corporate sector) எதிர்கொள்ள நேர்ந்தது. அதனடிப்படையிலேயே, பின்னர் போரியற் செய்திகளுக்கான விளம்பரங்கள் உருவாகின. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சான்றாகப் போரியற் செய்திகள் வழங்கப்பட்டன. அனுசரணையாளர் யார் என்ற தகவலும் எத்தனையாயிரம் ஈராக்கியப் படையினரை அமெரிக்கப் படைகள் கொன்றன, எத்தனையாயிரம் தலிபான்களைக் கொன்றன எனுமாறான போரியற் செய்திகட்கான விளம்பர அனுசரணையும் தொலைபரப்பானது. 

முற்றாக வேறுவகைப்பட்ட தேசபக்திக் கருத்தியலோடு இவ் விளம்பரங்களை முன்வைக்கின்ற தன்மையும் ஒருங்கே உருவானது. அப்பொழுது முதல், ஊடகங்கள் ஒரு இரட்டைத் தன்மையைப் பேணத் தொடங்கின. ஓன்று, எவ்வகையிலோ தேசபக்தியை மையப்படுத்தித் தமது விளம்பரத்தைத் தொடர்ச்சியாக மக்களுக்குக் கொண்டு செல்லல். மற்றது, மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்ற விம்பத்தைத் தோற்றுவித்து அதைப் பேணுவது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளிலே அமெரிக்கத் தேசியக் கொடி ஆடுகின்ற சிறிய சலனப் படம் ஒன்றைத் தொலைக்காட்சியின் மேல் மூலையில் இடுவது 9/11இன் பின்னர் தேசப்பற்றின் வெளிப்பாடாக்கப்பட்டது. அம் முறை இலங்கையிலும் பின்பற்றப் பட்டதை நாமறிவோம். 

இங்கே, விளம்பரங்கள் பற்றியும் அவற்றின் இலாபநோக்குப் பற்றியும் பார்த்தால், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போதும் தனியார் நிறுவனங்களும் பல்தேசியக் கம்பெனிகளும் (multinational companies) தமது இலாபத்தைக் கைவிட ஒருபோதும் விரும்பவில்லை. உதாரணமாக, ஒப்றா வின்ஃப்றே (Oprah Winfrey) தனது பிரபலமான நிகழ்ச்சித் தொடரின் போது, யுத்தத்தின் விளைவாக அமெரிக்க இராணுவத்திற் பணியாற்றிய கணவரை இழந்த கர்ப்பிணித் தாய்மாரை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்திய வேளை, அதையொட்டி, ஆனால் அதற்குச் சம்பந்தமே இல்லாமல், முற்றாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற உளவியல் வைத்தியரான டொக்டர் ஃபில் (Dr. Phil) உளவியல் ஆலோசனை வழங்குவதாக ஒரு செயற்பாடும் நடத்தப்பட்டது. டொக்டர் ஃபில் அதிற் தோன்றியது தனது வியாபாரத்தைப் பெருக்குவதற்காகவே. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை கூறுவது போலவும் தேசபக்தியின் காரணமாகவே தான் வந்திருப்பதாகவும் டொக்டர் ஃபில் சொன்னாலும் கொடிய வியாபார நோக்கை அதிற் காணலாம். உங்கள் கணவர் தேசநலனுக்கு முக்கியமான ஒரு நாட்டுப்பற்றாளனாக இருந்திருக்கிறார் என்று நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் அவரால் வழங்கப்பட்டனவேயொழிய, அப் பெண்ணின் எதிர்காலம் என்ன, அவளது குழந்தைளின் எதிர்காலம் என்ன, அரசாங்கம் அதற்கான வழிவகைகள் எதையாவது செய்கிறதா என்பன பற்றிய அக்கறையின்றி, அவை சம்பந்தமான எந்தவிதமான உத்தரவாதமும் வழங்காத குரூரமான வியாபார மனப்பான்மையோடு தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டமையும் கவனிக்கப்பட வேண்டும். பிற நாடுகட்கும் இது பொருந்தும். 

