Archive for the ‘இதழ் 3’ Category

செம்பதாகை மீண்டும் எழுகிறது

Tuesday, January 26th, 2010

புதிய-ஜனநாயகக் கட்சி இலங்கைக் கம்யூனிஸ்ற்கட்சி (இடது) என்ற பேரில் 1978ம் ஆண்டின் நடுப் பகுதியில் நிறுவப்பட்டது. அதன் தமிழ் மாத ஏடாகச் ‘செம்பதாகை’ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. 1989ம் ஆண்டிலிருந்து “புதிய பூமி” அதன் வெகுஜன மாத ஏடாக வெளிவந்தது. செம்பதாகையை அதன் அரசியற் தத்துவார்த்தக் ஆக்கங்கட்கான ஏடாக வெளியிட முடிவெடுக்கப்பட்டது. 1991ல் நமது கட்சி தனது பேரைப் புதிய-ஜனநாயகக் கட்சி என்று மாற்றியது.

1980களின் போது, யாழ் குடாநாட்டுச் சூழ்நிலைகள் துரிதமாக மோசமடைந்தன. அதன் பயனாக, அங்கிருந்து வெளிவெளியாக இடதுசாரி அரசியற் பணிகளை மட்டுமன்றிக் குறிப்பிட்ட ஒரு வகையான தமிழ்த் தேசியவாதந் தவிர்ந்த தமிழ்த் தேசியவாத அரசியற் பணிகளையுமே மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்கச் சார்புக் கெடுபிடிகளை ஓருபுறமும் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகளை மறுபுறமுஞ் சமாளித்தே நிலைத்துவந்த புதிய-ஜனநாயகக் கட்சி, இன்று வரை, எந்தத் தரப்பிற்கும் விட்டுக்கொடுப்பின்றிச் செயற்பட்டு வந்துள்ளது. பலவாறான வெளி இடைஞ்சல்களாலும் நிதி நெருக்கடிகளாலும் புதிய பூமியை மட்டுமே நமது கட்சியால் இடைவிட்டேனும் வெளியிடக் கூடியதாய் இருந்தது. செம்பதாகையை மூன்று இதழ்களுடன் நிறுத்த நேர்ந்தது.
1995ம் ஆண்டளவிற் புதிய பூமி கொழும்பிலிருந்து ஓரளவு ஒழுங்காக வெளிவரத் தொடங்கிய பின்னர், தமிழரல்லாதோரை எட்டும் நோக்கில், 1999ம் ஆண்டு முதலாகக், கட்சியின் ஆங்கிலக் காலாண்டு ஏடாக “நியூ டெமோகிரஸி” (New Democrecy) வெளிவரத் தொடங்கியது. நின்று போன செம்பதாகையிற் போன்று முக்கியமான அரசியற் தத்துவார்த்தக் கட்டுரைகள் அதிற் பிரசுரமாயின. அது போல ஒரு ஏடு தமிழிலுந் தேவை என்று சில ஆண்டுகள் முன்னம் பலர் கருத்துத் தெரிவித்த போதும், நிதி நிலைமைகள் அதற்கு ஏதுவாக இருக்கவில்லை.

புதிய-ஜனநாயகக் கட்சியின் இணையத்தளம் 2006ம் ஆண்டு தொடக்கப்பட்ட பின்பு,  நியூ டெமொக்றஸியினதும் புதிய பூமியினதும் இணையத்தளப் பதிப்புக்கள் அதில் வெளிவந்தன. அவற்றுக்குக் கிடைத்து வந்துள்ள வரவேற்பின் அடிப்படையிலேயே செம்பதாகையை ஒரு இணையத்தள ஏடாகத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இந்த அறிமுக இதழை அடுத்துச் செம்பதாகை பல்வேறு சமூக, அரசியல், தத்துவார்த்த விடயங்களையும் உலக நிகழ்வுகளையும் உள்ளடக்கி வெளிவரும்.

பிரதான முரண்பாடான தேசிய முரண்பாடு போராக மாறி 26 ஆண்டுகளின் பின்பு, அப் போர் கொடுமையான ஒரு முடிவைக் கண்டுள்ளது. போரின் முடிவு தேசிய முரண்பாட்டை மேலுந் தீவிரப்படுத்தியுள்ளதே ஒழியத் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வைத் தேட வழி காட்டவில்லை. போராற் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவலமோ சொல்லி மாளாதது. போரின் இறுதிக் கட்டங்களிற் கொல்லப்பட்டோர் தொகை 30,000 அளவிலெனப் பலராலும் மதிப்பிடப்பட்டுள்ள போதும் இறந்தோரின் எண்ணிக்கை அறியப் படாமலே உள்ளது. விடுதலைப் புலிகளின் தரப்பிலும் அரசாங்கப் படைகளின் தரப்பிலும் இறந்தோர் தொகைகள் அறிவிக்கப் படாமலே உள்ளன. முட்கம்பி வேலிகளின் பின்னால் ஏறத்தாழ 300,000 பேர் மறித்து வைக்கப் பட்டுள்ளனர்.

அங்கவீனமானோரின் தொகை 30,000 வரையிலென மதிப்பிடப் பட்டுள்ளது. அகதி முகாங்களில் வாழ்வோர் இயற்கையின் சீற்றத்துக்கு முகங் கொடுத்து முதலில் வெய்யிலிலும் பின்பு கடும் மழை வெள்ளத்திலும் அடிப்படைச் சுகாதார வசதிகள் இன்றியும் பலவிதமான பற்றாக்குறைகளின் இடையிலும் அல்லற்பட்டு அடிமை வாழ்வு வாழுகின்றனர். போரால் விளைந்த அவலத்தினிடையே, போர் வெற்றிக் களிப்பிலுள்ள அரசாங்கம் அவர்களை விடுவித்து இயல்பு வாழ்வுக்கு மீட்க அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியவாதிகள் உட்பட்ட பிற அரசியற் கட்சிகளும் இவ் விடயத்தைப் போதியளவு வற்புறுத்திப் பேசுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாண மாநகர மக்களும் வவுனியா நகர மக்களும் கடந்த தேர்தலில் தமது எதிர்ப்பைப் புறக்கணிப்பாகக் காட்டிய பின்னரே தமிழ்த் தலைவர்கள் சிலர் மறித்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுவிப்பது பற்றிச் சிறிது பேசுகின்றனர். எனினும் எதையுஞ் செயலில் நடத்த அவர்கள் ஆயத்தமாக இல்லை. அவர்கள் இன்னமும் தமிழரின் சார்பாகக் குறுக்கிடுமாறு அந்நிய நாடுகளைத் துண்டலாம் என்ற நப்பாசையில் இருக்கின்றனர். தனக்கு எதிராக எழக்கூடிய எந்தப் பாரிய சவாலையும் அகற்றுவதில் அரசாங்கந் தீவிரமாக உள்ளது. மனித உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் தொழிற் சங்கங்களும் பிற வெகுஜன அமைப்புக்களும் கடும் ஒடுக்குமுறையை எதிர்நோக்குகின்றன. போரின் விளைவாக மக்கள் முகங்கொடுக்க நேரும் அரசியற், பொருளாதார யதார்த்தங்களின் விளைவாகத் துரித வளர்ச்சி பெறக்கூடிய சிங்கள இடதுசாரிப் போக்குப் பற்றியும் அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத விரோதச் சட்டங்களின் கீழுஞ், சிறையிலிடல் உட்பட்ட தொல்லைகளை அது பயன்படுத்துகிறது. 2002ம் ஆண்டின் போர் நிறுத்தத்திற்குப் பின்பான சற்று நெகிழ்வான அரசியற் சூழலின் புதிய-ஜனநாயகக் கட்சியாற் கூடிய தெலைவுகளை எட்டக் கூடியதாக இருந்தது. புதிய நட்புச் சக்திகளைப் பெற முடிந்தது.

2006ல் போர் மும்முரமாக்கப்பட்ட பின்பான பெருமளவும் ஜனநாயகமற்ற சூழலிற், கட்சித் தோழர்களும் சிங்கள இடதுசாரிகளும்; எதுவித நியாயமுமின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் தொடர்ந்தும் மறியலில் வைக்கப் பட்டுள்ளனர். நாட்டில் ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் மனித உரிமைகளுங் கடும் தெருக்கடியை எதிர் நோக்குகின்றன. தேசிய இன ஒடுக்கல் முன்னிலும் மோசமாகும் வாய்ப்பு வலுப்பட்டுள்ளது. பேரினவாதிகள் சகல தேசிய இனத்தவரிடமும் இன்று வலுச்சண்டைக்குப் போகுமளவுக்கு நிலைமைகள் மோசமாகி வருகையிற், தேசிய இனப் பிரச்சனையின் அமைதியான தீர்வுக்கான வாய்ப்புக்கள் குறைகின்றன. கடந்த காலத்திற் தேசிய இனப் பிரச்சனை போராகியதற்கு அந்நியக் குறுக்கீடுகள் பங்களித்தன. பலவாறான காரணங்களைக் காட்டி ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய மேலாதிக்கச் சக்திகளும் ஊடுருவிக் குறுக்கிடும் வாய்ப்பு இன்று அதிகமாகி உள்ளது. மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், ஜனநாயகம், தேசிய இன உரிமைகள் என்பன மீறப்படுதலைப் பற்றி மேலை நாடுகள் இடையிடையே விமர்சித்தாலும், அதைப் பற்றி அவை எதையுமே செய்யப் போவதில்லை. ஏகாதிபத்திய உலகமயமாக்கலை மறுத்துச் செயற்படுவதை மட்டுமே அவை ஏற்க மாட்டா. இவ் விடயத்தில் இலங்கை அரசாங்கமும் அவற்றின் ஆணையை மீறாது. சர்வதேச நாணய நிதியத்திடம் 260 கோடி டொலர் கடனாகப் பெறுவதற்கான உடன்பாடு அதற்குச் சான்று. இப் பின்னணியில், இடதுசாரிகள் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. நாட்டின் பிரதான முரண்பாடாகத் தெடரும் தேசிய இனப் பிரச்சனையை அந்நியத் தலையீட்டுக்காரர் தமக்கு வாய்ப்பாக மீண்டும் பயன்படுத்தாதபடி அதைப் புதிய பார்வையில் நோக்கி நாட்டின் ஊடக, கருத்துச் சுதந்திரங்களையும் ஜனநாயக, மனித உரிமைகளையும் மட்டுமன்றி மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் மீட்க ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. மேற்கூறிய உடனடித் தேவையை முன்வைத்தே செம்பதாகை தனது சமூக-அரசியல்-தத்துவார்த்த ஆய்வுகளை விரிவாக முன்னெடுக்கும். செம்பதாகையை அச்சு வடிவிற் கொண்டுவரும் நமது இலக்கை விரைவில் நனவாக்கச், செம்பதாகை வாசகர்களும் புதிய-ஜனநாயகக் கட்சியின் நண்பர்களும் உதவுவார்களென நம்புகிறோம்.

