Archive for the ‘இதழ் 5’ Category

மக்கள் முன்னுள்ள தெரிவுகள்

Saturday, April 3rd, 2010

இந்த ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல், சிங்கள மக்கள் நடுவே, மூன்று பேரினவாதக் கூட்டணிகளிடையிலான போட்டியாக வுள்ளது. அரசாங்கக் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்துகொண்ட விதமாகவே இத் தேர்தலிலும் அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் பெரும் வெற்றி யூஎன்.பியையம் ஜே.வி.பியையும் கணிசமாகப் பாதித் துள்ளது. பொதுத் தேர்தலிலும் யூ.என்.பி. தன் அடையாளத்தைத் தவிர்த்தல் அதன் எதிர்காலத்ததைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற எண்ணம் யூஎன்.பியினுள் வலுவாகியது. யூ.என்.பியின் சின்னத்தின் கீழ்த் தேர்தலில் நின்றால், ஏற்கெனவே யூ.என்.பியுடன் கூட்டுச் சேர்ந்ததனாற் கவிழ்ந்த நம்பகத்தன்மையை முற்றாக இழக்க நேரும் என்ற அச்சம் ஜே.வி.பியினுள் வலுவாக இருந்தது. எனவே யூ.என்.பி.-ஜே.வி.பி. ஐக்கிய முன்னணி இயலாத ஒன்றாகி விட்டது.

ஜே.வி.பி. – சரத் பொன்சேகா உறவு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு க்கு முன்பே இருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, சரத் பொன்சேகா தலைமையில் ஜே.வி.பி;. வழிநடத்தும் இன்னொரு பேரினவாதத் தேர்தல் கூட்டணி உருவாகியுள்ளது. ஆனால், சரத் பொன்சேகாவின் கைதுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கட்கும் மேலாக, அவரையும் அவரது குடும்பத்தையும் தொடர்பு படுத்திய நிதி ஊழல் குற்றச்சாட்டுக்கள், அவரைப் புனிதராகக் காட்டி வாக்குச் சேகரிக்கும் கூட்டணிக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு, தென்னிலங்கையில் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கவும் அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும் வல்ல மாற்று அரசியல் அணியொன்றைக் கட்டியெழுப்பும் வாய்ப்பு இம் முறையும் தவறவிடப் பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு, குறுகிய தேசியவாதத் தலைமைகளையும் பாராளுமன்ற இடதுசாரிகளையும் மட்டுமன்றிச், சுயநல நோக்காற் பிளவுண்டு கிடக்கும் ட்ரொட்ஸ்கியக் கட்சிகளையும் கணிசமானளவு சாரும்.

இவ்விதமான அவலத்திடையே, முதலாளிய உலகமயமாக்கலைத் தடையின்றித் தொடர்வதற்கான நிலைமைகள் மேலும் கனிந்துள்ளன. அதற்கு வசதியாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் பலவேறு செயற்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஊடகத் துறை மீதான நெருக்குவாரங்கள் வலுப்பட்டுள்ளன. காவல் துறை, முன்னெப்போதும் இல்லாதளவு, ஆளுங் கட்சியின் அரசியற் கருவியாக உள்ளது. இன்றைய ஆட்சி மீளுமாளால் அடக்குமுறைகள் மேலும் வலுப்படுவது உறுதி. அதே வேளை, பிரதான எதிரணிகள் இரண்டிடமும் ஜனநாயக மீட்புக்கான செயல் திட்டங்கள் இல்லை.

பலவீனமான பொருளாதாரம் மக்கள் மீது மேலும் சுமையேற்றும் போது, அரச அடக்குமுறை கூடும். ஏலவே வலுப்பட்டுள்ள ராணுவ பொலிஸ் அதிகார யந்திரங்கள் தமது செல்வாக்கு நலிவதற்கு இடங் கொடுக்கப் போவதில்லை. எல்லா விதமான அந்நியப் பொருளாதார ‘உதவிகளும்’ மக்கள் மீதான சுமைகளைக் கூட்டுமே ஒழியக் குறைக் காது என்பதை மனதிற் கொண்டால், இன்றைய சூழலில், மக்கள் பாரிய பொருளாதாரச் சுமைகட்கும் அடக்கு முறைக்கும் உட்படுவதை வரக்கூடிய எந்த ஆட்சியாலும் தவிர்க்க இயலாது என விளங்கும்.

இந்த நிலையில், எழக்கூடிய சிங்கள மக்களின் எதிர்ப்பைத் திசை திருப்பச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது இன ஓடுக்கலை வலுப் படுத்தித் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்காமல் இழுத்தடிப்பது எந்தப் பேரினவாத அரசாங்கத்துக்கும் வசதியானதே. எனவே இலங் கையின் அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கான முன்னெடுப்பு மேலும் முக்கியமாகிறது.

இப் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாற்று அரசியல் பாதையை வலியுறுத்திப் போட்டியிடும் கட்சியாகப் புதிய-ஜனநாயகக் கட்சி மட்டுமே உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைத் தேசிய இனங்களதும் இடதுசாரிக் கட்சிகளதும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துமாறு புதிய-ஜனநாயகக் கட்சி விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்துத் தனித்துப் போட்டியிட்ட மூன்று ட்ரொட்ஸ்கியக் கட்சி களதும் அரசியல் அற்பத்தனத்தை மக்கள் தெளிவாகவே இனங்கண்டு கொண்டனர். அவ்வாறே, முற்றிலும் சுயநல நோக்கத்துடன், பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவரையோ மற்றவரையோ ஆதரிக்கும்படி சிறுபான்மைத் தேசிய இனத் தலைமைகள் விடுத்த கோரிக்கைகளை மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கின் தமிழ் மக்கள், நிராகரித்தனர்.

புதிய-ஜனநாயகக் கட்சி இவ் விடயத்தில் நேர்மையாகவும் தெளிவா கவும் நடந்துள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களதும் இடதுசாரிக் கட்சிகளதும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த இயலாத நிலையில், மக்கள் தமது வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கி;த் தேர்த லை நிராகரிக்க வேண்டும் என அது மக்களைக் கேட்டுக் கொண்டது. வடக்கில் 80மூ மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை நிராகரித்ததை நாம் ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகக் கொள்ளலாம்.

இத்தகைய ஒரு சூழலிலே, பாராளுமன்றப் பாதை மூலம் ஒடுக்கப் பட்ட தேசிய இனங்களோ இலங்கையின் சுரண்டப்படும் உழைக்கும் மக்களோ விடுதலையோ விமோசனமோ பெற இயலாது என்ற தெளிவு டன் யாழ்ப்பாணத்திலும் மலையகத்திலும் புதிய-ஜனநாயகக் கட்சி தேர்தலிற் போட்டியிடுகிறது. தேர்தல் பிரசார வேலைகளைக் கூட மாற்று அரசியலுக்கான ஒரு தளத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே புதிய-ஜனநாயகக் கட்சி முன்னெடுத்து வந்துள்ளது.

தமிழ்த் தேசியவாதம் பேசிக்கொண்டு இந்திய அல்லது அமெரிக்கச் செய்நிரல்களை முன்னெடுக்கிற கட்சிகளினதோ அரசாங்கத் தரப்பை யோ யூ.என.பியையோ அண்டி நிற்கிற தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகளினதோ சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை ஏற்படுத்தத் தயங்காத சில இடதுசாரிக் கட்சிகளினதோ கொள்கை விளக்கங் களைப் புதிய-ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கத் துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், புதிய-ஜனநாயகக் கட்சி மட்டுமே, தனது இலக்குக்களையும் வேலைத் திட்டத்தையும் பற்றி ஒளிவுமறைவின்றிப் பேசுவதுடன் மக்கள் அரசியலை முன்னெடுக்கும் நோக்குடையது என்பது தெளிவாகும்.

நாட்டை எந்தக் கட்சியோ கூட்டணியோ ஆண்ட போதும், வடக்கு-கிழக்கில் அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள் என யாருடைய ஆதிக்கம் நிலவிய போதும், தனது கொள்கையிலோ நிலைப்பாட்டிலோ விட்டுக்கொடுப்பின்றி உறுதியாக இருந்துவந்த கட்சி என்ற வகையிலும், மலையகத் தமிழரின் கல்வி, தொழில், பிரதேசம், தேசிய இன உரிமை என்பவற்றுக்காகவும் தோட்டத் தொழிலாளரின் நியாயமான ஊதியத்திற்காகவும் சந்தர்ப்பவாதக் கட்சிகளின் காட்டிக் கொடுப்புக்களின் நடுவிலும் உறுதியாகப் போராடி வந்த கட்சி என்ற வகையிலும், மக்களுக்கான மாற்று அரசியல் பாதையை முன்னெ டுக்கவும் வரவுள்ள காலத்தில் இலங்கையில் உருவாகக்கூடிய பிற ஏகாதிபத்திய விரோதச் சக்திகளுடன் தோளோடு தோள் நின்று போராடக் கூடிய அதி முக்கிய அமைப்பாகப் புதிய-ஜனநாயகக் கட்சியே மக்கள் முன்னுள்ளது.

யாழ்ப்பாணம், நுவரெலியா மாவட்டங்களிற் போட்டியிடும் புதிய ஜனநாகக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம்  மக்கள் மாற்று அரசியற் பாதை ஒன்றன் உருவாக்கத்தைப் பெரிதும் ஊக்குவிப்போராவர்.

புதிய-ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கம்

Saturday, April 3rd, 2010

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2010
புதிய-ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கம்

அறிமுகம்
இலங்கை மக்கள் அனைவரும் இரண்டு நிலைகளில் மோசமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் அனுபவித்த வண்ணமே உள்ளனர். ஒன்று பேரினவாத முதலாளித்துவ ஒடுக்குமுறை காரணமான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மை. இரண்டாவது வர்க்க ஒடுக்குமுறையினால் உருவாகி வளர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிகளும் பிரச்சினைகளும். இவற்றுடன் கூடவே பல்வேறுபட்ட அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு அவற்றுடன் மல்லாட வேண்டியவர்களாக இருந்து வருகின்றனர். இவை யாவற்றிலும் ஆளும் வர்க்க சக்திகளாக உள்ள அரசாங்க- எதிர்த் தரப்பினர் அனைவரும் ஒரு புறமாகவும் ஏகப் பெரும்பான்மை யான அனைத்து உழைக்கும் வர்க்க மக்கள் மறுபுறமாகவும் இருந்து வருகின்றனர். இதில் காணவேண்டிய மற்றொரு உண்மை யாதெனில் பிரதான முரண்பாட்டுப் பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினையிலும் அடிப்படை வர்க்க முரண்பாடு தோற்றுவிக்கும் பொருளாதாரப் பிரச்சினையிலும், உலக மேலாதிக்க ஏகாதிபத்திய சக்திகளும் பிராந்திய மேலாதிக்கவாதிகளும் தலையீடுகளையும் குறுக்கீடு களையும் மேற்கொண்டு வந்தமையாகும். மேற் கூறியவற்றின் பாரிய தாக்கங்களையும் எதிர் விளைவுகளையும் நாட்டின் அரசியல்-பொருளதார-சமூக-பண்பாடடு அம்சங்களின் அனைத்துத் தளங்களிலும் மக்கள் துன்பதுயரங்களாக அனுபவத்து வருகிறார்கள். எனவே அவை பற்றிய புதிய-ஜனநாயகக் கட்சியின் அடிப்படைக் கொள்கை நிலைப்பாட்டினையும் அவற்றுக்கான கோரிக்கைகளையும் சுருக்கமான வடிவில் பொதுத் தேர்தல் கொள்கை விளக்கமாக முன்வைக்கின் றோம்.

தேசிய இனப் பிரச்சினையும் தமிழரும்
இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சினையே என்பதைப் புதிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது. போரின் முடிவு தேசிய இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. பேரினவாதம் அரச இயந்திரத்துடன் மேலும் நெருக்கமாகப் பிணைக்கப் பட்டுள்ளதனால், தமிழ், முஸ்லிம், மலை யகத் தமிழ் மக்கள் ஆகிய மூன்று தேசிய இனங்கள் மீதுமான தேசிய இன ஒடுக்கல் தீவிரமடைந்துள்ளது. மூன்று தேசிய இனங்களும் தங்களது இருப்பின் தன்மைக்கமைய வெவ்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

பொதுப்பட எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனத்தவரும் பாரபட்ச மாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுடைய தாய்மொழிக் கல்வி யுரிமை, தங்கள் மொழியில் கருமங்களைச் செய்விக்கும் உரிமை என்பன சட்டவிரோதமான முறையில் அவர்கட்கு மறுக்கப் படுகின்றது. அதை விட, உயர் கல்வி, தொழிற் பயிற்சி, மற்றும் உத்தியோகத் துறை இட ஒதுக்கீடுகள் அவர்கட்குப் பாதகமாகவே உள்ளன. அதற்கும் மேலாகப் பாரம்பரியப் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான பேரினவாத இன ஒடுக்கல் போராக முன்னெடுக்கப் பட்டதன் பயனாகத் தமிழ் மக்கள் பெருமளவிலான உயிரிழப்பிற்கும் உடற் தேசத்திற்கும் பாரிய பொருள் நட்டத்திற்கும் ஆளாகியுள்ளனர். உள்நாட்டிலும் வெளிநாடுகட்கும் இடம்பெயருமாறு பல லட்சக் கணக்கானோர் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளனர். இதன் நடுவே, உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் தமிழரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள நிலத்திற்கும் மேலாகத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் தமிழரைத் தமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராக்கும் நோக்கு டன் தீவிரப் படுத்தப் படுகின்றன.