அடுத்ததுப், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் பற்றி நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) கூறிய கருத்தொன்று:  “அமெரிக்கா தனக்குள் கட்டமைத்து வைத்திருக்கின்ற வீரத்துவம் (heroism) தான் அமெரிக்காவின் பெர்pய பிரச்சனையே ஒழிய அது தீர்வல்ல”. இங்கு கவனிக்க வேண்டிய இன்னொன்று: அமெரிக்கா குர்திய மக்களை அடக்குவதற்காகத் துருக்கியையும், சதாம் ஹுசைனையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. பின்னர், சதாமுக்கு எதிரான அமெரிக்கப் படையெடுப்பு நடைபெற்றபோது அதே குர்திய தேசியவாதிகளை சதாம் ஹுசைனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. விடுதலைப் போராட்ட இயக்கங்களும் விடுதலையை வேண்டிநின்ற மக்களும் செயற்பட்ட விதத்தைப் பற்றிய பெரிய கேள்விகளை இச் செயற்பாடு எழுப்புகிறது. அதாவது, எந்த அமெரிக்கா தங்களை ஒடுக்குவதற்காகத் துருக்கிக்கும் சதாம் ஹசைனுக்கும் ஆயுதங்களை வழங்கிக் குர்திய மக்களுக்கு எதிராக மோசமாகச் செயற்பட்டதோ, அதே அமெரிக்கா, தனது நலனுக்காக சதாம் ஹுசைனுக்கு எதிராகச் செயற்படக் குர்தியத் தேசியவாதிகளை நாடியபோது, குர்தியத் தேசியவாதிகள் முழுமனதோடு அமெரிக்காவுக்கு உதவினார்கள். உலகப் புகழ்பெற்ற படம் ஒன்று இருக்கிறது. குர்திய எல்லைப் பகுதியில் அமெரிக்க டொலர்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய திறந்த லொறி ஒன்றில் ஒரு அமெரிக்க இராணுவச் சிப்பாய் படுத்துறங்குவதைக் காட்டுகின்ற படம். அந்தப் படம் எவ்வாறு குர்திய தேசியவாதிகள் அமெக்க டொலர்களுக்கு விலை போனார்கள் என்பதை விளக்கும் எளிய சித்தரிப்பு. இது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் கைக்கொள்ளக் கூடிய சர்pயான நடைமுறையா, இவை போன்ற நடைமுறைகளிலிருந்து நாம் கற்கக்கூடிய பாடங்கள் என்ன என்பன இங்கே கேட்கப்பட வேண்டிய கேள்விகள். குர்தியப் பிரச்சனை பற்றிய மேற்கூறிய விடயம் விடுதலைப் போராளி இயக்கங்கள் பற்றி விசாரிப்பதற்கான தேவையில் நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. 

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் ஒரு அரசு தன்னுள் ஒளித்து வைத்திருந்த பாசிசக் கூறுகளை நேரடியாக வெளிக்கொணர்ந்தது. அரச இயந்திரம் தந்திரமாகவும் மறைமுகமாகவும் செயற்படுத்தி வந்த பாசிச நடைமுறைகள், “பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்”; தொடங்கியதும் பட்டவர்த்தனமாகத் தெரியத் தொடங்கின. 9/11இன் பின்னரான பெரும் உலக நிகழ்வுகளில் முக்கியமானது லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல். அதன்போது யாரும் இஸ்ரேலை கண்டிக்கவோ இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தவோ எவரும் பெர்pதாக அக்கறை காட்டவில்லை. இஸ்ரேல் தானாகவே தோல்வியை ஒப்புக் கொண்டு தனது தாக்குதலை நிறுத்தும்வரை, ஐக்கிய நாடுகள் சபையோ எல்லோரும் சொல்லிக் கொள்கிற “சர்வதேச சமூகமோ” தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை.
இரண்டாவது, கொசோவோவின் விடுதலை. அதைப் பலர் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், கொசோவோ எக் காரணத்துக் காகத் தனி நாடாகப் பிரிக்கப்பட்டது, அதன் பின்னால் ஒளிந்திருந்த அமெரிக்க நலன் சார்ந்த அரசியல் என்ன, உண்மையிலே கிடைத்தது கொசோவோ மக்களுக்கான விடுதலை தானா போன்ற கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தி நுணுகி ஆராய வேண்டியவை. 