போருக்குப் பிந்திய இலங்கையின் பிரதான முரண்பாடு

Tuesday, January 26th, 2010

1980கள் அளவிற் தேசிய இனப் பிரச்சனை இலங்கையின் பிரதான முரண்பாடாக விருத்தி பெற்றுவிட்டதாக இலங்கையின் மாக்ஸிய லெனினியவாதிகள் கருதுகின்றனர். அது, அப்பட்டமான பேரினவாத ஒடுக்குமுறையாகவும் ஈற்றிற் தேசிய இன ஒடுக்குமுறைப் போராகவும் வடிவங் கண்டது. 1978இன் திறந்த பொருளாதாரக் கொள்கையால் இலங்கை ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுண்டது. அதன் விளைவான சமூகப், பொருளாதாரப் பிரச்சனைகளினின்று கவனத்தைத் திருப்பும் வாய்ப்பைத் தேசிய இனப் பிரச்சனையிற் கண்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பிற்போக்குவாதிகள், அதைப் போராக்கி உச்சப் படுத்துவதற்கு ஊக்கமளித்தனர்.
அரச ஆதரவுடைய தேசிய ஒடுக்குமுறை 1977இல் தமிழர் விரோத வன்முறையாக அடையாளப்பட்டு மூன்று தசாப்தங்களும் தேசிய முரண்பாடு போராக மாறி 26 ஆண்டுகளும் போன பின்பு, ஆயுத முரண்பாடு கொடுமையான ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது. ஜே.வி.பியின் 1971, 1987-89 எழுச்சிகளின் போதிற் போன்று, இப் போரில் இறந்தோரின் எண்ணிக்கையும் அறியப்படாமலே உள்ளது. எனினும் இதன் அவலம், அவற்றினதினும் அளவிற் பெரிது. குறிப்பாகப், போரின் இறுதிக் கட்டங்களிற் கொல்லப் பட்டோரின் தொகை, ஐ.நா. சபையின் குறைந்தளவு மதிப்பீடான 8000க்கும் பிற மதிப்பீடுகளின் படியிலான 30,000க்கும் அரசாங்கங் கூறும் சில நு}றுகட்குமிடையே வேறுபடும் அளவுகளில் மதிப்பிடப் பட்டுள்ளது.
இக் கால இடைவெளியில் இடம் பெயர்ந்தோரின் தொகை ஏறத்தாழ. 250,000. அதன் மூலம் முட்கம்பி வேலிகளின் பின்னால் அகதி முகாங்களில் மறித்து வைக்கப் பட்டுள்ளவர்களின் தொகை ஏறத்தாழ. 300,000 ஆகிறது. அங்கவீனமானோரின் தொகை 20,000க்கும் 30,000க்கும் இடையிலென மதிப்பிடப் பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தரப்பிலும் அரசாங்கப் படைகளின் தரப்பிலும் இறந்தோர் தொகை அறிவிக்கப்படாமலே உள்ளது. அது போரின் இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ளக் கூடியதினும் மிக அதிகமாகவே இருக்கும்.
போரால் விளைந்த அவலத்தினிடையே, அரசாங்கம் வெற்றிக் களிப்பிலுள்ளது. ஜனாதிபதியும் அரசாங்கத்தின் முதன்மைப் பேச்சாளர்களும் அரசாங்கத்தினது பேரினவாதக் கூட்டாளிகளும் சொல்லுகிறவற்றின் படி: போர் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்த்துவிட்டது. இனி இலங்கையிற் சிறுபான்மைத் தேசிய இனங்களில்லை. சிங்கள பௌத்த ஸ்ரீ லங்கா அரசினுட் சகித்துக் கொள்ளக்கூடிய சிறுபான்மையினர் இருக்கலாம்.
தமிழரிடையே நிர்க்கதியான ஒரு மனநிலை உள்ளது. தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் திசையறியாது தவிப்பதாய்த் தெரிகிறது. இன்னமும் இந்தியாவையோ சர்வதேசச் சமூகத்தையோ தமிழரின் சார்பாகக் குறுக்கிடுமாறு செய்விக்கலாம் என்று தமிழர்க்கு நம்பிக்கையூட்ட வேண்டி அவர்கள் நப்பாசைகளிற் தொற்றிக் கிடக்கின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழரிடையே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அதிர்சிக்கு உட்பட்ட நிலையிலுள்ளனர். அவர்களிற் கணிசமானோருக்கு விடுதலைப் புலிகளின் தலைவரது சாவை ஏற்க இயலாதுள்ளது. விடுதலைப் புலி ஆதரவு மேட்டுக்குடிகள் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ ஒன்றை நிறுவுவது உட்பட்ட பெருந் திட்டங்களை முன்வைக்கிறார்கள். அவர்களிற் பலர் இலங்கையிற் போரிற் கொல்லப்பட்டும் நிர்க்கதியாக்கப்பட்டும் இடம் பெயர்க்கப்பட்டுமுள்ள லட்சக் கணக்கானோரைப் பற்றி அற்ப அக்கறையையேனுங் காட்டியவர்களல்ல. அம் மக்களிற் பலரது சனநாயக உரிமைகளும் மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் அன்றாடம் மீறப் படுகின்றன.
புலம்பெயர்ந்த தமிழரிடையே உண்மையான அக்கறையுள்ள பலர் உள்ளனர். ஆனால் இந்த உடனடிப் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி என்பதிற் திசை தெரியாமலும் தலைமைத்துவம் இன்றியும் உள்ளனர். அதே வேளை புலம்பெயர்ந்த தமிழரிடையே தமது அகச்சார்பான காரணங்கட்காக விடுதலைப் புலிகளே பிரதான எதிரிகள் எனவும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தால் மட்டுமே தமிழர்க்கு விடுதலையுஞ் சுபீட்சமுங் கிட்டும் என்று சொல்லி வந்த ஒரு சிறு பகுதியினர்; உள்ளனர். அவர்களும் விடுதலைப் புலிகளின் தோல்வியாற் குழம்பிப் போயுள்ளனர். எவ்வாறாயினும், போராற் பாதிக்கப்பட்டோரின் நிலையை அறிந்தும், தமது சுயலாபத்துக்காகவும் வெறுங் கசப்புணர்வாலும் அரசாங்கத்துக்கு ஆதரவாக நிற்போர் சிலரும் உள்ளனர்.
அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்த தமிழ்த் தேசியவாதக் குழுக்களுங் கட்சிகளும் இப்போது ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. தனது அதிகாரத்தைக் கெட்டிப்படுத்துவதில் உள்ள தீவிரங் காரணமாக, அரசாங்கம், தனது சிறுபான்மைத் தேசிய இனக் கூட்டாளிக் கட்சிகளை ஆளுங் கூட்டணியின் தேர்தற் சின்னத்தின் கீழ்த் தேர்தலில் நிற்குமாறு வற்புறுத்தித் தமது அடையாளங்களை மறுதலிக்குமாறு செய்வதில் வெற்றி கண்டுள்ளது. அரசாங்கத்துடன் சேராத கட்சிகள் யூ.என்.பியுடன் தம்மை அடையாளப் படுத்தும்படி நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளன. அதற்கு முஸ்லிம் காங்கிரஸ{ம் தமிழர் தேசியக் கூட்டணியுமே விலக்காயுள்ளன. இரண்டுமே கடந்த நான்காண்டுகளில் தேர்தல் அரசியலிற் கணிசமாக வலிமை குன்றியுள்ளன. அரசாங்கத்துடன்; தோழமை கொண்ட தமிழ்த் தேசியவாத அமைப்புக்கள் ஆளுங் கூட்டணியின் தேர்தற் சின்னத்தினின்று வேறுபட்ட சின்னங்களின் கீழ்ப் போட்டியிட்டன. கொள்கையோ நியாயங்களோ அதன் அடிப்படையல்ல. மாறாகப், பிற குழுக்களுடனான போட்டியும் ஆசன ஒதுக்கீடு பற்றிய உடன்பாடின்மையுமே அதற்கான காரணங்கள்.
தனது அதிகாரத்துக்கு இருக்கக்கூடிய எந்தப் பாரிய சவாலையும் நீக்குவதில் அரசாங்கம் மிகவுந் தீவிரமாக உள்ளது. யூ.என்.பியினுள்ளும் ஜே.வி.பியினுள்ளும் இருக்குங் குழப்பநிலை அதன் முயற்சிக்கு உதவியுள்ளது. இடதுசாரிகளை ஓரங்கட்டும் முயற்சிகளில் ஊடகங்களும் ஒத்துழைப்பதாற் சிங்கள அரசியல் என்பது முற்றிலுஞ் சிங்களப் பேரினவாத அரசியலே எனவும் நம்பகத்தன்மை தெட்டுப்போன ஜே.வி.பி. மட்டுமே ‘இடதுசாரி’ மாற்று எனவும் ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டுள்ளது.
உண்மை நிலை ஏதெனின், போரின் விளைவாக மக்கள் முகங்கொடுக்க நேரும் அரசியற், பொருளாதார யதார்த்தங்களின் விளைவாகப், போரின் பின்பு துரித வளர்ச்சி பெறக்கூடிய சிங்கள இடதுசாரிப் போக்கு உருவாகியுள்ளது என்பது தான். அதை விடவும், போர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் இடம் பெயர்ந்தோரும் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களும் நடத்தப்படும் விதம் பற்றியும் வெறுப்புற்றவர்களது தொகை பெருகி வருகிறது. இடதுசாரித் தரப்பினின்று வரக்கூடிய மாற்றுக் கருத்துக்களை மௌனப்படுத்த, அவசர காலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத விரோதச் சட்டங்களின் கீழுஞ், சிறையிலிடல் உட்பட்ட தொல்லைகள் பயன்படுத்தப் படுகின்றன.

தேசிய இனப் பிரச்சனையின் நிலை பற்றிய மறு-மதிப்பீடு

தேசிய இனப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை இடதுசாரிகள் பல தசாப்தங்களின் முன்னரே அடையாளங் கண்டிருந்தனர். எனினும் 1960களின் முற்பகுதியில் இடதுசாரி இயக்கத்தினுள் மிக வலுவானவர்களாக வளர்ந்துவிட்ட பாராளுமன்ற இடதுசாரிகள் சந்தர்ப்பவாத நோக்கங்கட்காகத் தேசிய இனப் பிரச்சனை பற்றிய இடதுசாரி நிலைப்பாட்டிற் சமரசஞ் செய்துகொண்டனர். எனினும் நேர்மையான இடதுசாரிகள் தேசிய இனப் பிரச்சனை பற்றிய தமது நியாயமான நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதோடு, அது இலங்கையின் பிரதான முரண்பாடாக விருத்தி பெற்று வந்ததையும் அடையாளங் கண்டனர். முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான அரசியற் கட்சிகள் அடையாளங் காண முன்பே, புதிய-ஜனநாயகக் கட்சி அம் மக்;களைத் தேசிய அபிலாட்சைகளைக் கொண்ட தனித்துவமான தேசிய இனங்களாக அடையாளங் கண்டு கொண்டது.

தேசிய இனப் பிரச்சனையே இலங்கையின் பிரதான முரண்பாடென்று முதலிலேயே அடையாளங் கண்டுவிட்ட புதிய-ஜனநாயகக் கட்சி, தேசிய இனப் பிரச்சனையின் தீர்வு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மேலுஞ், சுயநிர்ணய உரிமை எனும் நியதி அதன் முழு மெய்ப்பொருளிற் பிற தேசிய சிறுபான்மையினரது அபிலாட்சைகளைக் கையாள்வதற்கும் பயன்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. தேசிய இனப் பிரச்சனையை அவ்வாறு காணாத பிற நேர்மையான இடதுசாரிகளும் அது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துக்கும் ஜனநாயக, மனித உரிமைப் போராட்டங்கட்கும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியவாறு, சிங்களப் பேரினவாதிகளால் மறுக்கப்பட்டன. புpரச்சனை கூர்மையடையத் தொடங்கிய 1950களின் நடுப்பகுதி தொட்டே, தமிழ்த் தரப்புக் கோரிக்கை கூட்டாட்சிக்கானதாக இருந்த வேளையிலும், தமிழரின் கோரிக்கைகளை இனவாதப், பிரிவினைவாதக் கோரிக்கைகளாக முத்திரை குத்தும் போக்கு இருந்து வந்தது. ஆயுத ஒடுக்குமுறையாகவும் போராகவும் முரண்பாடு வளர்ந்த நிலையிலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போதும், சிங்களத் தேசியவாதக் கட்சிகள், பயங்கரவாதத்துக்குஞ் சிங்களத் தேசிய இனத்துக்கும் இடையிலானதாகவே முரண்பாட்டைச் சித்தரித்தனர். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த கால இடைவெளியில், விடுதலைப் புலிகளைக் குறிக்கப் ‘பயங்கரவாதிகள்’ என்ற பதம் பெரிதுந் தவிர்க்கப் பட்டது. அரசாங்கம் 2006ஆம் ஆண்டு போரை மீளத் தொடங்கியதோடு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அப் பதத்தை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கின.

சிலர்;, பேரினவாதிகளைப் போலன்றிப், பிரச்சனை இருப்பதைச்; ஏற்றுக்கொண்ட போதும், சிறுபான்மையினருக்குச் சலுகைகள் வழங்குவது போன்ற ஒட்டு வேலைகளால் அதைத் தீர்க்க இயலும் என்கின்றனர். கடந்த காலத்திற் பிரச்சனைக்குத் தீர்வு தேடுவதில் பெருமளவுந் தோல்வியுற்ற இந்த அணுகுமுறை, தாராளவாதிகளிடையிலும் பழைய இடதுசாரிகளிற் சில பிரிவினரிடையிலும் பலவாறான சந்தர்ப்பவாதிகளிடையிலும் இன்னமுஞ் செல்வாக்குடையதாகவே உள்ளது.

தேசிய இனப் பிரச்சனையை ஆராயும் போலி மாக்ஸியவாதிகள் சிலர்;, தேசிய இனப் பிரச்சனையைப் பிரதான முரண்பாடாகக் கொள்வது சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான முரண்பாட்டை (சிலரது பார்வையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகட்குமிடையிலான முரண்பாட்டை) பிரதான முரண்பாடாக்குவதர்கும் என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர். அதை வற்புறுத்த, வர்க்கப் போராட்டம் பற்றிய வரட்டு வியாக்கியானங்களின் அடிப்படையிலான வாதங்களையோ பயன் நாடும் நோக்கங்களையோ பயன்படுத்தியுள்ளனர்.