அகதி முகாங்கள் எனப்படும் திறந்தவெளிச் சிறைக்கூடங்கள் ஒரு புறமிருக்க, பல ஆயிரக் கணக்கானோர் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கோ விசாரணையோ இல்லாது சிறை களிலும் தடுப்பு முகாம்களிலும் வாடுகின்றனர். தமிழ் மக்களும் மலை யகத் தமிழரும் மட்டுமன்றி முஸ்லிம்களும் சிங்களவரும் இவ்வாறு அரசியற் காரணங்கட்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலைக் கான மூல காரணம் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ஒடுக்கலே. எனினும், தமிழரின் தேசிய இனப் பிரச்சினையைத் தமிழரே தீர்த்துக் கொள்வர் என்று கூறப்பட்டு, முதற் கட்டமாகப் பாராளுமன்ற அரசியற் பேரங்களாகவும், இரண்டாங் கட்டமாகச் சாத்வீகப் போராட்டங்களாக வும் முன்னெடுத்த முயற்சி, மூன்றாங் கட்டமாக ஆயுதப் போராட்ட வடிவை எடுத்துத் தோற்றது. தோல்விக்கான காரணங்களில் இரண்டு அடிப்படையானவை. ஒன்று, எந்த நிலையிலும் தேசிய இன விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப் படவில்லை என்பது. அதுவே ஆயுதங்களை முதன்மைப் படுத்தவும் ஜனநாயக நடைமுறை களை நிராகரிக்கவும் காரணமானது. மற்றது, போராட்டத்தைக் குறுந் தேசியவாத நோக்கில் பிற ஒடுக்கப்பட்ட மக்களுடைய போராட்டங் களிலிருந்து தனிமைப் படுத்தியமை. அதன் விளைவாக, மேலாதிக்க வல்லரசுகளை நம்பியும் அவற்றுக்குச் சார்பாக நின்று உலகின் ஏகாதிபத்திய, மேலாதிக்க விரோதப் போராட்டங்கட்கு ஆதரவு தராது பாதகமாகவே செயற்பட நேர்ந்தது. அதனால், தமிழர் விடுதலைப் போராட்டம் இலங்கையினுள்ளும் உலக மட்டத்திலும் தனிமைப்பட்டுப் போக நேர்ந்தது. இம் மூன்று கட்டப் போராட்டங்களும் ஒரே தவறான குறுந் தேசியவாத உயர் வர்க்க மேட்டுக்குடிச் சிந்தனையால் வழி காட்டப்பட்டதனாலேயே அவை தமிழ் மக்களைப் பேரழிவினுள் தள்ளி விட்டன. எனவே, இத் தவறுகளினின்று மீண்டு, உழைக்கும் வர்க்கங் கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி அவர்க ளுக்கும் நாட்டின் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குமிடையில் போராட்ட ஐக்கியத்தை உருவாக்கி நாலாங் கட்டப் போராட்டத்தை முன்னெ டுக்க வேண்டியுள்ளது. விடுதலைப் புலிகளின் போராட்டம் வீழ்ச்சியை நோக்கிச் செல்ல முன்பிருந்தே இவ் விடயம் பற்றிப் புதிய-ஜனநாயகக் கட்சி தெளிவாகக் கூறி வந்துள்ளது.

முஸ்லிம் மக்கள்
முஸ்லிம்கள் நாடு முழுவதும் பரவி வாழுகிறதால் அவர்கள் வாழுகிற ஒவ்வொரு சூழலிலும் வௌ;வேறு விதமான ஒடுக்குமுறைகட்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய தொழில்களும் சிறு வணிகமும் பேரினவாத வெறிக் கும்பல்களது தாக்குதல்கட்கு உள்ளாவதுடன், காலத்துக் காலம் வௌ;வேறு பிரதேசங்களில் முஸ்லிம் சமூகங்கள் பயங்கரமான பேரினவாத வன்முறைக்கு முகங் கொடுத்தும் உள்ளன. அதை விடக், குறுகிய தமிழ்த் தேசிய வாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்துப் படுகொலைகளையும் நடத்தி யுள்ளது. 1990ம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப பட்டமை அவர்கட்கெதிரான ஒரு பெரிய கொடுமையாகும். அரசாங்கம் ஒரு புறம் தமிழரையும் முஸ்லிம்களையும் பிரித்து வைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், முஸ்லிம்களின் நிலங்களையும் உடைமைகளையும் உரிமைகளையும் பறிப்பதில் பேரினவாதக் கும்பல் கட்கு உடந்தையாகவே செயற்பட்டு வந்துள்ளது.

மலையகத் தமிழ் மக்கள்
மலையகத் தமிழ் மக்கள், 1948ம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்ட போதிலிருந்து தங்களது இருப்பிற்காகப் போராடி வந்துள்ளனர். 1963ம் ஆண்டின் சிரிமா-சாஸ்திரி உடன்படிக்கை அவர்கட்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் அநீதி. அதன் நடைமுறைப்படுத்தலுக்கு ஏதுவாக, அவர்கள் மீதான கொடிய உழைப்புச் சுரண்டலும் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்பு அவர்களிற் பலர் தோட்டங்களிலிருந்து விரட்டப்பட்டமையும் அமைந்தன. நீண்ட போராட்டத்தின் பயனாக அவர்கள் வென்றெடுத்த வாக்குரிமை மூலம் அரசியலில் அவர்கட்குக் கிடைக்கக் கூடிய குரலை அடக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தோட்டங்களை அழிக்கும் மேல் கொத்மலைத் திட்டம் போன்றன ஒரு புறமும் அவர்கள் மீதான பேரினவாத வன்முறை இன்னொரு புறமும் தொடர்கின்றன. மலையகத் தமிழர் ஒரு தேசிய இனமாகத் தம்மை அடையாளப் படுத்துவதை மறுக்கும் செயல்களில் பேரினவாதிகட்கு உடந்தையாக மலையகத் தலைவர்கள் எனப்படுவோரும் செயற்படுகின்றனர். இத்தகைய மலையகத் தலைமைகளை மக்கள் அடையாளம் காணவேண்டியும் உள்ளது.

தீர்வுக்கான வழி
நாட்டின் தேசிய இனப் பிரச்சினை மேலும் தீவிரமாகிச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிற இச் சூழலில், தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்றி இந்த நாட்டின் பிற பிரச்சினைகளைத் தீர்ப்பது இயலாது என்பதைப் புதிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்து கிறது. அந்த நோக்கில், நீண்டகாலத் தீர்வாகப் பின்வரும் கருத்தைப் புதிய ஜனநாயகக் கட்சி தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளது.
இலங்கையின் சகல தேசிய இனங்களையும் தேசிய சிறுபான்மை யினரையும் சமமாகக் கருதும் ஐக்கிய இலங்கையினுள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சிப் பிரதேசங் களையும், தொடர்ச்சியான பிரதேசங்களைக் கொண்டிராத சமூகத்தினருடைய தனித்துவத்தைப் பேணும் வகையிலான சுயாட்சி அமைப்புக்களையும் கொண்ட பல்லின பல் தேசிய நாடாக இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான நிலைக்கக் கூடிய தீர்வைக் காண முடியும்.

உடனடி நடவடிக்கைகள்
அதே வேளை, போரின் விளைவுகளையும் பேரினவாதத் தாக்குதல் களின் நேரடிப் பாதிப்புக்களையும் கருத்திற் கொண்டு, பின்வரும் உடனடியான நடவடிக்கைகளைப் புதிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்து கிறது.

●    போராற் பாதிக்கப்பட்டு இடப்பெயர்வுக்குள்ளான அனைவரும் தாமதமின்றித் தமது சொந்த வதிவிடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்.

●    போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்பு, புனர்வாழ்வு மூலமாக இயல்பு வாழ்வு மீட்கப்பட வேண்டும்.

●    போரிலான சகல இழப்புக்கட்கும் உரிய நட்ட ஈடு வழங்கப்பட்டு, சுயசார்பின் அடிப்படையில் சமூகங்கள் தம் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

●    மக்கள் பெருந்தொகையாக வாழும் பகுதிகளிலிருந்து படை முகாங்கள் நீக்கப்பட வேண்டும்.

●    வழக்கு விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவர்கட்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

●    திட்டமிட்ட குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டுச், சமூகங்களின் பாரம்பரியப் பிரதேச உரிமை பேணப்பட வேண்டும்.

●    தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுடைய வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பாரபட்சமும் இனத் துவேஷ நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு இனப் பகையைத் தூண்டுவோருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

●    தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நாட்டின் எப் பகுதியிலும் தமது தாய் மொழியில் கற்கவும் அரச கருமங்கள் உட்பட்ட சகல காரியங்களையும் தமிழில் செய்வதற்குமான சட்ட ரீதியான உரிமை பேணப்பட வேண்டும்.

●    முஸ்லிம்கட்கெதிரான துவேஷத்தைத் தூண்டி அவர்களது சமூகங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும்.

●    முஸ்லிம்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் அவர்கட்குரிய நிலத்தை அபகரிக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.

●    மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பகுதிகளில் அவர்களது இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

●    மலையகத் தமிழருக்கு, குறிப்பாகத் தோட்டத் தொழிலாள ருக்குப், போதிய சம்பள உயர்வு வழங்கப்பட்டு தமக்கான வீடுகளையும் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்புத் தொழில்களை விருத்தி செய்து சுயாதீனமான ஒரு பொருளாதார இருப்பைப் பேணுவதற்காக நிலத்தையும் கொண்டிருப்பதற்கான சட்டப்படியான உரிமையும் வாய்ப்பு வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

●    கல்வி, தொழில் வாய்ப்புக்களில் இன்னமும் பின்தங்கியே உள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தினருடைய கல்வி, தொழில் வாய்ப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

சமூக ஒடுக்குமுறைகள்
இலங்கையின் எந்தத் தேசிய இனத்தின் இருப்பும் நிலைப்பும் சுதந் திரமும் சுபீட்சமும் பிற தேசிய இனங்களது நலன்களிலிருந்து பிரிக்க இயலாதவை. எனவே தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்க ளுடைய விடுதலையினின்று முழு நாட்டினது நலன்களையும் பிரித்து நோக்க இயலாது. அதே போல, தேசிய மட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் இருக்கிற வர்க்கம், சாதி, பால் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை நாம் புறக்கணிக்க இயலாது. தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம், இன ஒற்றுமை என்கிற பேர்களில் சமூக ஒடுக்குமுறைகளைக் கண்டுங்காணாமல் இருந்து வந்த போக்கு தமிழ் மக்களின் விடுதலைக்கு எவ்வகையிலும் உதவ வில்லை என்பதை வரலாற்றின் பட்டறிவாக இங்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற பல தொழிற்சங்க உரிமைகளையும் சட்டரீதியான பிற தொழிலாளர் உரிமைகளையும் முதலாளிய உலகமயமாக்கலின் ஒரு பகுதியான தாராள தனியார் பொருளாதாரத்தின் கீழ் இழந்துள்ளனர்.

சாதியத்திற்கு எதிராக நமது மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைமையின் கீழ் பெறப்பட்ட வெற்றிகள் முழுமையான சாதிய ஆதிக்க ஒழிப்பைச் சென்றடையாமல் இன்னமும் பல தடைகள் சமூகத்தினுள் இருந்து வருகின்றன. குறுகிய தமிழ்த் தேசியவாதம் அத் தீய சக்திகளுக்கு உடந்தையாகவும் இருந்து வந்துள்ளது.

பெண்களின் கல்வி, வெளி வேலை வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ள போதும், அவர்களுடைய வேலைச் சுமை கூடியுள்ளது. அது ஒரு புறமிருக்க, தொழில் பார்க்குமிடங்களிலும் வெளியிலும் அவர்கள் பாலியற் துன்புறுத்தல்கட்கு உட்படுவது அதிகமாகியுள்ளது. எனவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் சாதி, இனம், வர்க்கம், என்ற அடிப்படைகளில் மட்டுமன்றிப் பால் அடிப்படையில் குடும்பத்தினுள் ஒருபுறமும் வெளியில் இன்னொரு புறமும் ஒடுக்கப் படுகின்றனர். ஆயுதப் போராட்டமோ நகர்சார்ந்த வேலை வாய்ப்புக்களே உழைக் கும் வர்க்கப் பெண்களுக்கு விடுதலையை வென்றுதர உதவவில்லை. பெண்ணியம் பற்றிப் பேசுவோருடைய அக்கறைகள் வசதி படைத்த, நடுத்தர வர்க்க எல்லைக்குள் நின்று விடுகின்றன.

எனவே, சமூக ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசினால் இன ஒற்றுமை, சமூக ஒற்றுமை என்பன குலையும் என்ற வாதத்தை நாம் என்றுமே ஏற்றதில்லை. புதிய ஜனநாயகக் கட்சி எந்தச் சமூக அநீதிக்கும் விலக்களித்ததில்லை. பேரினவாத ஒடுக்கு முறை உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளது. எனவே பின்வரும் கோரிக்கைகள் கட்சியின் தேர்தல் பிரகடனத்தில் உள்ளடங் குகின்றன.