மூன்றாவது, இந்தோனேசியாவின் அச்சே விடுதலைப் போராளிகள் பேச்சுவார்த்தைய+டாகத் தீர்வு கண்ட விதம். உண்மையிலே அச்சே விடுதலைப் போராட்டத்தின் முடிவானது இந்தோனேசியா அரசுக்கும் அச்சே விடுதலைப் போராளிகளுக்கும் மத்தியஸ்தராக கடமையாற்றிய மார்த்தி அர்த்தசாரியாலேயே தீர்மானிக்கப்பட்டது. ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோது, கொசோவோவுக்குரிய ஒரே தீர்வாகத் தனிநாடுதான் இருக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கு வரைவு நகல் ஒன்றை வழஙகிய வரும் இந்த அர்த்தசாரி தான். அச்சே போராட்டத் தீர்வு, பாரிய ஒடுக்குமுறைகட்கும் அப்பால், ஒரு உடன்படிக்கையாகக் கைச்சாத்திடப்பட்டது. 9ஃ11இன் பின்பான விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பொதுவான போக்கின் சில தன்மைகளை விளங்;கிக் கொள்ள அதுவும் உதவலாம். 

அடுத்தது பலஸ்தீனத்தில் (வழமையாகப் PLO அமைப்பின் ஆட்சி நடந்துவந்த பின்னணியில்), ஹமாஸ் அமைப்பு முதன் முறையாக 2003ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஹமாஸ் அமைப்பு பலஸ்தீனத்தின் ஆட்சியைக் கைப்பற்றியதை ஏற்க அமெரிக்கா தயாராக இருக்கவில்லை. அமெரிக்கா உட்பட எந்த ஒரு மேற்கு நாடுமே அதை எற்கத் தயாராக இருக்கவில்லை. மேற்குலகம் சொல்லுகிறவாறு ஜனநாயகத் தேர்தலின் அடிப்படையிலே மக்களால் தெர்pவு செய்யப்பட்ட ஆட்சியாக ஹமாஸ் அரசாங்கம் இருந்தும் தாங்கள் அதை ஏற்கத் தயாரில்லை என்று முழு மேற்குலகும் சொல்லியது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஹமாஸ் அமைப்புக்கு எதிராகப் பாரிய தடைகள் விதிக்கப்பட்டன. 

 அடுத்து, கிழக்கு ஐரோப்பாவில் நடந்த வண்ணப் புரட்சிகள். கிழக்கு ஐரோப்பாவில் தொடங்கி முன்னாள் சோவியத் குடியரசுகள் வரை, தனக்குச் சார்பான ஆட்சிகளை உருவாக்க கிழக்கு ஐரோப்பா எங்கும் அமெரிக்கா நடத்திய “வண்ணப் புரட்சிகள்”. அவற்றோடு சேர்த்து ஜோர்ஜியாவிலுள்ள தென் ஒஸத்தியாவிலும் (South Ossetia) அப்காசியாவிலும் (Abkhazia) ரஷ்ய ஊடுருவலை நோக்கலாம். அதற்கு என்ன காரணம் கற்பிக்கப்பட்டது? ஜோர்ஜியாயும் அமெரிக்காவும் அதை எவ்வாறு விளக்கின?  அதைப் பற்றி உலக நாடுகளுக்குச் சொல்லப்பட்ட செய்தி என்ன? இக் கேள்விகள் கவனத்தை வேண்டி நிற்கின்றன.
இக் காலப்பகுதியில் லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் உருவான இடதுசாரி அரசாங்கங்களும் அவை சார்ந்த மாற்றங்களும், முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவிலுள்ள பழங்குடி மக்களின் எழுச்சி. 500 ஆண்டுகள் கடந்து லத்தீன் அமெரிக்காவின் பழங்குடியினர் தங்களது உர்pமைகட்காகப் போராட ஆரம்பித்திருக்கின்றனர். அவை ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாற் பல நாடுகளில் அரசு மாற்றங்களும் அரசுகளின் இடதுசாரித்தன்மை போன்ற புரட்சிகர மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. 