மேற் சொன்னவாறான மறுப்புக்கள், இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையைப் பிற தேசிய இனங்கள் தவிர்ந்து சிங்களவருக்குந் தமிழருக்கும் இடையிலான மோதலாக வியாக்கியானஞ் செய்வதன் அடிப்படையிலானவை. சிங்களப் பேரினவாதத்தினதும் தமிழரிடையிலும் பிற தேசிய இனங்களிடையிலும் உள்ள குறுந் தேசியவாதத்தினதும் விருத்தியின் தளமாயுள்ள வர்க்க நலன்களை அவை புறக்கணிக்கின்றன.

தேசிய இனப் பிரச்சனையே பிரதான முரண்பாடு என்ற முடிவை வந்தடைவதற்கு, இலங்கையின் மாக்ஸிய-லெனினியவாதிகள், வர்க்க நலன்களினதும் வர்க்கப் போராட்டத்தினதும் பங்கையும் வர்க்க முரண்பாட்டின் அடிப்படைத் தன்மையையும் புறக்கணிக்கவில்லை. அவர்களது முடிவு, மக்கள் மத்தியிலான முரண்பாடான தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு ஆளும் வர்க்க நலன்கள் தமக்கு வாய்ப்பாக்கி; அதை இன ஓடுக்குமுறையாகவும் பகை முரண்பாடாகவும் முடிவிற் போராகவும் மாற்றின என்பதன் கவனமான ஆய்வின் வழியிலானது. இன முரண்பாடு போராக வளர்வதற்கு வெகு காலம் முன்பே, தேசிய இனங்களின் இடையிலான முரண்பாடுகளைக் கூர்மைப் படுத்துவதில் ஏகாதிபத்தியத்தினதும் பிராந்திய மேலாதிக்கத்தினதும் பங்கைக் கணிப்பிற் கொண்டதன் மூலம் அம் முடிவு எட்டப்பட்டது.

மாக்ஸிய-லெனினியவாதிகள் என்றுமே தேசிய இனப் பிரச்சனையைச் சிங்கள, தமிழ்த் தேசிய இனங்களிடையிலான முரண்பாடாக முன்வைக்கவில்லை. மரறாக, அவர்கள், அதைப் பகைமையற்ற முரண்பாடாக அல்லாது, பல நு}ற்றாண்டுக் காலமாகப் பல தேசிய இனங்களும் உறவாடி, ஒன்றால் ஓன்று பயனடைந்த சினேக முரண்பாடாகவே கண்டனர். லாபத்துக்கும் ஆதிக்கத்துக்குமாக ஆளும் மேட்டுக்குடி வர்க்க நலன்களிடையே இருந்து வந்த போட்டியின் விளைவாகவே தேசிய இன முரண்பாட்டின் இன்றைய வடிவை அவர்கள் கண்டனர். நெருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்ப்பதிற் தோல்வி கண்டதனாலேயே தேசிய முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி பேரினவாதத்திலும் சிறுபான்மையினர் மத்தியிலான மற்றொரு பகுதி குறுந் தேசியவாதத்திலும் புகலிடந் தேட நேர்ந்தது.

ஆயுத ஒடுக்குமுறைக்கு உட்படும் மக்கள் தம்மை ஆயுதங்களாற் பாதுகாக்கும் உரிமையை மாக்ஸிய-லெனினியவாதிகள் ஏற்ற போதும், தேசிய இனப் பிரச்சனையைப் போராற் தீர்க்க இயலாது என உறுதியாக நம்புகின்றனர். தேசிய இனப் பிரச்சனைக்கு அமைதியான தீர்வொன்றைக் காணுந் தேவை இருக்கையிற், பேரினவாத ஒடுக்குமுறையாளனுக்கும் ஒடுக்குமுறையாளன் பிரதிநிதித்துவஞ் செய்வதாகக் கூறுந் தேசிய இனத்துக்கும் இடையே வேறுபாடு காணுந் தேவை ஒடுக்கப்படுந் தேசிய இனத்துக்கு உள்ளது. அவ்வாறே ஒடுக்கப்படுந் தேசிய இனத்தவரது நலன்கட்கும் அவர்களிடையிலுள்ள மேட்டுக்குடி வர்க்கத்தினரது நலன்கட்கும் இடையே வேறுபாடு காணுந் தேவை பெரும்பான்மைத் தேசிய இனத்துக்கு உண்டு. இந்த நிலைப்பாட்டை மாக்ஸிய-லெனினியவாதிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

தேசிய இனப் பிரச்சனையைச் சரியாகக் கையாள்வதற்குத், தேசிய இன முரண்பாட்டைத் தமது நலன்கட்காகப் பயன்படுத்துஞ் சுரண்டும் வர்க்க நலன்களினின்று தேசிய இனத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை வேறுபடுத்த வேண்டும். எனவே, தேசிய இனப் பிரச்சனையை இலங்கையின் பிரதான முரண்பாடு என அடையாளங் காண்பது, பிரதான முரண்பாட்டை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகட்குமிடையிலான முரண்பாடாகச் சுருக்குகிற செயலல்ல. அவ்வாறு சுருக்குதல் சிறுபிள்ளைத்தனமாக இல்லாதவிடத்து நிச்சயமாகக் குறும்புத்தனமானது. விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்துத் தேசிய இனப் பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்தோரின் எண்ணம் இப்போது பொய்ப்பிக்கப் பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீது தமது நம்பிக்கையை வைத்திருந்தோர் மட்டுமன்றிச், சிங்களப் பேரினவாதிகளும் விடுதலைப் புலிகளின் ராணுவ முறியடிப்பைத் தமிழரின் முறியடிப்பாகவே காணுகின்றனர். விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்துச் சிங்கள மக்களிடையே கிளறிவிடப்பட்ட உணர்வுகள், சமூக உறவுகளைச் சுமுகப் படுத்தலுக்கு உரியனவல்ல. மாறாகச் சிங்கள வெற்றிக் களிப்புப் பற்றியவை.

தமிழ்த் தேசியவாதத் தரப்பிலிருந்து ஆயுதந் தாங்கிய எதிர்ப்பிற்கோ கிளர்ச்சிக்கோ வாய்ப்பில்லை என்ற சாத்தியப்பாடு தமிழ்ச் சிறுபான்மையின் குறைகள் நீங்கிவிட்டன என்பதைக் குறிக்காது. சிறுபான்மைத் தேசிய இனங்களுந் தேசிய இனப் பிரச்சனையின் தீர்வுங்;; குறித்துப் பேரினவாத ஆளும் வர்க்கமும் அரசாங்கமும் கொண்டுள்ள நோக்கின் விளைவாக முரண்பாடுகள் மேலுங் கூர்மை அடைகின்றன. அதை விடவும், பிற தேசிய இனங்களான முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனத்தவரிடம் பேரினவாதிகள் இப்போது மேலும் வெளிவெளியாகப் பகைமை பாராட்டுகின்றனர். இவ்வாறு, தேசிய இன ஒடுக்குமுறை தேசிய இனங்களைப் பிளவுபடுத்தும் ஒரு சக்தியாக இன்னமும் இருந்து வருகிறது. திருப்திகரமாகத் தீர்க்கப்படும் வரை, தேசிய இனப் பிரச்சனையும் பிரதான முரண்பாடாக இருந்துவரும்.

தேசிய இனப் பிரச்சனையில் அந்நியத் தலையீPடு

இலங்கையிற் தேசிய இன ஒடுக்கல் முன்னிலும் உக்கிhமாகும் வாய்ப்பே அதிகம். பேரினவாதிகளின் வெற்றிக் களிப்பு மனநிலையும் சகல தேசிய இனத்தவரிடமும் அவர்கள் காட்டும் வலுச்சண்டை மனோபாவமும் தொடரும் அளவிற், தேசிய இனப் பிரச்சனைக்கு அமைதியான தீர்வுக்கான வாய்ப்புக்கள் மங்கலானவை. இப் புதிய சூழலிற் தமிழரின் எதிர்ப்பு எவ் வடிவை எடுக்கும் என்று எதிர்வுகூற இயலாத போதும், கடந்த இரு தசாப்தங்களிற் போன்ற எதாகவும் அது இராது என்பது உறுதி. தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமை உட்பட்ட, தமது உரிமைகட்கான போராட்டங்கட்குத் தம் நேச சக்திகளை எங்கே நாடுவார்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களாக, ஏகாதிபத்திய மீளெழுச்சியைக் கொண்டதொரு சர்வதேசப் பின்னணியிற், தவறாகக் கையாளப்பட்ட இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை போராக வக்கிர வளர்ச்சி பெற்றது. மோதலின் இரு தரப்பிலும் இருந்தோரிற் பெரும்பாலானோர் அறியாமலே அந்நியக் குறுக்கீடுகள் தொடர்ந்தன. கொலனிய யுகத்திலும் பின்னரும், மோதல்களின் போது, ஏகாதிபத்தியவாதிகள் ஒரு இனக்குழுவுக்கோ இன்னொன்றுக்கோ சார்பாக நின்றதாகத் தோன்றினாலும், அவர்களது குறுக்கீடு இலங்கையினதோ எந்தத் தேசிய இனத்தினதோ நலுனுக்கானதல்ல. இந்திய மேலாதிக்கச் சக்திகளது நடத்தையும் அத்தகையதே.

தேசிய இன ஒடுக்கலின் தீவிரமாதலை அடுத்து, இந்தியாவும் மேற்குலகும் பல்வேறு தருணங்களிற் தமிழ்த் தேசியவாத நோக்கங்களை ஆதரிப்பது போன்று தோற்றங் காட்டியுள்ளன. ஆயினுந் தமது மேலாதிக்க நலன்கட்கு உதவியான முறையிற் துரிதமாகக் தரப்பையும் அனுதாபங்களையும் மாற்றியுள்ளன. எந்த நிலையிலும், விசுவாசம் என்பது வர்க்க உறவுகளின் அடிப்படையிற் பொதுவாய் அமைந்த நலன்களைச் சார்ந்தே இருந்துள்ளது.

சிங்களத் தேசியவாத மேட்டுக்குடிகளைப் போலவே, தமிழ்த் தேசியவாத மேட்டுக்குடிகளும், தமது முன்னாட் கொலனிய எசமானர்கள் மீது மதிப்புடையோராக இருந்தனர். நவ கொலனியப் பெருவல்லரசாக அமெரிக்காவின் எழுச்சியின் பின்னர், சிங்கள மேட்டுக்குடிகளிடையே இருந்த வலதுசாரிகள் அமெரிக்காவின் பக்கஞ் சாயப் பெரிதும் முற்பட்டனர். தமிழ் மேட்டுக்குடிகள் பொதுவாகவே மேற்குலகிற்கு விசுவாசமாக இருந்தனர். இந்தியாவிடமிருந்து எதுவுமே கிட்டாத போதுந், தேவை ஏற்படின் இந்தியா தமது பக்கம் நிற்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இப் பிராந்தியத்தில் இந்திய-அமெரிக்கப் போட்டி, குறிப்பாக இலங்கை மீதான ஆதிக்கத்துக்கான போட்டி, மும்முரமான போது இந்த நிலை மாறியது. 1980 அளவில் இலங்கையின் அயற் கௌ;கை அமெரிக்காவின் பக்கஞ் சாய்ந்த போது, இலங்கையின் அயற் கொள்கைப் பெயர்வைத் ‘திருத்துவதற்காக’ இந்தியா தமிழர்களின் மனக்குறைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. அனைத்துத் தமிழர் விடுதலை இயக்கங்களையும் இந்தியக் குடைக்குக் கீழ்க் கொண்டுவருமளவுக்கு விடுதலை இயக்கங்கட்கு இந்திய ஆதரவும் அவற்றின் மீதான கட்டுப்பாடும் வலுவானவையாக இருந்தன. இலங்கையை வழிக்குக் கொண்டுவருகிற நோக்கம் நிறைவேறியதும், இலங்கையிற் தனது பொருளாதார ஆதிக்கத்தைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்குச் சார்பாகி நின்றது.

மேற்குலகும் இந்தியாவும் தமிழரின் பிரிவினைப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பது பல காலமாகவே அறியப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளை ராணுவாPதியாக முறியடிப்பதில் இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் நிற்பதென அவை முடிவெடுத்ததை உணர்ந்த பின்னரும், தமிழரையும் விடுதலைப் புலிகளின் தலைமையையுங் காப்பாற்ற மேற்குலகோ இந்தியாவோ குறுக்கிடும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு வலுவான நம்பிக்கை போரின் இறுதி மாதங்களிற் பல தமிழ்த் தேசியவாதிகளிடம் இருந்தது. வருந்தத்தக்கவாறு, கடந்த சில ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களின் பின்னரும் அதே போக்கு நிலைக்கிறது.