●    திறந்த பொருளாதாரக் கொள்கையின் வரவையடுத்துத் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட சகல தொழிற்சங்க உரிமைகளும் மீள வழங்கப்பட வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை விலக்கில்லாமல் அனைத்துத் தொழில் துறைகட்கும் வழங்கப்பட வேண்டும்.

●    பொருட்களின் விலைஉயர்வு தடுக்கப்பட்டு வாழ்க்கைச் செலவு   கட்டுப்படுத்தப்படவேண்டும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

●    தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களது உரிமைகள் உறுதி செய்யப் பட வேண்டும்.

●    ஒழியாமல் எஞ்சியுள்ள சாதியக் கருத்தியல் சிந்தனையின் விளைவாக இன்னமும் கடைப்பிடிக்கப் பட்டுவரும் சாதியத் தீண்டாமை, சாதி அடிப்படையிலான பாரபட்சம், புற்க்கணிப்பு ஒடுக்கல் ஆகியன அறவே அகற்றப்பட வேண்டும்.

●    பெண்களுக்கெதிரான அனைத்துச் சமூக வன்முறைகட்கும் எதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுவதற்கும் மேலாக, ஆண்-பெண் சமத்துவச் சிந்தனை பாடசாலைகள் தொட்டு அனைத்துச் சமூக நிறுவனங்களிலும் வலியுறுத்தப்பட வேண்டும்.

●    வர்க்கம், சாதி, பால், பிரதேசம் ஆகிய அடிப்படைகளில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பிரிவினர்கட்குக், கல்வி, உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

மாற்று அரசியற் பாதை
மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை வென்றெடுக்க மக்களின் பரந்து பட்ட ஐக்கியத்தின் அடிப்படையில் சகல தேசிய இனங்களையும் சிறுபான்மைச் சமூகங்களையும் ஒன்றிணைத்த மாற்று அரசியலின் ஊடான ஒரு புதிய வெகுசனப் போராட்ட அணியைக் கட்டி யெழுப்புவது முக்கியமானது. சிங்கள மக்களைப் பகைவர்களாகச் காட்டி வந்த குறுகிய தமிழ்த் தேசியவாத நோக்கை முற்றாக நிராகரித்துப் பரந்துபட்ட சிங்கள உழைக்கும் மக்களை ஒரு நேச சக்தியாகக் கருதிச் செயற்படுவதன் மூலமே சிங்கள மக்களைப் பீடித்திருக்கும் பேரினவாதத்தை முறியடிக்கவும் தேசிய இனங்களின் உரிமைகளை ஏற்கச் செய்யவும் இயலும். அதன் மூலம், தமிழ் மக்களை இலங்கையின் பிற சமூகங்களிலிருந்தும் தனிமைப் படுத்துகிற போக்கிலிருந்து இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் காப்பாற்றி முன்னோக்கிக் கொண்டு செல்லவும் இயலுமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கமும் பிராந்திய வல்லரசான இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களும் தேசிய இனப் பிரச்சினையைப் போராக்க உதவியதுடன் அதற்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுவதற்குத் தடையாகவும் இருந்து வந்துள்ளன. இலங்கை மீது ஏகாதிபத்தியத்தின் பிடி கடந்த முப்பது ஆண்டுகளில் மிகவும் இறுகிப் போயுள்ளது. இலங்கை மிகப் பெரிய கடனாளி நாடாக உள்ளது. தேசிய பொருளாதாரமற்ற இலங்கை, தன் கூலி உழைப்பை நேரடியாகவோ ஆடைத் தொழிற்சாலைகள் என்பன மூலமோ உலகச் சந்தையில் விற்று வருகிற வருமானத்தின் மீது தங்கியுள்ளது. எனவே அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்தியத்தினின்றும் இந்திய மேலாதிக்கத்தினின்றும் நாட்டின் இறைமையையும் பொருளா தாரத்தையும் மீட்கும் பணி முக்கியமானது. தேசிய இனப் பிரச்சினை யைத் தமது குறுக்கீட்டுக்கும் வணிக, அரசியல், ராணுவ ஆதிக்க நோக்கங்கட்கும் பயன்படுத்த முனையும் சகல அந்நியத் தலையீடு களும் எதிர்க்கப்பட வேண்டியவையே.

நமது புதிய-ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தின் மூலம் எவ் வகையிலும் பயனுள்ள ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்று நம்பியதில்லை. அத்தகைய எதிர்பார்ப்பை என்றும் மக்கள் மத்தியில் பரப்பியதும் இல்லை. இத் தேர்தலின் முக்கியத்துவம், மக்கள் மத்தியில் சரியான சிந்தனைகளைக் கொண்டு செல்வதற்கும் அதன் மூலம் மாற்று அரசியலின் ஊடாக மக்களை அணி திரட்டு வதற்குமான வாய்ப்பேயாகும்.

நமது கட்சியின் நிலைப்பாட்டை ஆராய்ந்து அறிந்து ஆதரவு தருவதன் மூலம் மக்கள் தமது உரிமைகட்கான போராட்டத்தை வலிமைப்படுத்துகின்றனர். அந்த ஆதரவின் வலிமையோடு நமது புதிய-ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் தனது போராட்டப் பாதையில் தளராது மக்களோடு இருந்து செயற் படுவதுடன் மக்களை அணிதிரட்டி போராட்டப் பாதையில் முன் செல்லும் என நாம் உறுதி கூறுகிறோம்.

இப் பொதுத் தேர்தலில் மக்கள் எமக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்குவார்களாயின் உழைக்கும் மக்களுக்கு நேர்மையான அரசியல் சக்தியாக இருந்து செயற்பட்டு ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பி முன் செல்வோம் என்றும் உறுதியளிக்கின்றோம்.

சகோதரக் கட்சிகட்கிடையிலான முரண்பாடுகளைக் கையாளுவது பற்றி

Saturday, April 3rd, 2010

(புதிய-ஜனநாயகக் கட்சியின் சர்வதேச உறவுகள் கற்கைக் குழு வரைந்த ஆவணம்)

முன்னுரை
சில மார்க்சிய லெனினிய அமைப்புக்களிடையிலும் மார்க்சிய லெனினியப் பார்வையுடைய தனிமனிதர்களிடையிலும் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் விதத்தை நோக்கும் போது, முரண்பாடுகளைக், குறிப்பாக எதிரியுடன் சம்பந்தப்படாத முரண்பாடுகளைக், கையாள்வது பற்றித், தோழர் மாஓ சேதுங்கிடமிருந்து அவர்கள் அதிகம் கற்றுள் ளார்களா என்று எண்ணத் தேன்றுகிறது.

கருத்து முரண்பாடும் உடன்பாடின்மையும் கம்யூனிஸற்றுக்களுக்குப் புதியனவோ பழக்கமற்றனவோ அல்ல. தோற்றத்தில் ஆழமான கருத்து வேறுபாடுகள், கம்யூனிஸ்ற் கட்சிகட்குள் உரையாடலும் விவாதமும் கொண்டு தீர்க்கப்பட்டு, முடிவில் மேலுங் கூடிய ஒற்றுமைக்கு வழி செய்துள்ளன. கூரிய கருத்து முரண்பாடுகளிலும் மேலாகப், போதிய உரையாடல் இல்லாமையாலேயே பிளவுகள் நேர்ந்துள்ளன. உரை யாடலையும் விவாதத்தையும் மறுப்பதன் மூலம் பிறரை மேவ முற்பட்ட தனிமனிதர்கள் கணிசமான கேடு செய்துள்ளனர். எனினும், அகமுரண் பாடுகளைத், தேவைக்கமைய, உரையாடியோ விவாதித்தோ தீர்க்கும் விருப்பே, பொது விதியாக, மேலோங்கி இருந்து வந்துள்ளது. அச் செயல்முறையின் முக்கியமான ஒரு பகுதியாக விமர்சனமும் சுய விமர்சனமும் இருந்து வந்துள்ளன.

அமைப்பொன்றினுள் முரண்பாடுகளை ஜனநாயகமான முறையில் தீர்க்கும் செய்முறை, நல்ல கம்யூனிஸ்ற்றுக்களின் தலைமையிலான பரந்துபட்ட அமைப்புக்களினுள்ளும் குறுகியகாலக் கூட்டமைப்புக்களி; னுள்ளும் வெற்றி கண்டுள்ளது. ஏனெனில், நல்ல கம்யூனிஸ்ற்றுக்கள் பொதுத் தேவை பற்றிக் கவனமிழப்பதில்லை என்பதுடன் —அறிவிக்கப் பட்ட இலக்குக்களை அடைய வேறுபாடுகள் தடையாக அமையும் போதோ வஞ்சகத்தை எதிர்நோக்கும் போதோ அன்றிப் — பொதுவான நலன்கள் வேறுபாடுகளை மேவிநிற்பதை உறுதிப்படுத்தவே முனைகின் றனர்.

இடதுசாரிக் கட்சிகளினுள் ஏற்படும் பிளவுகள் வெளித்தெரிய நீண்ட காலம் எடுப்பதற்கான ஒரு காரணம், ஜனநாயக மத்தியத்துவ நடை முறையாகும். உரையாடியும் விவாதித்தும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சிகள் எப்போதுமே எடுக்கப்படடு வந்துள்ளன. சோவியத் கம்யூனிஸ்ற் கட்சிக்குள்ளும் சீனக் கம்யூனிஸ்ற் கட்சிக்குள்ளும் நடந்த பெரும் விவாதங்கள் மட்டுமன்றி, இரு கட்சிகட்கிடையிலும் தோழர் ஸ்தாலின், மக்கள் கம்யூன்கள், “சமாதான வழியில் சோஷலிசம்” என்பன தொடர்பான விவாதங்களும் கட்டுப்பாடான முறையில் நீண்ட காலமாக நடந்தன. மார்க்சியத்தின் இடத்தில் திரிபுவாதத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு சாட்டாகத், தோழர் ஸ்தாலின் மீது க்ருஷ்ச்செவ் நச்சுத்தனமான பகிரங்கத் தாக்குதலைத் தொடுத்த பின்பே, இரு கட்சிகட்கிடையிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தமை பகிரங்கமானது. அப்போதும், ஜனநாயக அடிப்படையில் உரையாடியும் விவாதித்தும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சிகள் தொடர்ந்தன. திரிபுவாதத்தை எதிர்த்த சகோதரக் கட்சிகட்கு எதிராக க்ருஷ்ச்செவ் கடைப்பிடித்த பகைமையான, சீண்டிவிடும் தன்மையுடைய அணுகு முறையே கடுஞ் சொற்கட்குக் காரணமாயிற்று. இங்கு கவனிக்க முக்கியமானது ஏதெனின், ஆழமான வேறுபாடுகளினிடையிலும் சமரசத் துக்கான வாய்ப்பு நாளாந்தம் மங்கிக் கொண்டிருந்த போதிலும், மார்க்சிய லெனினியவாதிகள் உள்ளக விவாதத்தைத் தொடர்ந்து நடத்தியதோடு, திரிபுவாத முகாம் தாக்கத் தொடங்கும் வரை சீண்டப் பட மறுத்தனர்.

பொதுவான அரசியற் சூழல் இடதுசாரிகட்குப் பாதகமாக இருக்கும் போதே பிளவுக்கான முனைப்பு வலுவாக இருக்கிறது. இது முரண் நகையானது. ஏனெனில், அவ்வாறான சூழலிலேயே கூடிய ஐக்கியமும் முரண்பாடுகளைக் களைவதற்குக் கனதியான முயற்சிகளும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியையும் இடதுசாரி இயக்கத்தையும் மீளக் கட்டியெழுப்புவதும் மிகவும் அவசியமாயுள்ளன. சந்தர்ப்பவாதத்துடனும் சாகசவாதத்துடனும் மார்க்சிய லெனினியவாதிகள் சமரசம் செய்ய இயலாது. அத்துடன் அத்தகைய போக்குக்கட்கு எதிராக உறுதியாக நிற்கவும் வேண்டும். எனினும் தவறுகளைக் களையும் வழி, பொறுமையான கலந்துரையாடலும் விவாதமுமே ஒழிய, அவசரத் தன்மையான மோதலல்ல. தவறான கருத்துக்கள் நட்பான ஜனநாயக முறையில் நீக்கப் படுகையில் தவறான கருத்துக்களைக் கெண்டோர் திருத்தப்படுமாறு முரண்பாடுகளைக் கையாளுவதற்கு —தவறான போக்குக்களையும் கருத்துக்களையும் அணைத்துச் செல்கிறதாக இல்லாமல்— மாற்றுக் கருத்துக்களை மதிக்கும் பண்பாடொன்று தேவைப்படுகிறது.