நேபாளத்தில் ஏற்பட்ட மாற்றம் தென்னாசியாவின் 9/11க்குப் பிந்திய அரசியலை உள்வாங்கிக் கொள்ள உதவும். பத்து ஆண்டுக்கால மக்கள் யுத்தத்தின் விளைவாக மாஓவாதிகள் ஜனநாயக முறைப்படி ஆட்சியைக் கைப்பற்றினர். ஆட்சியைக் கொண்டு நடத்துவதில் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களும் அவற்றைத் தொடர்ந்து அவர்கட்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தடைகளும் (பின்பு ஆட்சிக் கவிழ்ப்பும்) இன்று நேபாளத்தில் உருவாகியுள்ள நெருக்கடியான நிலைமையும், 9/11க்குப் பின்னரான உலகில், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் எம்மாதிரியான சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ளப் போதுமானவை. 

யாரை நம்புவது, எதற்காக நம்புவது என்பனவற்றை விளங்கிக் கொள்ள மேற்கூறிய உலகநிகழ்வுகள் போதுமானவை என்பேன். அவற்றிலிருந்து எழும் இரண்டு அடிப்படையான கேள்விகள் சிந்தனைக்குரியன.
1.  விடுதலைப் போராட்ட இயக்கங்களில் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் எவை?
2.  9/11க்குப் பின்பான உலகில் எவ்வகையான அமைதியும் சமாதானமும் இயலுமானவை? 

இவ்விடத்து, இரண்டு முக்கியமான ஆவணங்களை கவனிக்கத் தக்கன. முதலாவது 9/11க்கு பினபான உலகில் பயங்கரவாதம் என்பது உலகளாவிய நிகழ்தன்மையுடையது (global phenomenon) என்று ஐ.நாவாற் கருதப்பட்ட நிலையில 2004ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட “More Secure World, Our Shared Responsibility” எனும் அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள இரு முக்கியமான பரிந்துரைகள்.
1. Ue of Force: Rules & Guidelines – வலுக்கட்டாயமான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குரிய சட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் அதை ஐ.நா. ஒழுங்கு படுத்துவதையும்; பற்றியது.
2. Peace keeping: Keeping peace by force – அமைதி காத்தலையும் வலுக்கட்டாயமாக அமைதி காத்தலையும்; பற்றியது. 

இவை, 2004ம் ஆண்டு ஐ.நாவின் அறிக்கையிலே எதிர்கால உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கான 12 பரிந்துரைகளில் இரண்டாகும். உலகில் இனி எம்மாதிரியான சமாதானம் இயலும் என்பதற்கு இவை எடுத்துக்காட்டுக்கள். 

இரண்டாவது முக்கிய ஆவணம் Centre for Strategic Studies, Association of the United States Army என்ற இரு அமைப்புக்கள் சேர்ந்து 2003இல் உருவாக்கிய ஆவணம். “வெல்வதற்கு விளையாடுதல்” (Play to Win) என்ற அழகானதும் கவர்ச்சியானதுமான தலைப்பையுடைய இந்த ஆவணம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கப் பல நாடுகளிலே பயன்பட்டது. இன்னமும் பயன்படுகிறது.
அந்த ஆவணத்தின் சாராம்சம் எதிரிகளைப் பந்தாடுவதைப் பற்றியது. எனவே, போரை ஒரு விளையாட்டாகக் கருதுவது முக்கியமாகிறது. ஆதன் அடிப்படையில் 2003ம் ஆண்டு Donald Rumsfeld ஈராக்குக்கு எதிராக போரிடும் அமெரிக்கப் படைகளிடையே பேசுகிற போது “உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் எப்போதும் விளையாட்டுக் களத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு எப்பொழுதும் இலாபமே மிஞ்சுகிறது. நீங்கள் செய்கிற கடமை ஒரு “TV game” விளையாடுவது மாதிரி” என்று கூறினார். “Play to Win” என்ற ஆவணத்திற் குறிப்பிட்டுள்ள முக்கியமான விடயம் அமெரிக்காவின் நலன்களைப் பொறுத்த வரை, தோல்வியடைந்த அரசுகள் முக்கியமானவை. ஆனால் எல்லாத் தோல்வியடைந்த அரசுகளும் முக்கியமானவை அல்ல. தோல்வியடைந்த அரசுகள் சிலவற்றைத் தோல்வியடைந்த அரசுகளாகவே வைத்திருப்பது முக்கியமானது. அதே நேரம், தோல்வியடைந்த நாடுகள் சிலவற்றை ஜனநாயகப்படுத்துவது அதைவிட முக்கியமானது. இது இந்த ஆவணத்தின் அடிப்படையில் முதலாவது முக்கியமான செயற்பாடு.
இரண்டாவதாக, உலகளாவிய அபிவிருத்தியிலே அமெரிக்காவும் அமெரிக்காவுக்குத் துணை நிற்கின்ற நாடுகளும், சண்டை நடக்கிற போதோ நடந்த பிறகோ தேசத்தைக் கட்டியெழுப்பல் (nation building) எனும் செயற்பாட்டிற் பங்கு பற்றக்கூடாது. அது அமெரிக்க அயலுறவுக் கொள்கைகளுக்குப் பாதகமாக அமையும். 