சென்;ற ஆண்டு, குறிப்பாக மனித உரிமை மீறற் குற்றச்சாட்டுக்கட்கும் இடையிடையே வரும் போர்நிறுத்த வேண்டுகோள்களின் நடுவே, இலங்கை அரசாங்கம் மேற்குலகிற்கு எதிராகக் காட்டிய கடுமையான வெளித் தோற்றத்திற்கும் அப்பால், ஏகாதிபத்தியவாதிகளதும் இந்தியாவினதும் பிடிகளினின்று இலங்கை அரசாங்கத்தாற் தன்னை விடுவிக்க இயலாதுள்ளது. மனித உரிமை மீறல்களையும் ஊடக சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதையும் தேசிய இன ஓடுக்கலையும் பற்றி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இடையிடையே விமர்சித்தாலும், அவற்றை அவர்கள் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் வேலைத்திட்டத்தை மீறிச் செயற்படுவதை அவர்கள் சகித்துக்கொள்ள மாட்டர்கள். 1977க்குப் பிறகு இலங்கை அதற்குத் துணியவில்லை.

ஏகாதிபத்திய, மேலாதிக்கச் சக்திகட்குத் தம்மைக் கடப்பாடு உடையோராக்கிக் கொள்ளுமளவுக்கு மோதலின் இரு தரப்பினரும் போரின் போக்கிற் தம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டுள்ளனர். வரவுள்ள ஆண்டுகளில் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் அந்நியத் தலையீடு தவிர்க்கவியலாத ஒரு அம்சமாகவே இருக்கும். ஆனால் அது எந்தத் தேசிய இனத்திற்கும் நல்லதல்ல.

எதிர்காலம்

இலங்கை பயங்கரமானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் 260 கோடி டொலர் எனும் பெருந்தெகையைக் கடனாகப் பெற உடன்பாடு பெற்றிருப்பது அதன் அடையாளம். கடனுக்கான விதிப்புக்களும் நிபந்தனைகளும் நாட்டின் அனைத்து மக்களுக்குங் கேடானவை. நாட்டின் பொருளாதாரம் உலகப் பொருளாதார நெருக்கடியுடன் இணைந்து அரசாங்கம் என்றேனும் ஒப்புக்கொள்ளக் கூடியதைவிட மேசமடையும்.

இத் தொடர்பிலேயே, அந்நியத் தலையீட்டுக்காரர் தமக்கு வாய்ப்பாகவும் நாட்டின் அனைத்து மக்களுக்குந் தீங்காகவுந் தேசிய இனப் பிரச்சனையை மீண்டும் பயன்படுத்தாதவாறு, தேசிய இனப் பிரச்சனை புதிய பார்வையில் நோக்கப்பட வேண்டும். அவ்வாறான நோக்கும் அதனோடு இணைந்து செல்லுந் தலைமைத்துவமும் அந்நிய நலன்களுடன் தம்மைப் பிணைத்துள்ள தேசியவாதிகளிடமிருந்து வராது. தேசியவாத வங்கலோட்டுத்தனம் உருவாக்கிய அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதில் இடதுசாரிகட்குப் பெரும் பங்கொன்றுண்டு.

(நியூ டெமொக்றஸி 34ம் இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் அண்ணளவான தமிழாக்கம்)

பின்நவீனத்துவத்தைக் கட்டுடைத்தல்

Wednesday, January 27th, 2010

பின்நவீனத்துவத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சமூகச் சீரழிவுகளை முன்னிறுத்திய ஒரு வரைவு

அஸ்வத்தாமா


1. அறிமுகம்

அண்மைக் காலமாக ஈழத்திற் பின்நவீனத்துவம் சற்றுக் கவனம் பெற்று வருவதை அவதானிக்கலாம். மேற்கிலிருந்து வருகிற சிந்தனைகளை தமிழுக்கு அப்படியே பெயர்த்துத் தருகிற போக்கு ஈழத்து இலக்கியச் சூழலில் முனைப்புற்றுள்ள இக் காலகட்டத்தில் உலகின் புதிய சிந்தனைத் தளமாக முன்வைக்கப்பட்டுச் சிறந்த மாற்றுச் சிந்தனையாகக் காட்டப்பட்டு வரும் பின்நவீனத்துவம் பற்றிய சரியான புரிதலுக்கான தேவை உள்ளது.

பின்நவீனத்துவம் பற்றிய மாயைகள் மலிந்த இக் காலப்பரப்பிற், பின்நவீனத்துவஞ் செயற்படும் அரசியற் தளத்தை நோக்கிய கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகள், ஈழத்துத் தமிழ்ச்சூழலிற் தமிழில் வராமை பெருங் குறைபாடாகவே இருந்து வந்துள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈழத்துப் பின்நவீனத்துவவாதிகள் எனப்படுவோர் பின்நவீனத்துவம் எனும் பேரில் ஒரு புனிதத்தை கட்டமைக்க முயல்கின்றனர். அதனாலும்  பின்நவீனத்துவத்தை முன்நிறுத்திய ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கான தேவை எமக்குள்ளது. தோற்றத்திற் புதிதாக எதையும் பேசித் தங்களை ஆய்வறிவாளர்களாகவும் அறிஞர்களாகவும் காட்டிக்கொள்ள முனைகின்ற இப் பின்நவீனத்துவப் பிரசாரகர்கள் இது வரை பின்நவீனத்துவம் தொடர்பான ஆரோக்கியமான விவாதத்திற்குக் களம் அமைக்கவில்லை. அவ்வாறான விவாதங்கள் ‘பின்நவீனத்துவம் என்பது புனிதமானது’ என்ற அவர்களது புனைவை அழித்துவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர் போலும். அதைவிடப், இப் பின்நவீனத்துவப் பிரசாரகர்களின் புரிதல்கள் அரைகுறையானவை என்பதும் கவனத்துக்குரியது.

மேற்கத்திய சிந்தனைகளைத் தமிழிற் தருவது தேவையானதாயினும் எதை எவ்வாறு தருவது என்பது பற்றிய தெளிவும் தெரிவு பற்றிய அறிவும் அவசியமானவை. தமிழையும் தமிழினத்தையும் உய்விப்பதென்றால் அயலிலிருந்து பெறக்கூடிய அத்தனையையும் அப்படியே கொண்டு வந்து குவிப்பது தான் வழி என்று எண்ணுவோர் உள்ளனர் என்று சுட்டிக்காட்டுகிற சிவசேகரம் (2007அ), மேலும், அவர்களது தெரிவுகள் பெரும்பாலும் ஐரோப்பிய, வட அமெரிக்க ஊற்றுக் கண்களிலிருந்தே வருவதையும் விலக்காக, ஜப்பானோ சீனாவோ சில சமயங்களிற் கவனிப்பிற்குள்ளாவதையும் பொதுவாக, மூன்றாமுலக நாடுகளின்று இவர்கள் பெறுவதற்கு அதிகம் இருப்பதில்லை என்பதையும் விமர்சிக்கிறார். நுனிப்புல் மேய்கிற இப் பின்நவீனத்துவவாதிகள், இங்கே மீண்டும் கொஞ்சங் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் பின்நவீனத்துவத்தைத் தாங்கள் புதிதாய்க் கண்டறிந்ததுபோல மற்றவர்களுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


2. வரலாற்றுப் பின்புலம்

‘மார்க்சியத்தின் போதாமைகளுக்குத் தீர்வு’, ‘மார்க்சியத்திலிருந்து விடுதலை’ போன்ற கோஷங்களுடன் ‘நவீனத்துவமும் அதன் தொடர்ச்சியாக பின்நவீனத்துவம்’ என்ற விதமான கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டு ஏகாதிபத்தியவாதி;களால் உலகெங்கும் பரப்பப்பட்டன. ‘பகுத்தறிவே பயங்கரம்’ ‘தருக்கமே வன்முறை’ ‘மொழியே ஆயுதம்’ ‘அறிவியலே ஆபத்து’ ‘அறிவு அதிகாரத்தையே கட்டமைக்கும்’ ‘ஒழுங்கமைவு கருத்தொருமிப்பு என்பது அடிமைத்தனம்’ போன்ற கருத்துக்களைப் பின்நவீனத்துவம் முன்நிலைப்படுத்தியது. ‘கோட்பாடு என்ற ஒன்றே இல்லை’ என்றது. கவர்ச்சிகரமான சொல்லாடல்களுடன் வந்த  பின்நவீனத்துவத்தைப் பலர் பின்பற்றத் தொடங்கினர். கோட்பாட்டை மறுத்த பின்நவீனத்துவமே ஒரு கோட்பாடாகிவிட்டது. 1970களிலும் 1980களின் தொடக்கத்திலும் ஜரோப்பாவில் பின்நவீனத்துவம் பெருந் தோல்விகளை சந்தித்தது (Atherton 2002).

அக் காலத்திற், பல ஐரோப்பிய நாடுகளில் குடும்பக் கட்டமைப்புச் சிதைந்து போனது. ஒரு கட்டத்தில் ஐரோப்பாவிற் சனத்தொகை குறையத் தெடங்கிய நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் மாறியது. பின்நவீனத்துவம் ஊக்குவித்த விழுமியங்களைப் பலர் பின்பற்றியதால் ‘வாழ்ந்துவிட்டுப் போவதே’ வாழ்க்கையானது. பலர் எயிட்ஸ் முதலான பாலியல் நோய்கட்கு உள்ளானர்கள். குழந்தைப் பிறப்பு வீதம் மிகவுங் குறைந்தது. இப் போக்குத் தொடர்ந்தால் பிரான்ஸ் என்ற நாடே இருக்காது என்று புள்ளிவிவரங்கள் கூறின. தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில், பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ‘பிரான்ஸ்வா மித்ரோன்’, குடும்பக் கட்டமைப்பைச் சீரமைப்பதையே தனது முதலாவதும், பிரதானதுமான கொள்கையாக  முன்வைத்தார். தேர்தலில் வென்றபின் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு குறிப்பிட்ட தொகை பணத்தை வழங்கும் என்றும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றுஞ் சட்டமாக்கியே பிரான்ஸைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார். இவ்வாறு ஐரோப்பாவெங்கும் மார்க்சியத்துக்கு தீர்வாக ஏகாதிபத்தியத்தால்  முன்வைக்கப்பட்ட பின்நவீனத்துவச் சிந்தனை கடுந் தோல்வியைச் சந்தித்தது. இப்போது இந்தியாவிலும், இலங்கையிலும பின்நவீனத்தைப் பரப்பும் முயற்சிகள் அரசுசாரா நிறுவனங்களின் உதவியுடன் தீவிரமாக நடைபெறுகின்றன  என்பது கவனிக்கத்தக்கது.

“இப் பின்னணியிற் பின்நவீனத்துவத்தின் வரலாறு முக்கியம் பெறுகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமும் சோஷலிசமும் பல பின்னிடைவுகளைச் சந்தித்த இரண்டு தசாப்த இடைவெளியிற், பல (முன்னாள்) முற்போக்குவாதிகள், தங்களுடைய பழைய, மாக்ஸிய நிலைப்பாட்டிலிருந்து தப்பியோடுவதற்கான பாதைகளைத் தேடினார்கள். எவ்வெப் போக்குகள் அவ்வப்¬போது வலியனவாய்த் தோன்றினவோ, அவற்றிடையே புகலிடம் தேடினோர் பலர். எதிலும் ஒட்டாத விதமாகச் சுதந்திர சிந்தனையாளராகப் பாவனை செய்தோரும் இருந்தனர். அவர்களில் யாருக்கும் இத்தகைய தப்பித்தலுக்கு தங்களது முன்னைய அரசியற் சித்தாந்தம் (அது தீவிர இடதுசாரி நிலைப்பாடாயினும் வலது சந்தர்ப்பவாதமாயினும்) போதிய வசதி செய்யவில்லை. எனவே புதிய சிந்தனை முறை என்று எதையாவது பயன்படுத்தி வெளியேற முயன்றனர். அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்றவை சிலர் புதிதாக வரித்துக் கொண்ட குறுகிய தேசியவாத, பிரதேசவாத, சாதிய அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த உதவின. இன்னுமொரு சாரார், வெளிவெளியாக மாக்ஸியத்தைக் கைவிட மனமில்லாமலும் நவீன சிந்தனைகளாகக் கருதப்படுகின்றவற்றை அறியாதவர்களாகக் காணப்படுவதையும் விரும்பாமலும், அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவக் கலைச் சொற்களை மிக மேலோட்டமாகப் பயன்படுத்துவதை வழமையாக்கிக் கொண்டனர்” என்பது சிவசேகரத்தின் (2007அ) அவதானிப்பாகும்.