கட்சிக்குள்ளும் கட்சிகட்கு இடையிலுமான முரண்பாடுகள்
உள் முரண்பாடுகளைக் கையாளுவதில் மார்க்சிய லெனினியக் கடசிகள் பொதுவாகவே திறமையுடையனவாய் இருந்திருக்கின்றன. 1970களில் அரச ஒடுக்குமுறையை அடுத்து இந்திய மார்க்சிய லெனினிய இயக்கமும் 1971இல் குடிப்பொதுமைவாதிகளான மக்கள் ஐக்கிய முன்னணியினரின் (ஜே.வி.பி.) எழுச்சியால் ஏற்பட்ட குழப்பச் சூழலின் பின்னணியில் இலங்கையின் மார்க்சிய லெனினிய இயக்கமும் பிளவுபட்டன. பிற இடங்களிலும், 1970களிலும் 1980களிலும் மார்க்சிய லெனினியவாதிகள் அவற்றையொத்த பிரச்சினைகட்கு முகங் கொடுத் தனர். எனினும், ஒட்டுமொத்தமாக, மார்க்சிய லெனினிய இயக்கம், விதந்துரைக்கத்தக்க தனது மீள்வலிமையை வெளிக்காட்டி, நெருக்கடி யினூடு பிழைத்துத் தன்னை மீள நிலைநிறுத்தியது.

இந்திய மார்க்சிய லெனினியவாதிகள் உறுதியாக வளர்கிறார்கள். ஆனால் ஒரு வலிய புரட்சிகர சக்தியாக ஒன்றுபடுவதில் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். இலங்கையில் தமிழரிடையிலும் மலையகத் தமிழரிடையிலும் உள்ள செயலூக்கமுள்ள மார்க்சிய லெனினிய வாதிகள், யதார்த்தத்தில், ஒரே கட்சியால் அடையாளப்படுத்தப் படுகி றார்கள். எனினும், கடந்த மூன்று தசாப்த காலக் குறுகிய தேசியவாத அரசியல், முஸ்லிம்களிடையிலும் சிங்களவரிடையிலும் இடதுசாரி இயக்கத்தின் —நேர்மையான இடதுசாரி இயக்கத்தினது மட்டுமல்ல— வளர்ச்சிக்கு உதவவில்லை. சிங்களப் பேரினவாதத்தினதும் குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினதும் பகைமையின் பின்விளைவாக, முஸ்லிம்களிடையே வளர்ந்து வந்துள்ள குறுந் தேசியவாதம் ஒரு பெரிய அரசியற் காரணியாகும். சிங்களவரிடையே இருந்துவந்த ட்ரொட்ஸ்கிய மரபு —சிங்கள இளைஞர்களைத் தனது பேரினவாதச் செய்நிரலுக்கு அணிதிரட்டிய போலி இடதுசாரி ஜே.வி.பியிடம் இடது சாரிகள் தமது வலிமையை இழந்த பின்பும்— ஒரு பிளவுபடுத்தும் சக்தியாகத் தொடர்கிறது. எனினும் இன்னமும் தங்களை ஒரு அரசியற் கட்சியாக அமைத்துக்கொள்ள இயலாத சிங்கள மார்க்சிய லெனினியக் குழுக்களும் தனிமனிதர்களும் உள்ளனர். எனவே மார்க்சிய லெனினியவாதிகள் சந்தர்ப்பவாத அரசியலையும் சந்தர்ப்ப வாதக் கூட்டணிகளையும் விலக்கிய ஒரு பரந்துபட்ட முன்னணி பற்றி எண்ண வேண்டியுள்ளது.

மார்க்சிய லெனினியக் கட்சிகளையும் அமைப்புக்களையும் கொண்ட சர்வதேசக் கூட்டமைப்புக்களின் உருவாக்கத்துக்கான முயற்சிகள் வரையறைக்குட்பட்ட வெற்றியையே பெற்றுள்ளன. மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையே சகோதர உறவை விருத்தி செய்யும் தேவை அவசரமானது எனினும், அதை நிறைவேற்றத் தடையாகச் சில முரண்பாடுகள் உள்ளன. அவற்றைச் சரிவரக் கையாண்டால், அவை சினேக முரண்பாடுகளாகவே அமையும்.

தோற்றத்திற் கடுமையான தத்துவார்த்த முரண்பாடுகளை உடையனவாகத் தெரியும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் உட்பட்ட சகோதரக் கட்சிகளிடையே, கட்சிக்கும் கட்சிக்கும் இடையிலான மட்டத்தில், ஆரோக்கியமான உறவைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் உள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையிலான உறவு பெருமளவும் புரட்சிகர வெகுஜன இயக்கத்தை முன்னெடுப்பதில் ஐக்கியமும் போராட்டமும் பற்றியதாக இருக்கும். வௌ;வேறு நாடு களில் —அல்லது, ஒரே நாட்டில், புவியமைப்போ இன, மொழி வேறு பாடுகளோ நெருக்கமான உறவாடலுக்கும் ஒத்துழைப்புக்கும் தடை யாக இருக்கக் கூடிய வௌ;வேறு பிரதேசங்களில்— உள்ள கட்சி களின் இடையிலான உறவு பெரும்பாலும் பரஸ்பர ஒத்துழைப்பும் கருத்துக்களதும் அனுபவங்களதும் பரிமாறல் என்பனவும் பற்றியதாக இருக்கும். சர்வதேசக் கம்யூனிஸ்ற் இயக்கத்தின் கடந்த கால அனுபவங்களது —சாதகமானவற்றினதும் பாதகமானவற்றினதும்— அடிப்படையில் நோக்குகையில், கட்சிகட்கிடையிலான உறவாடல் சகோதரத்துவமாயும் சமத்துவ அடிப்படையிலும் அமைவது முக்கியம்.

விரிவானதொரு அரவணைக்கும் அமைப்போ வலைப்பின்னலோ இல்லாத இன்றைய சூழ்நிலையில், அமைப்புக்களிடையிலான சகோதர உறவு, பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் வேறுபாடுகளைச் சினேக முரண்பாடுகளாகக் கருதும் மனநிலையையும் வேண்டி நிற்கிறது. நிலைமைகள் நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடலாம் என்றும் —ஒரு நாடாயினும் பிரதேசமாயினும் பிரதேசத் திலுள்ள வௌ;வேறு சமூகங்களாயினும், சுருங்கக் கூறின் குறிப்பான எந்த நிலைமையிலும்— ஒவ்வொரு நிலைமைக்கும் உரிய புரட்சிகர மூலோபாயம் அதற்குத் தனித்துவமானது என்றும் அடையாளங் காண்பதை அது வேண்டி நிற்கிறது.

ஒரு சகோதரக் கட்சிக்கு இன்னொரு சகோதரக் கட்சியின் நாட்டிலோ பிரதேசத்திலோ உள்ள அரசியல் நிலைமைகளைப் பற்றிக் கருத்துரைக்கவோ, பொதுவான அல்லது அனைத்திற்கும் பொருந்து மாறான அவதானிப்புக்களைக் கூறவோ, நிகழக்கூடிய அபாயங் களையும் தவறுகளையும் பற்றி எச்சரிக்கவோ உள்ள உரிமையை யாரும் மறுக்க இயலாது. அத்தகைய உரிமையின்றிச் சகோதர உறவென்பது பொருளற்றதாகும். எனினும், கருத்துக்கள் பரிமாறப்படும் முறை முக்கியமானது. ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி —எவ்வளவு வலியதாயினும் வெற்றிகரமானதாயினும்— தன்னடக்கமாக நடப்பதுடன் கொள்கை, தந்திரோபாயம், மூலோபாயம் என்பன பற்றி இன்னொரு கட்சிக்கு ஆணையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதே அளவுக்கு, ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி, ஒரு சகோதரக் கட்சியோ பிற நட்புச் சக்திகளோ கூறும் கருத்துக்களைக் கேட்க விருப்புடையதாக இருக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிடமிருந்து இன் னொன்று கற்க விருப்புடன் இருக்க வேண்டும்.

தோற்றத்தில் ஒத்த, அடிப்படையில் வேறுபட்ட நிலைமைகளில் அனைத்திற்கும் பொதுவான தீர்வுகளை வற்புறுத்துவது தீங்கான தப்பபிப்பிராயங்கட்கு வழி செய்யும். அணுகுமுறைகளில் உள்ள வேறு பாடுகளை அவையவைக்கு உரிய நிலைமைகளின் சார்பாக அடையாளங் காண மறுப்பதும் வௌ;வேறான நிலைமைகளில் வௌ; வேறான மூலோபாயங்களின் தேவையை நிராகரிப்பதும் வரட்டுத் தனமாகும். மார்க்சிய லெனினியக் கட்சிகள் சகோதரக் கட்சிகட்குப் பாதகமானவற்றைச் சுட்டிநிற்கும் கூற்றுக்களைப் பற்றிக் கவனமாய் இருக்க வேண்டும். அதே அளவுக்கு, ஒரு தவறு நேருமிடத்து, அதற்கான எதிர்வினை, நெறிகளைப் பொறுத்துச் சமரசமில்லாமல் இருக்கும் அதே வேளை, பகைமையாக அமையலாகாது. சகோதரத் துவமாகத் தவறுகளைக் களையவும் வேறுபாடுகளைத் தீர்க்கவுமான அனைத்துச் சாத்தியப்பாடுகளும் ஒழியும் வரை, பொது விவாதங்கள் தவிர்க்க உகந்தவை.

அண்மைய சர்வதேச அனுபவங்கள்
அண்மைய நிகழ்வுகளில் மிக வருந்தத்தக்க ஒன்று, வெற்றிகரமாகப் 10 ஆண்டுக் கால ஆயுதப் போராட்டமொன்றை நடத்திய நேபாள (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சியும் —இப்போது ஐக்கிய நேபாள (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சி— இந்திய (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சியும் சம்பந்தப்பட்டதாகும். நேபாள மாஓவாதிகள், தங்களது பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கான நேபாள மக்கள் குடியரசை அமைதியான வழியில் வெய்றெடுப்போம் என்று சொன்னதற்கும் மேலாக, 21ம் நூற்றறாண்டின் சோஷலிசத்துக்கான வழியாகவும் அதைப் பரிந்துரைத்தனர். அத் தொடர்பிற் கூறப்பட்ட கருத்துக்கள், இந்தியாவின் பல பகுதி;களிலும் ஆயுதமேந்திய் போராட்டங்களைத் தொடர்ந்துவந்த இந்திய (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சிக்குப் பாதகமான சில நிலைகளைச் சுட்டி நின்றன. வியப்பிற்கு இடமின்றி, இந்திய மாஓவாதிகள் நேபாள மாஓவாதிகளைப் பின்பற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ற் கட்சி (மார்க்ஸிஸ்ட்) விஷமத்தனமாகக் கோரியது. அதன் பின்னணியில் இந்திய மாஓவாதிகள் நேபாள மாஓ வாதிகட்கு விடுத்த எதிர்வினை, தவறுகளைத் திருத்த உதவுவதற்கு மாறாக, இரு கட்சிகட்கும் இடையிவான உறவில் முறுகலை ஏற்படுத்தியது.

நேபாளப் புரட்சியின் சமாதானப் பாதை பற்றிய எந்த முடிவும் நேபாளப் பிற்போக்காளர்களதும் இந்திய மேலாதிக்கவாதிகளதும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளதும் கைகளில் உள்ளதே ஒழிய நேபாள மாஓவாதிகளின் கையில் இல்லை என்பது ஐக்கிய நேபாள (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சியின் அண்மைய அனுபவங்கள் முலம் ஏற்கெனவே அறியப்பட்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் நேபாள மாஓவாதிகட்குப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, நேபாளத்தின் முன்னைய அமைப்பை மீள நிலைநிறுவுவதற்கான ராணுவக் குறுக்கீட் டிற்கு அதனையே சாட்டாக்கக்கூடிய நிலையின் பின்னணியில் மாஓ வாதிகளின் பிரகடனப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் அதனைப் பொதுமைப் படுத்து வதற்கோ பிற நாடுகட்கும் பரிந்துரைப்பதற்கோ போதிய அடிப்படை இல்லை. அது பற்றிய கருத்துப் பரிமாறல் ஊடகங்களை எட்டுவதைத் தவிர்த்து, நேபாள மாஓவாதிகள் தமது புதிய நிலைப்பாட்டை மீளாயப் போதிய அவகாசம் வழங்கித், தவறுகளை உரையாடல் மூலம் திருத்தியிருக்கலாம்.

எவ்வாறாயினும், உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் நேபாள மாஓவாதிகளிடமிருந்து கற்க வேண்டிய விடயங்கள் உள்ளன. அக முரண்பாடுகளைப் பொறுமையான, முழுமையான கலந்துரையாடல் மூலம் தீர்ப்பது அவற்றுள் ஒன்று. போராட்டப் பாதை பற்றிய கருத்து வேறுபாடுகள் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் என்று நேபாளப் புரட்சியின் எதிரிகள் குதூகலமாக ஊகங்களைத் தெரிவித்துக் கொண் டிருக்கையில், நேபாள மாஓவாதிகள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாது, கட்சியின் ஒற்றுமையையும் வலுப்படுத்தி அவர்களை வியப்புக்குட்படுத்தினர். மனத்தடையற்ற கலந்துரையாடல், விவாதம், விமர்சனமும் சுயவிமர்சனமும் என்பவற்றின் மூலமே மாஓ வாதிகள் அதனைச் சாதித்தனர்.