மேற்சொன்ன இரண்டு ஆவணங்களிலிருந்தும் 9/11க்குப் பின்னரான அமைதி எவ்வாறு அமையும் என்பதை எம்மால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள இயலும். 

இலங்கையில், 9/11க்குப் பிறகு 2002ம் ஆண்டு பெப்ரவர்p மாதம் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையின் பின்பு ஆறு பேச்சுவார்த்தைச் சுற்றுக்கள் நடைபெற்றன. அக் காலப்பகுதியில் இலங்கை மேலும் உலகமயமாக்கப்பட்டது, மேலும் தனியார்மயமாக்கப்பட்டது. அச் செயற்பாடு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையிற் “சர்வதேச சமூகம்” முற்றிலும் வேறு வகையான நடத்தையைக் கைக்கொண்டிருந்தது. உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பு, திட்டமிட்டே அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகையால் அவர்கள் அதிற் கலந்துகொள்ள முடியாது. இது தற்செயலானதல்ல. அப்போது அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராயிருந்த அஷ்லி வில்ஸ் (Ashley Wills) தெளிவாகவே ஒருமுறை கூறினார். “நாங்கள் எந்தப்பேச்சு வார்த்தைகளின் போதும் அவர்களோடு அமரவோ, கை குலுக்கவோ மாட்டோம்”. செய்திகள் இவ்வாறு தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வந்தன. 

ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தடைவிதிப்பு, அமெரிக்காவின் தடை நீடிப்பு போன்றவை, தனி நிகழ்வுகளாக நமக்குச் சொல்லப்பட்டுள்ளன. அதில் நாம் செய்திருக்கக் கூடியவை எவை, கவனித்திருக்கக் கூடியவை எவை என்பன ஒரு புறம் இருக்க, ஒரு அந்தத்தில் நின்று, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையிலான தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி அக் கோரிக்கை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதைப் பற்றி எவ்வித கணிப்புமற்று, அக் கோரிக்கை சம்பந்தமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டமை ஒரு விடயம். மறுபுறம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரான்சின் சகல தமிழ் அமைப்புக்களும் சேர்ந்து “வட்டுக்கோட்டைப் பிரகடனமே தமிழ் மக்களின் ஒரே தீர்வு. சர்வதேச சமூகம் அதைப் பெற்றுத் தரவேண்டும்” என்று சொல்லியமையும் நோர்வேயில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்து “தமிழ் மக்களுக்கான ஏகோபித்த இறுதித் தீர்வு வட்டுக்கோட்டைப் பிரகடனமே. அதன் அடிப்படையிலான தீர்வையே பெற்றுத்தர வேண்டும்” என்ற நிலைப்பாட்டை எடுத்தது இன்னொன்று. இரண்டிலும் கவனத்துக்குரிய விடயங்கள் சில இருக்கின்றன.
இன்னொன்று இஸ்ரேலைத் தமிழீழத்தோடு ஒப்பிடுதல் அடிக்கடி நடைபெறுகிறது. இஸ்ரேல் போன்றதொரு நாடுதான் சாத்தியம் என்றவாறான கருத்துக்கள் பலரால் முன்வைக்கப் படுகின்றன. சியோனிச விNhத இஸ்ரேலிய யூதரான மைக்கல் வார்ஷாவ்ஸ்கி (Michael Warschawski) எழுதிய “திறந்த கல்லறையை நோக்கி” (Toward an Open Tomb) என்ற நூலிற் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஒரு விடயத்தைத் இங்கு தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இஸ்ரேலிய சமூகம் எவ்வாறு நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் சரிக்கும் பிழைக்கும் வேறுபாடு தெரியாத சமூகமாகத் தனக்குள்ளே சீரழிந்திருக்கிறது என்பது பற்றி அந்த நூலிலே அவர் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அதாவது இஸ்ரேலிய சமூகம் இன்று சகல நியாய அநியாயங்கட்கும் அப்பால் தன்னை நிலைநாட்டுவதை அதி முக்கியமானதாகவும் பொதுமக்களில் எவரதும் நலன் சாராததுமான செயற்பாட்டைக் கொண்டிருக்கிறதையும், ஜனநாயகமும் அறஞ்சார்ந்த பார்வையுமற்ற சமூகமாகவும் எவ்வாறு இஸ்ரேல் மாறியிருக்கிறது என்பதையும் பற்றிச் சொல்லியிருக்கிறார். 