பின்நவீனத்துவம் எப்போதும் போராட்ட உணர்வுகளையும் அதனை நோக்கிய புரட்சிகர வடிவ அமைப்புகளையும் நிராகரித்தே வந்துள்ளது. அது பொது எதிரிக்கு மாறாக ஒன்றுபடும் போக்குக்கு எதிரான செயலைக் கொண்டதாகவே உருப்பெற்றது. அதனாலேயே பின்நவீனத்துவத்தையும் அதன் அரசியற் சார்பையும் ஆய்ந்தவர்கள் பின்நவீனத்துவம் மிகவும் பிற்போக்குத்தன்மையான, ஏகாதிபத்தியச் சார்புச் சிந்தனை என்று கூறினார்கள் (Callinicos 1991, Chomsky 1997). பின்நவீனத்துவத்தின் சந்தர்ப்பவாத அரசியலை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும் கொடுமைகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு இவை எல்லாவற்றையும் எவ்வித பிரக்ஞையும் அற்று அல்லது வேடிக்கையாய் விளையாட்டாய் பார்க்கும் மனநிலையே பின்நவீனத்துவ மனநிலையாகும் (Jameson 1991). இதை என்.ஜீ.ஓக்கள் மிகுந்த அக்கறையுடன் செய்துவருவதை எமது நாட்டில் அவதானிக்க முடியும். தமிழகத்திற் பின்நவீனத்துவம் என்கிற பேரில் நடந்து ஓய்ந்த விவாதங்களிலும் குழப்பமான சிந்தனைகளிலுமிருந்து, எந்தவிதமான விளக்கமுமின்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொற்றொடர்களைப் பொறுக்கி எடுத்துக், கட்டுடைத்தல், மீள்கட்டமைத்தல், மறுவாசிப்பு என்பன போன்ற வார்த்தைகள் செறிந்த குழப்பமான மொழி நடையில் எழுதுவதற்கு மேலாக இது வரை நமது பின் நவீனத்துவப் பிரசாரகர் எவரும் எதையுஞ் செய்யவில்லை என்பதும் சிவசேகரத்தின் (2007ஆ) மதிப்பீடாகும்.

பின்நவீனத்துவம் என்ன சொல்கிறது? பகுத்தறிவே பயங்கரம், தருக்கமே வன்முறை எனவே இவ்விரண்டின் அத்திவாரத்திலும் கட்டப்படும் அறிவியலே ஆபத்து என அனைத்தையும் நிராகரித்து, இனி அறிவியல் நோக்கிலான அணுகு முறையே வேண்டாம் என்கிறது. விஞ்ஞானத்தின் முரண்களையும் நெருக்கடிகளையும் பழமைவாதம் தனக்கேற்ற விதமாகத் திரித்து விளக்கி வந்துள்ளது. இதைச் சிவசேகரம் (2007ஆ) ஒவ்வொரு விஞ்ஞானக் கொள்கையும் பொய்ப்பிக்கப்படும் போதும் நெருக்கடிக்கு ஆளாகும் போதும் ‘விஞ்ஞானமே பொய்’ என்று கூக்குரல் இடுகிற ஒரு கூட்டத்தாரின் நடத்தையுடன் ஒப்பிடுகிறார்: “டாவினின் பரிணாமக் கொள்கையின் குறைபாடுகள் அடையாளங் காணப்படும் ஒவ்வொரு முறையும், மனிதன் கடவுளால் நேரடியாகச் சிருஷ்டிக்கப்பட்டான் என்பதற்கான ஆதாரமாக அவர்கள் அக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவார்கள். உண்மை இதற்கு மாறானது. நெருக்கடிகளின் பயனாகப் பரிணாமக் கொள்கை டாவினால் முன்வைக்கப்பட்ட எளிய வடிவில் இல்லாமல் இன்னுஞ் செறிவான முறையில் விருத்தி பெறுகிறதே ஒழிய, டாவின் கண்ட அடிப்படையான உண்மையை மறுக்கும் விதத்திலான நெருக்கடி எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்ட விடயங்களில், விஞ்ஞானந் தொடர்பாகவே எத்தகைய வலிந்து பொருள் கொள்ளும் வாசிப்புக்கள் நேர்ந்துள்ளன என நாம் காணலாம். எனவே, தகவல்களிற் குறைபாடுந் தெளிவீனமும் கருத்துப்பரிமாறலின் பிரச்சினைகளும் உள்ள இடங்களில் வலிந்து பொருள் கொள்வதற்கான வசதி மிகவும் உண்டு. அவ்வாறு நிகழ்வதால் அது ஏற்புடையதாகி விடுமா என்பதே மீண்டும் இங்கு எழுகிற கேள்வி”.

“ஒருமுகத் தன்மை என்று ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் பன்மைத்துவமே என்று வலியுறுத்தி அதை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் அதனடிப்படையிலேயே பிரச்சனைகட்கான தீர்வைக் காண வேண்டும் என்றுஞ் சொல்கிறது பின்நவீனத்துவம். பதிக்கப்பட்ட மக்களுக்குள், ஒடுக்கப்படும் மக்களுக்குள் ஒருமுகத்தன்மையே இல்லை என்றால் அவர்கள் ஏன் ஒன்றுபட வேண்டும்? ஏன் அமைப்பாக வேண்டும? ஏன் ஓரணியில் நின்று போராட வேண்டும? இத் தர்க்கத்தின்படி, மூன்றாமுலக நாடுகளில் உலகமயமாக்கலுக்கும் தராளமயமாக்கலுக்கும்  தனியார்மயமாக்கலுக்கும் ஆட்பட்டு அவற்றாற் பாதிக்கப்பட்ட மக்களும், இந்தியாவில் தேசிய இன உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் விளைவாக ஒடுக்குமுறைக்கு ஆளாகித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் தமிழ்நாட்டில் மொழி ஒடுக்குமுறைக்கும் இன ஒடுக்குமுறைக்கும் ஆளாகி, அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வை சுயாதீனமாகத் தீர்மானித்துக் கொள்ள வழியின்றித் தவிக்கும் மக்களும் தனித் தனியாகவே இருந்து, தனித்தனியாக எதிர்த்துக் கொண்டும் போராடிக் கொண்டுமிருக்க வேண்டியது தான். பின்நவீனத்துவம் அதையே வேண்டுகிறது” எனக் கேசவன் (2007) சுட்டிக்காட்டுகிறார்.

“பின்நவீனத்துவக் காலம், அதாவது எல்லாப் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் ஒன்று கலந்து பன்மைத்தன்மையின் செல்வாக்குக் கோலோச்சும் காலம், எனக் கூறப்படும் இக் காலத்திற் தான் தேசிய இன அடிப்படையில் அதாவது தேசிய இன அடிப்படையிலான ஒருமைத்தன்மையின் அடிப்படையில் மக்கள் ஒன்றுபட்டு உரிமைக்குப் போராடுகிறார்கள். விடுதலையும் பெறுகிறார்கள். ஒவ்வொரு தேசிய இனத்து மக்களுக்கும் தமக்குள் நிலவும் ஒருமைத் தன்மையில் அடிப்படையிற் தான் அவ்வாறு செய்ய முடிகிறது. அந்த ஒருமைத் தன்மையில்லாமல் பன்மைத் தன்மை மட்டுமே நிலவுமானால் அவர்களது ஒற்றுமை சாத்தியமாகுமா? அவர்களது போராட்டம் சாத்தியமாகுமா? நிச்சயமாக இல்லை. ஆனாற் பின்நவீனத்துவம் இந்த ஒருமைத் தன்மையைத் தான் இல்லை என்று மறுக்கிறது. வெறுமனே பன்மைத் தன்மையை மட்டுமே பார்த்து அதற்கு மட்டுமே முக்கியத்துவம் ஈந்து பிறவற்றை மறுத்து நிராகரிக்கிறது. அதன் மூலம் மக்கள் தேசிய இன அடிப்படையில் ஒன்றுபடுவதற்கும் அவர்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்கும்  எதிராக நிற்கிறது. அவர்களை ஒன்று படுத்துங் காரணிகளை முன் வைப்பதற்கு மாறாக அவர்கள் வேறுபடுத்துங் காரணிகளை மட்டுமே முன்னிறுத்துகிறது. அவற்றை மட்டுமே முதன்மைப் படுத்துவதன் மூலம் பின்நவீனத்துவம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் மறைமுகமாகச் சேவை செய்கிறது” எனவுங் கேசவன் மேலும் விளக்குகிறார்.

சமூகத்தினுட் சமத்துவம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிற் சமத்துவம், மனிதர்களுக்கிடையிற் சமத்துவம் என்பனவெல்லாம் அபாயகரமானவை என்றும் மனிதர்கள் எல்லோரும் சமத்துவமானவர்களாக இருக்க இயலாது என்றும், நமக்கு இடையில் சமமாகவோ இணையாகவோ பொதுவாகவோ எதுவும் இல்லை என்றும் நீட்சே குறிப்பிடுகின்றார். அதனாலேயே தனது காலத்தில் வளர்முகத்தில் இருந்த சோசலிசக் கருத்துக்களை வெறுப்பவராக நீட்சே இருந்தார். அவர் சோசலிசம் என்பது இயற்கைக்கு மாறானதும் உயிரியற் தன்மைக்கு மாறானதும் என்கிறார். மிகவும் தாழ்ந்த, கீழ்மைப்பட்ட மனிதர்களை மேன்மை பொருந்திய மனிதர்கள் பயன்படுத்துவதாலேயே ஒரு சமூகம் வளர்ச்சி அடைய முடியும். அதாவது சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவதுதான் வரலாற்றில் ஒரு நியதியாக இருக்கின்றது என்றும் நீட்சே குறிப்பிடுகின்றார். மேலும், உடைமை என்பது அறிவு படைத்த, மேன்மை தங்கியவர்களிடம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிறார். இந்த கருத்தாக்கங்களுக்கும் இன்றைய பின்நவீனத்துவ சிந்தனைக்கும் இடையில் ஒரு தொடர்ச்சி இருப்பதை நாம் காணலாம்” எனக் கேசவன் (2007) விளக்குகிறார்.

3. ஆசிரியன் இறந்துவிட்டான்
பின்நவீனத்துவம் முன்வைக்கும் முக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று ‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ என்பது. அதன் மூலம் பின்நவீனத்துவம் பிரதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏனைய அனைத்தையும் புறக்கணிக்கிறது. ஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதுங் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.
ஒரு இலக்கியப் படைப்பைப் படிக்கிற வாசகனுக்குப் படைப்பாளியின் அனுபவங்களின் மீதும் பார்வைகளின் மீதும் எதிர்வினை ஏற்படுகிறது. எந்த வாசகனும் என்ன அடிப்படையில் ஒரு படைப்பை எதிர் கொள்ள முடியும்? தனக்குரிய அனுபவத்தினதும் பார்வைகளினதும் அடிப்படையிலேயே எதிர்கொள்ள முடியும். அவ்வாறே படைபபு எதிர்கொள்ளப் படுகிறது. அப்போது படைப்பாளியின் அனுபவ வழிப் பார்வையும் வாசகனின் அனுபவ வழிப் பார்வையும் சேர்ந்து மூன்றாவது விதமான ஒரு அனுபவ வழிப் பார்வை உருவாகிறது. இது இயல்பாக நிகழ்வது. ஆனாற் பின்நவீனத்துவம் இதில் படைப்பாளியின் வகிபாகத்தையும் அனுபவத்தையும் பார்வை வெளிப்பாட்டையும் முற்றாக மறுக்கிறது (ஊhழஅளமல 1997). அதைப் படைப்பாகக் கூட அணுகத் தேவையில்லையென்று அதை வெறுமனே ‘பிரதி’ என அணுகச் சொல்கிறது. படைப்பிற்குரிய தனித்துவத்தையும் வாசகனின் மீது அதன்; தாக்கத்தையுங் கூட நிராகரிக்கிறது. வாசகன் ஒரு படைப்பை வெறும் நிகழ்வாகவே பார்த்து அதைத் தன் விருப்பத்திற்கமைய வாசித்துச் செல்கிறான், எனவே எழுத்தாளன் அங்கு இறந்து விடுகிறான் என்கிறது.