எனவே ஒரு நாட்டிற்குள் உள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகள் தமக்கிடையே பொது நிலைகள் கண்டு அதனை அரசுக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களின் போதான ஒத்துழைப்பின் அடிப்படையாக ஆக்காதிருக்க நியாயமில்லை. அவ்வாறான ஒத்துழைப்பு, பிற நாடுகளின் மார்க்சிய லெனினியக் கட்சிகளைத் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தம்முள் ஒத்துழைக்கத் தூண்டி நிற்கும்.

சோஷலிசத்துக்கான பாதை பற்றிய மார்க்சிய லெனினிய நிலைப் பாட்டுடன் உடன்படாத அரசியற் கொள்கைகளையுடைய ஏகாதிபத்திய விரோத, இடதுசாரி இயக்கங்களுடன் நடந்து கொள்ளும் முறை பற்றிய பிரச்சினையும் நம் முன் இருக்கிறது. இன்றைய நிலைமை களில், வெனெஸ{வேலாவை அதி முக்கியமான ஒரு விடயமாகக் கொள்ளலாம். ஏனெனிற், பல சீர்திருத்தவாதிகளும் விரக்திமிக்க ட்ரொட்ஸ்கியர்களும் மார்க்சிய லெனினியத்தை நிராகரிக்க அதனைப் பயன்படுத்துகின்றனர். வெனெஸ{வேலாவில் ஷவெஸின் குடிப் பொதுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்காவும் வெனெஸ{ வேலாவின் பிற்போக்குவாதிகளும் எடுத்து வரும் தளராத முயற்சி களிடையே, அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருப்பது எது என்று மார்க்சிய லெனினியர்கள் அறிவார்கள். பொய்ப் புகழ்ச்சிக்கார்கள் லத்தின் அமைரிக்க மக்களை மயக்கமான ஒரு சுயதிருப்தி மன நிலைக்குள் ஆழ்த்த முனைகின்றனர். குறிப்பாக உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிகள் வலியோர் என்பதால், அதைப் பற்றி மார்க்சிய லெனினியர்கள் எச்சரித்தும் உள்ளனர். வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படைகளில் லத்தின் அமெரிக்க வெகு ஜனங்களை அரசியல்மயப் படுத்தும்படி மார்க்சிய லெனினியர் கள் அழைக்கின்றனர். வெனெசுவேலாவில் இடதுசாரிகள் அமைய மாகிவருகிற் விதம் பற்றியும் அவர்கட்குத் தயக்கங்கள் உள்ளன.

அதினும் பெரிய பிரச்சினை, வெனெஸ{வேலாவின் அனுபவத்தை, 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிஸசம் என்ற பேரில், லத்தின் அமெரிக்கா முழுவதற்கும் —ஏன் முழு உலகுக்கும்— சிலர் விஸ்தரிப் பதைப் பற்றியது. எனினும், லத்தின் அமெரிக்காவின் இடதுசாரி, ஏகாதிபத்திய-விரோத அரசாங்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலைமையிலான சூழ்ச்சிகளினின்று தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவற்றுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தேவையை ஏற்பது அவசியமானது. லத்தின் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்கள் எதிர்நோக்கும் இடர்வரவுகள் பற்றி மார்க்சிய லெனினியர்களும் பரந்துபட்ட இடதுசாரிகளும் அறிந்திருப்பதும் அவற்றைப் பற்றிக், குறிப்பாக உற்சாக மிகுதியின் அபாயங்கள் பற்றி, எச்சரிப்பதும் அதேயளவு முக்கியமானது. எனினும், நாட்டி னுள்ளும் சர்வதேச மட்டத்திலும் ஏகாதிபத்திய விரோத ஐக்கியத்தைப் பலவீனப்படுத்தும் விதமாக அந்த அரசாங்கங் களைக் கண்டனஞ் செய்வது பாரிய தவறாகும்.

முரண்பாடுகளைக் கையாள்வது பற்றிய பாடங்கள்
மேற்கண்டவாறு, மையமான பிரச்சினை, சகோதரக் கட்சிகளிடையிலும் நேச சக்திகளிடையிலும் விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் எவ்வாறு கையாள்வது எனபதாக ஒடுங்குகிறது. கட்சியொன்றிற்குள் முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது தொடர்பான விதிகள் பலவும் சகோதரக் கடசிகளிடையிலான முரண்பாடுகளைக் கையாள் வதற்கும் பொருந்துவன. சீனா முதலாளியப் பாதையை முன்னெ டுக்கும் வரையேனும், சீனக் கம்யூனிஸ்ற் கட்சி சகோதரக் கட்சிக ளுடன் முன்மாதிரியான முறையில் உறவு பேணியது. சீனக் கம்யூ னிஸ்ற் கட்சி சகோதரக் கட்சிகட்குக் கட்டளையிடவில்லை. சகோதரக் கட்சிகள் தமது அலுவல்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று வலிந்து ஆலோசனை வழங்க முற்படவுமில்லை. ஆக மிஞ்சிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சியிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதெல்லாம், தனது அனுபவங்கள் பற்றிய ஒரு கூற்றும் குறிப்பிட்ட சூழ்நிலை பற்றிய அதன் மதிப்பீட்டை உணர்த்தக்கூடிய பொதுவான கருத்துரைகளுமே அல்லாது, என்றுமே பரிந்துரைகளல்ல.

புதிய-ஜனநாயகக் கட்சி நட்பான மார்க்சிய லெனினியக் கட்சிகளிட மிருந்தும் —தவறுகள் உட்பட்ட— தனது சொந்த அனுபவத்தினன்றும் கற்றுள்ளது. அதனால், சினேக முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக மாறாது தவிர்க்க அதற்கு இயலுமாய் இருந்துள்ளது. உதாரணமாகப், புதிய-ஜனநாயகக் கட்சிக்கும் இந்தியாவிலுள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகள் பலவற்றுக்கும் இடையில் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. தேசிய இனப் பிரச்சினை, சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், பல்வேறு தேசிய இனங்கட்குமான சுயாட்சிகளை நிறுவுவதன் மூலம், பிரிவினைக்கு இடமின்றித் தீர்க்கப்பட வேண்டும் என்பது புதிய-ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடாகும். சிங்களப் பேரினவாதத்தைக் கண்டித்த புதிய-ஜனநாயகக் கட்சி, குறுகிய தமிழ்த் தேசிய வாதத்தையும் விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதத்தையும் வெகுஜன அரசியலைத் தாழ்த்துமளவுக்கு ஆயுதங்கள் மீதான அதீத நம்பிக்கையையும் விமர்சித்தது. இந்த அணுகுமுறை, இந்தியாவிலுள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகளிற் கணிசமானவற்றிடையே, இந்திய ஊடகங்களும் பக்கச்சார்பான பிற தகவல் ஊற்றுமூலங்களும் உருவாக்கிய பொதுவான தோற்றத்தின் அடிப்படையில், வடிவம் பெற்றிருந்த பார்வைகளுடன் முரண்பட்டது.

புதிய-ஜனநாயகக் கட்சி, தான் தவறாகக் கருதிய நிலைப்பாடு களைக் கொண்டிருந்ததற்காக இந்திய மார்க்சிய லெனினியக் கட்சிகளைக் குறை கூறவில்லை. மாறாகத், தன்னுடன் தொடர்பு பூண்டிருந்த ஒவ்வொரு கட்சியிடமும் தனது நிலைப்பாட்டைப் பொறுமையாக விளக்கியது. சில கட்சிகள் புதிய-ஜனநாயகக் கட்சியின் வெளியீடுகளைப் பெற்று அதன் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முயன்றன. வேறு சில இன்னமும் கருத்து முரண்படுகின்றன. இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சினையே என்று புதிய-ஜனநாயகக் கட்சி கருதுகிற போதும், அது பற்றிய கருத்து வேறுபாடுகள் கட்சிகட்கிடையே பாரிய முரண்பாடாகாதிருப்பதையே வேண்டுகிறது.

அவ்வாறே, புதிய-ஜனநாயகக் கட்சிக்கு இந்திய நிலைமைகள் பற்றிய தனது சொந்த மதிப்பீடு உண்டு. அடக்குமுறை அரசுக்கு எதிரான அனைத்து வெகுஜனப் போராட்டங்களையும் அது ஆதரிக்கிறது. இந்தியாவிலுள்ள அனைத்து மார்க்சிய லெனினியக் கட்சிகளுடனும் குழுக்களுடனும் அது நட்புறவை நாடுகிறது. இந்திய அரசியல் நிலைமைகள் பற்றியும் சகோதரக் கட்சிகளின் அரசியற் பாதைகளையும் போராட்ட முறைகளையும் பற்றி அது தனது சொந்த மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. வாய்ப்புக் கிடைக்கும் போது சம்பந்தப்பட்ட கட்சியுடனோ குழுவுடனோ அது தனது பார்வைகளைப் பகிருகிறது. கருத்துப் பரிமாறல் மூலம் அது தனது புரிதலை மேலுந் தெளிவாக்கித் தவறான மதிப்பீடுகளைத் திருத்திக் கொள்கிறது. நெறி சார்ந்த அடிப்படையில், மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையிலும் குழுக்களிடையிலும் ஏற்படும் பிணக்குக்களில் பகிரங்கமான நிலைப்பா டெதையும் அது மேற்கொள்வதில்லை. அதே வேளை, அதன் கருத்தைத் தெரிவிக்க வேண்டப்பட்ட வேளைகளில், அது தனது கருத்தை ஒளிவுமறைவின்றி நட்பான முறையிற் கூறியுள்ளது.

இன்னொரு மார்க்சிய லெனினிய அமைப்பின் நிகழ்ச்சியொன்றில் புதிய-ஜனநாயகக் கட்சிப் பேராளர் ஒருவர் பங்குபற்றுவது தமக்குப் பகைமையான செயல் எனும் விதமாகச் சில அமைப்புக்கள் சினங் கொள்வது துர்ப்பாக்கியமானது. உண்மை நிலை ஏதெனின், ஒத்ழைப்பும் உதவியும் பரஸ்பர அடிப்படையில் அமையுமாறும், சகோதரக் கட்சிகளிடையே பாகுபாடு இல்லாதவாறும், ஒருவருக்கு மாறாக மற்றொருவர் தரப்பில் நிற்காதவாறும் புதிய-ஜனநாயகக் கட்சி சகோதரக் கட்சிகள் அனைத்துடனுமான தன் உறவைத், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும், சமமான அடிப்படையிலேயே பேணுகிறது. இதுவும் 1960களிலும் 1970களிலும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் பிற நாடுகளின் போட்டியிடும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் பாற் கொண்டிருந்த நோக்கை ஒத்தது. இந்த நோக்கு, பக்கஞ் சாராமல், போட்டியிடும் கட்சிகள் தம்மிடையிலான வேறுபாடு களைச் சுமுகமாகத் தீர்த்து நெருக்கமான உறவு பூணுவதை ஊக்குவிப்பதாகும்.

ஆரோக்கியமான மார்க்சிய லெனினிய அணுகுமுறையின் தேவை

இறுதி ஆராய்வில், மார்க்சிய லெனினியர்கள் அனைவரும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வேண்டியோராவர். மார்க்சிய லெனினியப் போராட்டப் பாதை என்பது வெகுஜனப் போராட்டத்தையும் பரந்துபட்ட முன்னணி அமைப்புக் களையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மனதிற் கொண்டிருக்க வேண்டும். அதன் பொருள், அடிப்படை நெறிகளில் விட்டுக்கொடுப்பின்றி, ஒரு பொதுவான ஒரு வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான அதி பரந்துபட்ட ஒற்றுமையை இயலுமாக்குவது. பரந்துபட்ட ஒற்றுமைக்கும் நெறிகளில்; உறுதிக்கும் இடையில் சரியான தொரு சமநிலை முக்கியமானது. இலக்குக்கள் தெளிவாக வரை யறுக்கப்பட்டு இரகசியத் திட்டம் எதுவும் இல்லாதளவில், நெறிகளில்; உறுதியையும் மாற்றுக் கருத்துக் கொண்டோருடன் ஒத்துழைப்பையும் இசைவுடன் முன்னெடுக்க முடியும். அவ்வாறு தான் உலகெங்குமுள்ள மார்க்சிய லெனினியர்கள் கொலனி ஆட்சிக்கும் ஃபாசிசத்துக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் பலவாறான உள்நாட்டு ஒடுக்கு முறைகட்கும் எதிரான போராட்டங்கட்கு வெற்றிகரமாகத் தலைமை தாங்கினர்.

தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும், வலுவான மார்க்சிய லெனினியப் புரட்சிகர இயக்கங்களைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சகோதரக் கட்சிகளிடையே பரஸ்பர ஆதரவையும் ஒத்துழைப்பையும் வலுப்படு;த்த, மேற்கூறிய அணுகுமுறையைச் சகோதரக் கட்சிகளி டையிலான உறவுக்கு விஸ்தரிப்பது மட்டுமே தேவைப்படுகிறது.