மறுபுறம் இஸ்ரேலினுடைய கொடுமைகளை நியாயப்படுத்தப் பலஸ்தீனத்தினப் பயங்கரவாதம் ஒரு வகையில் உதவுகிறது என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேல்pய  மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்கள் எவ்வாறு இஸ்ரேலினுடைய கொடூரத்தை நியாயப்படுத்த உதவுகின்றன என்பதும் கவனிக்க வேண்டியதாகும். அதே வேளை, இஸ்ரேலியத் தேர்தல்களின் போது, லெபனான் மீதான படையெடுப்பையும் 75,000 மக்கள் கொல்லப்பட்டதையும்; பற்றி எவ்வித அக்கறையுமற்று ஹிஸ்புல்லாவை தோற்கடிக்கத் தவறிமையும் இரண்டு படைவீரர்களை மீட்கத் தவறியமையுமே இஸ்ரேலிய அரசாங்கத்தின் மிகப்பெர்pய பிழைகளாக முன்வைக்கப்பட்டன. கொல்லப்பட்ட மக்கள் பற்றியோ அங்கு நடந்த மனித உர்pமை மீறல்கள் பற்றியோ அக்கறையற்ற சமூகமாகவே இஸ்ரேலிய சமூகம் இருந்திருக்கிறது. நூலின் முடிவுரையில் அவர் கூறியிருப்பது போல, பலஸ்தீன மக்களுக்கு நியாயம் கிடைக்கிறவரை இஸ்ரேல் என்கிற நாடு ஒரு அமைதியான நாடாக இருக்கப் போவதில்லை. இந்தச் செய்தி எமக்கும் பொருந்தி வரக்கூடியது. எவ்வளவுதான் மக்கள் வரலாற்றை உருவாக்கினாலும் நாம் மக்களின் வரலாற்றுப் பாத்திரத்தை மறக்கின்றபோது, தனி மனிதர்கள் மீதும் தனிமனித ஆளுமை மீதும் நம்பிக்கை வைக்கிறோம். சமூகப் பொறுப்புக்களைச் சிலரது கைகளிலே ஒப்படைத்துவிட்டு நாம் ஒதுங்கி நிற்கிற ஆபத்தான செயலைச் செய்ய விழைகிறோம். அதன் பலன்களையும் நாமின்று அனுபவியாமலில்லை. 

 விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அமெரிக்காவின் ஆதரவை நாடுவதும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற தீர்வை நாடுவதும் போன்ற விடயங்களின் தொடர்பாக, விடுதலைப் போராட்டங்கட்கு அமெரிக்க ஆதரவு எம்மாதிரி இருந்திருக்கிறது என்பது பற்றிச் சில விடயங்களை மட்டும் சொல்கிறேன். 