இதன் மூலம் சமூகத்தில் இலக்கியப் படைப்புகளினதும் படைப்பாளிகளிதும் சிந்தனையாளர்களினதும் விமர்சகர்களினதும் பங்கை அது நிராகரிக்கிறது. அதாவது ஒட்டு மொத்த சமூக இயக்கத்தையும் சமூகச் செயல்பாடுகளையும் அவற்றிற் சிந்தனையாளர்களின் பங்கையும் அர்த்தமற்றதாக்கும் பின் நவீனத்துவம், இலக்கியப் படைப்புகளையும் அவ்வாறே செய்கிறது.

எந்த ஒரு கூற்றும் பல்வேறுபட்ட வாசிப்புகட்கு ஆளாகலாம் என்பது புதிய உண்மையல்ல. ஆயினும், ‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ என்ற பிரகடனத்தின் மூலம் வெளிவரும் ‘ஒரு படைப்பை வாசித்து விளங்கிக் கொள்வது முற்றாக வாசகனின் கையிலே உள்ளது’ என்ற வாதம் மனிதக் கருத்துப் பரிமாறலின் அனுபவத்தையே மறுப்பதாகும். ஒரு நூலின் மீது (பின்னமைப்பியற் சொல்லாடலில் ‘பிரதியின்’ மீது) ஒரு வாசகன் தனது எண்ணங்களைத் தனக்கு வேண்டிய விதமாக ஏற்றி வாசிக்க முடியும் என்பது சரியா? ஏற்புடையதா? அப்படியானால், ஈசாப்பின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையில் வருகிற ஓநாய், ஆட்டுக்குட்டியின் மறுமொழிகளைத் தனக்கு ஏற்றபடி வாசிப்புக்கு உட்படுத்திய விதமும் நமக்கு நியாயமானதாக இருக்க முடியும்.     எந்த விடயமும் பற்றி முன்கூட்டியே தனது முடிவுகளைத் தீர்மானித்துக் கொண்ட ஒருவர், தனக்குக் கிடைக்கும் தகவல் எதையும் அம் முடிவுகட்கேற்றபடி வாசிக்க முடியும் என்றும் அவ்வாறான வாசிப்பு செல்லுபடியானது என்றுங் கொள்வோமானால், ஜேர்மன் ஃபாசிசமோ வெள்ளை நிறவெறியோ இனவெறியோ தேசிய மேலாதிக்கமோ மதவெறியோ, வரலாற்றைத் தான் விரும்பியவாறு வாசிப்பதில் நாம் தவறு காண இடமில்லை. அத்தகைய வாசிப்பு, ‘ஆசிரியனின் சாவை’ மட்டுமல்லாமல் பிரதியின் குரூரமான சிதைப்பையும் உள்ளடக்கியதாகிறது என்று சிவசேகரம் (2007ஆ) விமர்சிக்கிறார்.

4. கட்டுடைத்தல்
கட்டுடைத்தல் என்பதன் பேரால் எல்லாவற்றையுங் கலைத்துப் போட்டு மாற்றாக எதையும் உருவாக்காமல் வெறுமையை முன்னிறுத்தும் பின்நவீனத்துவம், உருவாகும் எதையும் அதே ‘கட்டுடைத்தல்’ அணுகுமுறையால் கலைத்துப் போட்டு மாற்று எதுவும் உருவாகவிடாமல் தடுக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறது. மாற்றுக்களை முன் வைப்பது பின் நவீனத்துவத்தின் வேலையல்ல. கலைத்துப் போடுவது கட்டவிழ்ப்பது மட்டுமே அதன் வேலை (Eagleton, 1996). மற்றப் பணிகளைப் பிறர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறது பின்நவீனத்துவம்.

பின்நவீனத்துவ அணுகுமுறையின் ஆபத்து என்னவென்றால், வரலாற்றுத் தன்மையோடும், காலச் சூழலோடும் பிரச்சனைகளை அணுகிக் காலத் தேவைக்கேற்ப வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக, மக்களையும் சூழலையும் விட்டு விலகிய சுயேச்சையான சார்பற்ற தனி நடவடிக்கையாகக் கட்டுடைத்தல் என்பதை அது முன்வைக்கிறது. அத்தோடு ஒன்றைக் கட்டுடைக்கையில் இன்னொன்று கட்டமைக்கப்படுகிறது என்கிற இயக்கவியற் புரிதலையஞ் செயற்பாட்டையும் புறமொதுக்கிக் கட்டுடைத்தலுக்கு மட்டுமே முக்கியத்துவம் ஈந்து கட்டமைத்தற் செயற்பாட்டை மறுக்கிறது. இதன் மூலம் மனித முயற்சிகட்குச் சமாதி கட்ட முயல்கிறது. மனிதர்களைச் செயலற்றவர்களாக்கி வெறுமைக்கும் விரக்திக்கும் உட்படுத்துங் காரியத்தையே பின்நவீனத்துவம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

5. பின்நவீனத்துவ அரசியலின் ஆபத்துக்கள்

பொதுவாகத் தத்துவங்கள் மனிதன் வாழ வழிகாட்டும் என்பார்கள். மாறாகப் பின்நவீனத்துவம்  சாக வழிகாட்டும் தத்துவமாக உள்ளது. இதனால் யாருக்கு நன்மை? இவ்வாறான ஒரு நிலையை உருவாக்கினால் ஆதிக்கத்திற்கு அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அமைப்பாக இயங்க மாட்டார்கள். எதிர்த்துப் போராடமாட்டார்கள். அந்த வேலையைப்; பின்நவீனத்துவங் கவனித்துக் கொள்கிறது. எனவே மூன்றாமுலக நாடுகளிற் பின்நவீனத்துவவாதிகளின் செல்வாக்கு இருக்கும் வரை, ஏகாதிபத்தியங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.

இதைப் பின்நவீனத்துவம் ‘அரசியல் அதிகாரம் ஆபத்தானது’ என்கிறது. அல்லது ‘எல்லாமே அபத்தம்’ என்கிறது. போராடி என்ன பயன்? போராடுவது தேவையில்லாதது என்று சொல்கிறது. போராடாமல் எப்படி வாழ்வது என்று கேட்டால், பின்நவீனத்துவம், ‘ஏன் வாழப்போகிறீர்கள்? வேண்டாம். செத்துவிடுங்கள், மரணமே விடுதலை, மரணமே சுதந்திரம்’ என்கிறது. இதனாற் பயனெல்லாம் ஆதிக்கச் சக்திகட்குத்தான.; இப்படி ஆதிக்கத்திற்கு சேவை செய்வதே இத் தத்துவம்.

சாதாரண மக்களின் ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை முடமாக்குகிற பணியையே பின்நவீனத்துவம் செய்து வருகிறது. பின்நவீனத்துவம் சாதாரண மக்களை நேரடியாக அணுகி அவர்களை முடமாக்கவில்லை. அதற்கு அது தேவையுமில்லை. மாறாக, மக்களிடையே கருத்துருவாக்கப் பணியைச் செய்கிற முன்னோடிகளையும் மக்களை திரட்டிப் போராடுகிற ஆற்றல் மிக்க ஊழியர்களையும் அப்படிப்பட்ட பிற சக்திகளையும் முடமாக்கிவிட்டாற் போதும், மக்கள் வழிகாட்டல் ஏதுமின்றித் தாமாய் முடமாகிப் போவார்கள் (Atherton, 2002). எனவே அப்படிப்பட்ட காரியத்தை, அதாவது கருத்து ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் முடமாக்கும் காரியத்தை அது செய்து வருகிறது. இலங்கையிற் பெருகியுள்ள தன்னார்வ நிறுவனங்களும் அவை பரப்பும் சிந்தனைகளும் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்நவீனத்துவத்தை முன்னின்று பரப்பும் சில என்.ஜி.ஓக்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் அதைத் தெளிவாகக் காட்டும்.

அவை செய்யும் மிக முக்கியமான பணி வரலாற்றை மறுப்பது. அம் மறுப்பை மக்கள் மத்தியிற்; பரப்பவும் வரலாறு என்ற ஒன்றே இல்லை என்பதை சொல்லவும் பல சிறுநூல்களை அச்சிட்டு இலவசமாக விநியோகிப்பதன் மூலம் மனித வாழ்வில் வரலாற்றின் பங்கை ஒழிக்க முனைகிறது. வரலாற்றை ஒழித்துவிட்டால் அடக்கி ஒடுக்கப்பட்டோம் என்பதோ மக்கள் புரட்சிகள் செய்து உரிமைகளை வென்றெடுத்திருக்கிறார்கள் என்பதோ புதிய தலைமுறைக்குத் தெரியாது, அதன் மூலம் போராட்ட மனநிலை அழிவதுடன் நவகொலனியாக்கத்தை எதுவித மறுப்புமின்றி ஏற்கச் செய்ய முனைகிறது.
பின் நவீனத்துவத்திற்குக் கடந்த காலமும் இல்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனையுமில்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அல்லது கணிப்புகள் யாவற்றையும் ~பெருங்கதையாடல்| என்ற முத்திரை குத்தி நிராகரித்து விடுகின்றனர் பின் நவீனத்துவவாதிகள். இவர்கள் நிகழ்கால வாழ்வில் மட்டுமே கவனம் கொண்டவர்கள். சமூகத்திற்கென்று ஒரு அமைப்பும் கிடையாது வெறும் பகுதிகள் மட்டுந்தான் உள்ளன. சாரம் என்று ஏதுமில்லை. சாரம் என்றாலோ அல்லது சமூக சாரம் என்று எவரும் பேசினாலோ அவர் பெருங்கதையாடலைப் பற்றிதான் பேசுகிறார் என்கின்றனர். சமூகங்களுக்கிடையில், மக்களுக்கிடையில், பல்வேறு அடையாளங்களுக்கு இடையில் அதிகார உறவுகள் உண்டு. ஆனால், பொதுவான அடிப்படை உறவு என்று ஏதுமில்லை. இப்படிக், கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான உறவை மறுப்பதன் மூலம் வரலாற்றை மறுக்கிறார்கள், வரலாற்றுத் தொடர்ச்சியை மறுக்கிறார்கள் வரலாற்றைப் பற்றியான பேச்சுக்கு எதிராக இருக்கின்றனர் பின் நவீனத்துவவாதிகள். (வேணுகோபால் 2007)

பின்நவீனத்துவம் என்பதிற் புதுக்கருத்து எதுவும் இல்லை பெயர்தான் புதிதே ஒழியக் கருத்துக்கள் எல்லாம் பழமையானவைகளே எனவும் கான்ட், ஹெய்டெக்கர், நீட்சே முதலானோர் முன்வைத்து ஏற்கனவே காலத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துமுதல்வாத, இருண்மைவாதப், பகுத்தறிவு எதிர்ப்புக் கண்ணோட்டங்களையே பின்நவீனத்துவம் முன் வைக்கிறது எனவுங் கூறும் கேசவன் (2007) பின்நவீனத்துவம் புதியதாக எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை என நிறுவுகிறார். பின்நவீனத்துவவாதிகள் இன்றைய உலகளாவிய அரசியல், சமூக நிலைகளைப் பற்றி நிறைய ஆய்வுகளைச் செய்கிறார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் methodology, method என்பதை மறுக்கின்றார்கள். methodology ஒன்று இருக்கின்றது என்று எவருஞ் சொன்னால் அதைப் பின்நவீனத்துவவாதிகள் வன்முறை என்கின்றனர். இங்கே விவாதத்திற்கு இடம் எங்கே இருக்கின்றது? இவர்களது methodologyயில் உள்ள சிக்கல் என்னவென்றால் சமூக அமைப்பாக ஒரு சமூகம் (society as a social system) என்பதையே இவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதுதான் எனவுஞ் சுட்டிக்காட்டுகிற கேசவன் உலகம் பற்றி லியோதார்த் எழுதியதை ஆதாரங் காட்டுகிறார்: “தான் எதுவாக இருக்கிறோம் என்று இந்த உலகம் தானே விளக்க முடியாத ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது எதுவாக இருக்கின்றது என்பது பற்றி அதனால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அது எந்த உலகத்திலிருந்து தற்பொழுது விடுதலை பெற்று வந்திருக்கின்றது என்பதைப் பற்றிதான் அதனால் கூற முடியும். இதுதான் பின்நவீனத்துவம் ஆகும்”. இவர்களிடம் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான அணுகுமுறை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.
அறிவைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அறிவு அர்த்தமற்ற தெனவுங் கூறி மனித அறிவைக் கொச்சைப்படுத்தும் பின்நவீனத்துவம் மனித வாழ்வுக்கும் அறிதலுக்குமான தொடர்பை மறுக்கிறது. அறிவு அர்த்தமற்றது என்றால் அந்த அறிவு சார்ந்து நடைபெறும் வாழ்தல் அர்த்தமற்றதாகிவிடாதா? அதாவது, வாழ்வே அர்த்தமற்றதாகிவிடாதா? அதை வாழ்ந்து கொண்டிருப்பதே வீண் என்கிறது பின்நவீனத்துவம். ஆதிக்கத்தினதும் அதிகாரத்தினதும் பிடியிலிருந்து விடுபடமுடியும் என்கிற நம்பிக்கையிலும் அது சார்ந்த வரலாற்று இயக்கவிதிகளின் அடிப்படையிலுந் தான் மனிதன் அமைப்பாகிறான், போராடுகிறான். அதைவிட இந்த ஒடுக்குமுறையிலிருந்து மீள வேறு மாற்று வழி உண்டா? இல்லை. மாற்றுப்பாதை எதையும் பின்நவீனத்துவம் முன் வைக்கவில்லை.