ஒரு கட்சியின் கொள்கைகளும் நடைமுறைகளும் இன்னொன்றின் கொள்கைகளுடனும் நடைமுறைகளுடனும் முரண்படுவது போலத் தோன்றுமிடத்துச், சகோதரக் கட்சிகளிடையே முரண்பாடுகள் எழலாம். இத்தகைய முரண்பாடுகள் தீர்க்கக் கடினமானவையோ இயலாத வையோ அல்ல. தோற்றத்தில் ஏற்க இயலாதனவாகத் தெரியும் முடிவுகள் எடுக்கப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்வதும் அணுகுமுறை வேறுபாடுகட்கான காரணங்களை விளங்கிக் கொள்வதும் முக்கிய மானது. எந்த முடிவையும் விளங்கிக் கொள்வது அதனை அங்கீ கரிப்பதல்ல. மாறாக அம் முடிவுக்கு இட்டுச்சென்ற நிலைமைகளை அடையாளங் காண்பதேயாகும். விமர்சனக் கருத்துக்களை உரைக் கவோ மாற்று வழிகளை முன்வைக்கவோ முன்பு, மேற்கூறிய நடவடிக்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

நிலைமைகள் வேறுபடுவன என்பதையும், நாட்டுக்கு நாடு மட்டு மன்றி, ஒரு நாட்டினுள் பிரதேசத்துக்குப் பிரதேசம், சமூகத்துக்குச் சமூகம் வேறுபடும் குறிப்பான சூழ்நிலைகட்கும் பிரச்சினைகட்கும் புரட்சி முகங்கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவிலிருத்துவது முக்கியமானது. அதன் பொருள், சர்வவியாபகமான விதிகளையோ வர்க்கத்தினதும் வர்க்கப் போராட்டத்தினதும் முதன்மையையோ மறுப்ப தல்ல. அது, பிரச்சினையை வகைமாதிரியான தீர்வொன்றுக்கு அமைய வரையறுப்பதற்கு மாறாகக், குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் மார்க்சிய லெனினியத்தின் விஞ்ஞான முறையை பிரயோகிப்பதற்கான அழைப்பே யாகும்.

மார்க்சிய லெனினியர்கள் எப்போதுமே நினைவிற் கொள்ள வேண்டியது ஏதெனில், எல்லாச் சகோதரக் கட்சிகளும் சமமானவை என்பதுடன், கட்சிக்கும் கட்சிக்குமிடையிலான உறவு சகோதரக் கட்சிகளை ஐக்கியப் படுத்தும் விடயங்கட்கு அழுத்தங் கொடுக்க வேண்டுமேயன்றி, அவற்றைப் பிரிக்கும் விடயங்கட்கு அல்ல. ஏகாதிபத்தியத்திற்கும் அதன் ஏவலாட்களுக்கும் எதிரான வெகுஜன விடுதலைப் போராட்டங்கள் சார்ந்த பல்வகைப்பட்ட பிரச்சினைகளில் சகோதரக் கட்சிகளிடையே கருத்தொருமைப்பாடு; தேவை. அத்தகைய கருத்தொருமைப்பாடு, விறைப்பானதாயன்றி, நெறிகளில்; உறுதியையும் வேறுபாடுகளைக் கையாள்வதில் நெகிழ்வான தன்மையையும் கொண்டு, வளைந்துகொடுக்கக் கூடிய அணுகுமுறையை வேண்டி நிற்கிறது.

நவீன தகவல் தொழில் நுட்பம், —துரிதமான தகவற் பரிமாற்றமும் ஒப்பிடுகையில் எளிதாகத் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியமையும் உட்பட்ட— பல வழிகளில் புரட்சிகரப் போராட்டங்கட்கு உதவி யுள்ளது. அதே வேளை, அது, தனிமனிதரிடையிலும் அமைப்புக்க ளிடையிலும் அவசரத்தனமான கவனப்பிசகான கருத்துப் பரிமாறல்களை ஊக்குவிப்பதுடன் விவாதத்துக்குரிய விடயங்கள் விளங்கிக்கொள்ளப் படுவதற்கு முன்னமே விவாதங்களைப் பொதுப் பார்வைக்குக் கொண்டுவந்து விடுகிறது. மார்க்சிய லெனினிய அமைப்புக்களும் அவற்றைச் சார்ந்த தனிமனிதர்களும் நடத்தும் “டிடழபளவைநள” எனப்படுவனவும் அவற்றையொத்த இணையத்தளங் களும் பொதுப் பார்வைக்குட்படக் கூடிய தகவல்களைக் கையாள் வதிற் கவனமும் கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது, அரசியற் கருத்து மோதல்களிற் பங்குபற்றுவோர், எதிராளியோ அவர் சார்ந்த அமைப்போ குறிப்பிட்ட ஒரு விடயம் பறு;றிப் பேசுவதற்கு முன் தம்மைச் ‘சுயவிமர்சனம்’ செய்துகொள்ள வேண்டும் என்கிற விதமாகச், சுயவிமர்சனம் என்ற சொல்லை வெகு மலிவாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய நடத்தை சிறுபிள்ளைத் தனமானதும் மார்க்சிய லெனினியர்கள் சுயவிமர்சனம் எனக் கூறும் போது மனதிற்கொண்டுள்ள பொருளை மறுதலிப்பதுமாகும். பொதுப் பார்வைக்கு உட்படுமாறு, தனிப்பட்ட அல்லது தனிமனிதத் தன்மைப் பட்ட விவாதங்களில் ஈடுபடுவது, நிச்சயமாக ஒரு மார்க்சிய லெனினி யருக்கு ஒவ்வாத சிறுபிள்ளைத்தனமான சிறுமுதலாளிய நடத்தைக்கு இட்டுச் செல்லலாம். மார்க்சிய லெனினியர்கள் இவ்வாறு பகிரங்கமான தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்குவதால் எதிரிகளும் விஷமிகளுமே பயனடைவர் என்பதை மறக்கலாகாது.

விமர்சனமும் சுயவிமர்சனமும் தவறுகளைத் திருத்துவதற்கான மார்க்சிய லெனினிய வழிமுறையின் மையமாக அம்சமாகும். அதன் முலம் ஒரு அமைப்பு தவறான பார்வைகளையும் செயல்களையும் திருத்த முயவுகிறதே ஒழியத், தவறான கருத்துடையவரையோ தவறு செய்தவரையோ அவமானப்படுத்த முயலவில்லை. இங்கு தேவை யானது தனி மனிதர்களிடையிலும் அமைப்புக்களிடையிலும் ஆதரவும் ஐக்கியமுமாகும்.

இலங்கையின் மார்க்சிய லெனினியர்கள் பிற தென்னாசிய மார்க்சிய லெனினியர்கள் போன்று இந்தியாவின் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தியப் புரட்சி சிறிய அண்டை நாடுகளின் புரட்சிப் பணியை அந்தளவுக்கு இலகுவாக்கும். நேபாளத்திற் போன்று, ஒரு புரட்சி வேகம் பெறுகையில், அதற்குக் குழிபறித்து நாட்டின் உறுதியைக் குலைக்கும் நோக்கில் இந்தியா குறுக்கிடுவதை இந்தியப் புரட்சிகரச் சக்திகள் மறிக்கலாம். இந்திய மார்க்சிய லெனினியர்கட்கு எமது வேண்டுகோள் ஏதெனின், அவர்கள் தம்மிடையிலான வேறுபாடுகளைக் கடந்து இப் பிரதேசத்தின் மார்க்சிய லெனினிய, ஏகாதிபத்திய விரோத இயக்கங்களுடன் உறவுகளைக் கடடிnழுப்பி வலுப்படுத்தி ஏகாதிபத்திய விரோத, மேலாதிக்க விரோதப் பொதுநோக்குடன் தொடர்புடைய விடயங்களில் பரஸ்பர ஆதரவை ஊக்குவிக்க வேண்டும்.

(இக் கட்டுரை New Democracy, 2010 February இதழில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாகும்).

ஃபாசிசம்: சில குறிப்புக்கள்

Saturday, April 3rd, 2010

அஸ்வத்தாமா

அறிமுகம்
நாம் வாழுகின்ற உலகம் அடிக்கடி புதிய திசைவழிகளில் பயணிக் கிறது. உலக வரலாற்றுப் போக்கின் ஒரு கரையிற் போர்களும் கொலைகளும் மரண ஓலங்களும் குருதி தோய்ந்தபடி வரலாற்றுப் பக்கங்களை நிரப்ப, மறு கரையில் வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் நம்பிக்கையை விதைக்கின்றன. 20ம் நூற்றாண்டு உலகம் இரண்டு உலகப் போர்கள், கெடுபிடிப்போர், புரட்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்க, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டு முன்னையதிலிருந்து மாறுபட்டுப் “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்” எனப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. காலத்துடன் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில அம்சங்களும் அடிப்படைகளும் மாறாதவையாகத் தொடர்வதையும் அவதானிக்கலாம். அவ் வகையிற், தொடர்ந்து நிகழ்வனவற்றுள் முக்கியமான ஒன்றாக ஃபாசிஸத்தைக் கொள்ள முடியும். வடிவத்திலும் தோற்றத்திலும் வேறுபட்டாலும் பண்பியற் தன்மைகளில் மாற்றமின்றித் தொடர்வது ஃபாசிஸத்தின் முக்கியமான ஒரு கூறுபாடு.

ஒரு வரலாற்றுப் பார்வை
ஃபாசிஸம் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து துவங்குகிற, ஏகாதி பத்தியக் காலகட்டத்தின் ஒரு நிரந்தரமான போக்காகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, ஓரிடத்தில் மறைவாகவும் மற்றோர் இடத்தில் வெளிப்படையான தன்மையோடும், சில நேரங்களிற் சில நாடுகளில் ஆதிக்கச் சக்தியாகவும், எப்போதும் குறிப்பிட்ட நாட்டின் வரலாற்றுச் சூழ்நிலை, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னணியில், பிரத்தியேக வடிவங்களில் அது தோன்றியுள்ளது. இத்தாலியர்கள் அதற்கு ‘ஃபாசிஸம்’ என்று பெயர் சூட்டு முன், இக் கோட்பாட்டு வடிவம் ‘ஒருங்கிணைந்த தேசியம்’ என்ற பெயரில் 19-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் தீவிர வலதுசாரிகளின் கோட்பாடாக உருவெடுத் தது. ஐரோப்பாவின் பல பகுதிகளில், முதன்முறையாகப் பிரத்தியேக அம்சமான முறையில் உருவான இடது சோசலிஸ்டுகளின் வெகுஜன அடித்தளங்களுக்கு எதிர்ப்புடன் விளங்கியது. ஜெர்மனியிலும், பிரான்சிலும் மிகுந்த பலத்துடன் இருந்தது. 20-ம் நூற்றாண்டின் வளர்ச்சிப் போக்கில் அது ஐரோப்பிய எல்லைகளைக் கடந்து ஒரு உலக அளவிலான அம்சமாகவும் மாறியது. பரந்த அளவில் பின்பு உருப்பெற்ற அதன் தன்மைகளை நோக்குவோம்.

ஃபாசிஸத் தத்துவம் உருவானபோது, அது அடிப்படையிற் பொருள்முதல்வாதத்திற்கு எதிரானதாகவும் மார்க்சியத்திற்கு எதிரான முறையிற் பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு மாறாக 19-ம் நூற்றாண்டின் இனவாதக் கோட்பாடுகளிலிருந்து பெருமளவிலான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டதாகவும் இருந்தது. வர்க்கப் போராட்டமே வரலாற்றின் உந்துசக்தி என்ற மார்க்சிய முடிபுக்கு எதிராகத் தீவிர மான ஆன்மிகத்தன்மை வாய்ந்த தேசியத்தை ஃபாசிஸம் முன் வைத்தது. ஒவ்வொரு தேசமும் தனக்கான குறிப்பிட்ட இனத்தையும் கலாசாரத் தன்மைகளையும் கொண்டிருப்பதால், இத்தகைய நாகரிகங் கட்கு இடையிலான மோதலே வரலாற்றில் முதன்மையானது என்ற கருத்தை முன்வைத்தது. [இதன் வழி, சாமுவெல் ஹண்டிங்டன் எழுதிய நாகரிகங்களுக்கிடையிலான மோதல் (Clash of Civilizations) என்ற நூல் முக்கியமானது]. வர்க்கப் போராட்டத்தின் படைப்பே அரசு என்றும் அது ஆதிக்கம் செலுத்தும் வர்க்க நலன்களுக்கானது என்றும் கூறும் மார்க்சியச் சிந்தனைக்கு மாறாக, அரசு என்பதை ஒட்டுமொத்தமான தேச ஆன்மாவின் ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய உச்சகட்டமான அமைப்பு எனவும், வர்க்க மோதலைப் பற்றிப் பேசுகிற எவரும் தேசத்தின் எதிரி எனவும் ஃபாசிஸம் பிரசாரம் செய்தது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் உருவான நான்கு வகையான முக்கியமான புதிய மாற்றங்களை அய்ஜாஸ் அகமட் பின்வருமாறு விளக்குகிறார்.
முதலாவது வகை மாற்றம்
ஃபாசிஸம் என்ற சொல் கடும் விவாதத்திற்குள்ளாகிய பின்னணியில், தங்களைப் பெருமையோடு ஃபாசிஸவாதிகள் என அழைத்துக் கொண்டவர்களும் நாற்ஸி ஜெர்மனியை ஒரு முன்மாதிரியான தேசமாக மகிழ்ச்சியோடு அங்கீகரித்தவர்களும், பாசிசம் ஆதிக்க நிலையில் இருந்த வரை —அதாவது ஹிட்லரின் தோல்விக்கு முன்பு வரை— அவ்வாறு இருந்தார்கள். தற்போது அவ்வாறு இருப்பாதாகக் காட்டிக் கொள்வதை கைவிட்டுத் தங்களைத் தேசியவாதிகள் என மட்டும் அறிவித்துக் கொள்கின்றனர். பிரான்சின் தேசிய முன்ணணி, இத்தாலியின் தேசியக் கூட்டணி, முன்னாள் சோவியத் ய+னியனிலும் ய+கோஸ்லாவியாவிலும் கொலைவெறித் தன்மையுடைய தேசிய வாதமாகவும் இனத் தூய்மைக்கான இயக்கங்கள், இந்தியாவில் இந்து ராஜ்யமும் இந்து தேசியமும் இன்னும் இவை போலப் பலவாகவும் ஃபாசிஸம் உருவெடுத்தது.

