ஆசிரியர் தலையங்கம்
மக்கள் முன்னாலுள்ள சவால்கள்
வருட முற்பகுதியில் சனாதிபதித் தேர்தல் சொல்லிய செய்தியையே ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மீளவும் சொல்லின.
போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கான நன்றியைச் சனாதி பதித் தேர்தலில் ராஜபக்சவின் தலைமைக்குக் காட்டியது போலவே சிங்கள மக்கள் பொதுத் தேர்தலிலும் நடந்துகொண்டனர். அரசாங்கத்தின் கொள்கைகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்தக்கூடிய மாற்றுக் கொள்கைகளோ நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான மாற்று வேலைத்திட்டமோ இல்லாத எதிர்க் கட்சிகளால் மக்களுக்கு நம்பிக்கையூட்ட இயலவில்லை. அதற்கும் மேலாகச் சனாதிபதித் தேர்தலிற் பயன்பட்டவாறே, அரச ஊடகங்கள் உட்பட்ட அரச வளங்களும் அதிகார வலிமையும் வன்முறையும் மிரட்டலும் கேட்பாரின்றிப் பிரயோகிக்கப்பட்டன.
குறைந்ததொரு பாராளுமன்றப் பெரும்பான்மை வலிமையுடனேயே மூன்றிலிரண்டு பங்குப் பெரும்பான்மையை விலைக்கு வாங்கக் கூடிய ஒரு பாராளுமன்ற அரசியற் பின்புலம் இருக்கையில், ஏறத்தாழ மூன்றிலிரண்டு பங்குப் பெரும்பான்மையை வென்றுள்ள அரசாங்கம், மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்குத் தட்டுப்பாடாகவுள்ள ஆறு ஆசனங்கட்கு வலை வீச முன்னரே, தம்மை விற்பதற்கு ஆயத்தமென எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சைகை காட்டியுள்ளார்கள்.
சனாதிபதி குடும்பத்தின் ஆட்சியை நிரந்தரமாக்குவதற்கான பணிகள் இப்போது மும்முரமாக்கப்பட்டுள்ளன. வரப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் தனிமனித, குடும்ப, கும்பல் ஃபாசிச சர்வாதிகார ஆட்சி வராமற் தடுக்கப் பாராளுமன்ற அரசியலையோ எதிர்க் கட்சி களையோ நம்பியிருக்க முடியாது. அதற்கெதிரான உறுதியான புரட்சிகர மாற்று அரசியல் வடிவம் ஒன்று விருத்தி செய்யப்படவேண்டும்.
சிங்கள மக்களைப் பீடித்திருக்கும் பாராளுமன்ற அரசியலிலிருந்து அவர்களை மீட்பதானால், சிங்கள முற்போக்கு, இடதுசாரிச் சக்திகள் அந்த அரசியலிருந்தும் என்.ஜி.ஓ. உறவுகளிலிருந்தும் தங்களைப் பூரணமாக மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். சிங்கள மாக்சிச லெனினிசவாதிகள், தங்களை அமைப்புமுறையாகக் கட்டியெழுப்பி அரசியல் வேலைகளை முன்னெடுக்காமல், தவறான அரசியற் போக்குக்கட் கெதிராகப் போராட இயலாது. ஏதிர்வரவுள்ள நெருக்கடிமிக்க காலம், ஃபாசிச சர்வாதிகாரத்திற்குப் பணிந்து போவதற்கும் புரட்சிகர அமைப் பாக ஒழுங்கமைப்பதற்குமிடையே தெரிவு எதையும் விட்டுவைக்காது.
சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீதான ஒடுக்குமுறை மோசமாவதற்கான வாய்ப்புக்களே அதிகம். அவர்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. அவர்களது பாராளுமன்றப் பிரதிநிதிகள் தங்களது சுயநலத்தைப் போணுவதற்காகத் தங்களது மக்களின் நலன்களை இதுவரை புறக்கணித்துக் காட்டிக் கொடுத்து வந்தது போலவே இனியும் நடப்பர் என்பதிலும் ஐயம் வேண்டாம். எனவே மாற்று அரசியலுக்கான தேவை சிங்கள மக்களை விட அவசரமாகத் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கே உண்டு. அவ் வகையிற் சென்ற சில மாதங்களில் நடந்த தேர்தல்களில் அவர்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், தேர்தல் பற்றிக் காட்டியுள்ள அக்கறையீனம் ஒரு சாதகமான அம்சமாகும். அது எவ்வாறு மாற்று அரசியலாக வளர்த்தெடுக்கப்படக் கூடும் என்பது அவர்களிடையேயுள்ள முற் போக்கு, இடதுசாரிச் சக்திகளின் கையிலேயே உள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அந்நிய ஊடுருவல் வலுத்து வருகிறது. முக்கியமாக, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்ற விசாரணை, ஐ.எம்.எவ். நிபந்தனைகள் என்ற வடிவங்களில் மேற்குலகும், வர்த்க உடன்படிக்கைகள் முலமும் தேசிய இனப் பிரச்சனையில் தலையீட்டின் மூலமும் இந்தியாவும், தங்கள் அரசியல், பொருளாதாரப் பிடிகளை வலுப்படுத்துகின்றன. யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தமது பொருளாதாரப் பிடியை வலுப்படுத்தி வரும் அதே வேளை, சீனாவும் பல்வேறு உட்கட்டுமான, நிர்மாண, அபிவிருத்தி வேலைகளின் மூலம் தனது செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறது. இலங்கை அந்நிய மூலதனத்தினதும் ராணுவ-அரசியல் ஆதிக்கத்தின தும் போட்டிக்களமாகிச் சீரழிவதைத் தடுக்கவும் பிரதான முரண்பாடான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு அடிப்படைத் தேவையாகிறது.
இந்த நிலையில் ஜூன் இறுதி வாரத்தில் நடந்து முடிந்த புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிக் கட்சியின் ஐந்தாவது தேசிய மாநாடு மாற்று அரசியலுக்கும் மக்கள் போராட்டத்துக்குமான நம்பிக்கைகட்குப் புத்துயிரூட்டியுள்து. மாநாட்டு ஆவணங்களை இவ்விதழில் வழங்கு வதில் செம்பதாகை பெருமை கொள்கிறது.