எல்லா முயற்சிகளையுங் கொச்சைப்படுத்தி அர்த்தமற்றதாக்குங் காரியத்தையே பின்நவீனத்துவம் செய்து வருகிறது. அதன் மூலம் மனித குலத்தை எந்தத் தத்துவத்தின் மீதும் பிடிப்பற்றதாக்கி, எதன் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்யாது, எல்லாத் தத்துவங்களின் மீதும் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதுடன் அதன்மூலம் மனிதச் செயற்பாட்டை முடமாக்கி எதன் மீதும் அக்கறையற்றதாக்குகிற காரியத்தையே பின் நவீனத்துவம் செய்து வருகிறது (Eagleton 1997). அதன்வழி, தற்போதுள்ள இருப்பை மாற்ற முயலும் மனித முயற்சிக்கு அது முட்டுக்கட்டை போடுகிறது. இருக்கிற நிலையே தொடர்ந்து நீடிக்க அது மறைமுகமாகச் செயலாற்றுகிறது. அதன்மூலம் அது ஆதிக்க சக்திகளுக்கே சேவை புரிவதாக, அமைந்து விடுகிறது.
இன்றைய சமூகத்தில் உற்பத்திக்கு முக்கியத்துவம் கிடையாது என்றும் அதனாற் பாட்டாளி வர்க்கம் முக்கியத்துவமற்றது என்றும் வர்க்கப் போராட்டம் முக்கியத்துவமற்றது என்றும் இப் போக்குக் கூறுகிறதாகச் சொல்பவர்கள் அமெரிக்க-ஐரோப்பிய சிந்தனையாளர்கள எனச் சுட்டிக்காட்டுகிற வேணுகோபால் (2007), ‘‘அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், மொத்தப் பொருளாதாரத்தில் அந் நாட்டின் விவசாய-சுரங்கத் தொழில் உற்பத்தியின் பங்கு 6-8 சதவீதந் தான். தொழிற் துறையின் பங்கு 14-20 சதவீதந் தான். அவர்களது பொருளாதாரத்தின் பெரும்பான்மை தகவற் துறையிலிருந்து கிடைப்பது. அதனால் உற்பத்தியைவிட நுகர்வு முக்கியம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்த நுகர்வுக்கான உற்பத்தி எங்கிருந்து வருகிறது? அவர்கள் உணவு, தொழில் உற்பத்தி ஆகியவற்றை உபயோகிக்காமலா வாழ்கிறார்கள்? அவர்கள் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களும், உணவும் மூன்றாமுலக நாடுகளிலிருந்து வருகின்றன. மூன்றாமுலக நாடுகளைச் சுரண்டிச் சுகபோகமாக வாழும் அமெரிக்காவில் உற்பத்தி 6 சதவீதமாகக்; குறைந்துவிட்டது. இதே நிலைமை ஜெர்மனி, ஃபிரான்சு இங்கெல்லாம் நிதர்சனமாகியிருக்கலாம். இந்த நிலமையில் தான் உற்பத்தி அவசியமற்றது என்று சொல்லும் துணிவு இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், நுகர்வு தொடர வேண்டுமானால் உற்பத்தி தொடர்ந்தே ஆகவேண்டும். இந்த விஷயத்தில் பின் நவீனத்துவவாதிகள் உலகின் யதார்த்த நிலைமையை பார்க்காமற் கண்களை மூடிய குருடராகி விட்டனர். அல்லது யதார்த்தம் புரியாத அறிவிலிகளாக ஆகிவிட்டனர். இன்றைய சமூகத்திற்கு உற்பத்தியல்ல, நுகர்வுதான் முக்கியம்! தகவல், ஆய்வு ஆகியவைதான் முக்கியம் என்று ஏன் சொல்கின்றனர்? குருடாக இருப்பதாலோ, அவர்களால் உண்மையை புரிந்து கொள்ள முடியாததாலோ அல்ல. உலகில், இந்தியா, ஆசிய-ஆபிரிக்க நாடுகளில் உற்பத்தி தொடருவது அவர்களுக்குத் தெரியாததல்ல. அவர்களுக்கு வேண்டியது வர்க்கப் போராட்டம் என்பதை மறுதலிக்க வேண்டும். பாட்டாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் இருப்பதை மறுதலிக்க வேண்டும் என்பது தான். மொத்தத்தில் வர்க்கம் என்ற ஒன்று இருப்பதை மறுக்க வேண்டும்” என விளக்குகிறார்.

6. நிறைவாக
நவீனத்துவம் என்று கருதக்கூடிய பல சிந்தனைகளும் செயற்பாடுகளும் இன்னுஞ் சரிவர விருத்தி பெறாத ஒரு சூழலில், அரைகுறையான விளக்கத்துடன் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகப் பின்நவீனத்துவ வியாக்கியானங்கள் செய்வதில் அதிசயம் இல்லை. சிந்தனைத் தேக்கமும் தாழ்வு மனப்பான்மையும், தெரியாததை எல்லாம் தெரிந்தது போல காட்டத் தூண்டுவது இயல்பானதே. மற்றவர்களை விட அதிகம் கற்றது போன்ற பாவனையும் ஏதாவது ஒன்றை எல்லோருக்கும் முதற் தானே கண்டறிந்ததாயும் முதன்முதலாக அறிமுகம் செய்ததாயும் காட்டிக்கொள்ளும் சிறுபிள்ளைத்தனத்தையும் நாம் அறிவோம். தமிழ்ச் சமூகங்கள் மிக நீண்ட காலமாகச் சமூகவியற், பண்பாட்டுத் தேக்கங்கட்கு உள்ளானவை. அதன் விளைவாத் தொன்மை, தூய்மை, தனித்துவம், மரபு, புதுமை, நவீனத்துவம், விருத்தி போன்ற பல விடயங்களில் நம்மிடையே முரண்பாடு மிகுந்த பார்வைகள் உருவாகியுள்ளதை அறிவோம். அயலினின்று வருவனவற்றை நமது தேவைகட்கு ஏற்ப எவ்வாறு உள்வாங்குவது, அவற்றால் நமது சூழலை எவ்வாறு செழுமைப்படுத்துவது, பழையனவற்றிற் பயனுள்ளவற்றை எவ்வாறு அடையாளங் கண்டு பிரயோகிப்பது என்பன பற்றிய நிதானமான பார்வைக்கு என்றுமே தேவை உள்ளது.

அந்நிய மோகம் போன்று அந்நியத் துவேஷமும் வளர்ச்சிக்குப் பாதகமானது. தமிழ் இனம், தமிழ்ப்பற்று, தமிழ்ச் சமூகம் என்று நம்மிடையே எவ்வளவுக்கெவ்வளவு மார்தட்டுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாகவும் வேகமாகவும் நமது சமூகங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டுத் தளமும் அயற் பாதிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளாகி வருகின்றது. இன்றைய நவ கொலனியச் சூழலில் ஒவ்வொரு தமிழ் அடையாளமும் கொலனிய காலத்துச் சிதைவை விடப் பெரிய சிதைவை எதிர்நோக்குகின்றது.

தமிழர் மீது திணிக்கப்பட்ட கொலனிய விழுமியங்களை விட மோசமான நவகொலனியச் சீரழிவின் விழுமியங்களைத் தமிழ்ச் சமூகங்கள் வலிந்து உள்வாங்கும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது என்று சிவசேகரம் (2007) கருதுகிறார்: “நவீனத் தகவல் ஊடகங்களும் பன்னாட்டுக் கம்பனிகளின் நோக்கினாலான ‘உலகமயமாதலும்’ ‘திறந்த பொருளாதாரமும்’ ‘புதிய உலக ஏற்பாடும்’ தமிழ்ச் சமூகங்கள் மீது செலுத்தும் அழுத்தம் பெரியது. அதற்கு முகங்கொடுப்பதை விட்டு அதை மூடிக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டே தமிழ் சார்ந்த அடையாளங்களின் மேன்மையும் முதன்மையும் சிலரால் மிகுதியாக வலியுறுத்தப் படுகின்றன. இந்தத் தமிழ் அடையாள வலியுறுத்தல் பசப்பானது என்பதை அறிவதில் அதிகஞ் சிரமம் இல்லை”.

பின் நவீனத்துவத்தை விவாதிக்கத் தயங்குகின்ற இவர்கள் பின் நவீனத்துவத்தைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கக் கூட இயலாதுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு சலசலப்பின் விளைவாக உருவான ஒரு “தமிழகப் பின் நவீனத்துவ” மூட்டையை அவிழ்த்துப் பார்க்காமலே தலைமீது சுமந்து திரிகிற இவர்கட்கு அதன் சில சொல்லாடல்களைத்; தவிரப் பின்நவீனத்துவம் பற்றி வேறெதுவுமே தெரியாது. அதைத் தங்களுக்குட் தாங்களே பேசிக்கொள்வதன் மூலம் புதியவற்றைப் பேசும் இலக்கியவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ள முயலும் சிலர் பின் நவீனத்துவம் பற்றிய மயக்கங்களை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறார்கள். ஆரோக்கியமான விவாதத்திற்கான ஒரு தேவை உள்ள நிலையில் அதற்குத் தயாராக இல்லாத பின் நவீனத்துவவாதிகள் நடுவே பின் நவீனத்துவத்தின் உண்மை நிலையை விளக்குவது பாரிய ஒரு சமூகப் பொறுப்பாகும்.

நூலடைவு:
கேசவன், கோ. 2007. “பின்நவீனத்துவத்தின் தத்துவமும் அரசியலும்.” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

சிவசேகரம், சி. 2007(அ). “ஆசிரியனாவது சாவதாவது.” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

சிவசேகரம், சி. 2007(ஆ). “தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம்.” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

வேணுகோபால், என். 2007. “பின்நவீனத்துவம்: ஒரு நவீன அத்வைதமே!” தொகுப்பு, பின்நவீனத்துவம்: மாயைகளைக் கட்டுடைத்தல். கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.

Atherton, C.R. 2002. Postmodernism: A dangerous illusion for social work. International Journal Social Work, 45(4), 421-433.

Callinicos, Alex. 1991. Against Postmodernism: A Marxist Critique. Cambridge: Polity Press.

Chomsky, Noam. 1997. Post Modernism and Activism. Z-Magazine, Left On-Line Bulletin Board.

Eagleton, Terry. 1996. The Illusions of Postmodernism. Oxford: Blackwell Publishers.

Eagleton, Terry. 1997. The Contradictions of Postmodernism. New Literary History, 28(1), 1-6.

Jameson, Fredrick. 1991.  Postmodernism or the Cultural Logic of Late Capitalism. Duke: UP.

*****

சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? *

Wednesday, January 27th, 2010

மாஓ சேதுங்
(1963 மே)

சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன. அவை மூவகையான சமூக நடைமுறைகளிலிருந்து வருகின்றன: உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை. மனிதனுடைய சமூக இருப்பே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய வர்க்கத்திற்குரிய தனிச்சிறப்பான சரியான கருத்துக்கள் வெகுசனங்களாற் பற்றிக் கொள்ளப்பட்டதும் அக் கருத்துக்கள் சமூகத்தையும் உலகையும் மாற்றும் ஒரு பொருண்மையான சக்தியாகின்றன. மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.

பார்வை, கேட்டல், மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.

அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.

சமூகப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தின் பிரதிநிதியான சக்திகள் சில சமயங்களிற் தோல்வியடைகின்றன. அதன் காரணம் அவர்களது  கருத்துக்கள் தவறானவை என்பதல்ல, மாறாகப் போராட்டத்திற் சம்பந்தப்பட்ட சக்திகளின் சமநிலையில் அப்போதைக்குப் பிற்போக்குச் சக்திகளினளவுக்கு அவை வலியனவாயில்லை என்பது தான். எனவே அவை தற்காலிகமாகத் தோற்கடிக்கப் படுகின்றன. ஆனால் அவை இன்றோ நாளையோ வெல்லப் போகின்றவை.