எரித்திரியாவின் உருவாக்கத்தை எடுத்துக் கொள்வோம். எத்தியோப்பியாவிலே ஹெய்லே செலாசீ (Haile Selassie) என்ற கொடுங்கோல் அரசனின் காலத்தில் எரித்திரியா மீதான பயங்கரமான எதியோப்பிய ஒடுக்குமுறையை அமெரிக்கா ஆதரித்தது. அந்த ஆட்சியைக் கவிழ்த்த ராணுவப் புரட்சியின் சிலகாலம் பின்பு வந்த மரியம் மெங்கிஸ்து (Mariam Mengistu) தலைமையிலான ஆட்சிக்கு முதலில் ஆதரவளித்த அமெரிக்கா, விரைவாகவே அவ்வாட்சி இடதுசாரிப் போக்கிற் போனதும், எதியோப்பிய ஒடுக்குமுறைக்கெதிராக எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது. அமெரிக்க ஆதரவு எதியோப்பிய ஆட்சி மாற்றம் பற்றியதே ஓழிய எரித்திரிய மக்களின் விடுதலை பற்றியதல்ல. எரித்திரிய சுதந்திரத்தின் பின்னர், எத்தியோப்பி யாவில் தனக்குச் சாதகமான ஆட்சியை உருவாக்கியுள்ள அமெரிக்கா, இரு நாடுகட்குமிடையே பிரச்சனை வந்த போது எத்தியோப்பியாவுக்குச் சார்பாக எரித்திரியாவின் மீது குண்டு வீசியது. இவ்வாறு, ஒரே நாளில் அமெரிக்க ஆதரவு பெற்ற விடுதலைப் போராட்ட இயக்கம் பயங்கரவாத இயக்கமாக மாறியது. 

 இன்னுமொரு உதாரணம், யுகோஸ்லாவியாவைப் பிரித்துச் சிதைத்து அதைத் துண்டுதுண்டாக்க அமெரிக்கா தேசியவாதத்தை வெற்றிகரமாகக் கையாண்டது. இன்று யுகோஸ்லாவியா ஏழு நாடுகளாகவும் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகவும் துண்டாடப்பட்டுச் சிதைந்து போயுள்ளது. யுகோஸ்லாவியாவில் இருந்த சேர்பிய, குறொவேஷிய, பொஸ்னிய முஸ்லிம், ஸ்லொவீனிய, மசிடோனிய, மொண்டிநெக்ரெ, அல்பேனிய மக்கள் பிளவுபட்டனர். மக்களைப் பிரித்துத் துண்டாடத் தேசியவாதத்தை எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு யுகோஸ்லாவியாவை விட சிறந்த எடுத்துக்காட்டு இல்லை. தனது தேவைகட்காகக் கொசோவா போன்ற நாட்டை உருவாக்க அமெரிக்கா தயங்காது. அமெரிக்கா ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உர்pமையை என்றும் ஆதர்pத்ததுமில்லை ஏற்றதுமில்லை. இது முக்கியமானதும் கவனிப்புக்குரியதுமாகும். 

நேபாள மாஓவாதித் தலைவர் பிரசண்டா அண்மையிற் சொன்னது போல “இந்த நூற்றாண்டில் மையமான பிரச்சனை சனநாயகம் பற்றியது. மக்கள் தங்கள் வாழ்வின் மீதும், தங்கள் வளர்ச்சி மீதும் முழுமையான ஆளுமையைச் செலுத்துவதுதான் ஜனநாயகம்”. 

ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைப் போராட்டம் விடுதலைக்கும் ஜனநாயகத்துக்குமானது. அதன் வெற்றி போராளிகளின் ஆயுதங்களில் மட்டுமல்லாது ஒடுக்குமுறை யாரின் பாதுகாப்பின் பெயரால் நடக்கிறதோ அந்த மக்களின் நடுவே உள்ள ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது. முதலாளித்துவம் ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அப்பட்டமான அடக்குமுறையை ஏவிவிடும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது அதற்கான புதிய வழிகளையும் நியாயங்களையும் தேடுகிறது. 9/11இன் பின்னரான உலக ஒழுங்கில் அது தன்னை அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது. மக்கள் அதற்கெதிராக அணிதிரள்வதும் போராடுவதும் தவிர்க்க இயலாதன. 

***** 

  
 

 

நீதி வழங்கப்படுகிறது

Tuesday, January 26th, 2010

ஓமர் பா
(Omar Ba, Mauritania)

உதைக்கப்பட்டுப்
பொருட்கள் களவாடப்பட்டு
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாய்?
அப்படியாயின் சாட்சிகள்?