இரண்டாவது வகை மாற்றம்
இரண்டாவது உலகப்போரின் முடிவின் பின்னணியில் மிக வேறுபட்ட இரண்டு காரணங்களால், வரலாற்றில் முதலாளித்துவத்தின் பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படையான இனவெறியை நேரடிக் கொள்கை யாகத் தக்கவைக்க இயலவில்லை. இதற்கு ஒரு காரணம், கொலனி யாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்னணியில் ஐரோப்பிய வகைப்பட்ட இனவெறி தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடியாமலிருந்தது. மறு காரணம், லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் வடிவங்கள், ஃபாசிஸத்தால் எடுத்து வரப்பட்டு, நாற்ஸி களின் பகுத்தறிவற்ற, மேன்மையான இயந்திரத் தொழில் நுட்பத்தால் லட்சக்கணக்கான ய+தர்களை விஷவாயு அறைகளில் அடைத்துக் கொன்றமை ஃபாசிஸ நடைமுறைக்குப் பெரிய சவாலாக இருந்தது. இங்கு, புதிய ஒரு முகத்துடன், வேறுபட்ட வடிவில் தன்னைக் காட்டவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. இந் நிலையில் தேசியம் என்ற பெயரில் ஃபாசிஸம் மீண்டும் எவ்வாறு தலைகாட்ட ஆரம்பித் துள்ளதோ, அவ்வாறே, இனவாதமும் மாயமான வடித்தில் ‘கலா சாரம்’, ‘தேசிய கலாசாரம்’ என்றவாறான பெயர்களிலும் மறுபடி தலைகாட்டத் துவங்கியுள்ளது.

மூன்றாவது வகை மாற்றம்
‘தேசம்’, ‘கலாசாரம்’ ஆகியவற்றை மதத்தோடு இணைத்துப் பார்க்கிற நிலை உருவானது —ஆனால், பழைய ‘மரபு’க்குத் திரும்புகிற வகையிலல்ல. முப்பரிமாணத்தன்மை வாய்ந்த தேசம்/கலாசாரம்/மதம் சார்ந்த குடிமக்களாக இருப்பது அவசியம் என்று போதிக்கப்பட்டது. அடிப்படைவாத ஈரானைப் போல் ஒருவகையிலும் மிக நவீனமான இஸ்ரேல் போல இன்னொரு வகையிலும் இருப்பது புனிதமானதாகும். இதன் தொடர்ச்சியாக, வெளிப்படையாக இனவாதம் மதிக்கப்பட்ட நாட்களில் ‘மரபணுவியல்’ வகித்த இடத்தை, இப்போது ‘கலாசாரம்’ வகிக்கிறது.

நான்காவது வகை மாற்றம்
இது வர்க்கஞ் சார்ந்த கோட்பாட்டோடும் எகாதிபத்தியத்தியத்தோடும் தொடர்புடையது. புரட்சிகரமான காலகட்டத்தில், சோசலிசத் திட்டம் உருவான பின்னணியில் உருவான பழைய வகை ஃபாசிஸம், கொலனி எதிர்ப்புத் தேசியவாதம் கொலனிகளில் உருவான பின்னணி யில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒருவகையான தேசபக்த சிந்தனைகளோடு, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்தும் குட்டி ப+ர்ஷ்வாக்களிடமிருந்தும் சிறிய முதலாளிகளிடமிருந்தும் ஒரு வகை யான வர்க்கத் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டது. நாற்ஸிகள் தங்களைத் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ எனறு அழைத்துக் கொண்டனர். முசோலினி முதலில் சோசலிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற தலைவராக இருந்து, பின்னர் ஃபாசிஸத்தின் அமைப்பாளராக மாறி, ஃபாசிஸ அரசின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவராவார். அடிப்படையில் அதன் ‘தேசியம்’ பெருமளவும் ஏகாதிபத்தியச் சார்புடையது. அதன் வர்க்கத் தீவிரவாதத்திற் பெரும் பகுதி; மக்களைக் கவர்வதற்காகச் சொல்லப்பட்டதே. ஃபாசிஸம், பின்னர் அவற்றைக் கைவிட்டு, முற்றாக ஏகாதிபத்திய மூலதனத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

நியாயமாகச் சிந்தித்துப் பார்த்தால், போர்கட்கு இடைப்பட்ட காலத்தில் உருவான ஃபாசிஸத்தை உலக எதிர்ப் புரட்சியின் ஈர்ப்பு மையம் எனக் கூறலாம். எனினும் அவர்களும் தங்களைப் புரட்சி வாதிகளாகவே கூறிக் கொண்டனர். தீவிர வலதுசாரித் தன்மையோடு இணைந்து ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை, ஃபாசிஸத்திற்கெதிராகப் போராடுமாறு நாம் நிர்ப்பந்திக்கப் படுவோம். அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சிமுறைகள் தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் ஃபாசிஸத்தை ஆதரிக்கச் சற்றும் தயங்காது.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடிக் காலகட்டத்தில், மிக உச்சமான தொழில் லாபமடையும் கொள்கை களைப் பின்பற்ற முடியாது. அத்தகைய கொள்கைகட்கு எதிராக மக்கள் தலையிடக்கூடிய குறைந்தபட்ச சாத்தியப்பாடொன்றை ஜன நாயக அமைப்புகள் ஏற்படுத்தினாற்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்ட முனையும். ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வர முற்படும். ஃபாசிஸம் என்பது அத்தகைய பெருந் தொழில், பெரு வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

ஃபாசிஸம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டா ரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்குவது அவசியம். அவ்வாறு தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்த இயலுமாகும். அதன் பிறகே ஃபாசிஸத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்ட இயலு மாகும். ஃபாசிஸமானது, முதலாளித்துவத்தின் தத்துவார்த்தக் கருவி களைக் கைக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கி யுள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரின் ஃபாசிசம், கம்யூனிச-எதிர்ப்பையும் யூத-எதிர்ப்பையும் தன் பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டது. இத்தாலிய பாசிசம் கம்யூனிச-எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்தியது.
ஃபாசிஸத்தால் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்க்க முடியவில்லை. பல காலமாக அது அவற்றை மூடி மறைத்திருந்தது. ஆனால் ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலை தூக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஃபாசிஸத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டாலும் அணிதிரட்டிய வெகுஜனப் போராட் டத்தின் மூலம் மட்டுமே ஃபாசிஸத்தைத் தோற்கடிக்க முடியும்.

காலக்கண்ணாடியூடு  ஃபாசிஸத்தின் பலமுகங்கள்
புதிதாக நடைபெற்ற போர்கள், பெரும் கொலனியாதிக்கச் சக்திகள் தங்கட்கிடையே உலகைப் பங்கிட்டுக் கொண்ட பிறகு, உலகை மீளவும் மறுபங்கிடுவதற்கான போர்களாயிருந்தன. இந் நிலையில், போட்டி என்பது, யாரும் கைப்பற்றாத பகுதிகளைக் கைப்பற்றுவதுடன் அல்லாமல், கொலனியாதிக்க சக்திகள் தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த ஏற்றுமதிச் சந்தைகள், முடிவு உற்பத்திப் பொருட் களுக்கான மூலவளங்கள், முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றுக்கு மாக இருந்தது. ‘உலக மகாயுத்தம்’ என அழைக்கப்பட்ட, உலகின் மிகப் பெரிய சூதாட்டக் களமாக, அவ்வளவு நாடுகள் பங்கேற்ற போர் வரலாற்றில் இதுவரை காணாத ஒன்றான இதன் பின்ணணியிலேயே ஃபாசிஸத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இத்தாலியில் முசோலியின் ஃபாசிஸ ஆட்சியின்போது அதற்கெதி ராகப் போராடியவர்களில் முக்கியமான ஒருவரான டோளியாட்டி (Togliatti) தனது அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் முடிவு களுக்கு வருகிறார்.

* ஃபாசிஸம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால் அது தவிர்க்கமுடியாத வளர்ச்சிக் கட்டமல்ல.
* ஃபாசிஸத்தால் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் முதலாளித்துவ அடிப்படையில் தீர்க்க முடியாது. எனவே அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.
* ஃபாசிஸம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.
* ஃபாசிஸமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது.

ஃபாசிஸத்தை உளவியல்முறையில் ஆராய்ந்த எரிக் ஃப்ரொம் (Eric Fromm) 1941ல் வெளியிட்ட தனது “விடுதலையிலிருந்து தப்புதல்” (Escape from Freedom) என்ற தனது நூலில் முதலாளிய சமூகத்தின் விடுதலை உணர்வு மனிதனுக்குச் சில பொறுப்புகளையும் சுமத்து கிறது. முதலாளியத்தால் தனியராக்கப்படும் மனிதர் தனது தேவைகள், நலன்கள் ஆகியவற்றைத் தானாகவேதான் சாதித்துக் கொள்ள வேண்டும். சந்தையின் போட்டி, வெற்றிதோல்விகள் ஆகியவற்றை நேரடியாகத்தான் சந்தித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு, விடுதலை மனிதரைத் தனிமனிதராக்கி விடுகிறது. தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் எதுவுமில்லாதது போன்ற நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஒரு விதமான பாதுகாப்பு உணர்வுக்கு மனிதர்கள் ஏங்குகின்றனர். தலைக்கு மேலே ஒரு ஃபியூரர் (தலைவர்: இங்கு ஹிட்லரைக் குறிக்கும்), காலுக்குக் கீழே ஆரிய ஜெர்மானிய இனம், உடன் நடக்கவும் உரத்துக் கோஷமிடவும் ஒரு பெரிய கூட்டம், இவை யெல்லாம் மனிதருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை, ஆதரவைத் தரு கின்றன. தனிமையிலிருந்து தப்பித்து விட்டதாக மனிதர் உணர் கின்றனர். இதுதான் ஃபாசிஸம் என்று எரிக் ஃப்ரொம் எழுதினார்.

ஃபாசிஸத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவர் ஹேர்பேட் மார்க்யூஸ (Herbert Marcuse). இவர் 20ம் நூற்றாண்டின் முக்கியமான நவமார்க்சியராகக் கொள்ளப்படுபவர். பாசிசத்தின் தோற்றத்திற்கும் ஐரோப்பிய சமூகத்தில், குறிப்பாக ஜெர்மானிய வரலாற்றில் நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் உடன்பாட்டுக் கலாசாரத்திற்கும் (affirmative culture) உட் தொடர்பு உள்ளதாக சொல்லும் மார்க்யூஸ இடைக்கால ஜெர்மனியில் வழக்கிலிருந்த மேட்டுக்குடிக் கலாசாரத் தைத் தீவிரமாக மறுதலித்து (negate) விமர்சிக்காமல் அக் கலாசாரத் துடன் உடன்பட்ட நிலையிலேயே நவீன ஜெர்மானிய கலாசாரம் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது என்கிறார். எனவே அதனை மார்க்யூஸ உடன்பாட்டுக் கலாசாரம் என்கிறார். கலாசார வாழ்வில், இடைக்கால மேட்டுக்குடிச் சமூக விழுமியங்கள் ஆன்மீகம் என்ற அடைமொழியுடன் தங்கிநிற்கின்றன. அவை சராசரி மனிதனின் அன்றாட வாழ்விலும் அவ் வாழவின் தேவைகளிலும் அக்கறையின்றி அவற்றை இழிநிலையில் வைத்துப் பார்க்கின்றன. சமூக முரண்பாடுகளையும் மக்கள் பிரச்சினை களையும் இவ்வகைக் கலாசாரம் ஆன்மீகம் என்ற திரை போட்டு மறைக்கிறது. வாழ்க்கைத் தளத்தில் அல்லாது ஆன்மீகத் தளத்தில் மேற்குறித்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு இருப்பதாக அது பம்மாத்துச் செய்கிறது. உடல், உணர்ச்சிகள், சுய நலன்கள் ஆகியவற்றைக் கடந்த ஓர் உலகுக்குள் வருமாறு அது சகலரையும் அழைக்கிறது. சாதாரண மக்களுக்கு அது சாத்தியப் படாமற் போவதே சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அது கூறுகிறது. ஆன்மீகக் கலாச்சாரம் அமைதியையும் நிம்மதியையும் சாந்தியையும் வழங்கும் என அது பிரச்சாரம் செய்கிறது. ஆன்மாவும் ஆன்மீகமும் உலகியல் ஈடுபாடற்ற, கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் புராதன வடிவங்கள். எந்த விதக் கேள்விக்கும் இடமின்றிச் சகலவற்றையும் ஆன்மா தனக்கு அடிமையாக்கும். பிரத்தியட்ச வாழ்க்கைக்கு அருகில் வரப் பிடிவாதமாக மறுத்து, வாழ்வால் ஒவ்வொரு கணமும் தீண்டப் படும் மனம், அறிவு ஆகியவற்றை ஏற்க மறுக்கும் ஆன்மீகத் தத்துவங்களைச் சிலாகித்துப் பாராட்டும் நாடுகளில் ஃபாசி ஸத்திற்கு வாய்ப்புண்டு என்றும் ஆன்மீகமயப்பட்ட சமூகத்தில் தனி மனிதர்கள் சர்வாதிகாரத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளுவர் என்றும் மார்க்யூஸ கூறுவார். எனவே மனிதர்கள் தமது உணர்ச்சிகளைச் சமூக வரலாற்று யதார்த்தத்தோடும் சமூக மாற்ற நோக்கங்களோடும் இணைக்காமல் போகும் போது அவை ஃபாசிஸமாக உருவெடுக்கும் என்று மார்க்யூஸ குறிப்பிடுகிறார்.