மனிதனின் அறிவு, நடைமுறைச் சோதனை மூலம் இன்னோரு பாய்ச்சலுக்கு உட்படுகிறது. இப் பாய்ச்சல் முன்னையதை விட முக்கியமானது. ஏனெனில், இது மட்டுமே முதலாவது பாய்ச்சல். அதாவது புறநிலையான வெளி உலகைப் பற்றி யோசிக்கும் போக்கில் முடிவான  கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும், சரியா இல்லையா என நிறுவ முடியும். உண்மையைப் பரீட்சிக்க வேறு வழியில்லை. மேலும், பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிவதன் ஒரே ஒரு நோக்கம் அதனை மாற்றுவது தான்.

பல வேளைகளிற், பொருளிலிருந்து உணர்வுநிலைக்கும் மீண்டும் பொருளுக்கும், அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும் மீண்டும் நடைமுறைக்குங்;, கொண்டு செல்லும் செயற்பாட்டைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே சரியான ஒரு கருத்தை வந்தடைய முடிகிறது. அறிவு பற்றிய மாக்ஸியக் கொள்கை, அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கை, அத்தகையது.
நம்மிடையே பல தோழர்கள் அறிவு பற்றிய இக் கொள்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களதும் அபிப்பிராயங்களதும் கொள்கைகளதும் செய்முறைகளதும் திட்டங்களதும் முடிவகளதும் விவரணமான உரைகளதும் நீண்ட கட்டுரைகளதும் தோற்றுவாய் ஏதென்று கேட்டால் அவர்கள் அக் கேள்வி விசித்திரமானது என நினைக்கிறார்கள். அவர்களால் அதற்கு மறுமொழி கூற இயலாதுள்ளது. பொருள் உணர்வுநிலையாகவும் உணர்வுநிலை பொருளாகவும் மாற்றப்படுவதுமான பாய்ச்சல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வான போதும், அத்தகைய மாற்றம் இயலுமென அவர்கட்கு விளங்குவதில்லை.

எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத்  தமது வேலையைச் சிறப்பாகச் கெய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.

*தோழர் மாஓ சேதுங்கின் நெறிப்படுத்தலின் கீழ் வரையப்பட்ட “நமது தற்போதைய கிராமப்புறப் பணிகளிலுள்ள சில பிரச்சனைகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சி மத்திய குழுவின் வரைவுத் தீர்மானம்” எனும் ஆவணத்தினின்று பெறப்பட்ட பகுதி. இப் பகுதியைத் தோழர் மாஓ சேதுங் எழுதியிருந்தார்.

படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும்

Wednesday, January 27th, 2010

க. கைலாசபதி

எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.

ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் சரி, அல்லது சமுதாயப் போராட்டத்திலும் சரி, இவ்வளவுகோல் யாந்திரீக மயமாய்ப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதொன்றன்று. ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களும் வெற்றி பெறுவதில்லை. தோல்வியும் அடைகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த குறைபாட்டினால் அன்று. புறக் காரணங்களினாலாகும். ஆயினும் நடைமுறையில தவறுகள் திருத்தப்பட்டுச் சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன. இவ் வளர்ச்சி முறையைச் சுருள்வட்டத்துக்கு ஒப்புமை கூறுவர் சிலர். விஞ்ஞானக் கருத்துக்களில் தோய்ந்து நவ கவிதைகள் பல பாடியுள்ள முருகையன் இப் பொருளையே அடியும் முடியும் என்ற கவிதையிற் பாடுகிறார். நீண்ட அப் பாடலிற் சில பகுதிகளை மாத்திரம் இங்கே காட்டுவோம்.

இக்காலத் தியல் கொண்டு கணக்குப் போட்டோம்
ஏதிர்காலப் போக்குகளை முன் அறிந்தோம்
முற்கால மர்மத்தை ஒதுக்கி நீக்கி
முன்னேற லானோம் நாம்–முடிவில்லாமல்
அப்பாலும் அப்பாலும் நெடிது செல்ல
அதற்கப்பால்—அதற்கப்பால் திகைத்து நின்றோம்.
நிற்காமல் மிக மெதுவாய்ப் பின்னும் செல்வோம்
நிகழ்ச்சிகளின் திருவடியைக் காண எண்ணி.
எதிர்காலப் போக்குகளை அறிதலன்றி
இயன்றவரை அதை மாற்றும் போராட்டத்தும்
விதவிதமாய் முயலுகிறோம். விரும்பத்தக்க
விளைவுகளும் பெறுகின்றோம்….

எட்டும் இனி என நினைத்தோம்; ஐந்தடிக்குள்
இருக்கும் என்று சென்றாலோ… இன்னும் சற்று
மட்டும் ஒரு சிறிது செலின், கைகளுக்குள்
வசப்படுதல் நிசம் என்று நிச்சயித்தோம்.
கிட்டுவது போல் இருந்து கிட்டாதாகி
கிடையாத தோற்றரவோ என ஐயற்று
நெட்டுயிர்த்தோம். ஆனாலும் மீண்டும் மீண்டும்
நிமிர்ந்தெழுந்து மறுபடியும் நகரலானோம்.

நீந்தப் பழகுவதற்குத் தண்ணீரில் இறய்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீச்சல் அறிவு முழவதும் நேரடி அனுபவத்திலிருந்தே உண்டாகிறது. ஆனால் பல சமயங்களில் ‘இயலாது’ ‘முடியாது’ என்ற ஐயறவுகளெல்லாம் தோன்றுவது இயற்கை. விடாப்பிடியாகத் தொடர்ந்து முயல்வதே இறுதி வெற்றிக்கு வழி. அயல்நாட்டுப் பழமொழியொன்று கூறுவது போல “தோல்வி என்பது வெற்றியின் தாய். இடறி விழுதல் அறிவில் எழுதல்” என்பதாகும்.

புறநிலை உலகத்தைப் பார்த்து அதன் பண்புகள் சிலவற்றை வருணித்தால்  மட்டும் போதாது என மேலே காட்டினோம். “சுத்த இலக்கியவாதிகள்” சிலர் தாம் நவீன உலகைக் கண்டவாறே வருணிப்பதாகக் கூறுவர். அதாவது எழுத்தாளனது ‘அரசியல்’ ‘பொருளியல்’ கருத்துக்களின் தலையீடு இன்றி ‘புறநிலை’ உலகை நேர்மையுடன் படைப்பதாகப் பெருமைப்படுவர். ஆனால் அவ்வாறு கூறுவதே ஒருவகையான அரசியற் கண்ணோட்டந் தானே. ஆண்மையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய தந்திரபூமி புறவுலகைப் புரிந்துகொள்ள மாட்டாத ‘சுதந்திர’ எழுத்தாளரது பிரலாபமாகவே முடிந்தது. மற்றோர்களைப் பார்க்கச் சிறந்த முறையில் உலகின் இயல்பை உணர்ந்து, தனது துன்பத்துக்கும் தன் போன்ற பிறரது துன்பங்களுக்கும் நிவாரணங் காணக்கூடிய கஸ்தூரி நடைமுறைக்கும் ‘ஆன்மீக’த் தத்துவங்களிற் சரண் புகுவது பமைய பிரமஞானம். இன்றும் எத்துணை வலிமையுடையதாய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தந்திரபூமியை சி.பி. சினோ எழுதிய Corridors of Power என்ற ஆங்கில நாவலோடு ஒப்புநோக்கினால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பல விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாயிருக்கும். அதிலும் பாலியல் வருகிறது. ஆனால் ஆன்மீகப் பாத்திரங்கள் புகலிடம் தேடும் போலி முடிவுகள் அதிற் காணப்படா. இந்திரா பார்த்தசாரதியின் பாஷையிற் சினோவின் இந் நாவலுக்குப் பெயரிடுவதானால் அதிகாரபூமி என்று சொல்லிக் கொள்ளலாம். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள பிணைப்பை ‘உள்ளிருந்து’ உயிர்த் துடிப்புடன் சித்தரிக்கிறார் ஆசிரியர் சினோ. ஆங்கே தத்துவ விசாரத்துக்கு இடமேயில்லை. Mechanics of Power எனப்படும் அதிகாரத்தின் இயக்கப்பாடுகளை இயன்றவரை புறநிலை உண்மையாகக் கொண்டு பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதியோ தந்திரபூமியில் நசிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு ஆய்வறிவாளனையே உருவாக்கியுள்ளார். இது சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டையும் இயக்கப்பாடுகளையும் தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி, புறநிலை உண்மை மறுப்புமாகும்.
எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையிற் பங்கு கொண்டாலன்றி, இன்றைய காலகட்டத்தில் புறநிலைக்குப் பிசகாத நாவலைப் படைக்க இயலும் என நான் நம்பவில்லை. அதையே தந்திரபூமி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கிறது.

இந்நிலையில், தமிழர் சமுதாயத்திற் காணும் பல விஷயங்களின் அடிமுடியைதத் தேடிக் காண வேண்டும் என்ற அவா பல இளைஞரிடத்தே காணப்படுகிறது. இது வெறும் கருத்தாக மட்டுமல்லாது செயலோடு இணைந்ததாகவும் காணப்படுகிறது. குலோத்துங்கன் என்ற கவிஞர் அண்மையில் எழுதிய ஒரு கவிதையில் இதைக் காணலாம்.

அறிவன்றி ஒளியெதுவும் அறியோம் இன்றெம்
ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும்
தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித்
திசையெங்கும் அலைபவர் நாம்; திறந்த நெஞ்சர்,
விரிகின்ற கொள்கையினர்; மாற்றம் இல்லா
விதியெதையும் எக்காலும் ஒப்போம்;; சாலச்
சிறிதென்ற அணுவொன்றில் பார் புரக்கும்
செல்வமெலாம் காண்கின்ற திறத்தவர் யாம்
எண்ணுவதும் படைப்பதும் எம் பணிகள் யாங்கும்
எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான
மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நாளை
வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக
உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி
உழைப்பதுமே யாம் மகிழும் இன்பம்; மற்றும்
விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை
மீளாத நரகெனினும் பயந்தோ மில்லை!

“நாமார்க்குங் குடியல்லோம்” என்ற அப்பரின் குரலையும் “உண்டாலம்ம இவ்வுலகம்” எனத் தொடங்கிப் பாடிய இளம்வழுதியின் குரலையும் நினைவூட்டும் இப் பாடல், கொள்கையும் செயலும் (theory and practice) இணைய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது.

அவ்வாறு கொள்கையும் நடைமுறையும் இணைந்தாலன்றிப் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள அரசியல் பொருளாதார அமைப்பையும் அதிலிருந்து பிரிக்க முடியாத பண்பாட்டையும் ஒதுக்கி அப்புறப்படுத்த இயலாது. தூய சிந்தனை, சுத்த இலக்கியம் என்பன போன்ற குரல்கள் பழைய பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் அடிக்கல்லாகக் கொண்டவை. எனவே புதிய அமைப்பிலேயே புதிய பண்பாடும் இலக்கியமும் தோன்ற முடியும். அதைத் தோற்றுவிப்பதற்கான பணிக்கு அறிவாராய்ச்சியும் அதற்கு இன்றியமையாத அடிமுடி தேடலும் ஊக்கத்துடன் பயன்பட வேண்டும்.

(‘அடியும் முடியும்’ நூலிலிருந்து அதே தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி நன்றியுடன் மீள்பிரசுரிக்கப் படுகிறது).

இஸ்ரேல் யூதன் ஒருவனுக்கும் அராபியன் ஒருவனுக்குமிடையே உரையாடல்

Wednesday, January 27th, 2010

சமீஹ் அல் காசிம்

 

என் பாட்டன் பாட்டியர் அவுஷ்விற்சில் எரிக்கப்பட்டனர்

என் இதயம் அவர்களுடன் உள்ளது. ஆனால் என் உடலிலிருந்து சங்கிலியை நீக்கிவிடு

உன் கைகளில் என்ன?

ஒரு பிடி விதை

சினம் உன் முகத்தைச் சிவக்க வைக்கிறது

அது தான் நிலத்தின் நிறம்

உன் வாளை உருக்கிக் கலப்பையாய் மாற்று

காணி எதுவும் நீ விட்டுவைக்கவில்லை

நீ ஒரு குற்றவாளி

நான்  எவரையும் கொல்லவில்லை எவரையும் ஒடுக்கவில்லை

நீ ஒரு அராபியன்; நீ ஒரு நாய்

கடவுள் உன்னைக் காப்பாற்றுவாராக அன்பைச் சுவைத்துப் பார் ஒளிக்கு வழி விடு

(தமிழில் இ. முருகையன்
நன்றி: பலஸ்தீனக் கவிதைகள் / எம். ஏ. நுஃமான்)