மண்ணின் துணிக்கைகள் எத்தனையோ
அத்தனை.
காடியெல் ஒருவன்
ந்டுல்லா
ந்டியாம்nடீலே ஒருவன்
பறவைகள் கூடச் சாட்சி சொல்லும்….

என்றாலும்
குடித் தலைவன்
நீதவானாகத் தன் மகனையும்
மொழி பெயர்ப்பாளனாக மருமகனையும்
வைத்திருப்பதை மறந்து விட்டாய்

(நன்றி: “பணிதல் மறந்தவர்”
தேசிய கலை இலக்கியப் பேரவை & சவுத் ஏசியன் புக்ஸ், 1993)

வெளிச்சம்

Tuesday, January 26th, 2010

முருகையன்

வீடு முற்றும் இருட்டு மண்டிக் கிடக்கும் வேளை
விஷப் பூச்சி புழுக்களுடன் சிலந்தி பாம்பும்
ஓடியங்கு விளையாடித் திரிதல் கூடும்.
ஓளி கிடைத்தால் அவற்றையெல்லாம் ஒழித்தல் கூடும்.

நாடு முற்றும் இருட்டு மண்டிக் கிடக்குமானால்
ஞாயசபை நு}றிருந்தும் நன்மை உண்டோ?
கேடுகெட்ட அறியாமை இருள் நீங்காமல்
கிடைக்குமோ மருந்துக்கும் நீதி ஏதும்?

கண்ணாடி புகைமூடிக் கறுத்திருந்தால்
கட்டாயம் விளக்கின் ஒளி மங்கும் தானே!
சுண்ணாம்பு பூசி அதைத் துடைக்க வேண்டும்
சுத்தமாய் துப்புரவாய் – வெளிச்சம் கூடும்.

தண்ணீரிற் படர்ந்திருக்கும் பாசி நீக்கிச்
சரிசெய்தால் அல்லவோ து}ய்மை தோன்றும்.
கல்லாமை என்கின்ற புகையை ஊதக்
கனல் வீசி ஒளி பிறக்கும். கல்வி மூளும்.

கல்வியினை மூட்டுகிற உபாத்தியாயர்
கட்டாயம் அறிஞராய் இருக்க வேண்டும்.
பல்லுடைக்கும் பழம் பாட்டின் கருத்துச் சொல்லப்
பழகிவைத்த படிப்பு மட்டம் போதாதன்றோ!

புல்லு நுனி பூப்போல மொட்டவிழ்க்கும்
புதுப்பாட்டடின் அருமைகளும் அறிதல் வேண்டும்
வில்லெறியும் அம்பைப் போல் இலக்கைத் தாக்கும்
விசையான சொல்லாற்றல் மிகவும் வேண்டும்

கணக்கறிந்து தொழில் நுட்பம் அறிந்து
சொந்தக் கைவினையின் திறனடைந்து
கலங்கி நிற்கும் உணர்ச்சிகளைத் தெளிவித்து
வாய்க்கால் கட்டி ஓடவைக்கும் விஞ்ஞானத்தை
பிணக்குகளுக்காக அன்றி அமைதிக்காகப்
பேணுமொரு மனப்பான்மைப் பேறடைந்து
மணக்கின்ற கலைச் சுவைகள் வளர வைக்கும்
வாய்ப்புடைய அறிஞர்களே உபாத்தியாயர்.

கிளிப்பிள்ளைப் பாடத்தால் நன்மை என்ன?
கேள்விகளைச் சரியாகக் கேட்டால் தானே
துளிப் பிiழையும் இல்லாத விடை கிடைக்கும்
து}ண்டினால் அல்லவோ துலக்கம் தோன்றும்.

வழிப்படுத்தத் தெரிந்தவர் தான் உபாத்தியாயர்.
மாணவர்கள் அந்த வழி நடக்க வேண்டும்.
விளக்குப்போல் ஆசிரியர் இருப்பாரானால்
விளக்குகளாய் மாணவரும் ஒளி விடாரோ?

1981
(நன்றி: “நாங்கள் மனிதர்”
தேசிய கலை இலக்கியப் பேரவை & சவுத் ஏசியன் புக்ஸ், 1992)