ஃபாசிஸம் இன்று: புதிய முகங்களைத் தேடியபடி
முதலாளித்துவ அதிகாரத்தின் ஒரு முகம் ஜனநாயகம் என்றால் அதன் மற்ற முகம் ஃபாசிஸம் ஆகும். ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அடக்குமுறையை வெளிப்படையாகக் கையாளும் நிர்ப்பந்தம் முதலாளித்துவத்துக்கு ஏற்படுகிறது. அப்போது அது தனது ஜனநாயகப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு நேரடியான முதலாளித்துவ இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது.

தீவிர தேசியவாத உணர்வுகளைத் தூண்டுதல், சர்வாதிகாரம், அடக்குமுறை, வலதுசாரித் தன்மை, ஜனநாயக உரிமை மறுப்பு போன்றன அதன் பொதுவான இயல்புகளாகும். முகங்கள் மாறினாலும் இப் பண்புகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காணலாம். முக்கியமாக எல்லா வேளைகளிலும் ஃபாசிஸ அரசு நேரடியாகவே முதலாளித்துவ அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும். ஃபாசிஸம் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வடிவங்களிலும் வேறுபட்ட வழிகள் மூலம் அதிகாரத்திற்கு வந்தாலும் இப் பண்புகள் மாறாமல் அப்படியே இருக்கும். இதைப் பழைய இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் முதலாக 1960கள் முதல் 1980கள் வரை நீடித்த மூன்றாம் உலகின் ஃபாசிஸவாத ஆட்சிகளைக் கொண்டிருந்த சிலி, இந்தோனீசியா, தென் கொரியா, ஆர்ஜென்டீனா போன்ற பல நாடுகளிலும் காணலாம். அவற்றையொத்த தன்மைகளை யுடைய பல “ஜனநாயக” நாடுகளை இன்றைய உலக ஒழுங்கிற் காணலாம்.

இன்று ஃபாசிஸம் ஜனநாயக முகமூடியை அணிந்தபடி வெற்றி கரமாக வலம் வருகிறது. கெடுபிடிப் போர்க் காலப்பகுதியிலும் அதைத் தொடர்ந்த ஒற்றை மைய உலக ஒழுங்கிலும் இயங்கிய ஃபாசிஸ ஆட்சிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு எப்போதுமே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் தனது தேவைகளுக்கு ஆதரவானதாக ஃபாசிஸ ஆட்சி இருக்குமிடத்து அதற்கு ஆதரவு வழங்கப் பின்னிற்பதில்லை. அதே வேளை ஒரு நாட்டில் ஃபாசிஸவாத ராணுவ ஆட்சியை உருவாக்கு வதன் மூலமே தனது நலன்களைக் காக்க முடியும் என்ற நிலையில் அவ்வாறன ஆட்சியை உருவாக்கவோ வழிநடத்தவோ ஒருபோதும் தயங்கியதில்லை. இன்றைய உலக ஒழுங்கிலும் இந் நிலையே தொடர்கிறது.

அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்தம், தலைமை இல்லாமை, முற்போக்கு சக்திகளிடையே ஐக்கியமின்மை ஆகியன மக்கள் நடுவே தோற்றுவிக்கும் விரக்தி உணர்வு ஃபாசிஸவாதிகட்கு மிகவும் பயன் படுகிறது. இதை எவரையும் வி;டச் சரியாகப் ஃபாசிஸவாதிகளே பயன் படுத்துகிறார்கள். ஒரு சமூகமாக ஒவ்வொரு சமூகமும் கவனத்தில் எடுக்கவேண்டிய அம்சம். அவ்வாறான ஃபாசிஸப் போக்குக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூகத் தினதும் கடமை. தவறுமிடத்துச் சமூகமாகப் பாரிய அவலங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உறைக்கும்படி வரலாறு பல முறை உணர்த்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஃபாசிஸம் பற்றிய அனுபவம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அது பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பிரச்சி னைகள் மோசமாகும்போது, ஃபாசிஸ சக்திகள் தலையெடுக்கின்றன. குறிப்பாக ஜரோப்பாவில் உள்மறைந்திருந்த ஃபாசிஸக் கூறுகள் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும் வந்தேறுகுடிகளுக்கு (குறிப்பாக ஆசியர்களுக்கு) எதிரா கவும் வெளிப்பட்டதை அவதானிக்க முடியும்.
ஆனால் மூன்றாமுலக நாடுகளில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். கொலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியாகப், பணிந்துபோகும் மனப்பாங்கு தலைமுறைகள் தாண்டியும் விதைக்கப் பட்டிருப்பதால் அடிப்படையான உரிமை மறுப்பும் அடக்குமுறையும் பாரிய எல்லையை எட்டும் வரை, அவை மக்களுக்குப் பிரச்சனை களாகத் தெரிவதில்லை. அவை பிரச்சனைகளாகத் தெரியத் தொடங் கும் போது ஃபாசிஸம் தன்னை உறுதியாக நிலைநிறுத்தி யிருக்கும். இந் நிலையில் மிகச் சிறிய எதிர்ப்போ மாற்றுக் கருத்தோ சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நிறைவாக
ஃபாசிஸம் என்பது முதலாளிய சமூகத்தின் மிக உக்கிரமான வடிவம.; ஆரம்பகால முதலாளியம் தனிமனித, சிறுமுதலாளியப் போட்டிகட்குத் தனக்குள் இடமளித்தது. ஆனால் ஃபாசிஸமோ ஏகபோக நிதிமூலதன முதலாளியம். அது உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ (வழவயடவையசயைn) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் ஃபாசிஸம் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக முழுமையின் “ஒழுங்கைக்” காப்பதற்காகத் தனி மனித சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றைப் ஃபாசிஸம் ஒடுக்குகிறது. அறிவையும் சமூக இலட்சியங்களையும் பொய்யென அறிவித்து இன உணர்ச்சிகளை மட்டும் மனிதர்களின் மரபு என்றும் சொந்த இருப்பு என்றும் ஃபாசிஸம் கூறுகிறது. கற்பனாவாத (ரவழியைn) உறுதி மொழி கள் சிலதை அது வழங்குகிறது. இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. ஃபாசிஸம் இக் கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு (உரடவரசயட ளலவொநளளை) உட்படுத்து கிறது. இப் பண்பாட்டு இணைவாக்கம் ஃபாசிஸக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்ட வல்லதாக உள்ளது. இந்த ஆதரவு ஃபாசிஸ ஆட்சி தன்னை நிலைநிறுத்தப் பெரிதும் உதவுகிறது.
எதிர்ப்புகள் ஃபாசிஸத்தால் மிகக் கவனமாக் கட்டுப்படுத்தப் படுகின்றன. நெருக்கடிகளும் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தேசியத்தை, நாட்டைப் பலவீனப் படுத்துவதாக ஃபாசி ஸம் கூறுகிறது. எனவே பலம் கொண்ட நாடாக உருவாவதற்கு சர்வதேசப் பொருளாதார, ராணுவப் போட்டியில் நாடு வெற்றி பெறுவதற்கு இது அவசியம் என ஃபாசிஸம் பிரச்சாரம் செய்கிறது. இதன் அடிப்படையில் ஃபாசிஸம் இன்றும் உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சுகிறது. அதற்கெதிராக போராடுவது அவசியமாகிறது. அப் போராட்டம் பரந்துபட்ட மக்கள் ஜக்கியத்தின் மூலம் மட்டுமே இயலும்.

மறப்பதற்கு அழைப்பு

Saturday, April 3rd, 2010

எரிஷ் ஃப்றீட்
(புலம்பெயர்ந்த ஒஸ்ற்றியர்)

[“அவர்கள் மட்டும் தமது கோரிக்கைகளை இறுதியாக மறப்பபார்களெனின்”
- ஸியோனிஸ்ற்றுக்களின் வாதம்]

“மடக்கதை கதையாதே”
…. என்கிறது காற்று.
“உலகம் சுழல்கிறது
எல்லாம் மாறுகிறது
முடிந்ததை நீ மறந்தே தீரவேண்டும்”.

“நீ உன் வயலை மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது நஞ்சூட்டப்பட்ட பயிர்.
“நீ உன் வெள்ளை வீட்டை மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது இடிந்த கல்.
“பழுப்பு நிறக் குடத்தை நீ மறக்கமுடியுமெனின்”
…. என்கின்றன ஓட்டுத் துண்டுகள்.
“ஒலிவ் மரத்தை மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது மரக்குற்றி.
“தோடை மரங்களை”
…. என்கிறது எரிந்த தோப்பு.

“நீ உன் சகோதரியர் இருவரையும் மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது புதைகுழிக்குச் செல்லும் பாதை.
“ஓலங்களை நீ மறக்கமுடியுமெனின்”
…. என்றன செவிகள்.

“அப்போது
அபாயத்துடன் விளையாடுவதை நீ நிறுத்தலாம்”

“பிடுங்கப்பட்ட மரத்தினின்று விடுதலை பெற்ற
அத்திக் கனி போலக்
கப்பலின் வயிற்றினுள் நீ கடற் பயணம் போகலாம்.
காற்றில் மணற்துகள் போல விடுதலையைக் காணலாம்.
முடிவில்
நீ இழந்த சொந்த மண்ணினின்று விமோசனம் பெறலாம்”.

“உலகம் சுழல்கிறது
முடிந்ததை நீ மறந்தே தீரவேண்டும்.
மடக்கதை கதையாதே”
என்கிறது காற்று—
உன்னைத் துரத்தினோரின் தரப்பினின்று வீசியவாறு.

சமாதானம்

Saturday, April 3rd, 2010

சுபத்திரன்
(1935-1979)

ஓ! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
போர்ச் சுறாக்களே!
இந்து சமுத்திரத்தின் அலைகளில் உலாவும்
நெத்தலி மீன்கள்
உமது போரொத்திகை கண்டு
திகிலடைந்து    ஒளித்து விடவில்லை
அவை உமது கொடுமையை எதிர்த்துத்
திமிங்கிலங்களாக வளருகின்றன.

இந்து சமுத்திரத்தின் சமாதானத் தோணிகள்
உனது போர்க்கப்பலை முழ்கடிக்கும்
ஐ.நா.வின் பேச்சு மேடையில்
சமாதானம் நம்பிக்கை வைக்கவில்லை
உன் அழிவுக் காலப் போர்முனையில்
சமாதானம் நம்பிக்கை வைத்துள்ளது

(1970களில் எழுதப்பட்டது)
(நன்றி: சுபத்திரன் கவிதைகள், பூவரசுகள், கல்லடி, மட்டக்களப்பு, 1997)

ஒளி

Saturday, April 3rd, 2010

சுபத்திரன்
(1935-1979)

மக்களிலும் பெரிதாக ஆயுதத்தை
மகத்தானதென எண்ணித் திரியுங் கூட்டம்
எக் கொடியைச் சுமந்தாலும் மக்களுக்கு
ஏற்ற பணி செய்கின்ற தகுதியற்ற
விக்கினமே செய்யுமென ஈழ மண்ணில்
விரிவாகப் பல பாடங் கற்றுவிட்டோம்
திக்கறியாத் திசையறியாத் திரிவோமல்லோம்
திசை காட்டும் ஆதவனின் ஒளியைக் கண்டோம்

ஆயுதத்தை மலையளவு குவித்தாலென்ன?
அதைச் சுமக்கும் “ஆள்”; தேடிக் காடும்மேடும்
மேய்ந்தலைந்து நடுநிசியிற் திரிந்தாலென்ன?
மக்களவர் தங்களது அடிமை வாழ்வின்
நோய்க்கேற்ற மருந்தான தத்துவத்தை
நெஞ்சத்தாற் செயலாக்கி உண்ணாவிட்டால்
ஆயுதத்தால் என்ன பயன்? அதனைத் தூக்கும்
ஆட்பலத்தால் என்ன பயன் அடைதல் கூடும்?

(1971 ஏப்ரல் கிளர்ச்சிக்குப் பின்னர் எழுதப்பட்டது)
(நன்றி: சுபத்திரன் கவிதைகள், பூவரசுகள், கல்லடி, மட்டக்களப்பு, 1997)